Published:Updated:

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க! - மூன்று ஆண்டுகளில் நடந்தது என்ன? #Timeline

டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்தே எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசிற்கான மதிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு உள்ளது என்ற முடிவுக்கு வர முடியும்.

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க
ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க

ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அவர் மறைவுக்குப் பின் அ.தி.மு.க மூன்றாகப் பிரிந்து, பின் இரண்டாக மாறியது. சில தொண்டர்களை தி.மு.க-விடம் இழந்தும் விட்டது. இந்த மூன்று ஆண்டுகளில் 24 தொகுதிகளின் இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்துவிட்டது. பல மாற்றங்கள் பல குழப்பங்கள் என இந்த மூன்று ஆண்டுகளில் அ.தி.மு.க-வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைத் திரும்பிப் பார்ப்போம்...

டிசம்பர் 5, 2016

ஜெயலலிதா மறைந்த அதேநாளில், முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் பன்னீர்செல்வம். நள்ளிரவில் முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
டிசம்பர் 10, 2016

சசிகலா, அ.தி.மு.க-விற்குத் தலைமை வகிக்க வேண்டுமென அமைச்சர்கள், அ.தி.மு.க உறுப்பினர்கள் எனப் பலரும் ஒன்று சேர்ந்து போயஸ் தோட்டத்தில் சசிகலாவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

டிசம்பர் 21, 2016

தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடைபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாகத் தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவப் படையின் துணையோடு சோதனை நடத்தியது வருமான வரித் துறை. இந்த சோதனையில் உள்நோக்கம் உள்ளதாகச் செய்திகள் பரவ, 'இது சட்டரீதியான நடவடிக்கைதான்' என்று பதிலளித்தது பா.ஜ.க. இந்த சோதனை குறித்து முதல்வரோ அமைச்சர்களோ வாய் திறக்கவில்லை.

"ஜெயலலிதா இருந்திருந்தால் தலைமைச் செயலகத்துக்குள் இப்படி சோதனை நடத்தியிருக்க முடியுமா?"
ரா மோகன ராவ்
டிசம்பர் 29, 2016

அ.தி.மு.க பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய கையோடு, சசிகலாதான் அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளர் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை போயஸ் தோட்ட இல்லத்திற்குச் சென்று சசிகலாவிடம் வழங்கினார் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

டிசம்பர் 31, 2016

அ.தி.மு.கவின் நியமனப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சசிகலா. பொறுப்பேற்ற பின்பு, "நம்மை இன்று விமர்சிப்பவர்கள் கூட மனமுவந்து நம்மைப் பின்தொடரும் அளவுக்கு, ஒரு புனிதமான பொதுவாழ்வை மேற்கொள்வோம்" என்று அமைச்சர்கள் முன்னிலையில் பேசினார்.

பிப்ரவரி 4, 2017

பொதுச் செயலாளராக இருந்த சசிகலா அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டுமென்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். 'மக்களை நேரில் சந்திக்காதவர், ஒரு பொதுக் கூட்டத்தில்கூட பேசாதவர், எப்படி முதல்வராகலாம்' என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழத் தொடங்கின.

சசிகலா
சசிகலா
பிப்ரவரி 6, 2017

ஜெயலலிதா மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களிலும் மக்கள் மத்தியிலும் இருந்த கருத்துக்களுக்குப் பதில் சொல்லும் விதமாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர் அப்போலோ மருத்துவர்கள். "ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. உலகத்தரமான சிகிச்சை என்னவெல்லாம் தர வேண்டுமோ, அதை எல்லாம் தந்திருக்கிறோம்" என்று விளக்கமளித்தது மருத்துவக் குழு.

பிப்ரவரி 7, 2017

ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்து பரபரப்பைக் கிளப்பினார் ஓ.பி.எஸ். தியானத்துக்குப் பின், "என்னைக் கட்டாயப்படுத்தியதால்தான் ராஜினாமா செய்யும் இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன். அதை நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று அம்மாவின் ஆன்மா என்னிடம் சொன்னது" என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், "தர்மயுத்தத்திற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்று சசிகலாவிற்குச் சவால் விடுத்தார் ஓ.பி.எஸ்.

