Published:Updated:

என்டிடிவி நிறுவனர்களுக்கே தெரியாமல் பங்குகளை அதானி வசப்படுத்தியது எப்படி?! - ஓர் அலசல்

அதானி - என்டிடிவி

என்டிடிவி ஊடகத்தின் நிறுவனர்களுக்கேத் தெரியாமல் அந்த ஊடகத்தின் பங்குகளை, அதானி நிறுவனம் வாங்கியிருப்பது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

என்டிடிவி நிறுவனர்களுக்கே தெரியாமல் பங்குகளை அதானி வசப்படுத்தியது எப்படி?! - ஓர் அலசல்

என்டிடிவி ஊடகத்தின் நிறுவனர்களுக்கேத் தெரியாமல் அந்த ஊடகத்தின் பங்குகளை, அதானி நிறுவனம் வாங்கியிருப்பது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அதானி - என்டிடிவி

என்டிடிவி ஊடகத்தின் 29.18% பங்குகளைக் கைப்பற்றியிருக்கும் அதானி குழுமம், ஒட்டுமொத்த என்டிடிவி நிறுவனத்தையும் கையகப்படுத்தும் முனைப்பில் மிகத்தீவிரமாக செயல்பட்டுவருகிறது. ஒரு ஊடகத்தின் நிறுவனர்களுக்கே தெரியாமல் அந்த ஊடகத்தின் பங்குகளை, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வாங்கியிருப்பது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

என்டிடிவி
என்டிடிவி

என்டிடிவி யாருடையது?

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது என்டிடிவி எனும் `புதுடெல்லி டெலிவிஷன் லிமிடெட்' நிறுவனம். கடந்த 1984-ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் பிரனாய் ராய் அவரின் மனைவியும் பத்திரிகையாளருமான ராதிகா ராய் ஆகியோரால் தொடங்கப்பட்டது. சுமார் 38 ஆண்டுகளாக செயல்பட்டுவரும், இந்தியாவின் முன்னணி ஆங்கில செய்தி ஊடகமான என்டிடிவிக்கு என்டிடிவி 24x7, என்டிடிவி இந்தியா, என்டிடிவி பிராஃபிட் ஆகிய 3 சேனல்கள் இருக்கின்றன. ஆண்டுக்கு ரூ.230.91 கோடி வருமானமும், ரூ.59.19 கோடி நிகர லாபமும் பெற்று இயங்கி வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்டிடிவி எந்த இடத்தில் சறுக்கியது?

தொடக்கத்தில், என்டிடிவி நிறுவனர்களான பிரனாய் ராய், ராதிகா ராய் வசம் அந்த நிறுவனத்தின் 61.45 சதவிகிதப் பங்குகள் இருந்தன. குறிப்பாக, அவர்களின் ராதிகா ராய் பிரனாய் பிரைவேட் லிமிடெட் (RRPR) நிறுவனத்திடம் 29 சதவிகித பங்குகள் இருக்கின்றன. அந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்மென்ட் நிறுவனத்திடம் மறைமுகத் தொடர்புடையதாக சொல்லப்படும் `விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட்(VCPL) நிறுவனத்திடமிருந்து சுமார் 403.85 கோடி ரூபாயை ராய் தம்பதியினரின் RRPR நிறுவனம் கடனாகப் பெற்றது. குறிப்பாக, அந்தக் கடன் பத்திரத்தில், என்டிடிவி-யில் RRPR நிறுவனத்துக்கு இருக்கும் 29 சதவிகித பங்கை எப்போது வேண்டுமானாலும் VCPL நிறுவனம் உரிமையாக்கிக் கொள்ளலாம், (அதாவது வாங்கிய கடனை, எந்த நேரத்திலும் RRPR ஈக்விட்டியாக VCPL மாற்றலாம்) என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததுதான் தற்போதைய சிக்கலுக்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

பிரனாய் ராய் - என்டிடிவி நிறுவனர்
பிரனாய் ராய் - என்டிடிவி நிறுவனர்

என்டிடிவி பங்குகள் அதானியிடம் பறிபோனது எப்படி?

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி `விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை, அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் (Amg Media Networks Limited) நிறுவனம் முழுவதுமாகக் கைப்பற்றியது. அதாவது, ரூ.113.7 கோடிக்கு VCPL நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பங்கையும் விலைக்கு வாங்கியது. அதைத்தொடர்ந்து, அதானி வசமான VCPL முன்பு போட்ட ஒப்பந்தப்படி, என்டிடிவி-யில் 29 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் RRPR நிறுவனத்தின் அந்தப் பங்குகளை தன்வசப்படுத்திக்கொண்டது. இதனால், என்டிடிவி ஊடகத்தின் மூன்றில் ஒருபங்கு உரிமையை (29.18%) அதானி குழுமம் பெற்றிருக்கிறது.

