Published:Updated:

`முடிவுக்கு வராத `பங்கீடு’ பஞ்சாயத்து!’ - கூட்டணிக் கட்சிகளிடம் கறார் காட்டுகிறதா திமுக?

ஸ்டாலின்- வைகோ- திருமா

`கூட்டணிக் கட்சிகளுடன் நட்பாக இருக்கிறோம்’ எனச் சொல்லும் திமுக, தொகுதிப் பங்கீடு என்றால் மிகவும் கறாராக நடந்துகொள்வதாக வருந்துகிறார்கள் கூட்டணிக் கட்சியினர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் என்ன நடந்தது?

`முடிவுக்கு வராத `பங்கீடு’ பஞ்சாயத்து!’ - கூட்டணிக் கட்சிகளிடம் கறார் காட்டுகிறதா திமுக?

`கூட்டணிக் கட்சிகளுடன் நட்பாக இருக்கிறோம்’ எனச் சொல்லும் திமுக, தொகுதிப் பங்கீடு என்றால் மிகவும் கறாராக நடந்துகொள்வதாக வருந்துகிறார்கள் கூட்டணிக் கட்சியினர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் என்ன நடந்தது?

Published:Updated:
ஸ்டாலின்- வைகோ- திருமா

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ய பிப்ரவரி 4-தான் கடைசி தேதி. தமிழ்நாட்டின் இரண்டு பிரதான கூட்டணிகளுள் ஒன்றான அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில், பா.ஜ.க இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முடிவுசெய்து தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. மற்றொரு பிரதான கூட்டணியான தி.மு.க - காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு குறித்து கடும் இழுபறி நீடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் 10 முதல் 20 சதவிகித இடங்களில் போட்டியிட வேண்டும் என தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

ஆனால், தி.மு.க தரப்பிலிருந்து 1 முதல் 4 சதவிகித இடங்கள் மட்டுமே தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமையோ, ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள்தான் எல்லாம். கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை விட்டுக்கொடுக்க உத்தரவிட்டிருக்கிறோம். உங்களுக்கு உரியது கிடைக்கும்” எனச் சொல்ல மா.செ-க்களோ ``நாங்கள் ஒதுக்கும் இடங்களில் விருப்பமிருந்தால் போட்டியிடுங்கள்” எனக் கூறிவிடுவதோடு, நான்கு இடங்களுக்கும் குறைவான இடங்களையே ஒதுக்குவதாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலின் - அழகிரி
ஸ்டாலின் - அழகிரி

கூட்டணிக் கட்சிகளோடு இணக்கமாக, நட்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க., தேர்தல் நேரத்தில் அவர்களைத் துளி அளவுகூட மதிப்பதில்லை எனக் கூட்டணிக் கட்சியினர் புலம்புகிறார்கள். நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கூட்டணிக் கட்சிகளை தி.மு.க எப்படி நடத்துகிறது என விசாரித்தோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பெரும்பாலான மாவட்டங்களில் கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை தி.மு.க கொடுக்க முன்வரவில்லை. கேட்டதைவிட அடிமட்ட அளவில்தான் இடங்களை ஒதுக்குகிறார்கள். அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. நாங்கள் இன்னும் பங்கீட்டையே இறுதி செய்ய முடியாமல் திணறிவருகிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது இரண்டு தரப்பிலும் நடைபெற வேண்டும். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு, அவர்கள் கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன சொல்லவருகிறோம் என்று கேட்பதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை” எனப் புலம்புகிறார்கள்.

``உள்ளாட்சித் தேர்தலில் குறைந்தபட்சம் 15 சதவிகித இடங்களையாவது பெற வேண்டும் என்றும், அதற்கேற்ப தி.மு.க-வுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மாநிலத் தலைமை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் நாங்கள் என்ன பேசுகிறோம் எனக் கேட்கவே தயாராக இல்லாதபோது எங்கே பேரமெல்லாம் பேசுவது...” என்று காங்கிரஸ் முகாமில் கடும் விரக்தியில் பேசினார்கள். ``2011 உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது 10 மாநகராட்சிகளில் 17 மாநகராட்சி கவுன்சிலர் இடங்களை வென்றோம். மேலும் 50 இடங்களில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். எனவே, காங்கிரஸ் கட்சியின் பலம் மற்றும் உள்ளூர் தலைவர்களின் செல்வாக்கு போன்றவற்றைக் கருத்தில்கொண்டுதான் இடப்பகிர்வை தி.மு.க-விடம் எதிர்பார்க்கிறோம்” என்கின்றனர்.

