Published:Updated:

கெஜ்ரிவாலால் வீழ்த்தப்பட்ட அமித்பாய் அரசியல் கணக்கு... டெல்லி தேர்தல் முடிவால் நட்டாவுக்கு செக்!

அமித் ஷா
அமித் ஷா

அமித் ஷாவின் வியூகம் டெல்லியில் எடுபடாமல் போனதற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.

அரசியல் சாணக்கியன் என்று அமித் ஷாவைக் கடந்த ஐந்தாண்டுகள் உச்சிமுகர்ந்தனர் பி.ஜே.பி-யினர். ஆனால், அரசியல் சாணக்கியனின் சமீபத்திய கணக்குகள் எல்லாம் பொய்த்துவருவது பி.ஜே.பி-யினரால் ஜீரணிக்க முடியாத அளவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக மகாராஷ்டிராவில் வெற்றிபெற்றும் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில், இப்போது நடந்து முடிந்த டெல்லி தேர்தலில் ஒற்றை இலக்க வெற்றியை மட்டுமே பி.ஜே.பி பெற்றதும் அமித் ஷாவின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கு அஸ்தமனமோ என்று எண்ண ஆரம்பித்துவிட்டனர் பி.ஜே.பி நிர்வாகிகள்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

2014-ம் ஆண்டுக்கு பிறகு பி.ஜே.பி-யின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியவர் அமித் ஷா. பி.ஜே.பி தலைவராக இவரை மோடி முன்மொழிந்தபோது என்ன சாதித்துவிடுவார் இந்த குஜராத்துக்காரர் என்று எளிதாக எடைபோட்டனர் பிற மாநில பி.ஜே.பி நிர்வாகிகள். ``நான் அதிகம் பேசமாட்டேன்.. எனது பேச்சு எனது செயலில் தெரியும்” என்று பி.ஜே.பி நிர்வாகிகளிடம் அவர் சொன்னதை அடுத்த சில மாதங்களில் செய்துகாட்ட ஆரம்பித்தார். 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் நடந்த அனைத்து மாநில தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது பி.ஜே.பி. குறிப்பாக வட மாநிலங்களில் காவிக்கொடி பறப்பதே அதிசயம் என்றிருந்த நிலையில் அந்த மாநிலங்களில் ஆட்சி பீடத்திலே பி.ஜே.பி-யை அமர வைத்தார்.

`அமித்பாய்' என்று அதற்குப் பிறகுதான் அச்சத்தோடு அழைக்க ஆரம்பித்தனர் பி.ஜே.பி-யினர். இந்தியா முழுவதும் உள்ள பிராந்தியங்களில் பி.ஜே.பி-யின் ஆதிக்கம் அதிகமாக அரசியல் சூத்திரங்களின் பட்டியலில் அமித் ஷா ஃபார்முலாவும் இணைந்துகொண்டது. யானைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல அமித்பாயின் அரசியல் கணக்கு சறுக்க ஆரம்பித்தது, 2018 இறுதில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தலில்தான். அந்தத் தேர்தல் முடிவில் ஆட்சியிலிருந்த மூன்று பெரிய மாநிலங்கள் பி.ஜே.பி கையை விட்டுப் போனது, அப்போதே அமித் ஷாவின் அரசியல் கணக்கு குறித்த விமர்சனங்களும் எழ ஆரம்பித்தன. ஆனால், அதற்கு மறுமொழி கொடுத்தது 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

அமித் ஷாவை மீண்டும் அகாயச சூரராக தூக்கி கொண்டாடினார்கள் பி.ஜே.பி-யினர். ஆனால், அவர்கள் அப்போது உணரவில்லை, அமித் ஷாவின் ராஜதந்திரத்துக்கு முன்னோடி ஒருவர் இருக்கிறார் என்று. ஆம்! அடுத்த சில மாதங்களில் நடந்த மகாராஷ்டிரா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பி.ஜே.பி எப்போது பதவியேற்பது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஆனால், சரத்பவார் என்கிற காங்கிரஸ் கட்சியில் பழம் தின்று கொட்டைபோட்ட ஒருவரின் முன்பு அமித்பாயின் அரசியல் கணக்கு அவுட்டானது. ஒற்றைப் படை எண்ணிக்கையில் உறுப்பினர்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் யுக்தியைக் கற்றுக்கொடுத்த அமித்பாய், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றும் ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டிய பரிதாபத்தைச் சந்தித்தார் மகாராஷ்டிரா தேர்தலில்.

இதோ! அவரது அரசியல் வியூகத்தில் அடுத்த சறுக்கல். டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வி. ஆனால், இந்த முறை அமித் ஷாவின் அரசியல் சாணக்கியத்தனத்துக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். கடந்த முறை பி.ஜே.பி அந்த மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை எட்டு இடங்களைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், இந்த முன்னேற்றத்துக்கு அமித் ஷாவும், அவர் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவராக நட்டாவும் அதிக அளவில் வியர்வை சிந்தினார்கள். டெல்லியின் ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து தட்டிப்பறிப்பதை சுல்தான்களிடமிருந்து டெல்லியை மீட்பது போன்ற ஒரு போர்தந்திரத்தையே மேற்கொண்டது பி.ஜே.பி-யின் படை.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
Twitter / AAP