அதானி குழுமம்
அதானி குழுமம்

அதிர்ந்துபோய் அறிக்கைவிட்ட என்டிடிவி நிறுவனம்:

இந்த நடவடிக்கையால் அதிர்ந்துபோன ராய் தம்பதியினர் என்டிடிவி ஊடகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், ``என்டிடிவி-யின் 29.18 சதவிகித பங்குகளை கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து தங்களிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், என்டிடிவி நிறுவனர்களின் ஒப்புதலின்றி, எவ்வித ஆலோசனை இல்லாமல், தகவலும் தெரிவிக்கப்படாமல் மொத்த பரிவர்த்தனையும் அதானி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், என்டிடிவி எப்போதுமே அதன் செயல்பாட்டில், அதன் ஊடகப் பணியில் சமரசம் செய்ததில்லை என்றும் தாங்கள் எப்போதும்போல தங்களின் வழக்கமான ஊடக பாணியை பெருமிதத்துடன் தொடர்வோம். தங்கள் நிறுவனத்தை கையகப்படுத்தும் அதானி குழும நடவடிக்கையை சட்ட ஒழுங்குமுறை நடைமுறைகள் மூலம் எதிர்க்கும் வாய்ப்பை மதிப்பிட்டு வருவதாகவும் என்டிடிவி நிறுவனம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறது.

மொத்தப் பங்குகளையும் கேட்கும் அதானி:

என்டிடிவியின் 29.18 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் RRPR நிறுவனத்திடம் உள்ள எல்லா பங்குகளையும் இரண்டு நாட்களுக்குள் VCPL நிறுவனத்திடம் மாற்றும்படி அதானி நோட்டிஸ் அனுப்பியிருப்பதாக ராய் தம்பதியினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் ஏற்கெனவே, என்டிடிவியின் 29 சதவிகித பங்குகள் அதானி வசம் இருக்கும் நிலையில், என்டிடிவியின் மேலும் 26 சதவிகித பங்குகளை பங்குதாரர்களிடமிருந்து வாங்க முன்வந்திருக்கிறது. அதாவது, ஒரு பங்கு ரூ.294 எனும் வீதம் ஒட்டுமொத்த பங்குகளையும் ரூ.493 கோடிக்கு வாங்க அதானி குழுமம் வெளிப்படையாக கோரியிருக்கிறது. இந்த வர்த்தகத்தைப் பேசி முடிக்க ஜெஎம் ஃபினான்சியல் (JM Financial) என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டும் நடந்தால், என்டிடிவி ஊடகத்தின் 55.18 சதவிகித பங்குகள் அதானி குழுமத்திடம் செல்லும். என்டிடிவி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அதானி குழுமம் மாறும். என்டிடிவி நிறுவனத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நிலை உருவாகும்.

ஜெஎம் ஃபினான்சியல்
ஜெஎம் ஃபினான்சியல்

என்டிடிவின் மொத்தப் பங்கில், 15.94 சதவிகிதம் பிரனாய் ராயிடமும், 16.32 சதவிகிதம் ராதிகா ராயிடமும், 29.18 சதவிகிதம் இவர்களின் RRPR நிறுவனத்திடமும் இருந்தது. தற்போது அதானியிடம் RRPR-ன் 29.18 சதவிகிதம் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், மொத்தமாக, 61.45 சதவிகித பங்குகள் தங்கள் வசமே இருக்கிறது என ராய் தம்பதியினர் தெரிவித்திருக்கின்றனர். இதுதவிர என்டிடிவியின் 38.55 சதவிகித பங்குகள் பொதுப் பங்குகளாக இருக்கிறது.

 மோடி-அதானி நட்பு!
மோடி-அதானி நட்பு!

கார்ப்பரேட் கைகளில் ஊடகங்கள்?

பொதுவாக என்டிடிவி ஊடகம் செய்திகளை சமரசமில்லாமல் வெளியிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இந்து மதத்துக்கு எதிராக வெறுப்பு செய்திகளை வெளியிட்டதாகக்கூறி என்டிடிவி இந்தி ஊடகத்துக்கு மத்திய பா.ஜ.க அரசு ஒருமுறை தடையும் விதித்தது. இந்த நிலையில், அதானி, என்டிடிவி நிறுவனத்தை மறைமுகமாகக் கையகப்படுத்த முனைந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதன் பங்குதாரர்களின் விருப்பமின்றி `முறையற்ற கையகப்படுத்துதல்' (Hostile Takeover) முறையில் வாங்கும் முயற்சி என கடுமையான விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.