இதுவரை செய்தியாளர்களைச் சந்திக்காமலிருந்த சசிகலா, ஓ.பி.எஸ்ஸின் இந்த அதிரடிக்குப் பின் செய்தியாளர்களை நள்ளிரவில் வரச் சொல்லி, "யாரையும் நிர்பந்தப்படுத்தி எதுவும் நடக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்குப் பின்னால் தி.மு.க. இருக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தில் எதிர் கட்சித்தலைவரும், முதல்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தனர்" என்று ஆவேசமாகப் பேசினார்.

சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவரும், முதல்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தனர்
சசிகலா
பிப்ரவரி 8 - 13, 2017

சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரிய பின்னும் ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. ஸ்டாலின், சசிகலா, ஓ.பி.எஸ் என அனைவரும் அடுத்தடுத்து ஆளுநரைச் சந்தித்தது பரபரப்பைக் கிளப்பினர். ஒரு அமைச்சர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சில எம்.எல்.ஏக்கள் எனப் பலரும் பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மறுபுறம், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

பிப்ரவரி 14, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு கீழமை நீதிமன்றம் கொடுத்திருந்த 4 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறைக்குச் செல்லும் முன்பு சட்டமன்றக் குழுத்தலைவராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்து அவர்தான் அடுத்த முதல்வர் என்ற உறுதியையும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்து, அவர்தான் கட்சியைக் கவனிப்பார் என்ற செய்தியையும் தொண்டர்களுக்குச் சொல்லிச் சென்றார் சசிகலா.

பிப்ரவரி 16, 2017

எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். 'கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களை விடுவித்தால் அனைவரும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்' என்றது ஓ.பி.எஸ் தரப்பு. ஆளுநர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
பிப்ரவரி 18, 2017

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பைத் தமிழக சட்டப்பேரவை சந்தித்தது. 'ரகசிய வாக்கெடுப்பு வேண்டும்' என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், தி.மு.க.வும் கோரிக்கை விடுத்தன. அதற்குச் சபாநாயகர் மறுக்க... பெரும் அமளியைச் சந்தித்தது பேரவை. தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் 122 பேர் எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது எடப்பாடி தலைமையிலான அரசு.

பிப்ரவரி 24, 2017

ஜெயலலிதாவின் பிறந்த தினத்தன்று புதுக் கட்சி ஒன்றைத் தொடங்கினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா. 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' என்று தன் புதுக் கட்சிக்குப் பெயரிட்டார் தீபா.

நான்தான் உண்மையான அ.தி.மு.க
ஜெ. தீபா
மார்ச் 4, 2017

'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது' எனப் பரபரப்பைக் கிளப்பியது ஓ.பி.எஸ் தரப்பு. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தது. அடுத்த இரண்டு நாள்களில் ஜெயலலிதாவிற்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது தமிழக அரசு.

மார்ச் 9, 2017

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சசிகலா, ஓ.பி.எஸ், ஜெ.தீபா ஆகிய மூவர் தரப்பிலும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தனர்.

மார்ச் 23, 2017

கட்சியின் பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் முடக்கியது தேர்தல் ஆணையம். கட்சிக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரி பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்தை அணுக, மறுபுறம் சசிகலா அணியினரும் உரிமை கோரினர். இரு அணியும் கட்சி சின்னத்தையும், பெயரையும் பயன்படுத்தும் உரிமையை இழந்தன.

