Published:Updated:

ஈழத் தமிழர் இனப்படுகொலை... தமிழகம் மற்றும் இலங்கை தேர்தல் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து, 11 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நாளில், தமிழ் இன அழிப்பு, தமிழக தேர்தல் அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

ஈழத் தமிழர் இனப்படுகொலை... தமிழகம் மற்றும் இலங்கை தேர்தல் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னென்ன?

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து, 11 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நாளில், தமிழ் இன அழிப்பு, தமிழக தேர்தல் அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

Published:Updated:
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளில் ஈழம் என்கிற வார்த்தை உச்சரிக்கப்படாமல் ஒரு தேர்தல்கூட நடந்ததில்லை என நாம் அடித்துச் சொல்ல முடியும். அதே, 2009 இனப்படுகொலைக்குப் பிறகு, அது இன்னும் வீரியமடைந்தது. கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தல் தவிர, 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்கள் என நான்கு தேர்தல்களில் ஈழம் ஒரு பேசுபொருளாக இருந்திருக்கிறது.

2006-2011... தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தது தி.மு.க. முதல்வராக இருந்தவர் கருணாநிதி. சகல துறைகளிலும், அவரின் அமைச்சர்களும், குடும்ப உறுப்பினர்களும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆட்சி அராஜகத்தின் உச்சத்தை தமிழக மக்கள் உணர்ந்த காலகட்டமும் அதுதான். 2004 தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, இரண்டு கம்யூனிஸ்ட்களோடு மெகா கூட்டணி அமைத்து மாஸ் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, 2006 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தயவுடன் அப்போது ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது தி.மு.க.

கருணாநிதி
கருணாநிதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேவேளையில், 2008-ம் ஆண்டின் இறுதியில், இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் உக்கிரமடைந்தது. கொத்துக் கொத்தாக மக்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று குவித்தனர். பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என யாரும் சிங்கள ராணுவத்தினரால் விட்டுவைக்கப்படவில்லை. தமிழகத்தில் அது மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆயுதங்கள், ரேடார் கொடுத்துப் போருக்குத் துணை புரிகிறது என ஈழ உணர்வாளர்கள் குற்றம் சாட்டினர். ஆயுதங்கள் கொடுப்பதை இந்தியா நிறுத்த வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்தனர். ஆனால், இந்தியா ஆயுதம் கொடுக்காவிட்டால், சீனா கொடுத்துவிடும் எனச் சொல்லி, இலங்கை ராணுவத்துக்கு தொடர் சேவை புரிந்துவந்தது இந்திய அரசு. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும், தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என ஈழ உணர்வாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசுக்கு தி.மு.க எம்.பி-க்கள் ஆதரவு அளித்து வந்தனர். (அப்போது தமிழகத்தில் காங்கிரஸின் தயவில்தான் தி.மு.க ஆட்சியில் இருந்தது. தவிர, தி.மு.க வாபஸ் வாங்கினால் முலாயம் சிங்கும், மாயாவதியும் ஆதரவளிக்கத் தயாராக இருந்தார்கள். 2013-ல் தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேறியபோது முலாயம்சிங்தான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி-க்களிடம் ராஜினாமா கடிதத்தைப் பெற்றவர், அதை அப்படியே விட்டுவிட, ஈழ உணர்வாளர்களின் கோபம் தி.மு.க-வின் மீதும் கருணாநிதியின் மீதும் திரும்பியது. அதோடு, ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தது, ஈழ உணர்வாளர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஒருபுறம் இலங்கையில் போர் உக்கிரமாக தொடர்ந்து கொண்டிருக்க, மறுபுறம் 2009 நாடாளுமன்றத் தேர்தலும் வந்தது.

ஈழ உணர்வாளர்கள், யாரை இந்த இனப் படுகொலைக்குக் காரணம் என கடுமையாக விமர்சித்து வந்தார்களோ, அதே காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடர்ந்தது தி.மு.க. இது ஈழ உணர்வாளர்கள், பெரியாரிய இயக்க உறுப்பினர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது. காங்கிரஸ், தி.மு.க கூட்டணிக்கு எதிராக தங்களின் பிரசாரத்தைத் தொடங்கினர். அதிலும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் எனும் பிரசாரத்தை, 2009 பிப்ரவரி இறுதியிலே ஆரம்பித்துவிட, அது தேர்தல் சமயத்தில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. காங்கிரஸை எதிர்த்தால் மட்டும் போதாது, அ.தி.மு.கவை ஆதரித்தால்தான் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியை வீழ்த்த முடியும் என பெரியாரிய அமைப்புகளும் சில தமிழ் அமைப்புகளும் இணைந்து முடிவெடுத்து, அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுத்தனர்.

ராமதாஸ் - வைகோ
ராமதாஸ் - வைகோ

மறுபுறம், 2004 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க அதிலிருந்து விலகி அ.தி.மு.க கூட்டணியில் இணைந்தது. ஈழ விவகாரத்தை முன்னிறுத்தி, கருணாநிதியையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தார் ராமதாஸ். 2006 சட்டமன்றத் தேர்தலில் இருந்தே, அ.தி.மு.க கூட்டணியில் இருந்த வைகோ, 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடர்ந்தார். அவரும் காங்கிரஸ், தி.மு.க.வை எதிர்த்துத் தீவிரமாய் பிரசாரம் செய்தார். அதுவரை, விடுதலைப் புலிகளைத் தீவிரமாய் எதிர்த்த ஜெயலலிதா, அந்தத் தேர்தலில் ஈழத்தை ஆதரித்து பேசத்துவங்கினார். `மத்தியில் எங்கள் சொல்படி கேட்கும் அரசு வந்தால் தனி ஈழம் அமைய நான் நடவடிக்கை எடுப்பேன்' என ஜெயலலிதா பேசியது ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை அதிகரித்தது.

தேர்தல் முடிவுகளும் வந்தன. மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில், 22 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க, 18 இடங்களிலும் 15 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளில் வெற்றிபெற்ற தி.மு.க காங்கிரஸ் கூட்டணிக்கு இது மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. அதிலும், காங்கிரஸின் முக்கியத் தலைவர்களான, ஈ.வி.கே.ஸ் இளங்கோவன், தங்கபாலு, மணி சங்கர் ஐயர் ஆகியோர் படுதோல்வியைத் தழுவினர். இவர்கள், ஈழத் தமிழர்களுக்கும் போருக்கும் ஆதரவாகவும் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரமும் கூட பல இழுபறிக்குப் பின்னரே வெற்றிபெற்றார். (முதலில் ராஜகண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது). இந்த நான்கு தொகுதிகளிலும் ஈழ ஆதரவு இளைஞர்கள் செய்த எதிர்ப்பிரசாரம்தான், காங்கிரஸின் பின்னடைவுக்குக் காரணம் என அப்போது சொல்லப்பட்டது. பல செய்தித்தாள்களில் செய்திகளாகவும் வெளியாகின. ஈழ, இனப்படுகொலை தமிழக அரசியலில் ஏற்படுத்திய மிக முக்கியமான தாக்கமாக இதை நாம் சொல்லமுடியும். மறுபுறம் முள்ளிவாய்க்காலில் படுகொலை அரங்கேறிய நாளில் மத்திய மந்திரி சபை குறித்துப் பேச, கருணாநிதி டெல்லிக்குச் சென்றது, ஈழ உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அடுத்ததாக, 2011 சட்டமன்றத் தேர்தலில், 2006-2011 தி.மு.க-வின் ஆட்சி அராஜகங்கள், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு, மின்வெட்டு ஆகியவையே முக்கிய பேசுபொருளாக இருந்தன. தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, வி.சி.க கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளில் மட்டும் ஈழ உணர்வாளர்கள் காங்கிரஸுக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். நாம் தமிழர் கட்சியின் சீமான், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்தார்.

2006 சட்டமன்றத் தேர்தலில், 34 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு கேட்கும் அளவுக்குச் சென்ற காங்கிரஸ், இந்தத் தேர்தலில் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் இந்தச் சரிவுக்கு ஈழப்பிரச்னையை மட்டுமே நாம் முதன்மைக் காரணமாக சொல்லமுடியாது. தி.மு.கவால் கூட 119 தொகுதிகளில் போட்டியிட்டு, 23 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. தவிர தே.மு.தி.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்ததும் தி.மு.க கூட்டணியின் இந்தச் சரிவுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும், ``2009 தேர்தலின்போது பெரியளவில் எங்கள் பிரசாரம் மக்களிடம் போய்ச் சேரவில்லை. முள்ளிவாய்க்கால் இறுதிப் படுகொலைக்கு முன்பாகவே, இங்கு தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்துவிட்டன. நாங்கள் செய்த பிரசாரம், 2011-ல் நடந்த இந்தத் தேர்தலில்தான் பிரதிபலித்திருக்கிறது'' என்றும் சில ஈழ ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

என்னைப் பொறுத்தளவில் ஈழ விவகாரம், தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுத்தியது எனச் சொல்ல முடியாது. அதற்கான வாக்கு வங்கி என்பதும் மிகக்குறைவு. ஆனால், சீமான் கட்சி வளருவதற்கு முதன்மைக் காரணம் அதுதான். 2009-லிருந்து 2015 வரை ஈழம் சார்ந்த குரலாவது தமிழகத்தில் ஒலித்து வந்தது. அதற்குப் பிறகு அதுவும் குறைந்துவிட்டது. நாம் தமிழர் பெறும் வாக்குகள் அது எவ்வளவு சதவிகிதமாக இருந்தாலும் அது தி.மு.க-வுக்கானதுதான். ஆனால், 2016-ல் ஆட்சியை தி.மு.க இழந்ததற்கெல்லாம் அதைக் காரணமாகக் கண்டிப்பாகச் சொல்லமுடியாது. காரணம், தி.மு.க-வுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குவங்கியில் எந்தச் சரிவும் அப்போது ஏற்படவில்லை.''
ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர்.

அடுத்து நடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல். தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகினார் கருணாநிதி. அதற்குக் காரணம் ``இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருக்கிறது. இது குறித்த தி.மு.க-வின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை'' என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார் கருணாநிதி. அந்த நேரத்தில்தான், சிறுவன் பாலச்சந்திரன் நெஞ்சில் துப்பாக்கிக் குண்டுகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்லூரிகள், பள்ளிகளில், இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாணவர் போராட்டங்கள் வெடித்தன. மத்திய அரசு, அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் விட்டதால், எங்கே காங்கிரஸுக்கு இருக்கும் அவப்பெயர் தங்களுக்கும் வந்துவிடுமோ என்று அஞ்சிதான் அந்த முடிவை எடுத்தார் கருணாநிதி.

தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி

அந்தத் தேர்தலில், தி.மு.க - காங்கிரஸ் தனித்துப் போட்டியிட, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க, ம.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இணைய, படுதோல்வியைச் சந்தித்தன தி.மு.கவும் காங்கிரஸும். ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. எனவே. 2014, ஈழப்படுகொலை தொடர்பான விஷயங்கள் நேரடியாக, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு தி.மு.க தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகளே சாட்சியங்களாக இருக்கின்றன. மறுபுறம், ஜெயலலிதா, தனி ஈழம் ஒன்றே தீர்வு, இலங்கை அரசின் பொருளாதாரத்தடை உள்ளிட்ட விஷயங்களால் சட்டமன்றத் தீர்மானமாக நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத் தேர்தலில், சாதியைத் தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம் என்றால் அது இலங்கைத் தமிழர் விவகாரம் மட்டும்தான். அதனால், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. உதாரணமாக, நாடாளுமன்றத் தேர்தலில் பலமாக இருந்த காங்கிரஸ் கட்சி முதன்முறையாக, போட்டியிட்ட தொகுதிகளில் பாதிக்குப் பாதி தோல்வியடைந்தது 2009 ஈழப்போருக்குப் பின்புதான். வெற்றி பெற்ற இடங்களிலும் மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2011-ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான், கருணாநிதியின் இமேஜ் சரிந்தது. தொடர்ந்து, 2014-ல் தனியாக நின்று இரண்டு கட்சிகளும் கடும் பின்னடவைச் சந்தித்தன. 2016 தேர்தலிலும் தி.மு.க - காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஈழ ஆதரவு வாக்குகள் ஜெயலலிதாவுக்குச் சென்றன. அதனால்தான் அவர் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த நான்கு சதவிகித வாக்குகள் சீமான் கட்சிக்குச் சென்றிருக்கிறது.''
ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

தொடர்ந்துவந்த, 2016 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. அ.தி.முக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. தே.மு.தி.க, ம.தி.முக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற அணி அமைத்துப் போட்டியிட்டன. பா.ம.க-வும் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தனித்துப் போட்டியிட்டது. முதன்முறை சீமானால் வழிநடத்தப்பட்ட நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க கூட்டணி 134 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ம.க, மக்கள் நலக்கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியோருக்கு ஓர் இடங்களில் கூட வெற்றி கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் வைகோ ஈழம் பற்றிப் பேசுவதை அறவே தவிர்த்திருந்தார். பா.ம.க-வும் மாற்றம் என்பதையே முதன்மையான விஷயமாக பிரசாரம் செய்தனர். நாம் தமிழர் கட்சி மட்டுமே ஈழம் குறித்த விஷயங்களை தேர்தல் பிரசாரத்தில் முன்னெடுத்தது. அந்தக் கட்சிக்கு 1.1 சதவிகித வாக்குகள் கிடைத்தன. ஆனால், ``அ.தி.மு.க கூட்டணிக்கும் தி.மு.க கூட்டணிக்கும் இடையிலான வாக்கு சதவிகிதமும் 1.1 தான்; நாங்கள் பெற்ற வாக்குகளும் 1.1 சதவிகிதம்தான். தொடர்ச்சியாக, தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி ஜெயித்துக்கொண்டிருந்த தமிழக தேர்தல் அரசியல் களத்தில் தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க தோற்றதற்கு நாங்கள்தான் காரணம்'' என க்ரெடிட் எடுத்துக்கொண்டனர் நாம் தமிழர் கட்சியினர். ஆனால், மக்கள் நலக் கூட்டணி என தனியாக ஓர் அணி பிரிந்ததும் தேர்தல் ஆணையத்தால் நடந்த சில குளறுபடிகளுமே அ.தி.மு.க-வின் வெற்றிக்கான காரணங்களாக அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணி
மக்கள் நலக் கூட்டணி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ம.தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. தேனி ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஈழ ஆதரவு அரசியல் கட்சியான, நாம் தமிழர் 1.1 லிருந்து 4 சதவிகிதமாக வாக்கு வங்கி அதிகரித்ததும் இதே தேர்தலில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மூன்று சதவிகிதத்தும் குறைவான அளவுதான் வாக்கு சதவிகிதத்தைப் பெற்றது காங்கிரஸ் கட்சி.

2019 நாடாளுமன்றத் தேர்தல், 2011, 2019-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் தவிர மற்ற தேர்தல்களில் ஈழ விவகாரத்தின் தாக்கமானது இருக்கத்தான் செய்திருக்கிறது. அது, தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை சிறிய அளவிலாவது பாதிக்கத்தான் செய்திருக்கிறது. அதிலும், கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தனித்த செல்வாக்கு வீழ்ந்ததற்கு ஈழ விவகாரமே முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தரப்பில், இல்லை என்று தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

இலங்கைப் பிரச்னை எப்போதுமே தமிழகத்தில் எந்தவிதத் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. 2014-ல் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்குக் காரணம், மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மீதான, அதிருப்தி, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள்தான். 2016 தேர்தலில், அ.தி.மு.க கூட்டணிக்கும் தி.மு.க கூட்டணிக்கும் இடையேயான வித்தியாசம், வெறும் ஐந்து லட்சம் வாக்குகளைக் விடக்குறைவு. 1.1 சதவிகிதம் மட்டும்தான். நாம் தமிழர் கட்சி என்பது ஆன்டி தி.மு.க, ஆன்டி காங்கிரஸ் கட்சிதான். அவர்கள், பா.ஜ.க, அ.தி.மு.க-வுக்கான வாக்குகளைத்தான் பிரித்திருப்பார்கள். எங்கள் கூட்டணி வாக்குகளை அல்ல''
கோபண்ணா, ஊடகப் பிரிவுத் தலைவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி.

இனப்படுகொலையின் தாக்கம், இலங்கையில்  எப்படி எதிரொலிக்கிறது?

இதுவரை தமிழகத் தேர்தல் களத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்துப் பார்த்தோம். இனி, இலங்கைத் தேர்தலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பது குறித்து ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் விவரிக்கிறார்.

``2009 இனப்படுகொலைக்குப் பிறகு வடக்கின் சில உள்ளாட்சித் மன்றங்களுக்கு முதன் முதலில் தேர்தல் நடந்தது. அதில் தமிழ் மக்களின் வாக்களிப்பு விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. அதுவே சிங்கள அரசுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தது. அதற்குப் பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதில் தமிழ்த் தரப்பு கட்சிகள் பெரும் வெற்றியைப் பெற்றாலும் சிங்கள அரசின் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒரு சிலரும் வெற்றி பெற்றார்கள். 2009 இன அழிப்புப் போரின் தாக்கத்திலிருந்து தமிழ் மக்கள் சற்று விடுபட்டுத் தேர்தல் குறித்து சிந்திக்க சில வருடங்கள் ஆகியதென்றே கூற வேண்டும். இனப்படுகொலை குறித்த உரையாடல்களும் விழிப்புணர்வும் ஏற்பட்ட பிறகு, அது தேர்தல்களில் கடும் தாக்கத்தைச் செலுத்தியது.

விக்கினேஸ்வரன்
விக்கினேஸ்வரன்

2013-ல் நடந்த மாகாண சபைத் தேர்தல், அன்றைய ராஜபக்சே அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. தான் நடத்தியது மனிதாபிமானப் போர் என்றும் சிங்கள அரசப் படைகள் போர் மீறல்களில் ஈடுபடவில்லை என்றும் வடக்கு கிழக்கில் தான் முன்னெடுக்கும் நலத்திட்டங்களுக்காக தன்னை ஈழத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் பேசி வந்த ராஜபக்சேவுக்கு அந்தத் தேர்தலில் கடும் அடி விழுந்தது.

தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தித் தேர்தலில் போட்டியிட்ட சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சிக்கு மக்கள் பெரும் ஆதரவு வழங்கினார்கள். பின்னதாக விக்கினேஸ்வரன் முதல்வர் ஆனதும், இனப்படுகொலை தீர்மானத்தை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றினார். அதன் பிறகு 2015-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பெற்றுக் கொடுத்தல் மற்றும் இனப்பிரச்னைக்கு தன்னாட்சி ஆட்சிமுறையைப் பெறுதல் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கினர். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் மாபெரும் வெற்றி கிடைத்தது. அந்தத் தேர்தலிலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் கடுமையாக தோற்கடிக்கப்பட்டார்கள்.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பர்ய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என்பனவே தமிழீழத் (வட்டுக்கோட்டை) தீர்மானத்தின் இலக்குகள்.
தீபச்செல்வன், எழுத்தாளர்.

2009-ம் ஆண்டுக்குப் பிறகு, சிங்கள அரசுக்கு எதிராக தேர்தல்களை ஓர் ஆயுதமாக தமிழ் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். வரப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆளுமையான தலைவர்களைத் தேர்வு செய்து, சிங்கள அரசின் சார்பில் போட்டியிடுகிறவர்களை மக்கள் தோற்கடிப்பார்கள்.

வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்வெற்றி பெறுவார். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும் தமிழர்களின் சுயாட்சிக்கு ஆதரவாகவும் ஒலிக்கும் அவருடைய குரலின் வரவு இலங்கை நாடாளுமன்றத்தை நிச்சயமாக அதிரச்செய்யும். ``நீதியையும் உரிமையையும் வெல்லுகிற போராட்டத்தில் நாடாளுமன்ற அரசியலைப் பயன்படுத்துவதுதான் தமிழர்களுக்கு இப்போதுள்ள வழி'' என்றவரிடம் எனில், தேர்தல் ஜனநாயகத்தின் மூலமாகவே தமிழர்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமா என்று கேட்க,

இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம்

இலங்கையில், தேர்தல் ஜனநாயகத்தின் வழியாக தமிழர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியுமா?

``தந்தை செல்வா, நாடாளுமன்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டு தமிழர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கடும் முயற்சிகளைச் செய்தார். பெரும் போராட்டங்களை எல்லாம் நடத்தினார். ஆனாலும் சிங்கள அரசால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டார். சிங்கள அரசுக்கும் தந்தை செல்வாவுக்கும் நடந்த ஒப்பந்தங்கள் எல்லாம் கிழித்தெறியப்பட்டன. இறுதியில் தந்தை செல்வநாயகம் தலைமையில், 1976-ம் ஆண்டில் இதேபோல் ஒரு மே மாத காலத்தில்தான் `தமிழீழத் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில், நாடாளுமன்றத் தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் தமிழர்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கு இனி சாத்தியமே இல்லை. கோத்தபய அதிபராவதற்கு முன்பாக அதற்கான வாய்ப்பிருந்தது. காரணம், அதற்கு முன்பிருந்த அரசாங்கம் இந்தியாவின் துணையோடு, தீவிர சிங்கள இன தீவிரவாதிகளை ஒடுக்கி ஆட்சி அமைந்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால், மத்திய அரசின் மெத்தனப் போக்கும், மாநில அரசு அழுத்தம் கொடுக்காமல் விட்டதும் அரசியல்வாதிகள் அமைதியாக இருந்ததும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இனி அதற்கு வாய்ப்பே இல்லை. தமிழர்களிடம் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகாரமும் இனி பறித்துக் கொள்ளத்தான்படும்.
ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர்.

துரதிஷ்டவசமாக அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி ஒரு ஆண்டிலேயே ஈழத் தந்தை செல்வா காலமானார். ஆனாலும் 1977-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழத் தீர்மானத்துக்கு மக்கள் ஆதரவு வழங்கும் பொருட்டு அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய, தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பெரும் வெற்றியை அளித்தார்கள்.

மேற்குறித்த வரலாற்று நிகழ்வைச் சொல்லுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலின் வாயிலாக அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று ஈழத் தமிழ் மக்கள் நம்பவில்லை. ஆனால், சிங்களர்களும் சிங்களக் கட்சிகளும், தமிழர்களின் பகுதிகளை வெல்லக் கூடாது என்பதும், நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவுகளின் வாயிலாக தனிநாட்டுக் கனவை ஒரே குரலில் வெளிப்படுத்த முடியும் என்பதும்தான் ஈழ மக்களின் தேர்தல் குறித்த நிலைப்பாடு.

எழுக தமிழ்
எழுக தமிழ்

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தந்தை செல்வா மிதவாத அரசியலில் ஏற்பட்ட சலிப்பு காரணமாகவே தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் எனது அடுத்த தலைமுறை ஆயுதம் ஏந்திப் போராடும் என்றும் தீர்க்கதரிசனமாகச் சொல்லிச் சென்றார். நாடாளுமன்ற அரசியலின் தோல்வி காரணமாகவே ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் நடந்திராவிட்டால், தொண்ணூறுகளிலேயே ஈழத் தமிழர்கள் பெரும் அழிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள். தமிழர்களின் தனிநாட்டுக் கனவும் உரிமைக்கான குரலும் உலகத்துக்குத் தெரியாமலேயே போயிருக்கும்'' என்கிறார் தீபச்செல்வன்.