Published:Updated:

குற்றப்பின்னணி வேட்பாளர்கள்... கலைஞர் செய்திகள், நமது அம்மாவில் விளம்பரம் செய்த தி.மு.க, அ.தி.மு.க!

கலைஞர் செய்திகள் & நமது அம்மா
கலைஞர் செய்திகள் & நமது அம்மா

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கட்சியின் அதிகாரபூர்வ டி.வி-யிலும் நாளிதழ்களிலும் தங்கள் கட்சியின் குற்றப்பின்னணி வேட்பாளர் பற்றிய விவரங்களை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் வெளியிட்டிருப்பதை கண்டறிந்திருக்கிறது விகடன். #VikatanExclusive

`அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை ஊடகங்களில் பகிரங்கமாகத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும்' எனச் சொல்லி பி.ஜே.பி-யைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டார். வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, `தங்கள் கட்சி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி பற்றியும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் நாளேடுகளிலும், டி.வி-க்களிலும் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்ய வேண்டும்' என 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின் அடிப்படியில், 2018 அக்டோபர் 10-ம் தேதி, `வேட்பாளர் படிவம் 26'ஐ அறிமுகம் செய்து அறிவிக்கையை வெளியிட்டது தேர்தல் கமிஷன். அந்த அறிவிக்கையில் இருந்த விஷயம் இதுதான்.

படிவம் 26
படிவம் 26

* வேட்பாளர் படிவம் 26-ல், குற்ற விவரங்களை வேட்பாளர்கள் தெரிவிப்பதுடன் தாங்கள் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் குற்றப் பின்னணி குறித்த தகவலையும், எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

* வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தகவலை அரசியல் கட்சிகள், தங்களின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.

* குற்றப்பின்னணி குறித்த தகவல்களை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்களாக அளிக்கப்பட்டதற்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும்.

படிவம் 26
படிவம் 26

* வேட்பாளர்களின் கிரிமினல் குற்ற விளம்பரச் செலவை அவரோ அல்லது அவர் சார்ந்த கட்சியோ ஏற்கவேண்டும். அவை தேர்தல் செலவுக் கணக்கில் வரும்.

* குற்றப் பின்னணி விவரங்களை நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் குறைந்தபட்சம் 3 முறை விளம்பரம் செய்யாத வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

* குற்றப் பின்னணி விவரங்களை விளம்பரங்களாக வெளியிடாத, வெற்றிபெறும் வேட்பாளர்களுக்கு எதிராக மற்றொரு வேட்பாளரோ அல்லது வாக்காளரோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

அஸ்வினி உபாத்யாயா
அஸ்வினி உபாத்யாயா

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்த அறிவிக்கையில் சொன்ன விஷயங்களை அரசியல் கட்சிகள் முறையாகப் பின்பற்றவில்லை. இதனால் நீதிமன்றப் படியேறினார் அஸ்வினி உபாத்யாயா. தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல்செய்தார்.

``வேட்பாளர்களின் குற்ற விவரங்கள் குறித்து எந்தெந்த முன்னணி நாளிதழ்களில், டி.வி சேனல்களில் எத்தனை நாள்களுக்குள் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற தெளிவான வழிகாட்டுதல்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையில் தெளிவில்லாமல் இருக்கிறது. வாக்காளர்கள் அதிக ஆர்வம் காட்டாத டி.வி சேனல்களிலும் மக்கள் அதிகம் வாசிக்காத நாளிதழ்களிலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் விளம்பரம் செய்து தப்பித்துக்கொள்கிறார்கள். உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அளித்த தீர்ப்பை முறையாகச் செயல்படுத்த, சரியான விதிமுறைகளை உருவாக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் சொல்லியிருந்தார் அஸ்வினி உபாத்யாயா.

நீதிபதி ரோஹின்டன் பாலி நாரிமன் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்

`வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தேர்வுசெய்ததும், அவர்கள் மீதான குற்ற வழக்குகள், விவரங்களைத் தங்கள் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும். அதோடு, கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள வேட்பாளர்களைத் தேர்வுசெய்தது ஏன், என்பதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அல்லது வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு, முக்கியமான தேசிய நாளிதழ், பிராந்திய நாளிதழ் மற்றும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேட்பாளர்கள்மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.

அந்த விளம்பரங்கள் வெளியிட்ட 72 மணி நேரத்துக்குள் அதுபற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள் தாக்கல்செய்ய வேண்டும். இதை அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யாவிட்டால், தேர்தல் கமிஷன் அதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும்' என தீர்ப்பில் சொல்லியிருந்தது உச்ச நீதிமன்றம்.

தேர்தல் கமிஷன்
தேர்தல் கமிஷன்

ஏற்கெனவே தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிக்கை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமலுக்கு வந்தது. இதன்படி, கிரிமினல் குற்றம் குறித்த விவரங்களை நாளேடு மற்றும் டி.வி-யில் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வது கட்டாயமானது. இதில், அரசியல் கட்சிகள் தில்லு முல்லை அரங்கேற்றின. விளம்பரங்கள் வெளியிடவில்லையென்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்பதால், பேருக்கு விளம்பரம் என்கிற நாடகத்தை நடத்தினார்கள்.

உத்தரவுப்படி `அதிக விற்பனையாகும் நாளிதழ்கள், பிரபலமான டி.வி சேனல்களில்தான் விளம்பரங்களை வெளியிட வேண்டும்'. ஆனால், அப்படி வெளியிட்டால் தங்கள் கட்சியின் லட்சணம் சந்தி சிரிக்கும். குற்றப் பின்னணி வேட்பாளர்களை நிறுத்திய கட்சியின் இமேஜ் பாதிக்கும். அதனால் வாக்குகள் சரியும் என்பதால், பிரபலம் இல்லாத நாளிதழ்களிலும் டி.வி சேனல்களிலும் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்தன. இதன் மூலம் குற்றப்பின்னணி கொண்ட தங்கள் கட்சி வேட்பாளர்களைப் பற்றிய விவரம் மக்களிடம் போய்ச் சேராமல் அரசியல் கட்சிகள் பார்த்துக்கொண்டன. நீதிமன்ற அவமதிப்பில் இருந்தும் தப்பித்துக்கொண்டார்கள். தேர்தல் கமிஷனின் விதியையும் கடைபிடித்தார்கள். இந்த மோசடியைத் தொடர்ந்துதான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இப்போது பாய்ந்தது.

`வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி தினத்துக்கு அடுத்த நாளிலிருந்து, தேர்தல் தேதிக்கு இரண்டு நாள்கள் முன்பு வரையில், 3 முறை, வெவ்வேறு தினங்களில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும்' என அறிவிக்கையில் சொல்லியிருந்தது தேர்தல் கமிஷன். அதன்படி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்த விளம்பரங்களை ஆய்வு செய்தது விகடன். இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்த விளம்பர விஷயத்தில் அப்பட்டமான ஏமாற்றுவேலையைச் செய்திருந்தன.

நமது அம்மா, ராஜ் நியூஸுக்கு அளிக்கப்பட்ட விளம்பரம் தொடர்பான ஆவணம்
நமது அம்மா, ராஜ் நியூஸுக்கு அளிக்கப்பட்ட விளம்பரம் தொடர்பான ஆவணம்

நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் கரூர் தொகுதியில் தம்பிதுரையும் திருவண்ணாமலை தொகுதியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிட்டனர். இவர்கள்மீது கிரிமினல் குற்ற வழக்குகள் இருந்தன. அதேபோல, 22 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், மானாமதுரையில் போட்டியிட்ட நாகராஜன், ஆண்டிபட்டியில் போட்டியிட்ட லோகிராஜன் ஆகியோர் மீதும் குற்ற வழக்குகள் இருந்தன. இந்த நான்கு பேருக்கும் பத்திரிகையிலும் டி.வி-யிலும் அ.தி.மு.க விளம்பரம் செய்திருந்தது.

