Published:Updated:

தனிச் சின்னம்... பொதுத் தொகுதிகளில் வெற்றி - வி.சி.க தடம்பதித்தது எப்படி?

பானைச் சின்னத்தில் போட்டியிடும் திருமாவளவன்!
பானைச் சின்னத்தில் போட்டியிடும் திருமாவளவன்!

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க தி.மு.க வற்புறுத்துவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், `கூட்டணிக் கட்சிகளை தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை' என அப்போது அதை மறுத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

றகுதமிழகத்தில் கடந்த 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் நான்கில் மட்டுமே வெற்றி என்றாலும், தனிச்சின்னத்திலும் இரண்டு பொதுத் தொகுதியிலும் வெற்றிபெற்றிருப்பது அந்தக் கட்சியின் அரசியல் பயணத்தில் புதிய தொடக்கமாக அமைந்துள்ளது.

கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் சிதம்பரம் தொகுதியில் அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானைச் சின்னத்திலும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். அதில் ரவிக்குமாரின் வெற்றி என்பது வாக்கு எண்ணிக்கையின் பாதியிலேயே ஓரளவுக்கு உறுதியானது. ஆனால், திருமாவளவனின் வெற்றி நள்ளிரவுக்குப் பிறகுதான் கைகூடியது. ஆனால், அப்போதே சமூக வலைதளங்களில் திருமாவளவனின் வெற்றிக்காக, கட்சி, சாதி பேதமின்றி பலர் காத்துக்கிடந்ததைக் காண முடிந்தது. அதேவேளையில், `பேசாமல் இவரும் உதயசூரியனிலேயே நின்றிருக்கலாம்’ என ஒரு தரப்பினரும், `இல்லை தனிச்சின்னத்தில் வெற்றிபெற்றதுதான் பெருமை’ என மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

ஸ்டாலின்- வைகோ- திருமா
ஸ்டாலின்- வைகோ- திருமா

இந்தநிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதமே இது தொடர்பாக விவாதங்கள் எழுந்தன. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க தி.மு.க வற்புறுத்துவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், `கூட்டணிக் கட்சிகளை தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை' என அப்போது அதை மறுத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், ``தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என எந்த நெருக்கடியும் தரப்படவில்லை. உதயசூரியன் சின்னத்தைப் பயன்படுத்துவது சாதகமானதாக இருக்கும் என தி.மு.க தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் பரிசீலிப்போம். ஆனால், எங்கள் தனித்தன்மையை இழந்துவிட மாட்டோம்’’ என பதிலளித்தார் திருமாவளவன்.

இந்தநிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் தொடங்கின. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வி.சி.க-வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில்கூட, கிட்டத்தட்ட இரட்டை இலக்கங்களில் போட்டியிட்டுவிட்டு தற்போது, ஆறு தொகுதிகளுக்கு திருமாவளவன் ஒப்புக்கொண்டபோது, அவரின் ஆதரவாளர்களே அதிர்ச்சிக்குள்ளாகினர். ``ஆறு சீட்டுக்குத் திருமாவளவன் கட்சியை தி.மு.க-விடம் அடமானம் வைத்துவிட்டார்'' என எதிர்ப்பாளர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனாலும், அந்தச் சூழலை மிகவும் நிதானமாகக் கையாண்டார் அவர். அதேவேளையில், உதயசூரியன் சின்னத்தில் இல்லாமல் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதிலும் மிக உறுதியாக இருந்தார்.

திருமாவளவன் - ஸ்டாலின்
திருமாவளவன் - ஸ்டாலின்

தி.மு.க கூட்டணியில் அந்தக் கட்சிக்கு, செய்யூர், வானூர், திருப்போரூர், அரக்கோணம், காட்டுமன்னார் கோவில், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஒட்டுமொத்த தொகுதிகளில் ஐந்து சதவிகிதத்துக்கு அதாவது 12 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால்தான் கட்சிகள் விருப்பப்பட்ட சின்னத்தைப் பெற முடியம். அதற்குக் குறைவான தொகுதிகள் என்றால் சுயேச்சைகளுக்கு ஒதுக்கும்போதுதான் சின்னம் ஒதுக்குவார்கள். அதெல்லாம் தெரிந்தும், தனிச்சின்னம் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மிக உறுதியாக இருந்தனர். காரணம், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானால், மக்கள் பிரச்னைகள் குறித்துப் பேசும்போது ஒவ்வொருமுறையும் தி.மு.க-விடம் அனுமதி வாங்க வேண்டும். அதைக் கருத்தில்கொண்டே தனிச்சின்னம் என்பதில் உறுதியாக இருந்தார் திருமாவளவன்.

ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல். ஏப்ரல் 3-ம் தேதி மாலையோடு பிரசாரத்தையும் முடித்துவிட வேண்டும். மார்ச் 22-ம் தேதிதான் அந்தக் கட்சிக்கு பானைச் சின்னம் கிடைத்தது. இந்தநிலையில், வெறும் 14 நாள்களில் தொகுதி முழுவதும் சின்னத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நெருக்கடியான சூழல். அந்தநேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், கலை இலக்கிய அமைப்பான விடுதலைக் கலை இலக்கிய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான் தீவிரமாகப் பணியாற்றி மக்களிடம் சின்னத்தைக் கொண்டு சேர்த்தனர். எந்தெந்தத் தொகுதிகள் என ஒதுக்கப்படுவதற்கு முன்பாகவே உத்தேசமாக பத்து தொகுதிகளைத் தேர்வு செய்து, தேர்தல் பணியாற்றத் தயாராக இருந்தனர். தொகுதிகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, களத்துக்குச் சென்று வேலையைத் தொடங்கிவிட்டனர். பிரசாரப் பாடல்கள், நாடகங்கள் வாயிலாக தொகுதி முழுவதும் சின்னத்தையும் வேட்பாளரையும் கொண்டுசென்றனர். சரியான உணவில்லாமல், தங்க வசதியான இடமில்லாமல், கட்சியின் நலனை மட்டுமே முன்னிறுத்தி உழைத்த இளைஞர்களின் அர்ப்பணிப்பு இந்த வெற்றியில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

வி.சி.க
வி.சி.க

கட்சி நிர்வாகிகளின் உழைப்பு, கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு என எல்லாவற்றையும் தாண்டி, திருமாவளவன் என்கிற ஒற்றை மனிதனின் மீது படித்த சமூகம், இளைய சமுதாயம் கொண்ட நம்பிக்கையும் இந்த வெற்றிக்குப் பின்னணியில் இருக்கிறது. கட்சிக்குச் சம்மந்தமே இல்லாத பல இளைஞர்கள், தங்கள் சொந்தச் செலவில் ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள குக்கிராமங்கள் வரை நேரில் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

உதாரணமாக, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் எனப் பலர் அங்கம்வகிக்கும் 'பே பேக் டு த சொசைட்டி' என்கிற அமைப்பு, காஞ்சி மக்கள் மன்றம் போன்ற பல தோழமை இயக்கங்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களுக்காகக் களத்தில் தீவிரமாகப் பணியாற்றியது. ஏற்கெனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பானைச் சின்னத்தில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்காக வேலை செய்த மாடலையே தற்போது ஆறு தொகுதிகளுக்கும் பின்பற்றினர். அதுவே, மிகக் குறுகிய காலத்தில் மக்களிடம் சின்னத்தைக் கொண்டு சேர்க்க உதவியது. காட்டுமன்னார்கோவில், செய்யூர், திருப்போரூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு தொகுதிகளில் வெற்றிவாகை சூட முடிந்தது.

தடுப்பூசி: 'தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க மோடி அரசு துணை' - திருமாவளவன் குற்றச்சாட்டு சரிதானா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குச் சவாலாக இருந்த மற்றொரு விஷயம், அது போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் பொதுத் தொகுதிகள். கடந்த தேர்தல்களில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டிருந்தாலும் அங்கு வெற்றி பெற்றதில்லை. இந்தநிலையில் இந்த முறை திருப்போரூர் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜியும், நாகப்பட்டினம் தொகுதியில் ஆளூர் ஷாநவாஸும் வெற்றிபெற்றிருக்கின்றனர். திருப்போரூர் தொகுதியில் வன்னியர் மற்றும் பறையர் சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். வி.சி.க சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பாலாஜி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது வி.சி.க-வுக்குக் கூடுதல் பலம். அதேபோல, நாகப்பட்டினம் தொகுதியில் பறையர் சமூகத்தவர்கள் பெரும்பான்மையாகவும் இஸ்லாமியர்கள் கணிசமாகவும் வாழ்கின்றனர். இந்தநிலையில் அங்கு வி.சி.க சார்பில் போட்டியிட்ட ஷாநவாஸ் இஸ்லாமியர் என்பது வி.சி.க-வுக்கு அதிக பலத்தைக் கொடுத்துள்ளது. ஆனால், இவர்களின் வெற்றிக்கு இதை மட்டுமே நாம் காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

தனிச் சின்னம்... பொதுத் தொகுதிகளில் வெற்றி - வி.சி.க தடம்பதித்தது எப்படி?

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் இருவருமே தொடர்ச்சியாக மக்கள் பிரச்னைகளுக்காகக் களத்தில் நின்று குரல் கொடுப்பவர்கள். தவிர, நாம் மேலே சொன்னபடி கட்சி நிர்வாகிகளின் கடுமையான களப்பணி, கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு, தோழமை இயக்கங்களின் பிரசாரங்கள் ஆகியவையும் வெற்றிக்குக் கைகொடுத்தன. ``தனித் தொகுதிகளில்கூட ஐம்பது சதவிகித வெற்றியைத்தான் பெற்றிருக்கிறோம், ஆனால், பொதுத் தொகுதிகளில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி. ஆக 100 சதவிகித வெற்றியைப் பெற்றிருக்கிறோம்'' என புளகாங்கிதம் அடைகின்றனர் சிறுத்தைகள்.

இந்தத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் வெற்றியையும் தாண்டி, தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசியல் களத்தை, தி.மு.க Vs அ.தி.மு.க என்பதற்கு பதிலாக, தி.மு.க Vs பா.ஜ.க என திசைமாற்றியதில் விடுதலைச் சிறுத்தைகளின், குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பங்கு என்பது முக்கியமானது. இந்தத் தொகுதி, அந்தத் தொகுதி என்றில்லாமல் திருமாவளவனின் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களாலும், பக்குவமான அணுகுறையாலும் சாதி, மதம் தாண்டி அவருக்கு ஆதரவாக மக்கள் நம்பிக்கையோடு அவரை நோக்கி வருகிறார்கள் என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகளே சாட்சி.

அடுத்த கட்டுரைக்கு