ஆனால், அமித் ஷாவின் வியூகம் டெல்லியில் எடுபடாமல் போனதற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அது படித்த மக்கள் நிரம்பிய பகுதி, இரண்டு அமித் ஷாவின் அதிரடிக்கு எதிராக அமைதியாக காய்நகர்த்திய கெஜ்ரிவாலின் ஐ.ஐ.எம். மூளை. அதீத அதிகாரம் இப்போது பி.ஜே.பி-யின் வசம் இருக்கிறது. அதே வேகத்தில் டெல்லியை வாரிச்சுருட்டிவிடலாம் என்று எளிதாக கணக்குப் போட்டார் அமித்பாய். ஆனால், அவர் டெல்லி தேர்தல் களத்தில் காலடி எடுத்து வைத்தபோதே உணர்ந்துகொண்டார், நாம் களத்துக்கு வரும்முன்பே கெஜ்ரிவால் ஒவ்வொரு வாக்காளர்களின் வீட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டார் என்று. எந்த வளர்ச்சியை முன்வைத்து மோடி 2014-ம் ஆண்டு அசுர வெற்றியைப் பெற்றாரோ, அதே வளர்ச்சி என்ற மந்திர வார்த்தையை கெஜ்ரிவால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

மோடி வளர்ச்சி என்று சொன்னபோது அவர் இந்திய நாட்டை அதுவரை ஆளவில்லை. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் டெல்லியில் இலவச தரமான கல்வி, குறைந்த கட்டணத்தில் மின்சாரம், உயர்தர மருத்துவ வசதி என்று தன் மாநில மக்களுக்கு வளர்ச்சியை கண்ணில் காட்டியபிறகு, அதை அழுத்தமாக உச்சரித்தார் கெஜ்ரிவால். வேறு வழியில்லாமல் அமித் ஷாவின் அரசியல் சூத்திரம் பி.ஜே.பி-யின் அடிநாதமான தேசியம், இந்துமதம் என்று பயணிக்க ஆரம்பித்தது. ஆனால், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இன்று வரை டெல்லியில் போராட்டம் நடத்தும் மக்களில் சரி பாதி இந்துக்கள் என்பதை கணிக்காமல் விட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் அமைதியாக களப்பணியாற்றிய நேரத்தில் அசுரத்தனமான வேகத்தில் தேர்தல் களத்தில் பணியாற்றினார்கள் பி.ஜே.பி-யினர். குறிப்பாக நட்டா நாற்பதுக்கும் மேற்பட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்கெடுத்தார். அமித் ஷா அமைச்சரவைக் கூட்டத்தில் கூட கலந்துகொள்ளாமல் டெல்லி தேர்தல் களத்தில் பவனிவந்தார். ஆனால், அவர்கள் வளர்ச்சிக்குப் போட்டியாக இந்து-முஸ்லிம் பிரிவைப் பற்றியே அதிகம் கவனத்தில் கொண்டார்கள். அதை வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவு வந்த பிறகே புரிந்துகொண்டுள்ளனர் அமித் ஷாவின் அறிவுக்கு பாத்திரமானவர்கள்.

பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல்... சித்தாந்தச் சிக்கலில் தி.மு.க!

எல்லா நேரத்திலும் பாகிஸ்தான், பாபர் மசூதி, முஸல்மான்கள் ஒர்க் அவுட் ஆகாது என்பது அமித் ஷாவுக்கு லேட்டாகவே புரிந்தது. ஒருகட்டத்தில் கெஜ்ரிவாலின் குட் இமேஜ் பிம்பத்தை உடைக்க அமித் ஷா தரப்பு எடுத்த எல்லா அஸ்திரமும் பொய்த்துப் போனதும் ஒருகட்டத்தில் ``கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி” என்று ஓப்பனாக பிரசாரத்தில் கர்ஜித்தனர். ஆனால், அதற்கு வேறு விதமாக ரியாக்ஷன் காட்டினார் கெஜ்ரிவால். ``நான் தீவிரவாதி என்று நீங்கள் கருதினால் எனக்கு ஓட்டு போடவேண்டாம்“ என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார். இப்படி ஒரு பதிலை பி.ஜே.பி தலைமை எதிர்பார்க்கவில்லை. எளிமையாக எல்லோரையும் அணுகிய கெஜ்ரிவால் பி.ஜே.பி-யின் தூக்கத்தை இறுதிக்கட்டத்தில் கெடுத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

கெஜ்ரிவால் - பிரஷாந்த் கிஷோர்
கெஜ்ரிவால் - பிரஷாந்த் கிஷோர்

அமித் ஷாவின் அரசியல் சாணக்கியத்தனம் டெல்லியில் உடைந்து போனதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அமித்பாய் அரசியல் பள்ளியில் முதல்வராக இருந்த பிரசாந்த் கிஷோர், கடைசி நேரத்தில் கெஜ்ரிவால் பக்கம் வந்தார். வளர்ச்சி என்கிற மந்திரச்சொல்லை மோடிக்கு கற்றுக்கொடுத்தவர் இந்த முறை கெஜ்ரிவாலுக்குப் பின்னால் நின்றார். அமித் ஷாவின் தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் என்று அவருடனே இருந்து பார்த்த கிஷோருக்குப் புரிந்துபோனது இவர்கள் இந்து-முஸ்லிம் பிரச்னையை முன்வைத்து கெஜ்ரிவாலுக்கு வலைவிரிக்கிறார்கள் என்று. கெஜ்ரிவாலுக்குப் புதிய சூத்திரத்தை சொல்லிக்கொடுத்தார். அது ஐந்தாண்டுகளாக பழக்கப்பட்ட அமித் ஷாவின் பழைய அரசியல் கணக்கை இப்போது காலி செய்துவிட்டது. ஆனாலும் இந்த முறை உருளப்போவது அமித் ஷாவின் தலை அல்ல, அவரால் தலைவர் பதவிக்கு கொண்டுவரப்பட்ட நட்டாவின் தலைதான். சாரதியாக அமித் ஷா அமர்ந்துகொண்டு, அவர் இயக்கிய டெல்லி தேர்தல் தேர், சக்கரம் கழன்று நின்றுவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு