Published:Updated:

லிஸ்ட்டிலிருந்து தப்பிய கயல்விழி செல்வராஜ் - அமைச்சரவை மாற்றத்தில் நடந்தது என்ன?!

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் - அமைச்சரவை மாற்றம்

சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தப்பித்தது எப்படி?

Published:Updated:

லிஸ்ட்டிலிருந்து தப்பிய கயல்விழி செல்வராஜ் - அமைச்சரவை மாற்றத்தில் நடந்தது என்ன?!

சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தப்பித்தது எப்படி?

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் - அமைச்சரவை மாற்றம்

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றது. இதையடுத்து, தமிழ்நாட்டின் முதல்வராக 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றிருக்கிறது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் அன்றைய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

இதைத் தொடர்ந்து அவர் போக்குவரத்துத்துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், அந்தத் துறையிலிருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கும் மாற்றப்பட்டார். அடுத்ததாக டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் தமிழக அமைச்சரவையில் ஒரு சிறிய மாற்றம் இருந்தது. இந்த நிலையில், முதலமைச்சர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பாக மூன்றாவது அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கோட்டை வட்டாரங்களிருந்து தகவல் வெளியானது.

இந்த அமைச்சரவை மாற்றத்தில், மூன்றுக்கும் மேற்பட்டோர் வெளியேறுவதற்கும், புதிதாக மூவர் அமைச்சராகப் பதவியேற்பதற்கும் வாய்ப்பிருப்பதாக ஒரு புயல் கிளம்பியது. வெளியேறும் பட்டியலில் நாசர், கயல்விழி செல்வராஜ் பெயர்தான் அதிகம் பேசப்பட்டது. இந்தப் பட்டியலிலிருந்து கடைசி நேரத்தில் கயல்விழி செல்வராஜ் எப்படித் தப்பினார் என்பது குறித்து கோட்டை வட்டாரத்திலும், அறிவாலய வட்டாரத்திலிருந்தும் சில தகவல்கள் வெளியாகின... நம்மிடம் பேசியவர்கள், "புதிதாக அமைச்சரவையில் இடம்பெற்ற கயல்விழி செல்வராஜைப் பொறுத்தவரை துறைரீதியில் எந்தப் பெரிய பிரச்னையும் இல்லை. அதே சமயத்தில், துறைக்குள் அமைச்சரின் கணவரின் தலையீடு இருப்பதாகப் பல்வேறு புகார்கள் தலைமையிடம் வந்தன.

ராஜா
ராஜா

இந்தப் புகார்கள் குறித்து தலைமை விசாரித்ததிலும் அது உண்மை என்று தெரியவந்தது. இந்த நிலையில்தான் அமைச்சரவை மாற்றத்தில் அவர் பெயரும் சேர்ந்துகொண்டது. தனது பெயர் பட்டியலில் இருப்பதைத் தெரிந்துகொண்ட அமைச்சர் தரப்பு, மூத்த அமைச்சர்களையும், முதல்வருக்கு நெருக்கமானவர்களையும் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதோடு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இனி எந்த வகையிலும் தன் குடும்பத்தைச் சேர்ந்த யாருடைய தலையீடும் இருக்கவே இருக்காது என்று சொல்லியிருக்கிறார்கள். மூத்த அமைச்சர்களும், `சரி நீங்க பயப்படாம போய் வேலையைப் பாருங்கள்’ என்று ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

கயல்விழி செல்வராஜ் வெளியேறினால், அந்தப் பதவிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் பெயர் அடிபட்டது. தனது பெயர் அடிபடுவதை அறிந்தவுடன் கட்சியின் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துக் காய் நகர்த்தியிருக்கிறார் ராஜா. ஆனால், அவர் குறித்த விசாரணையின் முடிவுகளில் அவர் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அடுத்ததாகப் பட்டியலிலிருந்த பெயர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தமிழரசியின் பெயர். தனக்கு வாய்ப்பிருப்பதைத் தெரிந்துகொண்ட அவரும், கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறார். அதோடு, மகளிரணியில் இருக்கும் அவர் தூத்துக்குடிக்குச் சென்று கனிமொழியிடம் பேசியிருக்கிறார்.

தமிழரசி
தமிழரசி

இந்தப் பரிந்துரை முதல்வர் காதுக்கும் வந்திருக்கிறது. அதற்கு முதல்வரோ பார்க்கலாம் என்று மட்டும் பதிலளித்திருக்கிறார். இந்த நிலையில்தான் வெளியேறும் பட்டியலிலிருந்து அமைச்சர்களின் பெயர்களும் குறைந்தன. சமீபத்தில் வெளியான ஆடியோ விவகாரம் காரணமாக அமைச்சரவை மாற்றம் தள்ளிக்கொண்டே போனது. இந்தச் சூழலில்தான் மூத்த அமைச்சர்கள் இருவர் கயல்விழி செல்வராஜுக்கு ஆதரவாக முதல்வரிடத்தில் பேசியிருக்கிறார்கள் என்றனர். கடைசி நேரத்தில் முதல்வரும் ஒப்புக்கொண்டதால் வெளியேறும் பட்டியலிலிருந்து அவர் பெயர் தப்பியது" என்றார்கள் விரிவாக.