Published:Updated:

கர்நாடக முதல்வர் பதவி: டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் ‘சமாதானம்’ செய்தது எப்படி?!

டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் என்பது நீண்ட இழுபறிக்குப் பிறகு முடிவானது. முதல்வர் பதவி வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்த டி.கே.சிவக்குமார், கடைசியில் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னணி என்ன?

Published:Updated:

கர்நாடக முதல்வர் பதவி: டி.கே.சிவக்குமாரை காங்கிரஸ் மேலிடம் ‘சமாதானம்’ செய்தது எப்படி?!

கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் என்பது நீண்ட இழுபறிக்குப் பிறகு முடிவானது. முதல்வர் பதவி வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்த டி.கே.சிவக்குமார், கடைசியில் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னணி என்ன?

டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி பெற்றபோதிலும், நான்கு நாள்கள் இழுபறிக்குப் பிறகுதான் முதல்வர் யார் என்பதை முடிவுசெய்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாருக்குமிடையே நடைபெற்ற முதல்வர் பதவிக்கான ரேஸில் சித்தராமையாவே வெற்றிபெற்றிருக்கிறார். கர்நாடகா வெற்றிக்குக் கடுமையாக உழைத்த டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவிதான் கிடைத்திருக்கிறது.

சித்தராமையா
சித்தராமையா

முதல்வர் பதவி யாருக்கு என்கிற பஞ்சாயத்து டெல்லியில் நான்கு நாள்களாக நடைபெற்றன. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரையும் கட்சித் தலைமை டெல்லிக்கு அழைத்திருந்தது. இருவரிடமும் கட்சித் தலைமை தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. மே 18-ம் தேதி டெல்லியிலுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலின் இல்லத்தில் காலைச் சிற்றுண்டிக்காக சென்றபோதுதான் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அன்றுதான், கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற கேள்விக்கும் விடை கிடைத்தது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ரண்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்கள்தான் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் என்ற தலைமையின் முடிவுக்கு இருவரும் சம்மதம் தெரிவித்த பிறகு இருவரையும் அழைத்த ராகுல் காந்தி, ‘இருவரும் ஒற்றுமையாகப் பணியாற்றுங்கள்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

கே.சி.வேணுகோபால்
கே.சி.வேணுகோபால்

``காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எங்களை அழைத்து இந்த உத்தரவைப் பிறப்பித்தார். என்ன ஃபார்முலா உருவானதோ, நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். எல்லாம் நலமாக இருக்கிறது. எல்லாம் நலமாக இருக்கும். எல்லாம் நலமாக இருக்கப்போகிறது. தேசியத் தலைமை என்ன முடிவெடுக்கிறதோ, அதற்கு நாம் கட்டுப்படுவோம் என்ற ஒற்றை நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம். இறுதியாக, ராகுல் காந்தி அழைத்து, `நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுங்கள்' என்று சொன்னார்” என்றார் சிவக்குமார்.

துணை முதல்வர் பதவியை அரைகுறை மனதுடன் ஏற்றுக்கொண்டார் என்று செய்திகள் தெரிவித்தாலும், “துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதில் எனக்கு அதிருப்தி எதுவும் இல்லை. கட்சியின் நலன் கருதி, இந்தப் பதவியைப் பெற்றுக்கொண்டேன்” என்கிறார் டி.கே.சிவக்குமார். மேலும் அவர், “ காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி. இங்கு, ஒருமித்த கருத்தைத்தான் நம்புகிறோமே தவிர, சர்வாதிகாரத்தை அல்ல. இன்னும் நீண்ட பயணம் இருக்கிறது. ஆகவே, மக்களவைத் தேர்தலுக்குக் கட்சியைப் பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சிவக்குமார், மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா
சிவக்குமார், மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா

முதல்வர் பதவி வேண்டுமென்பதில் உறுதியாக இருந்த டி.கே.சிவக்குமார், துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டதன் பின்னணி குறித்து டெல்லி அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம்.

சித்தராமையா வேறொரு கட்சியிலிருந்து காங்கிரஸுக்கு வந்தவர். ஆனால், டி.கே.சிவக்குமார் ஒரு பக்கா காங்கிரஸ்காரர். வெளியிலிருந்து வந்தவரை சமாதானப்படுத்துவது கடினம். ஆனால், மாணவப் பருவத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் இணைந்து இத்தனை ஆண்டுகள் காங்கிரஸிலேயே பயணித்துவரும் டி.கே.சிவக்குமாரைச் சமாதானப்படுத்துவது எளிதானது என்ற நிலையில் இருந்துதான் காங்கிரஸ் தலைமை இந்தப் பிரச்னையை அணுகியது.

சித்தராமையாவுக்கு 75 வயதாகிறது. இதுதான் தனக்குக் கடைசி தேர்தல் என்று அவரே அறிவித்துவிட்டார். டி.கே.சிவக்குமாரைப் பொறுத்தளவில், அவருக்கு 61 வயதுதான் ஆகிறது. முதல்வராவதற்கு அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே, அடுத்த வாய்ப்பு வரும்போது நிச்சயம் நீங்கள்தான் முதல்வர் என்று டி.கே.சிவக்குமாரிடம் காங்கிரஸ் தலைமை உறுதியளித்திருக்கிறது. இவற்றையெல்லாம் கட்சித் தலைவர்கள் விளக்கியபோது, அதை டி.கே.சிவக்குமார் ஏற்றுக்கொண்டுவிட்டார்.

சிவக்குமார் Vs சித்தராமையா.
சிவக்குமார் Vs சித்தராமையா.

மேலும், டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக ஆக்கியவர் சோனியா காந்திதான். எனவே, சோனியா காந்தியின் கருத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்று டி.கே.சிவக்குமார் விரும்பினார். சோனியா காந்தி சிம்லாவில் ஓய்வில் இருக்கிறார். அவரிடம் டி.கே.சிவக்குமார் பேசியபோது, ``கட்சித் தலைமை சொல்லும் ஆலோசனைபடி செயல்படுங்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மல்லிகார்ஜுன கார்கேவிடமும், ராகுல் காந்தியிடமும் பேசுங்கள்’ என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார். சித்தராமையாவும் சோனியா காந்தியிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

சித்தராமையா முதல்வர், டி.கே.சிவக்குமார் துணை முதல்வர் என்கிற கட்சித் தலைமையின் முடிவை மே 17-ம் தேதி இரவு நடந்த பேச்சுவார்த்தையின்போது டி.கே.சிவக்குமார் ஏற்றுக்கொண்டார். அப்போது, ஒரேயொரு துணை முதல்வர் பதவி மட்டுமே இருக்க வேண்டும், நான் துணை முதல்வராக இருந்தாலும் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலும் நீடிப்பேன் என்ற டி.கே.சிவக்குமாரின் நிபந்தனைகளைக் கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டது.

ஒருவழியாக, நான்கு நாள்களாக இழுபறியில் இருந்த பேச்சுவார்த்தை சுபத்தில் முடிந்தது. மறுநாள் காலையில் கே.சி.வேணுகோபால் வீட்டில் இருவருக்கும் காலைச் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டது. டெல்லியில் நான்கு நாள்களாகத் தங்கியிருந்தும் நேரில் சந்தித்துக்கொள்ளாத சித்தராமையாவும் டி.கே.சிவக்குமாரும், கே.சி.வேணுகோபால் வீட்டில் சந்தித்துக்கொண்டார்கள். அதன் பிறகு, இருவரும் ஒரே காரில் மல்லிகார்ஜுன கார்கே வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார்கள்” என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் கூறினார்கள்.

டி.கே.சிவக்குமார், ராகுல் காந்தி, சித்தராமையா
டி.கே.சிவக்குமார், ராகுல் காந்தி, சித்தராமையா

தற்போது, ஏராளமான தலித்துகள் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்கிறார்கள். தலித்துகளுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அவர்களுக்கான பிரதிநிதித்துவம் தரப்படவில்லையென்றால் காங்கிரஸுக்குப் பிரச்னைதான் என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.பரமேஸ்வரா. அடுத்ததாக, ஜி.பரமேஸ்வரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைமையில் இறங்கியிருக்கிறது.