Published:Updated:

`ஸ்டாலின் அரசு 30+’ - வானதி சீனிவாசன் அளிக்கும் மதிப்பெண் என்ன?

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு உண்மையாக என்னென்ன தேவைகள் இருக்கின்றனவோ அவற்றை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இந்த ஒரு மாத காலத்தில், ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளிடம் கேட்டறிந்தோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

வானதி சீனிவாசன் (சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க)

''ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் ஸ்டாலின் முதல்வராகியிருப்பதால், அவரின் செயல்பாட்டுக்கு மதிப்பெண் போடுவது இந்த நேரத்தில் சரியாக இருக்காது என நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் தமிழக மக்களின் உயிரைப் பாதுகாப்பதுதான் மிக முக்கியமான ஒரு விஷயம். புதிய அரசு பொறுப்பேற்ற ஆரம்பத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கொஞ்சம் தொய்வு இருந்தது. அதனால்தான் பல இடங்களில் இன்னும் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. பிறகு சுதாரித்துக்கொண்டு சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு உண்மையாக என்னென்ன தேவைகள் இருக்கின்றனவோ அவற்றை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும். அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு ஒரே நிலைப்பாட்டைத்தான் கடைபிடிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் கொடுக்கவில்லை என்று சொல்வது முறையல்ல. நிலைமையைப் புரிந்துகொண்டு தி.மு.க-வினர் பேச வேண்டும். முதல்வரின் படை பரிவாரங்கள் தங்கள் இஷ்டத்துக்கு பிரதமரை இகழ்வதை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மக்களைக் காப்பதுதான் நம் முதல் பணியாக இருக்க வேண்டும். எந்தவொரு புதிய அரசாங்கத்துக்கும் முதன்மையான சில திட்டங்கள் இருக்கும். அந்தவகையில், மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் என்பது மிகவும் பிரயோஜனமான ஒரு திட்டம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

அறநிலையத்துறையின் விவரங்களையெல்லாம் இணையத்தில் வெளியிடப்போவதாக அமைச்சர் சொல்லியிருக்கிறார். அதேபோல, ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் சொத்துகளை, எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அடுத்ததாக, ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள், உதவித்தொகை கொடுக்கும்போது, தடுப்பூசி முகாம்களிலும் தி.மு.க-வினர் நின்றுகொண்டு, நாங்கள்தான் செய்வோம் என அராஜகமாக நடந்துகொள்வதை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும்.''

வழக்கறிஞர் பாலு (செய்தித் தொடர்பாளர்,பா.ம.க)

'' புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்களை, சில காலம் விமர்சிக்கக் கூடாது என்பதே அடிப்படையில் தவறான ஒரு கருத்து. கடந்த ஒரு மாத காலத்தில் ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கையையும் இந்த அரசு முன்னெடுக்கவில்லை. கொரோனா உச்சத்துக்குச் சென்று தானாகக் கீழிறங்குவதைத் தங்களின் சாதனையாக இந்த அரசாங்கம் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பும் சரி, மரணங்களும் சரி தமிழ்நாட்டில்தான் அதிகம். ஆனால், உலகமே ஊரடங்குதான் தீர்வு எனச் சுட்டிக்காட்டியும், இங்கு வெகு நாள்கள் அது குறித்த சிந்தனையே இல்லாமல் இருந்தார்கள். மே மாதம் 25-ம் தேதிதான் முழு ஊரடங்கைக் கொண்டு வந்தார்கள். அதற்கு முன்பாக இரண்டு நாள்கள் முழுமையான தளர்வுகளைச் செய்தார்கள். அதனால்தான் தமிழகம் முழுவதும் கொரோனா பரவியது.

பா.ம.க வழக்கறிஞர் பாலு
பா.ம.க வழக்கறிஞர் பாலு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், கடந்த அ.தி.மு.க ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தார் மு.க.ஸ்டாலின். ஆனால், கொரோனா மரணங்களால் பிணக்குவியல்களைக் கண்டது இந்த ஆட்சியில்தான், ஆம்புலன்ஸ் கியூவில் நின்றது இந்த ஆட்சியில்தான், ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் வரிசையில் காத்துக் கிடந்தது இந்த ஆட்சியில்தான்... கடந்த ஆட்சியில் கொரோனா குறித்த எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் இருந்தபோதே இந்த மாதிரியான அவலங்களை நாம் கண்ணால் பார்க்கவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாங்கள் இதைச் செய்தோம் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளும்படி இந்த அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை.

மத்திய அரசைத் துணிச்சலாக எதிர்கொள்வதிலும் ஸ்டாலின் திணறிவருகிறார். உதாரணமாக, மே.வங்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குக் கொடுக்கப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் மோடியின் படத்தோடுதான் கொடுக்கிறார்கள். ஒன்றிய அரசு எனச் சொல்லி வார்த்தைகளில் வேண்டுமானால் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், `மத்திய அரசின் பேச்சைக் கேட்க மாட்டோம், எங்கள் மாநிலத்தில் நீட் தேர்வை நடத்த மாட்டோம்’ என்று சொல்ல ஸ்டாலினுக்குத் தைரியம் இருக்கிறதா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழ் ஆட்சி எனச் சொல்கிறார்கள். ஆனால், தமிழைப் பயிற்று மொழியாக்க முடியவில்லை. நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை குறைப்பு எனத் தேர்தல் அறிக்கையில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றவில்லை. அதேபோல, இந்தியாவிலேயே ஸ்டாலின்தான் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளைச் சந்தித்த முதல் முதலமைச்சர் எனப் பெருமை பட்டுக்கொண்டார்கள். அது தவறான தகவல். அதேபோல, சாதாரண எம்.எல்.ஏ உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவரை மையப்படுத்தி விளம்பரம் செய்கிறார்கள். அதேபோல, கொரோனா தடுப்புக் குழுவில், உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற, ஜவாஹிருல்லாஹ், ஈஸ்வரன், வேல்முருகன் ஆகியோரைச் சேர்த்திருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் தி.மு.க-வுக்கு மட்டுமே நான்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவையற்ற விளம்பரங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்துவிட்டு, உண்மையாகச் செயல்பட ஆரம்பிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.''

மோடி அரசுடன் தி.மு.க அரசை இணக்கம் காட்ட வைக்க திட்டமிடுகிறதா பா.ஜ.க? - ஒரு பார்வை!

பாக்கியராசன் (செய்தித் தொடர்பாளர், நாம் தமிழர்)

''ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனால், தொடக்கம் நன்றாக இருப்பதாகவே எங்கள் அண்ணன் சீமான் சொல்லியிருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், இறையன்பு, உதயச்சந்திரன் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனங்கள் பாராட்டுக்குரியவை. ஆனால், தற்போது கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அங்கே இங்கே என டிரான்ஸ்பர் செய்வது தேவையில்லாத ஒன்று. கொரோனா நெருக்கடி காலத்தில் இது தேவையா என்கிற கேள்வி எழுகிறது. பேரிடர் சூழலில் அரசியல் காரணங்களுக்காக நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளைப் பந்தாடும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் என அண்ணன் சீமான் பத்து நாள்களுக்கு முன்பாகவே வலியுறுத்தினார். ஆனாலும் அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதேபோல, பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் இதுவரை முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. சிவசங்கர் பாபா, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

`ஸ்டாலின் அரசு 30+’ - வானதி சீனிவாசன் அளிக்கும் மதிப்பெண் என்ன?

எழுவர் விடுதலை விஷயத்தில் இந்த அரசு நடந்துகொண்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியது மிகப்பெரிய தவறு. விடுதலை செய்வது மாநில அரசின் உரிமை என சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதுவது, ஏதோ அவருக்குத்தான் அதிகாரம் இருப்பதாகக் காட்டுகிறது. அதேபோல, நீட், 69 சதவிகித இட ஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர், மனுக்கள் மீதான நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்களில் இந்த அரசு எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சில இடங்களில் மின்வெட்டுப் பிரச்னைகள் இப்போதே தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.''

அடுத்த கட்டுரைக்கு