ஏப்ரல் 7, 2017

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இடைத் தேர்தல் சமயத்தில் சோதனை நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏப்ரல் 9, 2017

ஆர்.கே.நகரில் பணமழை பொழிகிறது என்று குற்றச்சாட்டுகள் எழ, இடைத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

ஏப்ரல் 17, 2017

அ.தி.மு.க.வுக்கு உரிய இரட்டை இலைச் சின்னத்தை வி.கே.சசிகலா அணிக்கு ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் ஒருவரைக் கைது செய்த டெல்லி போலீஸ், இதில் தொடர்புடையதாகத் தினகரன்மீது வழக்குப் பதிவு செய்தது. டெல்லியில் கைதான இடைத்தரகரிடம் 1.30 கோடி ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். "அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக அழிக்கத் திட்டமிட்டு சிலர் செயல்படுகிறார்கள். நான் யாருக்கும் எதற்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன்," என்றார் தினகரன்.

தினகரன்
தினகரன்
ஏப்ரல் 18, 2017

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் முன்னணி அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இன்றி நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. கட்சியிலும், ஆட்சியிலும் டி.டி.வி. தினகரனை ஒதுக்கிவிட்டு, எந்தத் தலையீடும் இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவோம்" என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏப்ரல் 19, 2017

"அ.தி.மு.க.விலிருந்து நான் ஒதுங்கி விட்டேன், கட்சி பலவீனமடைய நான் காரணமாக இருக்க மாட்டேன்" என்று அறிவித்தார் தினகரன். இது தர்மயுத்தத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி என்றார் ஓ.பன்னீர்செல்வம். ஆட்சியை மட்டுமல்லாது அ.தி.மு.கவையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி.

ஏப்ரல் 25, 2017

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தினகரனிடம் 4 நாள்களாக விசாரணை செய்த டெல்லி போலீஸ், ஏப்ரல் 25ம் தேதி அவரை கைது செய்தது. மறுநாளே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்த சசிகலாவின் படங்கள் அதிரடியாக அகற்றப்பட்டு, அங்கு ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்பட்டன. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைவதற்கான பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்றன.

மே 19, 2017

இரு அணிகளும் இணைவதில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார் பன்னீர்செல்வம். 'அரசியல் எதுவும் பேசவில்லை. மக்கள் நலன் குறித்த விஷயங்கள் மட்டுமே பிரதமருடனான சந்திப்பில் விவாதிக்கப்பட்டது' என்றார் பன்னீர்செல்வம்.

மே 20, 2017

ஓ.பி.எஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், 'உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர், பி.ஜே.பி. உடனான கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்' என்று பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பதிவு திருத்தம் செய்யப்பட்டது. பி.ஜே.பி. என்ற வார்த்தை மட்டும் நீக்கப்பட்டு, உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என மாற்றப்பட்டது.

மே 24, 2017

எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின், 'அரசியல் எதுவும் பேசவில்லை. மாநில நலன் குறித்த திட்டங்கள் பற்றிப் பேசினோம்' என்றார் எடப்பாடி. "அரசியல் காரணங்களுக்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியைச் சந்தித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்து விட்டு, இப்போது உடைந்த அ.தி.மு.க.வை இணைக்கும் வேலையைக் கட்டப்பஞ்சாயத்து செய்வது போலச் செய்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி" என விமர்சித்தார் தி.மு.கவின் அப்போதைய செயல் தலைவர் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
விகடன்
ஜூன் 21, 2017

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன் என்று மூன்று அணிகளாகப் பிரிந்திருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் மூன்று அணிகளும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று ராம்நாத் கோவிந்தை ஆதரித்தனர்.

ஆகஸ்ட் 10, 2017

"தினகரன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது. அவருக்கும் அ.தி.மு.கவிற்கும் எந்தத் தொடர்புமில்லை." என்று அறிவித்தார் முதல்வர் பழனிசாமி. "என்னை நீக்க யாருக்கும் உரிமை கிடையாது" என்றார் தினகரன். "சுதந்திர தினத்துக்குள் இரு அணிகளும் இணையும்" என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

ஆகஸ்ட் 14, 2017

"முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்கிறார். ஜெயலலிதா மரணமடைந்த போது அவர்தான் முக்கியப் பொறுப்பிலிருந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாங்களும் வலியுறுத்துகிறோம். தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று மதுரையில் பேசினார் தினகரன்.

ஆகஸ்ட் 17, 2017

எடப்பாடி பழனிசாமி , "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவிடமாக்கப்படும்" என்று இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆகஸ்ட் 21, 2017

6 மாத காலப் பேச்சு வார்த்தைக்குப் பின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் ஒன்றிணைந்தன. அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருவர் கைகளையும் இணைத்து இந்த நிகழ்வை நடத்தி வைத்தார். தர்மயுத்தம் தொடர்வேன் என பிப்ரவரி முதல் வாரத்தில் அறிவித்து, எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஊழல் ஆட்சி என விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம் அதே ஆட்சியில் துணை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமி - ஓபிஎஸ்
எடப்பாடி பழனிச்சாமி - ஓபிஎஸ்
ஆகஸ்ட் 22, 2017

அணிகள் இணைப்பையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் 19 எம்.எல்.ஏ-க்கள் கடிதம் அளித்தனர். இதையடுத்து எடப்பாடி அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும், பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 'இது அ.தி.மு.க.வின் உட்கட்சிப் பூசல், இதில் நான் தலையிட முடியாது' எனப் பின்வாங்கினார் ஆளுநர்.

செப்டம்பர் 12, 2017

இரு அணிகள் இணைப்புக்குப் பின்னர், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களைப் பிரமாண்டமாக நடத்தியது அ.தி.மு.க. இதில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதலாவது, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது ரத்து செய்யப்படுவது என்பது. இரண்டாவது சசிகலா நியமித்த நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பது. மூன்றாவது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எனும் பதவி இனி கிடையாது. அதற்குப் பதில் இருவர் கொண்ட கூட்டுத்தலைமை, பொதுச்செயலாளர் பணியைக் கவனிக்கும். அந்தப் பணிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கவனிப்பார்கள் என்பதாகும். இதன் மூலம் சசிகலா சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அ.தி.மு.க. தரப்பு சொன்னது.

செப்டம்பர் 18, 2017

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் எண்ணிக்கை எடப்பாடி அரசுக்கு இல்லாத சூழலில், பெரும்பான்மையைக் காட்டத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது என நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வாதிட்டு வந்த நேரத்தில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால். அதோடு 18 இடங்களும் காலியாக இருப்பதாக அறிவிப்பும் வெளியிட்டார். அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், குறுக்கு வழியில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இந்த ஜனநாயகப்படுகொலையை நிகழ்த்தியிருப்பதாகத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர். விதிகளின் அடிப்படையிலேயே இந்தத் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகச் சபாநாயகர் தெரிவித்தார்.

செப்டம்பர் 23, 2017

"ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நாள்களில் அவர் அதைச் சாப்பிட்டார். இதைச்சாப்பிட்டார் என நாங்கள் சொன்னது எல்லாமே பொய். நாங்கள் யாரும் அவரைப்பார்க்கவே இல்லை. இட்லி சாப்பிட்டாங்க... சட்னி சாப்பிட்டாங்கனு... நாங்க சொன்ன எல்லாமே பொய். அதுக்கு உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். எல்லோரும் சேர்ந்து பொய்களைச் சொன்னோம்" என்று பேசினார் திண்டுக்கல் சீனிவாசன். மறுபுறம் ஜெயலலிதாவைப் பார்த்தோம் என ஓரிரு அமைச்சர்கள் சொல்ல விவாதத்துக்குள்ளானது சர்ச்சை.

செப்டம்பர் 25, 2017

ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்தது தமிழக அரசு.

 ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம்
அக்டோபர் 6, 2017

7 மாத கால சிறை வாசத்திற்குப் பின், சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து அவசர கால பரோலில் வெளியில் வந்தார். மறுபுறம் தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித்.

நவம்பர் 9, 2017

தமிழகத்தில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய வருமானவரி சோதனை நடந்தது. சசிகலா உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் என 187 இடங்களில், 1800 வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். 'கறுப்புப் பணத்துக்கு எதிராக அறுவைசிகிச்சை' என பி.ஜே.பி. தலைவர்கள் சொல்ல... "இது எங்களை மிரட்டுவதற்காக நடத்தப்படும் சோதனை. மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். 25 ஆண்டு சிறையில் போட்டாலும் அதற்கு பின்னர் வந்து அரசியல் செய்வேன்," என ஆவேசப்பட்டார் தினகரன். 5 நாள்கள் இடைவிடாது நடந்தது சோதனை. "வருமானவரித்துறை ஆய்வின் போது பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாகச் சொல்லப்படுவது பொய். வருமான வரித்துறை எதுவும் எடுத்துச் செல்லவில்லை" என்றார் தினகரன்.

நான் காந்தியின் பேரன் இல்லை. என்மீது குற்றச்சாட்டு வைப்பவர்களும் காந்தியின் பேரன் இல்லை!
டி.டி.வி.தினகரன்
நவம்பர் 17, 2017

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த சோதனையின் நீட்சியாக, ஜெயலலிதா வாழ்ந்து, மறைந்த போயஸ் தோட்ட இல்லத்தில் நள்ளிரவு சோதனை நடத்தினார்கள் வருமான வரித்துறையினர்.

நவம்பர் 21, 2017

"அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டன. மாதங்கள் உருண்டோடி விட்டன. ஆனால் மனங்கள்?" என ட்விட்டரில் கருத்துத் தெரிவித்தார் அ.தி.மு.க எம்.பியும் ஓ.பி.எஸ் ஆதரவாளருமன மைத்ரேயன்.

அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டன. ஆனால் மனங்கள்?
முன்னாள் அ.தி.மு.க எம்பி மைத்ரேயன்
நவம்பர் 23, 2017

இரட்டை இலைச் சின்னம் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி, ஓ.பி.எஸ். அணிக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலான நிர்வாகிகள் எந்தப்பக்கம் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டு, பெரும்பான்மை அடிப்படையில் ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது எனச்சொல்லப்பட்டது.

நவம்பர் 24, 2017

இரட்டை இலைச் சின்னத்தையும், அ.தி.மு.க. பெயரையும் ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் அணிக்கு ஒதுக்கிய 24 மணி நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ
டிசம்பர் 20, 2017

ஆர்.கே நகர் தேர்தல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பு, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.

டிசம்பர் 21, 2017

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், ஆளும் அ.தி.மு.கவின் வேட்பாளரான மதுசூதனன், திமுக வேட்பாளரான மருது கணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு சுமுகமாக நடைபெற்றது.

டிசம்பர் 24, 2017

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாகக் குக்கர் சின்னத்தில் நின்று 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார் தினகரன். 'பணம்தான் ஜெயித்துள்ளது' என்று அ.தி.மு.கவினர் கருத்துத் தெரிவித்தனர்.

பிப்ரவரி 24, 2018

ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. ஆனால், அந்தச் சிலை ஜெயலலிதாவைப் போல இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.

ஜெயலலிதா சிலை
ஜெயலலிதா சிலை
மார்ச் 18, 2018

`நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க; எங்களால்தான் அம்மாவின் ஆட்சியை இந்த மக்களுக்குத் தர முடியும்' எனச் சொல்லி, அ.ம.மு.க என்ற புதியக் கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி. தினகரன்.

அக்டோபர் 6, 2018

செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், "2017-ல் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்த பின்னர் ஓ.பி.எஸ் என்னை ரகசியமாகச் சந்திக்கத் தூது விட்டார். நானும் சந்தித்தேன். அப்போது கூட, இந்த ஆட்சி சரியில்லை. நீங்களே தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினார், அவ்வளவு ஏன், மீண்டும் என்னைச் சந்திக்க வேண்டுமென்று சில வாரங்களுக்கு முன்னர் கூட மீண்டும் தூது விட்டார் ஓபிஎஸ். இதுதான் அவரின் யோக்கியம்" என்று பேசியது மிகப் பெரிய சர்ச்சையானது.

அக்டோபர் 22, 2018

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் தன்னால் கர்ப்பமான பெண் குறித்து ஒரு ஆண் பேசியிருந்தார். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் அமைச்சர் ஜெயக்குமார் என்று கூறப்பட்டது. அடுத்த நாளே அந்தக் குற்றச்சாட்டை மறுத்தார் ஜெயக்குமார்.

ஜெயகுமாருக்கு இப்போது தம்பி பாப்பா பிறந்துள்ளது
வெற்றிவேல்
அக்டோபர் 23, 2018

செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், "அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது ஜெயக்குமார்தான். அவருக்கு இப்போது தம்பி பாப்பா பிறந்துள்ளது" என்று பரபரப்பைக் கிளப்பினார்.

அக்டோபர் 25, 2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என எடப்பாடி அரசுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

நவம்பர் 14, 2018

ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வைக்கப்பட்ட சிலைக்கு விமர்சனங்கள் எழுந்தபோது வேறு சிலை வைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. வாக்குறுதி அளித்ததிலிருந்து 8 மாதங்கள் கழித்து ஜெயலலிதாவின் புதிய உருவச் சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டது.

டிசம்பர் 14, 2018

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.

செந்தில் பாலாஜி - ஸ்டாலின்
செந்தில் பாலாஜி - ஸ்டாலின்
பிப்ரவரி 2019

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது அ.தி.மு.க. அ.தி.மு.க தலைமையிலான இந்தக் கூட்டணியில் பா.ஜ.க, பாமக, தமாக, தேமுதிக, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன.

ஏப்ரல் 18, 2019

வேலூர் தவிர்த்து 38 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலும், 22 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெற்றது.

மே 23, 2019

தேர்தல் முடிவுகள் வெளியாயின. தேனி தவிர்த்து மற்ற 37 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது அ.தி.மு.க கூட்டணி. 22 இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.கவும், 13 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றன. 9 இடங்களில் வெற்றிபெற்றதால் எடப்பாடி தலைமையிலான அரசு ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

ஜூன் 28, 2019

அ.ம.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்.

அக்டோபர் 24, 2019

அக்டோபர் 21-ம் தேதியன்று நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்த 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது.

நவம்பர் 10, 2019

அ.ம.மு.க-வில் செய்தித் தொடர்பளாரக இருந்த புகழேந்தி டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க-வில் இணைய முடிவெடுத்தார்.

புகழேந்தி
புகழேந்தி
எம். விஜயகுமர்

ஜெயலலிதா மறைந்த சில நாள்களில் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவரது ஆட்சி அப்போது முடிந்துவிடும் இப்போது முடிந்துவிடும் என்று பல விமர்சனங்கள் வந்தபோதும் இன்று வரை ஆட்சியை தன் வசம் தக்கவைத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடம் தவிர்த்து 37 இடங்களில் தோல்வியடைந்திருந்தாலும், இடைத் தேர்தலில் 11 இடங்களைக் கைப்பற்றியது அ.தி.மு.க. அடுத்து, டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்தே எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசிற்கான மதிப்பு மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு உள்ளது என்ற முடிவுக்கு வர முடியும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

2014-ம் ஆண்டு "மோடியா..? லேடியா..?" என்று மோடியை எதிர்த்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட பா.ஜ.கவோடு கூட்டணி வைத்தது மட்டுமல்லாமல், ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டம், நீட் தேர்வு, உணவு பாதுகாப்பு மசோதா என எல்லாவற்றையும் 'அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம்' என்ற பெயரில் ஆதரித்துக் கொண்டிருக்கிறது தற்போதைய அ.தி.மு.க அரசு. ஜெயலலிதா மறைவிற்குப் பின் அ.தி.முக என்ற கட்சி வீழ்ந்து விடவில்லைதான். ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க- கொண்டிருந்த கொள்கையும் உறுதியும் வீழ்ந்துவிட்டதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்!