Published:Updated:

தலைமைச் செயலகத்துக்காகக் குரல்கொடுத்த எஸ்.ஆர்.பி... தலைமைச் செயலக உத்தரவுக்கு தடம் மாறியது எப்படி?

ஜெயலலிதாவுடன் எஸ்.ஆர்.பி
ஜெயலலிதாவுடன் எஸ்.ஆர்.பி

2016-ல் தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடந்தபோது குரல் கொடுத்தார். 2019-ல் தலைமைச் செயலக உத்தரவுக்குக் கட்டுப்பட்டார். எஸ்.ஆர்.பி-யை அ.தி.மு.க தடம் மாற்றியது எப்படி?

``தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், கூட்டணிக்காக பி.ஜே.பி-யுடன் பேசியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தேசப்பிதாவைக் கொன்றவர்களின் பின்புறத்தில் இருப்பவர்கள். காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்ற சங்பரிவார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்'' - த.மா.கா-விலிருந்து விலகி 2016-ம் ஆண்டு அ.தி.மு-வில் இணைந்தபோது எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் சொன்ன வார்த்தைகள் இவை. அந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்தான் இன்றைக்கு பி.ஜே.பி கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களித்திருக்கிறார்.

வாசனுடன் எஸ்.ஆர்.பி.
வாசனுடன் எஸ்.ஆர்.பி.

மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற காங்கிரஸ் கொறடா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய அமைச்சர் எனப் பதவிகளை வகித்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தைவிட சீனியர் அரசியல்வாதி. காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, த.மா.க-வை வாசன் தொடங்கியபோது அவருடன் இணைந்தவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். 2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், தாய்க் கழகமான காங்கிரஸ் கட்சியில் இணைய பீட்டர் அல்போன்ஸ், சாருபாலா தொண்டைமான், கார்வேந்தன், ராணி உள்ளிட்டவர்கள் முயன்றபோது மாறுபட்டு, அ.தி.மு.க-வில் சேர்ந்தார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

``ஏன் அ.தி.மு.க-வில் சேர்ந்தீர்கள்?'' என மீடியாவினர் அன்றைக்கு கேட்டபோது, ``கூட்டணிக்காக த.மா.கா-வின் மூத்த தலைவர், பி.ஜே.பி-யுடன் பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பி.ஜே.பி-யினர் தேசப்பிதா காந்தியைக் கொன்றவர்களின் பின்புறத்தில் இருந்தவர்கள். காமராஜரை டெல்லியில் உயிரோடு கொளுத்த முயன்ற சங்பரிவார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். `அப்படிப்பட்ட பி.ஜே.பி-யினரோடு கூட்டணி பேசுவது சரியாக இருக்காது' எனச் சொன்னேன். அதன்பிறகு, `மக்கள் நலக் கூட்டணி' என்றார் ஜி.கே.வாசன். `அ.தி.மு.க-வோடு மீண்டும் பேசுவோம்' எனச் சொன்னேன். அதற்குள் மக்கள் நலக் கூட்டணியில் 26 சீட் முடிவாகிவிட்டது'' என விளக்கம் கொடுத்தார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

எஸ்.ஆர்.பி. அ.தி.மு.க-வில் இணைந்த போது
எஸ்.ஆர்.பி. அ.தி.மு.க-வில் இணைந்த போது

அ.தி.மு.க-வில் சேர்ந்த ஒரே மாதத்தில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ராஜ்யசபா வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அ.தி.மு.க-வில் பல சீனியர்கள் பதவிக்காகக் காத்திருக்கும் நிலையில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமுக்கு ராஜ்யசபா எம்.பி அதிர்ஷ்டம் அடித்தது. அடுத்த ஆறு மாதத்தில் ஜெயலலிதா மரணமடைந்தார். ஆனாலும், அ.தி.மு.க-வின் விசுவாசியாகவே செயல்பட்டு வந்தார்.

ஜெயலலிதா இறந்த சில நாள்களிலேயே போயஸ் கார்டனுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் மிகவும் நெருக்கமான பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தியது. சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 131 கோடி ரூபாய் ரொக்கமும் 171 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பன்னீருடன் சேகர் ரெட்டி
பன்னீருடன் சேகர் ரெட்டி
Photo: Vikatan

அந்த சோதனை நூல் பிடித்துச் சென்றபோது, அன்றைக்கு தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் போய் நின்றது. ராம மோகன ராவ் வீடு, அவருடைய தலைமைச் செயலகத்தின் அலுவலகம் என எதுவும் சோதனைக்குத் தப்பவில்லை. இந்தியாவின் எந்த மாநிலத் தலைமைச் செயலகத்துக்குள்ளும் துணை ராணுவத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு சோதனை போட்டதில்லை. தமிழகத்தில் நடந்த இந்தச் சோதனையை மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகக் கண்டித்தார்.

ஜெயலலிதாவுடன் ராம மோகன ராவ்
ஜெயலலிதாவுடன் ராம மோகன ராவ்

அந்த நேரத்தில் அ.தி.மு.க-வில் இருந்து ஒரு குரல் மோடி அரசுக்கு எதிராகக் கர்ஜித்தது. அவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட ஐ.டி ரெய்டுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். 2016 டிசம்பர் மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில், ``தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த வேண்டுமானால் மாநில அரசிடம் அனுமதி பெறுவதுதான் மரபு. ஆனால், அந்த மரபு மீறப்பட்டிருக்கிறது. தமிழக அரசுப் பணியாளர்கள் மீது சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை. முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது பாதுகாப்புக்குத் துணை ராணுவத்தை மட்டும் அழைத்துச் சென்றது தவறு. வருமானவரி சோதனைக்குத் துணை ராணுவம் அனுப்பியது கடும் கண்டனத்துக்குரியது. தமிழக தலைமைச் செயலகத்தில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனை, கூட்டாட்சி தத்துவத்தின் மீது கேள்வியை எழுப்புகிறது'' எனச் சொன்னார்.

ராம மோகன ராவ் பேட்டி அளித்த போது
ராம மோகன ராவ் பேட்டி அளித்த போது

அன்றைக்கு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்துதான் இப்படியான கண்டன அறிக்கை வந்திருக்க வேண்டும். தனக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதால் அன்றைக்குப் பன்னீர்செல்வம் எதுவும் பேசவில்லை. முதல்வர் வாய் மூடியிருந்தபோது மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல் கொடுத்தவர் அ.தி.மு.க எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

தன் வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் நடந்த சோதனையை கண்டித்து மீடியாவிடம் கொதித்தார் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ். சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் ராம மோகன ராவ் பேட்டி அளித்தபோது, ``எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் இணை அமைச்சரும் அ.தி.மு.க எம்.பி-யுமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

ராஜ்யசபாவில் எஸ்.ஆர்.பி
ராஜ்யசபாவில் எஸ்.ஆர்.பி
`கூட்டணி தர்மத்துக்காகக் குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு' எனச் சொல்லும் ராமதாஸுக்கு 20 கேள்விகள்!

2016 டிசம்பரில் மோடி அரசுக்கு எதிராகக் கர்ஜித்த எஸ்.ஆர்.பலசுப்பிரமணியம்தான் 2019 டிசம்பரில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ராஜ்யசபாவில் வாக்களித்தார். ``குடியுரிமை மசோதா குறித்து அ.தி.மு.க அலுவலகத்தில் விவாதித்துக்கொண்டிருந்தபோது, தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, `அந்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்' எனக் கூறினார்'' என்று சொல்லி அதிர வைத்தார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு விருப்பம் இல்லாமல்தான் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் வாக்களித்திருக்கிறார். அது அவருடைய வார்த்தைகளிலேயே வெளிப்படுகிறது. மதச்சார்பின்மை கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம். குடியுரிமை மசோதா தொடர்பாகக் கருத்து சொன்ன எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ``இந்து ராஷ்டிரத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே குடியுரிமை சட்டத் திருத்தத்தை பி.ஜே.பி அரசு கொண்டு வந்திருக்கிறது.

எஸ்.ஆர்.பி
எஸ்.ஆர்.பி
ஜெயலலிதா ஆன்மா இவர்களை மன்னிக்காது! #Jayalalithaa

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தாக வேண்டிய நெருக்கடி பி.ஜே.பி-யின் கூட்டணிக் கட்சிகளுக்கு இருந்தது. மசோதாவில் முஸ்லிம் என்ற வார்த்தை இடம்பெறாதது நிச்சயம் தவறுதான். நிர்ப்பந்தம் காரணமாகக் குடியுரிமை மசோதாவை ஆதரித்தோம்'' என்றார். எந்தத் தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்தியதற்காக 2016-ம் ஆண்டு கண்டன அறிக்கை விட்டாரோ அதே தலைமைச் செயலகத்தில் இருந்து எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு உத்தரவு வந்ததுதான் காலத்தின் கோலம்.

அடுத்த கட்டுரைக்கு