Published:Updated:

சுதந்திர இந்தியாவின் முதல் நாள் எப்படி இருந்தது? - ஆனந்த விகடனின் 1947 நாஸ்டால்ஜியா!

ஆனந்த விகடன் - 1947
ஆனந்த விகடன் - 1947

சுதந்திர இந்தியாவின் முதல் நாள் கொண்டாட்டங்கள், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, சுதந்திரத்தின் மூலம் கிடைத்த ஜனநாயக உரிமை உள்ளிட்டவற்றை ஆகஸ்ட் 17, 1947 அன்று வெளியான ஆனந்த விகடன் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. அதன் தொகுப்புதான் இந்தக் கட்டுரை!

சுதந்திர இந்தியா தனது 75-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சுதந்திர தினம், சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சில கூடுதல் விதிமுறைகளோடு கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினம்
சுதந்திர தினம்
Srinivasulu.V

இந்தச் சமயத்தில், பல போராட்டங்களுக்குப் பின் நாம் அடைந்த சுதந்திரத்தின் வெற்றியை முதல் சுதந்திர நாளில் வாழ்ந்த இந்தியர்கள் எப்படிக் கொண்டாடினார்கள்... அன்றைய தினத்தில் இந்தியர்களின் எண்ணவோட்டம் எப்படி இருந்தது... என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்.

ஆகஸ்ட் 17, 1947 அன்று வெளியான `ஆனந்த விகடன்', நம் நாட்டின் முதல் சுதந்திர தினத்தை நம் கண்முன் நிறுத்துகிறது. அந்த இதழில் வெளியான தலையங்கம் உட்பட பல கட்டுரைகளிலும் சுதந்திர வாசமே வீசும். அந்த இதழில் சுதந்திரம் குறித்துச் சொல்லப்பட்டிருந்த முக்கிய கருத்துகள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்புதான் இந்தக் கட்டுரை.

அட்டைப் படம்!

அட்டைப்படத்தில், குட்டி குரங்கு ஒன்று மணியோசை எழுப்பும், வண்ண மலர்கள் தூவப்பட்டிருக்கும், யானைமீது அமர்ந்து இந்தியக் குடிமகன் ஒருவர் ஆனந்தமாய் தேசியக்கொடியை அசைத்துக்கொண்டிருப்பார், அதை இன்முகத்தோடு விகடனார் வரவேற்பது போன்ற கலர்ஃபுல்லான ஓவியத்தை, ஓவியர் கோபுலு வரைந்திருந்தார்.
Ananda Vikatan Cover Page - 1947
Ananda Vikatan Cover Page - 1947
கோபுலு

அந்த இதழில் வரையப்பட்டிருந்த கேலிச்சித்திரத்திலும் இந்திய அதிகாரம், ஆங்கிலேயர் கையிலிருந்து மீண்டும் இந்தியர்கள் கைக்கு வந்துவிட்டது என்பது விளக்கப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலையங்கம்!

`உலக மகா வைபவம்' என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது. `இந்தச் சுதந்திரம் இந்தியாவுக்கான சுதந்திரம் மட்டுமல்ல; உலக நாடுகளுக்கான நம்பிக்கை இந்தச் சுதந்திரம்' என்பதுதான் தலையங்கத்தின் சாராம்சமாக இருந்தது.

``உலக சரித்திரத்தில் இதுவரையில் முக்கியமாகக் கருதப்பட்ட சம்பவங்களில் அமெரிக்கா சுதந்திரம் பெற்றதையும், பிரெஞ்சுப் புரட்சியையும், ரஷ்யாவில் தோன்றிய சமூக எழுச்சியையும் குறிப்பிடப்பட்டுவந்தன. ஆனால், அந்தச் சம்பவங்களைவிட இந்தியா சுதந்திரமடைந்த சம்பவமே உலகத்தில் மகத்தான நிகழ்வாகியுள்ளது. இதற்குக் காரணம், இந்திய விடுதலையிலிருந்து உலகின் எதிர்காலம் நம்பிக்கையளிக்கக் கூடிய தன்மையைப் பெற்றுவிட்டதுதான் எனில் மிகையாகாது.

அமெரிக்கா சுதந்திரம் பெற்றதனால் உலகம் கண்ட பலன்கள் ஏதுமில்லை. அவ்வாறன்றி சுதந்திர இந்தியாவின் மூலம் தங்களுக்கு நிச்சயமான பலன் உண்டு என்பதை உலகோர் உணர்ந்து, நல்லநாள் ஆரம்பமாவதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆகையினாலேயே ஆகஸ்ட் 15-ம் தேதி உலகோர்க்கு நன்மையை நிர்ணயிக்கும் தினமாகவும், உலக சரித்திரத்துக்கு மகத்தான புது ஆரம்பமாகவும் குறிப்பிடப்படும்.

உலக சரித்திரத்தில் 150 ஆண்டுக்காலம் தொடர்ந்து போராடிய தேசம் எதுவுமில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு போராட்டத்தில்தான் உலக ஜனத் தொகையில் ஐந்திலொரு பகுதியினராக உள்ள இந்தியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆனந்த விகடன் தலையங்கம்

தலைமுறை தலைமுறையாக இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகத்திற்கே ஓர் உவமை காட்டுவதுபோல் தர்மயுத்தம் புரிந்தார்கள். `அதர்மத்தை அகிம்சை வெல்லும்’ என்ற தர்ம வாக்கியத்தை நிறைவேற்றிக் காட்டினார்கள். அதன் மூலம் அதர்மத்தைக் கண்டு அஞ்ச வேண்டாமென்பதை உலகுக்குச் செயலில் நிரூபித்துவிட்டார்கள்’ என்று அந்தத் தலையங்கக் கட்டுரையில் எழுதியிருந்தது ஆனந்த விகடன்.

ஆனந்த விகடன் சுதந்திர இந்தியா - 1947
ஆனந்த விகடன் சுதந்திர இந்தியா - 1947
சுதந்திர தினத்தை மெய்நிகராகக் கொண்டாட எளிய வழிமுறைகள்! #IndependenceDay #MyVikatan

75 ஆண்டுகளுக்கு முன்னரே உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா திகழும் என்பதை எழுதியிருந்தது `ஆனந்த விகடன்.’ இன்று பல்வேறு விஷயங்களில் உலக நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் முன்மாதிரி நாடாக இந்தியா இருந்துவருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கே மனிதவள மையமாக இந்தியாதான் இருந்துவருகிறது. உலக அரசியலில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இன்று மாறியிருக்கிறது. இந்தியாவையும் இந்தியர்களையும் சார்ந்து பல சிறிய நாடுகள் இன்று செயல்பட்டுவருகின்றன.

கொண்டாட்டங்கள்!

சுதந்திர இந்தியாவின் முதல் நாள் எப்படி இருந்திருக்கும்... 150 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தை இந்தியர்கள் அந்நாளில் எப்படிக் கொண்டாடியிருப்பார்கள்? என்ற கேள்விகளுக்கான பதில்களை எழுத்து வடிவில் நம் கண் முன் நிறுத்தியிருக்கிறது ஆனந்த விகடன்.

1947 - ananda vikatan
1947 - ananda vikatan

``உலகின் மகத்தான சுப தினத்தில் இந்தியாவின் சுய ஆட்சி ஆரம்பமாயிற்று. சுதந்திர சூரியன் இந்திய வானிலே தோன்றினான். அதன் ஒளிபட்டு, அடிமை இருள் அறவே அகன்றது. அந்தப் பொன்மயமான ஒளியிலே, பாரத நாட்டுச் சுதந்திர மாளிகையில் நவரத்தின அரியாசனம் அற்புதமாய்த் திகழ்ந்தது. அந்த அரியாசனத்தில் சுதந்திர தேவி அமர்ந்தபோது வாத்தியங்கள் முழங்கின. தெருவெங்கும் கோஷங்கள் எழுந்தன, ஆலய மணிகள் ஒலித்தன. பறவைகள் பாடி ஆடின. மரங்கள் காற்று வீசின! மலர்கள் நறுமணம் பரப்பின! பூலோகவாசிகள் இந்தியாவை நோக்கி வாழ்த்தி வணங்கினர்" என்று சுதந்திரத்தின் முதல் நாள் கொண்டாட்டங்களைத் தன் தலையங்கத்தில் வர்ணித்துள்ளது `ஆனந்த விகடன்.’

சுதந்திர இந்தியா!

அல்லாடி கிருஷ்ணஸ்வாமி, `சுதந்திர இந்தியா' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், ``நமது தேசத்தின் சரித்திரத்திலேயே இது மிக முக்கியமான தினம். இன்று முதலாக இந்தியா இரு துண்டுகளாக்கப்படுகிறது. இதையொட்டி வர்த்தகம், கைத்தொழில், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிக்கலான சில பிரச்னைகள் ஏற்படவிருக்கின்றன. இந்தக் காரணங்களால் தேச மக்கள் மனம் குன்றுவார்கள் என்றாலும்கூட, இந்திய தேசம் விடுதலை பெற்றதையும் இந்த நாட்டு மக்கள் எதிர்கால அரசியலைத் தாங்களாகவே நிர்ணயித்து, தேசத்தின் விதியை முடிவு செய்துகொள்ளும் பொறுப்பைப் பெற்றிருப்பதையும் மறுக்க முடியாது" என்று இந்தியா - பாகிஸ்தான் பிரிவு பற்றியும், மக்களின் ஜனநாயக உரிமை பற்றியும் பேசப்பட்டிருந்தது.

Ananda vikatan - 1947
Ananda vikatan - 1947

மேலும், ``கிடைத்திருக்கும் இந்தச் சுதந்திரமானது, குறிப்பிட்ட வகுப்பினரையோ சாராரையோ அடக்கியாள்வதற்கு முகாந்திரமாக ஏற்பட்டாலும் சரி, நாட்டின் நலத்துக்காக மேதைகளைப் பயன்படுத்திக்கொள்வதில் வகுப்பு, கட்சி, ஜாதி வேற்றுமைகளைப் புகுத்தினாலும் சரி, பல கோடி மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தாலும் சரி, தங்களுக்கு அத்தியாவசியமான உணவு, உடைகளைப் பெறவும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளவும் பயனற்றதாக போனாலும் சரி, தேச நலனுக்கும் கைத்தொழிலுக்கும் குந்தகமாக நின்றாலும் சரி, பொது நலனுக்காகவென்றே ஏற்பட்ட அந்தச் சுதந்திரத்தின் லட்சியம் பங்கமடைந்துவிடும். இது எந்த நாட்டுக்கும் பொருந்தும்" என்று சுதந்திரத்திற்குப் பங்கம் விளைவிக்கும் இந்தச் செயல்களெல்லாம் சுதந்திர இந்தியாவில் நடைபெற்று விடக் கூடாது என்ற தொனியில் எழுதியிருந்தார் அல்லாடி கிருஷ்ணஸ்வாமி.

சுதந்திரப் போராட்ட வீரர்கள்!

சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி புகைப்படங்களோடு ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையில், ``1942 ஆகஸ்ட்டில் தெறித்தெழுந்த அந்தப் பொறி, காட்டுத் தீயாக மாறி விட்டது. ஐந்தே ஆண்டுகளில் அந்த ஆகஸ்ட் தீர்மானம் நம் கண் முன்னே நிறைவேறுவதைக் காண்கிறோம். பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து தாமாகவே அமைதியுடன் வாபஸாக வேண்டுமென காந்திஜி கேட்டார். அதே மாதிரி, சட்டபூர்வமாக வெள்ளையர்கள் வெளியேறுகிறார்கள்" என்று அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. மேலும், இந்தச் சுதந்திரத்துக்காகப் பலனை எதிர்பாராது போராடிய அனைவருக்கும் வணக்கம் செலுத்தியிருந்தது ஆனந்த விகடன்.

எந்தத் தனி மனிதனின் முயற்சியினாலும் நமக்குச் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. கணக்கற்ற வாலிபர்கள் பலனையோ விளைவையோ எதிர்பாராமல் இந்த ஜுவாலையில் குதித்தனர். அவர்களுடைய பெயர்கூட நமக்குச் சரியாகத் தெரியாது. இந்த தினத்தில் அந்தத் தியாகிகளுக்கு நமது வணக்கத்தைச் செலுத்துவோமாக. `ஜெய் ஹிந்த்'
ஆனந்த விகடன்

கொடி வளர்ந்த கதை!

நம் நாட்டின் தேசியக்கொடி ஆண்டுவாரியாக எப்படியெல்லாம் மாற்றம் பெற்றது என்பதைக் கட்டுரையாகவும் ஒரு முழுப் பக்கப் படமாகவும் வெளியிட்டு விளக்கியிருந்தது ஆனந்த விகடன்.

National Flag Story - 1947
National Flag Story - 1947
Ananda Vikatan
Vikatan

இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அடுத்த இரண்டாவது நாளில் வெளியான அந்த இதழின் பெரும்பாலான பக்கங்களில் சுதந்திரம் பற்றிய எழுத்துகளே நிரம்பியிருந்தன. அதிலிருக்கும் புகைப்படங்களும் கட்டுரைகளும் நம்மை நிச்சயம் 1947-க்கு கூட்டிப் போய்விடும்.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து ஏதேனும் கேள்விப்பட்டிருந்தால், அது பற்றி எங்களோடு கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு