பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில், ``தி.மு.க அரசு கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கக்கூடிய சத்துணவு பெட்டகத்தில் ஊழல் செய்திருக்கிறது. ஜி- ஸ்கொயர் நிறுவனத்துக்கு ஆதரவாக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி செயல்படுகிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பதிலளிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
இன்று இது தொடர்பாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``அடுக்குமாடிக் கட்டடத்துக்கு அமைச்சர் மூலமாக அனுமதி வழங்கப்பட்டுவந்த நிலையில், ஜி ஸ்கொயர் பெயரில் சில விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு குறுகியகாலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அனைத்து நிறுவனங்களுக்கும் விதிகளின்படி அனுமதி வழங்கப்படுகிறது. நாங்கள் எந்த விதிமுறையையும் மீறவில்லை. அண்ணாமலை கூறுவதுபோல் யாருக்கும் உடனடியாக அனுமதி வழங்கவில்லை. அண்ணாமலை இனிமேல் உரிய ஆதாரங்களுடன் பேச வேண்டும். யாரையும் குறிவைக்கும் நோக்கத்துடனும், உள்நோக்கத்துடன் அவர் இப்படிப் பேசக் கூடாது. எங்களின் தவற்றைச் சுட்டிக்காட்டினால் நாங்கள் திருத்திக்கொள்கிறோம், இல்லையென்றால் அவரின் தவற்றை அவர்தான் திருத்திக்கொள்ள வேண்டும் ’’ என்றார்.
மேலும் இந்தச் சந்திப்பின்போது அமைச்சர் முத்துசாமி பேசியதை கீழுள்ள வீடியோவில் முழுமையாகக் காணலாம்...
