Published:Updated:

எதிர்க்கட்சிகளை முதல்வர் ஸ்டாலின் அணுகும்விதம் எப்படி? - ஒரு பார்வை

ஸ்டாலின்
ஸ்டாலின்

மு.க.ஸ்டாலினின் இந்த அணுகுமுறைக்கான சமிக்ஞைகள் அவர் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே தென்படத் தொடங்கிவிட்டன.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழுவை அமைத்திருப்பது அனைவரின் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்கிற மு.க.ஸ்டாலினின் இந்த அணுகுமுறைக்கான சமிக்ஞைகள் அவர் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே தென்படத் தொடங்கிவிட்டன. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளான மே 3-ம் தேதி, ``தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்துச் சொல்ல, ``மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!’’ என பதில் அளித்திருந்தார் மு.க.ஸ்டாலின்.

அதுமட்டுமல்ல, முதல்வராகப் பதவியேற்ற பிறகு, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸிடமும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து பெற்றார் ஸ்டாலின். அதோடு ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க தனக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என ஸ்டாலின் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் மருத்துவர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திடமும் அலைபேசி வாயிலாக வாழ்த்துகளைப் பெற்றிருக்கிறார் ஸ்டாலின். தன் தாயார் தாயாளு அம்மாள், ஆற்காடு வீராசாமி, ஆகியோரிடம் வாழ்த்து பெற்றது மட்டுமல்லாமல் ஆர்.எம்.வீரப்பன், சங்கரய்யா, நல்லக்கண்ணு போன்ற தோழமைக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஸ்டாலின் - ஓ.பி.எஸ்
ஸ்டாலின் - ஓ.பி.எஸ்

கடந்த 2016-ம் ஆண்டு பெரும்பான்மை பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைத்தபோது நடந்த பதவியேற்பு விழாவில் தி.மு.க-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க சார்பில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க தலைவர்களுக்கு 12-ம் வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அப்போது தி.மு.க 89 எம்.எல்.ஏ-க்களைக்கொண்ட பலமான எதிர்க்கட்சி. ஆனால், ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றபோது அப்படி நடந்துகொள்ளவில்லை. அ.தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முன்னாள் சபாநாயகர் தனபாலும் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். அமைச்சர்களுக்கு அடுத்தபடியான முதல் வரிசையில் ஓ.பி.எஸ்ஸுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல, பதவியேற்பு விழா முடிந்த பிறகு, கவர்னர் அளித்த தேநீர் விருந்தில், ஸ்டாலின், துரைமுருகன், தனபால், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அனைவரும் ஒரே மேஜையில் கவர்னருடம் தேநீர் அருந்தும் வகையில் வெளியான புகைப்படம் கட்சி எல்லைகளைத் தாண்டி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அந்தப் புகைப்படத்தை பதவியேற்பு சம்பந்தமான புகைப்படங்களுடன் தலைமைச் செயலகத்தில் வைத்திருப்பதும், தற்காலிக சட்டசபையிலிருந்து ஜெயலலிதாவின் படத்தை எடுக்காமல் இருப்பதும்கூட அ.தி.மு.க-வினரையே `அடடே...’ சொல்லவைத்திருக்கிறது.

ஸ்டாலின் - சீமான்
ஸ்டாலின் - சீமான்

அரசியல் களத்தில் மிகக் கடுமையாக தி.மு.க-வையும், ஸ்டாலினின் ஆளுமை குறித்தும் விமர்சித்துவந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை இறந்தபோது, அலைபேசியில் அழைத்து அவருக்கு ஆறுதல் சொன்னார் மு.க.ஸ்டாலின். யாராக இருந்தாலும் இறப்பின்போது இரங்கல் தெரிவிப்பது வழக்கம்தான். சம்பிரதாயமாக அறிக்கை வெளியிட்டோ, சமூக வலைதளங்களில் பதிவிட்டோ ஸ்டாலின் இரங்கலைத் தெரிவித்திருக்கலாம். ஆனால், நேரடியாக அலைபேசியில் அழைத்து, `தைரியமாக இருங்கள்' என ஸ்டாலின் சொன்னது சீமானையும், நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மறுநாள் இறுதி நிகழ்ச்சிகளில் தி.மு.க சார்பில், தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை மட்டுமல்லாமல், ஊடகங்களையும் இணைத்துச் செயல்படத் தொடங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தி ஆசிரியர்கள், காட்சி ஊடக ஆசிரியர்களுடன் ஞாயிறன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின்,

அதிரடி காட்டும் ஸ்டாலின்..
அக்கறையா? அச்சமா? விளம்பரமா?

``கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது. கொரோனாவிலிருந்து அனைத்துப் பணியாளர்களையும் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் ஒருசேர எதிர் கொண்டுவருகிறோம் எனவே, கொரோனா உள்ளிட்ட செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும். கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறது. எதையும் மறைக்கக் கூடாது என அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் நான் கூறியுள்ளேன். அரசின் செய்தியில் சந்தேகம் இருப்பின் விளக்கம் கேட்கலாம். அரசுக்கு ஆக்கபூர்வ ஆலோசனையை ஊடகங்கள் தெரிவிக்கலாம். செய்திகளில் கொரோனா விழிப்புணர்வு காட்சிப் பதிவுகளை வெளியிட வேண்டும். முகக்கவசம் அணியுமாறு தொலைக்காட்சியில் வலியுறுத்தலாம்'' என கேட்டுக்கொண்டார்.

தவிர தமிழகத்தில் இதுவரை தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க ஆட்சி அமைந்தால் நிறுத்துவதும், பெயர் மாற்றுவதும் அ.தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நிறுத்துவதும் என எதிர்ப்பு அரசியலே நடந்துவந்தது. ஆனால், அம்மா உணவகத்தின் பெயரை மாற்றாமல் அது ஊரடங்கிலும் செயல்படும் என அறிவித்ததன் வாயிலாக அப்படியான நடைமுறைக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க நினைப்பதாகவே தெரிகிறது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

அதைப்போலவே, தற்போது தி.மு.க உள்ளிட்ட சட்டமன்றத்தில் பங்கேற்றுள்ள 13 கட்சிகளின் சார்பிலும் ஒவ்வொருவரை உள்ளடக்கிய ஆலோசனைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அ.தி.மு.க சார்பில் கடந்த ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் பெயரும் இடம்பெற்றிருப்பது இந்த அரசின் மீது மக்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை விதைத்துள்ளது. கடந்த ஆட்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் கோரிக்கை வைத்தபோது, ' ஸ்டாலின் என்ன டாக்டரா?' என அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

அம்மா உணவகத்தைத் தாக்கிய கட்சிக்காரர்களை உடனடியாக கட்சியைவிட்டு நீக்கியதில் தொடங்கி, முதல் கையெழுத்திலேயே தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்விதமான திட்டங்களை அறிமுகப்படுத்தியது, இணையவழியாக முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவிமடுப்பது, கொரோனாவுக்கு நிதி அளிக்கும் எளியவர்களுக்கு வாழ்த்து சொல்வது, அமைச்சர்கள், கட்சிக்காரர்கள் யாரும் காவல்துறை விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது என உத்தரவிட்டது வரை ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த பத்து நாள்களில் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பல செயல்பாடுகளை முன்னெடுத்துவருகிறார் மு.க.ஸ்டாலின். இனிவரும் காலங்களிலும் இது தொடரும் பட்சத்தில் நிச்சயமாக மக்கள் மனதில் இடம்பிடிப்பார்.

அடுத்த கட்டுரைக்கு