Election bannerElection banner
Published:Updated:

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500 - அ.தி.மு.க திட்டத்தைக் கசியவிட்ட ஆர்வக்கோளாறு யார்?

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெறவிருந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தைக் கசியவிட்ட ஆர்வக்கோளாறு யார் என்று தெரியவந்திருக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அ.தி.மு.க - தி.மு.க கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடும் வேலையில் இறங்கிவிட்டன.

ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்த அடுத்தநாள், முதல்வர் பழனிசாமி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500 வழங்குவதோடு ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்குவோம் என அறிவித்தார். இந்த அறிவிப்பு ``தி.மு.க அறிவித்ததைப்போல இருக்கிறதே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ``அ.தி.மு.க-வின் திட்டம் இது. நாங்கள் அறிவிக்கவிருப்பதை அறிந்துகொண்டு அதை ஸ்டாலின் அறிவித்துவிட்டார். கட்சியிலிருக்கும் சில ஆர்வக்கோளாறுகளால்தான் இப்படி அ.தி.மு.க-வின் நல்ல திட்டங்கள் கசிந்துவிடுகின்றன” என்று பதிலளித்திருந்தார்.

தி.மு.க கிராமசபை
தி.மு.க கிராமசபை

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெறவிருந்ததாக முதலமைச்சர் கூறும் இந்தத் திட்டத்தை, கசியவிட்ட ஆர்வக்கோளாறு யார் என்று அறிந்துகொள்ள அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000... கமல்ஹாசனை காப்பி அடிக்கிறாரா ஸ்டாலின்?

``முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500 கொடுக்க வேண்டும் என்ற திட்டம் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இந்தத் திட்டம் குறித்து தேர்தல் அறிக்கைக்குழுவினர் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆலோசனை செய்துவந்தனர். அதற்காக கணவனை இழந்த பெண்கள் குடும்பத் தலைவிகளாக இருக்கும் குடும்ப அட்டைகள், ஆதரவின்றி தனிநபராக இருக்கும் பெண்களின் குடும்ப அட்டைகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் வேலைகளையும் தொடங்கிவிட்டோம். ஆனால், திடீரென தி.மு.க தலைவர் இதே போன்ற திட்டத்தை அறிவித்து கட்சி தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டார். ‘நம் திட்டம் எப்படி எதிர்க்கட்சிக்கு சென்றது?’ என்று தேர்தல் திட்டங்களை வகுத்துவரும் சுனில் மற்றும் தேர்தல்குழுவை அழைத்து எடப்பாடி பழனிசாமி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்.

‘சரி, நடந்தது நடந்துவிட்டது. அதை இனி எதுவும் செய்ய முடியாது. ஆனால், இந்த விஷயத்தை எதிர்க்கட்சிக்கு சொன்ன ஆர்வக்கோளாறு யார் என்று எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும்’ என்று பழனிசாமி கேட்டிருக்கிறார். அப்போதுதான் தி.மு.க வாரிசுக்கும், ஸ்டாலினின் உதவியாளருக்கும் நெருக்கமான ஒருவர் சுனில் தரப்பில் இருக்கிறார் என்பதும், முன்பு எப்போதோ சந்தித்தபோது இப்படி ஒரு திட்டத்தை அ.தி.மு.க தரப்பில் ஆலோசித்துவருவதாக போகிற போக்கில் அவர்களிடம் பகிர்ந்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

தீவிரம் புரியாமல் போகிறபோக்கில் அவர்களிடம் சொன்னது இவ்வளவு பெரிய பிரச்னை ஆகியிருக்கிறது. சுனில் டீமிலிருந்து மன்னிப்புக் கேட்ட பின்னர்தான் சமாதானம் ஆகியிருக்கிறார் பழனிசாமி. ‘இனி இப்படி நடக்கவே கூடாது. அப்படி நடந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்’ என்று எச்சரித்தவர், அந்த ஆர்வக்கோளாறைத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் ஏரியா பக்கமே வரக் கூடாது என்று திட்டி அனுப்பினார்” என்ற விவரங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு