Published:Updated:

5 ஸ்டெப் தி.மு.க-வின் `ஒன்றிணைவோம் வா’... எடப்பாடியிலிருந்து வந்த 1305 அழைப்பு..!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

கொரோனா தாக்கத்தில் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், தங்கள் பங்களிப்பை கனகச்சிதமாக மேற்கொள்ள தி.மு.க கையில் எடுத்திருக்கும் ஆயுதமே இந்த `ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டம்.

சமூக வலைதளங்களில் தி.மு.க-வினரால் அதிகம் பரப்பப்படும் வார்த்தையாக மாறியிருக்கிறது `ஒன்றிணைவோம் வா.’ கொரோனா தாக்கத்தில் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், தங்கள் பங்களிப்பை கனகச்சிதமாக மேற்கொள்ள தி.மு.க கையில் எடுத்திருக்கும் ஆயுதமே இந்த `ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டம். தி.மு.க-வுக்கு தேர்தல் பணியாற்ற வந்திருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு தயாரித்துக்கொடுத்திருக்கும் `ஒன்றிணைவோம் வா' திட்டத்தைக் கட்சியின் தலைவர் முதல் கடைநிலை தொண்டன் வரை செயல்படுத்தி வருகிறார்கள்.

ஒன்றிணைவோம் வா
ஒன்றிணைவோம் வா

ஒன்றிணைவோம் வா என்கிற இந்தத் திட்டம் மொத்தம் ஐந்து படிநிலைகளைக் கொண்டதாக வடிவமைத்துள்ளார்கள். ஸ்டாலினுடன் இணைவோம், பொதுமக்களின் உதவி எண், நல்லோர் கூடம், ஏழை எளியோர்க்கு உணவு, வட்டாரக் குழுக்கள் ஆகிய ஐந்து படிநிலைகள் இந்தத் திட்டத்தில் இருக்கிறது.

இதில் ஸ்டாலினுடன் இணைவோம் என்கிற திட்டம் ஏற்கெனவே ஓ.எம்.ஜி. குழுமம் தி.மு.க-வுக்கு பணியாற்றியபோது `கனெக்ட் ஸ்டாலின்’ என்கிற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தினார்கள். இப்போது அதே திட்டத்தைக் கொஞ்சம் மாற்றி `ஸ்டாலினுடன் இணைவோம்’ என்று புதிய ஸ்லோகனில் பயணிக்க உள்ளார்கள். இந்தத் திட்டப்படி கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாமல், கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள், தி.மு.க அனுதாபிகள் உள்ளிட்டவர்கள் ஸ்டாலினுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடி தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கலாம். இந்தத் திட்டம் தொடங்கிய பிறகு, தனது வீட்டில் தினமும் காலை 11 மணிக்கு வீடியோ கால் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் முதல் ஒன்றிய நிர்வாகிகள் வரை ஒரே நேரத்தில் ஸ்டாலினுடன் சந்திப்பை நடத்துகிறார்கள். இந்தச் சந்திப்புக்கு முன்பாகவே யாரெல்லாம் ஸ்டாலினுடன் பேச இருக்கிறார்களோ அவர்களது பட்டியல் ஐபேக் ஊழியர்களுக்கு வந்துவிடுகிறது அவர்கள்தாம் பேசுபவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று வகுப்பு எடுக்கிறார்கள். அதே நாள் மாலை எந்த மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடினாரோ அதே மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயனாளர்களுடன் வீடியோ கலந்துரையாடல் நடக்கிறது.

அடுத்து உதவி எண். இதற்காகப் புதியதாக உருவாக்கியுள்ள 90730 90730 என்கிற இலவச தொடர்பு எண்ணை உருவாக்கியுள்ளார்கள். இந்த எண்ணில் யார் வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு தேவைப்படும் உதவி தி.மு.க தரப்பிலிருந்து தரப்படும் என்று உறுதிகொடுக்கப்பட்டது. இந்த உதவி எண்ணில்தான் இப்போது சர்ச்சையும் எழுந்துள்ளது. இந்த எண்ணைத் தொடர்புகொண்டால் பிஸியாக இருப்பதாகவும், ``உங்கள் எண் பதி செய்யப்பட்டது எங்களது நிர்வாகி உங்களைத் தொடர்புகொண்டு பேசுவார்” என்று மட்டுமே சொல்கிறது என்கிற விமர்சனமும் இப்போது எழுந்துள்ளது. அதே நேரம் அ.தி.மு.க தரப்பு ஒற்றை எண்ணைக் கொடுத்து ஒரு மாநிலம் முழுவதும் எப்படி உதவியைக் கோர முடியும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளது. ஆனால், இதற்கு தி.மு.க தரப்பும் விளக்கம் கொடுக்கிறது. ``இது கால்சென்டர் போல ஒரு சிஸ்டம். ஒரே எண்ணில் 128 நபர்களுடன் உரையாட முடியும். இப்போது ஐபேக் நிறுவனம் இதற்காக 100 பேரை பணியில் அமர்த்தியுள்ளது. இந்த 100 பேர் ஒரே நேரத்தில் 100 நபர்களிடம் பேசுகிறார்கள். அவர்களிடம் தேவை என்ன, எந்தப் பகுதியிலிருந்து பேசுகிறார்கள் போன்ற விவரங்களை குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த எண் செயல்பாட்டில் இருக்கும் என்கிறார்கள். ஒரு நாளில் பதிவான கால்களை அன்று மாலை தி.மு.க தலைமையிடம் ஒப்படைத்துவிடுகிறது ஐபேக் குழு. மாவட்ட வாரியாக அதைப் பிரித்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் தலைமை ஒப்படைத்து தேவைப்படுபவர்களுக்கான பட்டியலையும் கொடுத்துவிடுகிறார்கள். மூன்று நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உதவி கிடைத்துவிடவேண்டும் என்று தலைமை அறிவுறுத்தியுள்ளது.

ஸ்டாலின் வீடியோ கான்ஃபரன்ஸ்
ஸ்டாலின் வீடியோ கான்ஃபரன்ஸ்

இதில் இன்னொரு சிக்கலும் எழுந்திருக்கிறது. சமீபத்தில் சில நாள்களுக்கு முன்பு ஒரே நாளில் முதல்வரின் எடப்பாடி தொகுதியிலிருந்து தி.மு.க-வின் உதவி எண்ணுக்கு 1305 கால்கள் வந்துள்ளன. அதைத் தி.மு.க தலைமையிடம் கொடுத்துள்ளார்கள். ஸ்டாலின் அதை மாவட்ட நிர்வாகி செல்வகணபதியிடம் கொடுத்து விசாரிக்கச் சொல்லியுள்ளார். பலர் போலியாகத் தொடர்புகொண்டு தங்களுக்கு உதவி வேண்டும் என்று சொல்லியதை செல்வகணபதி டீம் கண்டறிந்தது. இதற்குப் பிறகு இந்த கால் சென்டரில் சில விதிமுறைகளை அமல்படுத்தி உண்மையில் உதவி தேவைப்படுபவர்களை மட்டும் பட்டியலுக்கு கொண்டு வர சொல்லியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களைத் தொடர்புகொள்ள வைத்தால் தொடர்பு எண் பிஸி என்று வரும். இந்தத் திட்டத்துக்கு `செக்’ வைக்க நினைத்த அ.தி.மு.க தரப்பு, அதை ரெக்கார்ட் செய்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கிறது என்று புலம்புகிறார்கள். இந்த உதவி எண்ணில் ஐந்து நாள்களில் மட்டும் 2 லட்சம் கால்கள் வந்துள்ளன என்கிறது தி.மு.க தலைமை. ஆனால், இந்த ஒன்றிணைவோம் திட்டத்தை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய பல லட்சங்களையும் வாரி வழங்கியுள்ளது தி.மு.க தலைமை.

அதேபோல் தன்னார்வலர்கள் மற்றும் சேவை அமைப்புகளுடன் தி.மு.க நிர்வாகிகள் இணைந்து உதவிகளை மேற்கொள்ள வசதியாக `நல்லோர் கூடம்’ என்கிற திட்டத்தை உருவாக்கியுள்ளது. யார்யாருக்குத் தேவை இருக்கிறதோ அவர்களுக்கும் உதவி செய்யும் அமைப்புக்கும் இடையே தி.மு.க நிர்வாகிகள் ஒரு பாலமாக இருந்து உதவிகளை பெற்றுத்தருவார்கள். இதைத் தி.மு.க செய்ததாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அதற்கு விளக்கம் கொடுக்கிறார்கள்.

தி.மு.க சார்பில் உதவி
தி.மு.க சார்பில் உதவி

மேலும் `உணவு அளித்தல்’ என்கிற திட்டத்துக்கு தமிழகத்தில் 25 நகரங்களை மட்டும் முதலில் தேர்வு செய்துள்ளார்கள். இந்த நகரங்களில் அதிக அளவு குடிசை வாழ்மக்கள் இருப்பதால் அவர்களுக்குத் தேவையான உணவைத் தினமும் வழங்குவது இந்தத் திட்டம். இந்தத் திட்டத்துக்காக பெரிய ஹோட்டல்கள் மற்றும் உணவு வழங்கும் ஸ்விக்கி, ஜொமோட்டோ உள்ளிட்டவற்றுடன் தி.மு.க தொடர்பு ஏற்படுத்தியுள்ளது. உணவை அவர்கள் வழங்குவார்கள் அதற்குத் தேவையான பொருள்களை தி.மு.க வழங்கும் என்பதே இந்த வழி. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை ஒரு நாளைக்கு 20,000 முதல் 30,000 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படுகிறது என்று சலித்துக்கொள்கிறார்கள். நேற்றும் ஸ்டாலின் இதுகுறித்து அறிக்கை விட்டார்.

மேற்சொன்ன திட்டங்கள் எல்லாம் கொரோனா காலத்துக்கு என்று ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் என்றால் இறுதியாக உருவாக்கிய `வட்டாரக் குழுக்கள்’ என்கிற திட்டத்தைத்தான் எதிர்கால தேர்தல் அரசியலுக்கான திட்டமாகப் பார்க்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர் ``தமிழகத்தை எட்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். எட்டு மண்டலத்துக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் ஐபேக் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தி.மு.க-வில் நாலரை லட்சம் நிர்வாகிகளை தமிழகம் முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுத்து அவர்களை அந்தந்தப் பகுதியில் உள்ள பொதுஜனங்களை வைத்து வாட்ஸ் அப் குரூப் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இதே போல் 100 வாட்ஸ் அப் குரூப்கள், ஒரு அட்மின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். இதை மண்டலப் பொறுப்பில் இருக்கும் ஐபேக் பொறுப்பாளர் தொடர்ந்து ஆய்வு செய்துவருவார். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை இந்த சிஸ்டத்தை செயல்பாட்டில் வைக்க உள்ளார்கள். இப்போது இந்த வாட்ஸ் அப் குரூப்களை, கொரோனா தாக்கத்தால் உதவி கிடைக்காமல் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் விதமாக செயல்படுத்த இருக்கிறார்கள்” என்று விவரிக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

`ஒன்றிணைவோம் வா’ என்கிற இந்தத் திட்டத்தில் தி.மு.க-வினருக்கு ஏராளமான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சில குமுறல்களும் கேட்கத்தான் செய்கிறது. ``தலைமையிலிருந்து தினமும் அறிவுறுத்தல்கள் வருகிறது. அதேநேரம் இவ்வளவு திட்டங்களையும் செய்வதற்குத் தேவையான நிதி நெருக்கடியிலும் பல நிர்வாகிகள் சிக்கியுள்ளார்கள். மற்றொரு புறம் மண்டலப் பொறுப்பாளர்கள் என்கிற பதவியில் ஐபேக் நிறுவனத்தின் ஆட்கள் அதிகாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார்களோ என்கிற அச்சமும் உள்ளது. ஓர் அரசு செய்ய வேண்டிய அனைத்துப் பணிகளையும் எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சி நிர்வாகிகள் செய்வது என்பது கொஞ்சம் கடினமாகவே உள்ளது“ என்கிறார்கள்.

`ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக உள்ள ரவீந்தரன் ``இந்தத் திட்டம் தொடங்கிய சில நாள்களிலே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கட்சியினர் தாண்டி பொதுவெளியிலும் பல உதவிகளுக்காக மக்கள் நேரடியாகத் தொடர்புகொள்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகள் இரண்டு நாள்களுக்குள் சென்றடைந்துவிடுகிறது. நம்பர் பிஸியாக இருக்கிறது என்று ஒரு பொய்யை அ.தி.மு.க பரப்புகிறது. ஒரே நேரத்தில் 1,000 பேர் தொடர்புகொண்டால் பிஸியாக இருப்பது வாடிக்கை. ஆனால், தொடர்புகொள்ளும் நபர்களுக்கு உண்மையான தேவைகள் இருந்தால் அவை செய்யப்படுகிறது. நாள்தோறும் பயனடைந்தவர்கள் தலைவருடன் நடத்தும் வீடியோ நேர்காணலைப் பார்த்தால் இந்தத் திட்டத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வீர்கள்” என்கிறார்.

`தனித்திருப்போம்’ என்று அரசு விளம்பரப்படுத்திவரும் நேரத்தில் `ஒன்றிணைவோம் வா’ என்று எதிர்க்கட்சி எடுத்துள்ள அஸ்திரத்தை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி எந்தத் துருப்புச் சீட்டை இறக்கப்போகிறார் என்பதை அரசியல் நோக்கர்கள் ஆவலுடன் கவனித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு