Published:Updated:

கொட்டித்தீர்த்த கனமழை..! - வடசென்னைப் பகுதிகள் மீண்டனவா... இல்லை மீட்கப்பட்டனவா?!

இயந்திரம் மூலம் நீர் அகற்றம்

ராட்சத இயந்திரங்களைக்கொண்டு மழைநீரை அப்புறப்படுத்தவில்லையென்றால் ஒரு வாரம் ஆனாலும் மழைநீர் வடிந்திருக்காது.

கொட்டித்தீர்த்த கனமழை..! - வடசென்னைப் பகுதிகள் மீண்டனவா... இல்லை மீட்கப்பட்டனவா?!

ராட்சத இயந்திரங்களைக்கொண்டு மழைநீரை அப்புறப்படுத்தவில்லையென்றால் ஒரு வாரம் ஆனாலும் மழைநீர் வடிந்திருக்காது.

Published:Updated:
இயந்திரம் மூலம் நீர் அகற்றம்

சென்னையில் சாதாரண மழை பெய்தாலே அதிக அளவில் பாதிக்கப்படுவது வடசென்னை பகுதிகள்தான். திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொடுங்கையூர்,  திரு.வி.க நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போலத் தேங்கும். இதுவே, பெருமழை பெய்தால் போதும், இந்தப் பகுதிகளிலுள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள்  கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரசு சார்பில் அமைக்கப்படும் நிவாரண முகாம்களில் வடசென்னை பகுதி மக்கள்தான் அதிக அளவில் தங்கவைக்கப்படுவார்கள். குறிப்பாக, இந்தப் பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்குக் குறைந்தது மூன்று நாள்களாவது ஆகும். எனவே, வடசென்னைப் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மழைநீர் வடிகால் பணிகளை விரைவில் முடிக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தார்கள். 

இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. பருவமழை காரணமாகக் கடந்த 1, 2-ம் தேதிகளில் இரவு, பகலாகச் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக தென்சென்னை  பகுதிகளைக் காட்டிலும் வடசென்னை பகுதிகளில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிகால்கள் சரிவர முடிக்கப்படாத இடங்களில் வழக்கத்தைவிட அதிக அளவிலேயே தண்ணீர் தேங்கியது. பட்டாளம் மார்க்கெட், பெரம்பூர், வில்லிவாக்கம், வியாசர்பாடி, திருவொற்றியூர், மணலி, கொளத்தூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாள்களாகவே தண்ணீர் தேங்கியிருந்தது. 

திரு.வி.க நகர்
திரு.வி.க நகர்

தொடர்ந்து, மழைநீரை அகற்றும் பணியில் 19,500 மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதுபோக, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறைப் பணியாளர்களும் களத்தில் இறங்கினர். அந்த வகையில், சென்னையில் நேற்று காலை முதலே மழைப் பொழிவு குறைந்ததால், வடசென்னை பகுதிகளில் மழைநீர் ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டது. மழைநீர் வடிகால்கள் சரியாக அமைக்கப்பட்ட பகுதிகளில் நேற்று காலை தண்ணீர் வடிந்தது. மழைநீர் வடிகால்கள் பணி முடிக்கப்படாத கொளத்தூர், புளியந்தோப்பு, திரு.வி.க நகர், மணலி உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வெளியேறக் காலதாமதம் ஏற்பட்டது. இது போன்ற பகுதிகளில் மோட்டார்  பம்ப்புகள்  மூலமாகவே மாநகராட்சிப் பணியாளர்கள் மழைநீரை வெளியேற்றினர். 

ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் - முன்னாள் அமைச்சர்

இது குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மக்களுக்குச்  சென்னை மாநகராட்சி உணவுப் பொட்டலங்களைக்கூட வழங்கவில்லை. புளியந்தோப்பு, திரு.வி.க நகர் பகுதிகள்  கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு நாள் மழைக்கே இந்த அரசு கதறுகிறது. இன்னும், நவம்பர், டிசம்பர் மாதங்கள் முழுமையாக முடியவில்லை. இதை எப்படிச் சமாளிக்கப்போகிறீர்கள்?

கே.என்.நேரு
கே.என்.நேரு

2 ஆயிரம் கிலோமீட்டருக்கு தூர்வாரிவிட்டதாகக் கூறுகிறார்கள். இத்தனை கிலோமீட்டருக்குத் தூர்வாரியிருந்தால் எதற்காக வடசென்னைப் பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது... முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதியே மிதக்கிறது. பல இடங்களில் ராட்சத இயந்திரங்களைக்கொண்டு தண்ணீரை அப்புறப்படுத்துகிறார்கள். அப்படியென்றால், வாய்க்கால் வழியாகத் தண்ணீர் செல்லவில்லை என்பதே கேள்வியாக எழுகிறது" என்றார்.  

இதேபோல், திரு.வி.க நகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுசெய்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், "மோட்டார்  பம்ப்புகளை  வைக்காமல்  தானாகவே தண்ணீர் வெளியேறுவதற்கு என்ன வழி செய்ய வேண்டும் என அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள்.  மெட்ரோ லைன் இல்லாத இடங்களில் அவற்றை அமைக்க அறிவுறுத்தியிருக்கிறோம். சென்னையிலுள்ள 22 தொகுதிகளில் 20 தொகுதிகள் சிறப்பாக இருக்கின்றன. திரு.வி.க நகர், கொளத்தூர் தொகுதிகளில் திருப்புகழ் கமிட்டி குறிப்பிடாத இடங்களில்தான் தண்ணீர் தேங்கியது. எனவே, அடுத்த மழைக்குத் தண்ணீர் நிற்காத அளவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம்" என்றார். 

பெரம்பூர்
பெரம்பூர்

வடசென்னைப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் உடனடியாக வெளியேறியதற்குக் காரணம் ராட்சத இயந்திரங்களைக்கொண்டு மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டதே என்கின்றனர் வடசென்னைப் பகுதி மக்கள். ராட்சத இயந்திரங்களைக்கொண்டு மழைநீரை அப்புறப்படுத்தவில்லையென்றால் ஒரு வாரம் ஆனாலும் மழைநீர் வடிந்திருக்காது என்கின்றனர் ஆதங்கத்துடன். எனவே, கூடிய விரைவில் மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.