கேரள உள்ளாட்சித் தேர்தல் : `தங்கக் கடத்தல்’ தகதகக்கவில்லை... எப்படி வென்றது இடது ஜனநாயக முன்னணி?

கேரளாவில் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை சி.பி.ஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெற்றுள்ளது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி (எல்.டி.எஃப்), கடந்த நான்கரை ஆண்டுகளில் நலத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தியிருந்தாலும்கூட, சபரிமலை விவகாரம் பினராயி விஜயன் அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. `சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தியது இடது ஜனநாயக முன்னணி அரசு. அதற்கு எதிராக காங்கிரஸும் பா.ஜ.க-வும் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தின. அதைத் தொடர்ந்து, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இடது முன்னணி அரசு தோல்வியடைந்தது. மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில்தான் சி.பி.ஐ(எம்) வெற்றிபெற்றது. ஆனால், இப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் இடது ஜனநாயக முன்னணி பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூ.டி.எஃப்), உள்ளாட்சித் தேர்தலில் சரிவைச் சந்தித்திருக்கிறது. கேரளாவில் பெரிய சக்தியாக வளர்ந்திருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க-வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) படுதோல்வி அடைந்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய முதல் மாநிலம் கேரளா. பினராயி விஜயன் அரசு, கொரோனா பரவலை மிகத் திறமையாகக் கையாண்டதாக சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது. இந்தநிலையில்தான், டிசம்பர் 8, 10, 14 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. எல்.டி.எஃப்., யூ.டி.எஃப்., என்.டி.ஏ ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி ஆறு மாநகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 152 ஒன்றிய பஞ்சாயத்துகள், 941 கிராமப் பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்குத் தேர்தல் நடைபெற்றது. அனைத்துக் கட்சியினரும் இளம்பெண்களை வேட்பாளர்களாகக் களமிறக்குவதில் ஆர்வம் காட்டினர்.
சமீபகாலத்தில் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தங்கக் கடத்தல் விவகாரம். தங்கக் கடத்தலில் முதல்வர் அலுவலகத்துக்குத் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க-வும் தீவிரமான போராட்டங்களை நடத்தின. உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது, தங்கக் கடத்தல் உள்ளிட்ட பினராயி அரசுக்கு எதிரான விவகாரங்களை காங்கிரஸும் பா.ஜ.க-வும் கையிலெடுத்தன. கொரோனாவைச் சிறப்பாகக் கையாண்டதன் மூலமாக பினராயி விஜயன் அரசு பெற்றிருந்த நற்பெயரை காலிசெய்யும் வகையில் எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த இடது ஜனநாயக முன்னணி, உள்ளாட்சித் தேர்தலிலும் தோற்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளைத் தேர்தல் முடிவுகள் தகர்த்துவிட்டன.

நேற்று (டிச. 16) உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் இடது ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி, முதல்வர் பினராயி விஜயனின் தலைமைக்குக் கிடைத்த நற்சான்றிதழாகப் பார்க்கப்படுகிறது. ஐந்து மாநகராட்சிகள், 36 நகராட்சிகள், 10 மாவட்டப் பஞ்சாயத்துகள், 108 ஒன்றியப் பஞ்சாயத்துகள், 515 கிராமப் பஞ்சாயத்துகள் ஆகியவற்றில் எல்.டி.எஃப் வெற்றி பெற்றிருக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. அவற்றில், 52 வார்டுகளில் எல்.டி.எஃப் வெற்றி பெற்றது. அங்கு 33 வார்டுகளில் ஜெயித்ததன் மூலமாக இரண்டாவது இடத்தை பா.ஜ.க தலைமையிலான கூட்டணி பிடித்தது. 10 வார்டுகளில் யூ.டி.எஃப் வெற்றிபெற்றது. கொல்லம் மாநகராட்சியிலுள்ள 55 வார்டுகளில் எல்.டி.எஃப் 39 வார்டுகளையும், யு.டி.எஃப் ஒன்பது வார்டுகளையும், என்.டி.ஏ ஆறு வார்டுகளையும் கைப்பற்றின. எர்ணாகுளம் மாநகராட்சியின் 74 வார்டுகளில் 34 இடங்களில் எல்.டி.எஃப், 31 வார்டுகளில் யூ.டி.எஃப், ஐந்து வார்டுகளில் என்.டி.ஏ வெற்றிபெற்றன.
திருச்சூர் மாநகராட்சியின் 55 வார்டுகளில் எல்.டி.எஃப் 24 வார்டுகளிலும், யூ.டி.எஃப் 23 வார்டுகளிலும், என்.டி.ஏ ஆறு வார்டுகளிலும் வெற்றிபெற்றன. கோழிக்கோடு மாநகராட்சியின் 75 வார்டுகளில் 48 இடங்களில் எல்.டி.எஃப்,14 இடங்களில் யூ.டி.எஃப், ஏழு இடங்களில் என்.டி.ஏ வெற்றிபெற்றன. 86 நகராட்சிகளில் 36 இடங்களில் எல்.டி.எஃப், 33 இடங்களில் யூ.டி.எஃப், ஓர் இடத்தில் பா.ஜ.க வெற்றிபெற்றன.
மொத்தம் 14 மாவட்டப் பஞ்சாயத்துகள் உள்ளன. அவற்றில், பத்து மாவட்டங்களில் எல்.டி.எஃப், மூன்று மாவட்டங்களில் யூ.டி.எஃப் வெற்றிபெற்றுள்ளன. 152 ஒன்றிய பஞ்சாயத்துகளில் எல்.டி.எஃப் 111, யூ.டி.எப் 41 என வெற்றிபெற்றுள்ளன. 941 கிராமப் பஞ்சாயத்துகளில் எல்.டி.எஃப் 508, யூ.டி.எஃப் 374, என்.டி.ஏ 24, மற்றவர்கள் 32 என வெற்றி பெற்றுள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள இந்த வெற்றியால் இடது ஜனநாயக முன்னணியினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
மாநிலம் முழுவதும் சிறுபான்மை வாக்குகள் இடது முன்னணிக்குப் பெருமளவில் விழுந்துள்ளன. ஜோஸ் கே. மணி தலைமையிலான கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியுடன் இடது முன்னணி ஏற்படுத்திய கூட்டணி, இந்த வெற்றிக்குக் கூடுதல் பலமாக அமைந்தது. இந்தக் கூட்டணி, சிறுபான்மையினருக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையே பெரும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் எல்.டி.எஃப் அதிக வாக்குகள் பெற்றதற்கு ஜோஸ் கே.மணி உடனான கூட்டணி முக்கியக் காரணம்.

பல இடங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்து, அதே கட்சியைச் சேர்ந்த போட்டி வேட்பாளர் களமிறங்கியதும், கொரோனா காலத்தில் ஆளும் சி.பி.ஐ(எம்) அளவுக்குக் கீழே இறங்கி வேலை செய்யாததும் யூ.டி.எஃப் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. நகர்ப்புறத்தில் பா.ஜ.க-வுக்கு வாங்குவங்கி அதிகமாக இருப்பதால், திருவனந்தபுரம் மாநகராட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று பா.ஜ.க முனைப்புக் காட்டியது. ஆனால், அங்கு மொத்தமுள்ள 100 வார்டுகளில் 34 வார்டுகளையே பா.ஜ.க-வால் பிடிக்க முடிந்தது.
இந்த வெற்றி குறித்துப் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ``இது மக்களின் வெற்றி. ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று விரும்பிய அனைவரின் வெற்றி. கேரளாவையும் அதன் சாதனைகளையும் ஒழித்துக்கட்ட முயன்றவர்களுக்கான பதிலடிதான் இந்தத் தேர்தல் முடிவுகள். யூ.டி.எஃப் முக்கியத்துவமற்றதாகிவிட்டது. பெரிதாக வளர்ந்துவிட்டதாகக் கூறிக்கொண்டிருந்த பா.ஜ.க தரைமட்டமாகிவிட்டது. எங்கள் தேர்தல் அறிக்கையில் 600 வாக்குறுதிகளை அளித்திருந்தோம். அவற்றில் 570 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இவைபோக, ஏராளமான திட்டங்களைத் தொடங்கியிருக்கிறோம். இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும் மக்கள் மதிப்பளித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.