விளம்பரத்துக்கு அ.தி.மு.க செலவிட்ட தொகை
விளம்பரத்துக்கு அ.தி.மு.க செலவிட்ட தொகை

`நமது புரட்சித்தலைவி அம்மா' பத்திரிகையில், 2019 ஏப்ரல் 10, 12 மற்றும் 14 தேதிகளில் விளம்பரம் செய்திருந்தார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, `நமது புரட்சித்தலைவி அம்மா' நாளிதழ்தான் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ பத்திரிகையாக இருந்துவருகிறது. இதில் விளம்பரம் கொடுத்தால், கட்சிக்காரர்கள் மட்டும்தான் படிப்பார்கள். அவர்கள் எப்படியிருந்தாலும் அ.தி.மு.க-வுக்குதான் வாக்களிப்பார்கள். இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது என திட்டமிட்டுத்தான் `நமது புரட்சித்தலைவி அம்மா' நாளிதழில் அ.தி.மு.க விளம்பரம் செய்திருந்தது. அதேபோன்று, கடந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்படி, 0.8 சதவிகிதப் பார்வையாளர்களைக் கொண்ட ராஜ் நியூஸ் சேனலில் அதே தேதிகளில் விளம்பரம் அளித்திருந்தது அ.தி.மு.க. நாளிதழ் மற்றும் டி.வி சேனலில் விளம்பரம் செய்தற்காக, 8,26,800 ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா 2,06,700 ரூபாய் செலவானது.

கலைஞர் செய்திகள், பிற்பகல் நாளிதலுக்கு அளிக்கப்பட்ட விளம்பரம் தொடர்பான ஆவணம்
கலைஞர் செய்திகள், பிற்பகல் நாளிதலுக்கு அளிக்கப்பட்ட விளம்பரம் தொடர்பான ஆவணம்

தி.மு.க-வும் அதே தில்லாலங்கடி வேலையைத்தான் செய்திருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு `நமது புரட்சித்தலைவி அம்மா' என்றால், தி.மு.க-வுக்கு `கலைஞர் செய்திகள்'. 2019 ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், `கலைஞர் செய்திச் சேனலில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக 29,736 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று, கோவையில் மட்டுமே பிரசுரமாகும் `பிற்பகல்' என்கிற நாளிதழில் தி.மு.க விளம்பரம் கொடுத்திருக்கிறது. 2019 ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட விளம்பரத்துக்கு, 1,57,080 ரூபாய் கட்டணமாகக் கொடுத்திருக்கிறார்கள். இவை, நாடாளுமன்ற வேட்பாளர்களுக்குத் தரப்பட்ட தேர்தல் கணக்கு.

விளம்பரத்துக்கு தி.மு.க. செலவிட்ட தொகை
விளம்பரத்துக்கு தி.மு.க. செலவிட்ட தொகை

சட்டசபை இடைத்தேர்தலுக்கும் இதேபோல `கலைஞர் செய்திகள்' சேனலுக்கும் `பிற்பகல்' நாளிதழுக்கும் விளம்பரம் தரப்பட்டது. அதற்காக 2,61,896 ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர்களுக்கும் சேர்த்து, மொத்தமாக 4,48,712 ரூபாய் கட்டணமாகக் கொடுத்திருக்கிறது தி.மு.க தலைமை.

குற்றப்பின்னணி வேட்பாளர்கள்... கலைஞர் செய்திகள், நமது அம்மாவில் விளம்பரம் செய்த தி.மு.க, அ.தி.மு.க!

தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை வெளியிடுவதற்கு, கடந்த கால தேர்தல்களில் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை அந்தந்தத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளே பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவந்தார்கள். இதுவும் முழுமையாக இல்லை. ஒரு சில தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள்தான் அதைக் கடைபிடித்தார்கள். அதையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்படுகிறது.

எத்தனை விதிமுறைகள் வந்தாலும், அத்தனையையும் அசால்ட்டாக உடைப்பதுதான் நம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாயிற்றே... விழித்துக்கொள்ளவேண்டியது வாக்காளர் என்ற பெருமைக்குரிய பொதுமக்கள்தான்!

பின் செல்ல