Published:Updated:

ராஜ்தாக்கரே முதல் தனஞ்சய் முண்டே வரை... வாரிசுகளுக்காக கழற்றிவிடப்பட்ட தளபதிகள்!

தலைவர்களின் பிற உறவுகளுக்கும், சொந்த வாரிசுகளுக்குமிடையே நடந்த பனிப்போர்தான் இப்போது, மகாராஷ்டிராவில் குழப்பம் ஏற்பட முக்கிய காரணம்.

சரத்பவாருடன் சுப்ரியா சுலே
சரத்பவாருடன் சுப்ரியா சுலே

அரசியல்வாதிகளுக்கு முதுகில் குத்துவது கைவந்த கலைதான். அதுவும் உறவுகளே முதுகில் குத்தும்போது மனவலி அதிகமாகவே இருக்கும். சரத்பவாரும் இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறார். சொந்த அண்ணன் மகன் அஜித் பவார் பதவிக்கு ஆசைப்பட்டு, இத்தனை ஆண்டுக்காலம் சரத்பவார் யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அவர்களுடன் கைகோத்துள்ளார். 25 ஆண்டு காலமாக பாரதிய ஜனதாவின் நண்பனாக இருந்த சிவசேனா, இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநில அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. தங்களுக்கு 170 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக ஆட்சியமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது.

பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே
பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே
`குடும்ப அரசியல்; ஃபிளாஷ் பேக்!' - பா.ஜ.க வலையில் வீழ்ந்தாரா அஜித் `தாதா' பவார்?

இதற்கிடையே, டெல்லி அருகேயுள்ள கிர்கானில் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தாங்கள் மீட்டு வந்துவிட்டதாக சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். தற்போது வரை, அஜித் பவார் பக்கம் இரு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும். பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ்ந்துவிடவே வாய்ப்பு அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தலைவர்களின் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர்கள், சொந்த வாரிசுகளால் வீழ்த்தப்பட்டவர்கள்தான் இப்போது மகாராஷ்டிர மாநில குழப்பத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வாரிசாகப் பார்க்கப்பட்டவர் அவரின் சகோதரர் மகன் ராஜ்தாக்கரே. அரசியலில் ஒதுங்கியிருந்த உத்தவ் தாக்கரே, ஒருகட்டத்தில் சிவசேனா கட்சிக்குள் திணிக்கப்பட்டார். உத்தவ் கட்சிக்குள் வந்த பிறகு, சொந்த மகனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார் பால் தாக்கரே. முடிவாக... பால்தாக்கரேயிடமிருந்து ராஜ்தாக்கரே விலகினார். இவர் தொடங்கிய கட்சிதான் நவநிர்மான் சேனா. இப்போது, இதே கதைதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் நிகழ்ந்துள்ளது. சரத் பவாருக்குப் பிறகு, தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக அஜித் பவார் பார்க்கப்பட்டார். சரத் பவாரின் சொந்த மகள் சுப்ரியா சுலே அரசியலில் குதிக்க அஜித்பவாருக்கு முக்கியத்துவம் குறைந்தது. விளைவாக... சரத்பவாரின் முதுகில் குத்தியுள்ளார் அஜித் பவார்.

பங்கஜா முண்டே
பங்கஜா முண்டே
யார் இந்த அஜித் பவார்... சரத்பவாரின் முதுகில் குத்த காரணம் என்ன?

தேசியவாத கட்சியில் தனஞ்சய் முண்டே என்ற எம்.எல்.ஏ-வும் உண்டு. இவர் வேறு யாருமல்ல மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டேவின் அண்ணன் மகன். மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதாவில் கோபிநாத் முண்டேவின் வாரிசாக தனஞ்சய் பார்க்கப்பட்டார். மகாராஷ்ட்ராவில் பீட் என்ற மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிட கோபிநாத் முண்டேவிடம் தனஞ்சய் முண்டே வாய்ப்பு கேட்டார். ஆனால், தன் மகள் பங்கஜாவுக்கு கோபிநாத் வாய்ப்பளிக்க, தனஞ்சய் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார். பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது, நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பார்லி தொகுதியில் தனஞ்சய் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சகோதரி பங்கஜா முண்டே போட்டியிட்டார். தனஞ்சய் தன் சகோதரியை 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மகாராஷ்டிர அரசியலில் அரங்கேறும் நாடகங்களுக்கு பின்னணியில் தனஞ்சய் முண்டேவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த சனிக்கிழமை காலை 7.50 மணிக்கு மகாராஷ்டிர மாநில முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய வாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களில் இவரும் ஒருவர். பதவியேற்பு வைபவம் முடிந்த பிறகு, அன்றைய தினம் முழுவதும் தனஞ்சய் முண்டேவை யாராலும் காண முடியவில்லை. தனஞ்சய் முண்டே அஜித்பவார் பக்கம் சாய்ந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், வெளியே தலைகாட்டிய தனஞ்சய் முண்டே, `என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்வதற்கு முன்னரே பட்னாவிஸ், அஜித் பவார் பதவியேற்று விட்டதாக'த் தெரிவித்துள்ளார்.

சரத்பவார்தான் என் தலைவர். ஒருபோதும் துரோகம் நினைத்ததில்லை.
தனஞ்சய் முண்டே

மேலும் தனஞ்சய் தன் ட்வீட் பதிவில், ``தான் ஒருபோதும் கட்சிக்குத் துரோகம் இழைக்க நினைத்ததில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். சரத்பவார் என் தலைவர். தயவு செய்து இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்படி அடுத்த வாரிசுகளும் சொந்த வாரிகளும் மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து புகுந்து குட்டையைக் குழப்ப, அந்த மாநில மக்கள் நொந்துபோய் கிடக்கின்றனர்.