Published:Updated:

`தமிழ் கல்வெட்டுகள் எப்படி திராவிட கல்வெட்டுகளாயின?’ - வரலாற்றுப் பேராசிரியர் விளக்கம்

`தமிழ் கல்வெட்டுகள் எப்படி திராவிட கல்வெட்டுகளாயின?'

``தமிழ் மொழியையோ, திராவிடப் பண்பாட்டையோ ஏற்றுக்கொள்ளாதவர்களின் கைகளில் இன்றைக்கு தொல்லியல்துறை இருக்கிறது. எனவேதான் உண்மைகள் வெளிவராமல் புதையுண்டு கிடக்கின்றன'' என்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.

`தமிழ் கல்வெட்டுகள் எப்படி திராவிட கல்வெட்டுகளாயின?’ - வரலாற்றுப் பேராசிரியர் விளக்கம்

``தமிழ் மொழியையோ, திராவிடப் பண்பாட்டையோ ஏற்றுக்கொள்ளாதவர்களின் கைகளில் இன்றைக்கு தொல்லியல்துறை இருக்கிறது. எனவேதான் உண்மைகள் வெளிவராமல் புதையுண்டு கிடக்கின்றன'' என்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.

Published:Updated:
`தமிழ் கல்வெட்டுகள் எப்படி திராவிட கல்வெட்டுகளாயின?'

தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் பதிவாகத் திகழும் `கீழடி அகழாய்வுப் பணிகளை வெட்டி வேலை, தண்டச் செலவு' என சிலர் விமர்சித்துவரும் வேளையில், கல்வெட்டியல்துறை குறித்த வழக்கு ஒன்றில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை எழுப்பியிருக்கும் கேள்விகள் புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில், `கீழடி மட்டுமல்லாமல் கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களிலும் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' எனக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.காமராஜ். இதேவரிசையில், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை
மதுரை உயர் நீதிமன்றக் கிளை

இந்த வழக்கு விசாரணையில்தான் மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர் நீதிபதிகள். ஏற்கெனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்ற நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருக்கிறது.

இதையடுத்து, மத்திய அரசை நோக்கி நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்விகள்தான் பரபர விவாதமாகிவருகின்றன. ``இந்தியாவில் கண்டறியப்பட்ட ஒரு லட்சம் கல்வெட்டுகளில், 60,000 கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை. ஆனால், இந்தக் கல்வெட்டுகளையெல்லாம் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூருவில் ஏன் வைத்திருக்கிறீர்கள்? ஏற்கெனவே தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே காவிரிப் பிரச்னை இருந்துவரும் நிலையில், தமிழ் மொழிக் கல்வெட்டுகளை தமிழ்நாட்டிலேயே பாதுகாத்து பராமரிக்கலாமே!'' என்ற நீதிபதிகள், தொடர்ந்து

``60,000 கல்வெட்டுகளும் தமிழ் மொழிக்கானவை எனும்போது, அவற்றை `திராவிட மொழி கல்வெட்டுகள்' என அடையாளப்படுத்துவது ஏன்... தமிழ்நாட்டில் சம்ஸ்கிருத மொழிக்கு என கல்வெட்டியலாளரை நியமிக்க வேண்டிய தேவை என்ன?'' என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர். ஆனால், இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் `இது அரசின் கொள்கை முடிவு' என பதிலளித்திருக்கிறது மத்திய அரசுத் தரப்பு.

``அரசின் கொள்கை முடிவு என்றாலும்கூட அது ஒரு மொழியின் அடையாளத்தை மறைக்கும் வகையில் இருக்கக் கூடாது. ஏனெனில், அனைத்து மொழிகளுமே முக்கியமானவை. அவற்றின் முக்கியத்துவமும் சிறப்பும் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக அரசுக்கு இது மிக முக்கியமான பணியாக அமையும்'' என்று அறிவுறுத்திய நீதிமன்றம், கல்வெட்டியல் துறை குறித்த விளக்க அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கோரியும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருக்கிறது.

தமிழ் கல்வெட்டு
தமிழ் கல்வெட்டு

இந்தநிலையில், இந்த வழக்கு குறித்து வரலாற்றுப் பேராசிரியர் கருணானந்தனிடம் பேசினோம். ``தொல்லியல்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. எனவே, துறை சார்ந்த அறிக்கைகள்கூட மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுதான் வெளிவர வேண்டியிருக்கிறது.

தென்னகத்தைப் பொறுத்தவரை, சம்ஸ்கிருத கல்வெட்டுகளைவிடவும் தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அதேபோல் வடநாட்டிலும்கூட சம்ஸ்கிருதத்தைவிடவும் பிராகிருத மொழி கல்வெட்டுகளே அதிகம் இருக்கின்றன. ஆனாலும்கூட, அங்கே பிராகிருத மொழி கல்வெட்டுகளை ஆராய்வதற்கென்று தனித்துறை எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அப்படி ஏற்படுத்தப்பட்டால், பிராமணீயம் அல்லாத சமணம், பௌத்தம் உள்ளிட்ட கருத்தியல்கள் வலுப்பெறத் தொடங்கிவிடும். எனவேதான் திட்டமிட்டே இவை மறைக்கப்பட்டுவிடுகின்றன.

தென்னாட்டில் கிடைக்கக்கூடிய தமிழ்மொழி கல்வெட்டுகளையும்கூட தமிழ்மொழிப் பின்புலம் இருக்கிறவர்களால்தான் சரிவர விளக்க முடியும். ஆனால், மத்திய அரசின் கீழ் தொல்லியல்துறை வருவதால், இந்த நியாயமான கோரிக்கைகளெல்லாம் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மாறாக அவர்களுக்கு வசதியான, பாரபட்சமான கண்ணோட்டத்துடனேயே இந்த விஷயங்களையெல்லாம் அணுகிவருகிறார்கள்.

அதாவது, தமிழ் மொழிப் பெருமையை மறைப்பது அல்லது அவர்கள் விரும்பிய வகையில் விளக்கம் கொடுப்பதான போக்கு தொடர்ந்துவருகிறது. உதாரணமாக, ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட தொல்லியல் ஆய்வு குறித்த அறிக்கைகள் இன்னமும் வெளிவரவில்லை. தமிழ் மொழியையோ, திராவிட பண்பாட்டையோ ஏற்றுக்கொள்ளாதவர்களின் கைகளில் இன்றைக்கு தொல்லியல்துறை இருக்கிறது. எனவேதான் உண்மைகள் வெளிவராமல் புதையுண்டு கிடக்கின்றன.

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணி
ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணி

தொல்லியல்துறை வழியே ஒரு வரலாற்றின் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அந்த வரலாற்றுக்கு உரியவர்களின் கைகளில் துறையை ஒப்படைப்பதுதான் சரியாக இருக்கும். எனவே, தொல்லியல்துறை மீதான தனது அதிகாரத்தை, கட்டுப்பாட்டை அந்தந்த மாநிலத்துக்கே மத்திய அரசு வழங்கிவிட வேண்டும். துறை சம்பந்தப்பட்ட தலைமையகமும் அந்தந்த மாநிலங்களுக்குள்ளாகவே அமைக்கப்பட வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஒரே மாதிரியான ஆய்வு முடிகள் கிடைக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வேண்டுமானால் ஒன்றிணைந்து செயல்படலாம். உதாரணமாக, தமிழர்களுடைய உண்மையான பழைமையைத் தேட வேண்டுமானால், தமிழ்நாட்டையும் தாண்டி வெளியேயும் நாம் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, திராவிட மொழிகள் பேசக்கூடிய அண்டை மாநிலங்களோடு நமக்கு ஒத்துழைப்பு அல்லது கூட்டமைப்பு தேவைப்படுகிறது.

ஏனெனில், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என திராவிட மொழிகள் பலவாறாகப் பிரிந்து நின்றாலும்கூட அதன் மூலம் என்பது தமிழ் மொழிதான்! ஆனால், 'தமிழ் மொழிக் கல்வெட்டுகள்' என்று தொல்லியல்துறை அடையாளம் கொடுக்குமேயானால், சம்ஸ்கிருத மொழிக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும். எனவேதான் சம்ஸ்கிருதம் தவிர்த்த எல்லா மொழிகளையுமே பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்த முனைகிறது தொல்லியல்துறை. அதாவது பிராமணீயம் - வைதிக மதத்துக்குப் பொருந்தாத எல்லாவற்றையுமே குறைத்து மதிப்பிடும் போக்கு தொடர்கிறது.

பேராசிரியர் கருணானந்தன்
பேராசிரியர் கருணானந்தன்

ஆக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அதிகாரிகள் மட்டத்தில்தான் இந்தச் சிந்தனைப்போக்கு இருந்துவந்தது. ஆனால், தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் இதே சிந்தனை கொண்டவர்களாக இருப்பதால், வரலாற்றுத் திரிபுகளும் அதிகரித்துவிட்டன. இந்தியா என்பது பல்வேறு பண்பாடுகளைக்கொண்ட பன்மைத்துவம் மிக்க ஓர் நாடு. இதை இன்றைய மைய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டால், அந்தந்தப் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கவும், வரலாற்றைப் பதிவு செய்யவும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டை அந்தந்த மாநிலங்களின் கைகளிலேயே ஒப்படைக்க வேண்டும். ஆனால், 'ஒரே நாடு' என்ற புதிய பண்பாட்டை உருவாக்க நினைப்பவர்களிடம் இந்த மாற்றங்களையெல்லாம் நாம் எப்படி எதிர்பார்ப்பது?'' என்கிறார் அழுத்தமான கேள்வியோடு.