நாகர்கோவில் மாநகராட்சி ஆக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் தி.மு.க 24 வார்டுகளையும், காங்கிரஸ் 7, ம.தி.மு.க ஒரு வார்டையும் கைப்பற்றின. 52 வார்டுகளில் ஆட்சியமைக்க 27 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. தி.மு.க கூட்டணியில் 32 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த நிலையில் தி.மு.க சார்பில் மேயர் வேட்பாளராக மகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநகர திமுக செயலாளராக இருக்கும் மகேஷுக்கு இப்போது 57 வயது ஆகிறது. மகேஷ் நாகர்கோவிலை அடுத்த புத்தளம் கல்லடிவிளையைச் சேர்ந்தவர். தந்தை ரெங்கசுவாமி, தாய் காசித்தங்கம். மனைவி மேகலை, ஒரே மகள் சவிதாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

மணவாளபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தொடக்கப்பள்ளி பயின்றவர், புத்தளம் எல்.எம்.பி.சி பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார். நாகர்கோவில் எஸ்.எல்.பி மேனிலைப் பள்ளியில் 11, 12 படித்தார். ஸ்காட் கிறிஸ்டின் காலேஜில் பி.ஏ எக்கனாமிக் பயின்றவர், மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1990-லிருந்து வழக்கறிஞராகப் பணிபுரிந்துவருகிறார். 1996 முதல் 2001 வரை அரசு வனத்துறை மாவட்ட வழக்கறிஞராக இருந்தார். 2006-லிருந்து 2009 வரை மாவட்ட அரசு வழக்கறிஞராக இருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரசியலைப் பொறுத்தவரை 1996-லிருந்து 2001 வரை நாகர்கோவில் நகர இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். 12 ஆண்டுகள் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். 2007 டிசம்பர் மாதம், 17-ம் தேதி நெல்லையில் நடந்த மாநில இளைஞரணி மாநாட்டில் சிறந்த இளைஞரணி அமைப்பாளருக்கான 3-ம் பரிசை அன்றைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். 2008-லிருந்து நாகர்கோவில் நகரச் செயலாளராக இருக்கிறார். நாகர்கோவில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு மாநகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவருகிறார்.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 15-ம் தேதி நடந்த முப்பெரும் விழாவில் தென் மண்டலத்தில் சிறந்த நகரச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டு ஸ்டாலின் கையால் ஒரு லட்சம் ரூபாயும், பொற்கிழியும், சான்றிதழும் பெற்றவர், நாகர்கோவில் மாநகராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள மகேஷ் தி.மு.க மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் நாகர்கோவில் தொகுதிக்காக சீட் கேட்டிருந்தார். நேர்காணலுக்கு அழைத்தபோது, "நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட எங்கள் குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனுக்கு வாய்ப்புகொடுங்கள். அதே சமயம் எனக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் வாய்ப்பு தாருங்கள்" என ஸ்டாலினிடம் நேரடியாகவே கேட்டுவிட்டாராம். அதை மனதில்வைத்திருந்த ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகும் மறக்காமல் மகேஷை மேயர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.