ஆவேசமாக வெளியேறும் ஜோதிமணி
ஆவேசமாக வெளியேறும் ஜோதிமணி

காங்கிரஸ் கட்சியினரை, தி.மு.க-வினர் நடத்தும்விதங்களின் உச்சமாக, கரூரில் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது தன்னை வெளியில் போகச் சொன்னதாகவும், அதில் ``நான் என்ன உங்கள் வீட்டுக்கு விருந்துக்கா வந்தேன்” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசமாகப் பேசுவதாகவும் வெளியான வீடியோ, வைரலாகிவருகிறது. ஆனால், மதுரை, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் காங்கிரஸ் - தி.மு.க இடையேயான பங்கீடு நிறைவுக்கும் வந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே இந்த நிலைமை என்றால் வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைமை அதைவிட மோசம். கூட்டணி பேசவந்த வி.சி.க-வினரை அமைச்சர் ஒருவர் நிற்கவைத்தே பேசி அனுப்ப, அது தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புகார் செய்யும் அளவுக்குச் சென்றிருக்கிறதாம். தங்களுக்கு ஒன்று என்ற இலக்கைத் தாண்டி தொகுதி ஒதுக்க தி.மு.க தரப்பில் தயாராகவே இல்லை என்கிறார்கள் நம்மிடம் பேசிய வி.சி.க-வினர். தொகுதி ஒதுக்கவில்லை என்றால்கூட பரவாயில்லை. உரிய மரியாதையாவது கிடைக்கிறதா என்றால் அதுவும் பெரிய கேள்விக்குறிதான். ‘கொடுக்குறதுல நில்லுங்க... இல்லைன்னா இடத்தைக் காலி பண்ணுங்க’ என்கிறார்கள். கட்சிக்குக் கட்டுப்பட்டு அவர்கள் செய்வதைப் பொறுத்துக்கொள்கிறோம். சில தொண்டர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் சுயேச்சையாக நிற்க முடியுமானால் நில்லுங்கள். தலைமையில் நாங்கள் பேசிக்கொள்கிறோம் எனச் சொல்லிவிட்டோம்” என்றனர் பெருமூச்சுடன்.

தி.மு.க பெரிய கட்சிதான். ஆனால், நகராட்சித் தேர்தலில் கட்சியைவிட அந்தப் பகுதியில் செல்வாக்கு யாருக்கு அதிகமோ அவர்களுக்குத்தான் வெற்றி அதிகம். ஆனால், ஆளுங்கட்சி என்ற நிலையிலேயேஎ அவர்கள் செயல்படுகிரார்கள்” என்கின்றனர் வி.சி.க-வினர். ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் நிலைமை இன்னும் மோசம். “கேட்பதைக் கேட்போம். கொடுத்தால் பார்க்கலாம். இல்லையென்றால் சுயேச்சையாக நின்றுகொள்ளுங்கள்” என எப்போதோ சொல்லிவிட்டார்களாம்.

திருமாவளவன் - ஸ்டாலின்
திருமாவளவன் - ஸ்டாலின்

தி.மு.க வேட்பாளர் பட்டியல் வரை தயாராகவே வைத்திருக்கிறது. கூட்டணி முடிவானதும் பட்டியலை வெளியிடுவார்கள். ஆனால், மற்ற கட்சிகள் வேட்பாளர் தேர்வும் நடத்தாமல், தொகுதிப் பங்கீட்டிலும் இறுதி முடிவு தெரியாமல் இருதலைக் கொள்ளி எறும்புகளாகத் தவித்துவருகிறார்கள். “ஏதாவது ஒரு முடிவு தெரிந்தால்தானே அடுத்த தேர்தல் வேலையைத் தொடர முடியும்” என்கிறார்கள். திமுக தரப்பில் விசாரித்தால், ``கூட்டணிப் பங்கீடு விவகாரத்தில் நிச்சயமாக நாங்கள் கடுமை காட்டவில்லை. கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை வழங்கத்தான் செய்கிறோம். ஆனால், அதற்கும் மேல் கேட்கும்போது, அது முடியாமல் போகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு செல்வாக்கு இருக்கும் இடங்களில் அதிக வார்டுகளை ஒதுக்குகிறோம். அவர்கள் செல்வாக்கு குறைவாக இருக்கும் இடத்திலும் அதே எண்ணிக்கையை எதிர்ப்பார்த்தால், கொடுக்க முடியாதுதானே... இதைத்தான் பேச்சுவார்த்தையில் பேசி, சுமுக முடிவுக்கு முயல்கிறோம். அனைத்தும் சுமுகமாகத்தான் செல்கின்றன. விரைவில் பங்கீடு விஷயங்கள் முடிவுக்கு வந்துவிடும்” என்கிறார்கள்

கூட்டணி முடிவாகி, தேர்தல் முடிவுகள் வரும் வரை இப்படியான அரசியல் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும் என்பதால், இன்னும் சில காலம் தமிழ்நாட்டின் அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism