சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அயோத்யா தீர்ப்புக்குப்பிறகு...

அயோத்யா தீர்ப்புக்குப்பிறகு...
பிரீமியம் ஸ்டோரி
News
அயோத்யா தீர்ப்புக்குப்பிறகு...

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய மனுதாரர்களில் ஒருவரான முகம்மது ஹாசிம் அன்சாரி இப்போது உயிருடன் இல்லை.

அயோத்யா
அயோத்யா

‘சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம்’ என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த அன்று இரவு அயோத்திக்கு அருகில் (8 கிலோமீட்டர் தூரத்தில்) இருந்த ஃபைஸாபாத்தைச் சென்றடைந்தேன். அதற்கு மேல் செல்ல கெடுபிடிகள் இருக்கும் என்று டாக்ஸி டிரைவர் சொன்னதால் அங்கேயே தங்கிவிட்டேன்.

அயோத்தி, ஃபைஸாபாத் இரு நகரங்களிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆறு கிலோமீட்டருக்கு முன் ஜல்பா காலனியிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஒவ்வொருவரையும் ஆதார் கார்டைச் சரிபார்த்தே உள்ளே அனுப்புகிறார்கள். ஆதார் கார்டு தவிர வேறெதைக் காட்டினாலும் ஆதார் கார்டைக் கேட்கிறார்கள்.

ஃபைஸாபாத்தும் அயோத்தியும் இரட்டை நகரங்கள். இரண்டிலும் சம அளவு (சுமார் ஆறு லட்சம்) மக்கள் வசிக்கிறார்கள். இரண்டிலும் இந்துக்களும் முஸ்லிம்களும் வசிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அயோத்தியிலிருந்து முஸ்லிம்கள் வெளி யேறிக்கொண்டே இருப்பதாக இளைஞர் ஒருவர் நம்மிடம் சொன்னார். கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துவிட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

ஃபைஸாபாத்தும் அயோத்தியும் இரட்டை நகரங்கள்
ஃபைஸாபாத்தும் அயோத்தியும் இரட்டை நகரங்கள்

1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளிலிருந்து கெடுபிடிகள் இந்த நகரத்தின் அமைதியைக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. உள்ளூரில் இந்து முஸ்லிம் இடையே பிரிவினையோ வெறுப்போ இல்லை என்றாலும் ஒவ்வொரு வருட டிசம்பர் 6 சமயத்திலும், இதோ இந்தத் தீர்ப்பு சமயத்திலும் இஸ்லாமியர்கள் ஒருவித வெறுமையில் இருக்கிறார்கள் என்கிறார் அயோத்தியில் நாட்டுக்கோட்டை சத்திரத்தில் இருக்கும் தமிழரான சாந்தி. இவர் உட்பட அங்கே இருக்கும் இந்துக்கள் மோடியை ஒவ்வொரு பேச்சிலும் புகழ்ந்து குறிப்பிடத்தவறுவது மில்லை.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய மனுதாரர்களில் ஒருவரான முகம்மது ஹாசிம் அன்சாரி இப்போது உயிருடன் இல்லை. அவர் மகன் இக்பால் அன்சாரியைச் சந்தித்தேன். இக்பால் அன்சாரியின் வீட்டுக்கு முன்பே காவலர்கள் அமர்ந்து பதிவேட்டில் பதிவு செய்தபிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். ‘26 வருடங்களாக இதுதான் நடைமுறை’ என்கிறார் இக்பால். தமிழ்நாடு என்றதும் “உங்க மாநிலத்தில்தான் மக்கள் தெளி வோடு இருக்காங்க” என்று புன்னகைத்தார்.``தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறோம். ஆகவே ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இங்கே இருக்கும் அரசியல் சூழலில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை. ராமர் கோயில் கட்டிக்கொள்ளட்டும்” என்று சொன்ன அவர் குரலில் விரக்தி தெளிவாகத் தெரிந்தது.

ஃபைஸாபாத் மாவட்டத்தையும் அயோத்தியாக மாற்றி, நவம்பர் 2018-ல் உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். பல அரசு அலுவலகங்களில் ஃபைஸாபாத் பெயர் மறைக்கப்பட்டு ‘அயோத்யா’ என்ற பெயர் ஒட்டப்பட்டிருக்கிறது. ‘இஸ்லாமியர்களுக்கு அயோத்யாவில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்” என்ற தீர்ப்புக்காகத்தான் இந்த ஏற்பாடு என்று இந்து சாதுக்கள் மத்தியில் பேச்சு உலவுகிறது. இந்து சாது ராஜு தாஸ் என்பவர் “அதுதான் எல்லாம் அயோத்யான்னு சொல்லியாச்சே. எங்காவது வெளில நிலம் கொடுக்கட்டும்” என்று வெளிப்படையாகச் சொன்னார். ராம ஜென்ம பூமிக்கு அருகில், சுற்று வட்டத்தில் எங்கும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட இடம் வழங்கக்கூடாது என்பதே இந்து சாதுக்களின் கூற்றாக இருக்கிறது.

ராமர் கோயிலின் மாதிரி
ராமர் கோயிலின் மாதிரி

இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கும் சாமியார்களுக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள், கருத்துவேறுபாடுகள். ராமர் கோயில் கட்டுமானப் பணிகளிலும் இது எதிரொலிக்கலாம் என்கிறார்கள். ஜகத்குரு பரம்ஹம்சா, ராஜு தாஸ், சத்யேந்தர் தாஸ்ஜி, கல்பத்ரி என்று எல்லாச் சாமியார்களும் ராமர் கோயில் கட்டும் கமிட்டியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். ‘மூன்றே வருடங்களில் கட்டி முடிப்போம்’ என்று பரம்ஹம்சா சொல்வதை ராஜுதாஸ் தீர்க்கமாக மறுக்கிறார். “அவ்வளவு சீக்கிரம் எல்லாம் கட்ட வேண்டியதில்லை. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல... உலகத்திலேயே சிறந்த சுற்றுலாத்தலமாக வரவேண்டும். ராமரை தரிசிக்க உலகெங்கிலுமிருந்து வர இருப்பவர்களுக்கு சிறப்பான அனுபவத்தையும், ராமனின் அனுகிரத்தையும் நாம் அளிக்க வேண்டும். மூன்று வருடங்களில் கட்டி முடித்து, 2024 தேர்தலில் இதைச் சொல்லி ஓட்டு வாங்குவதுதான் அரசியல்வாதிகளின் திட்டம். அதற்கு நாம் பலியாகக்கூடாது. ஸ்ரீராமனுக்கு முன்பு எந்த அரசியலும் பெரிதல்ல” என்கிறார் ராஜு தாஸ்.

வாரணாசி, ஸ்ரீ வித்யா மடத்தைச் சேர்ந்த ஸ்வரூபானந்த சரஸ்வதி “அரசோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்போ அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியாது. அரசியலில் மதம் நுழைவது ஆபத்தானது. மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அரசியல் மதத்துக்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும்” என்கிறார்.

அயோத்யா தீர்ப்புக்குப்பிறகு...

ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாரும் மோடி புகழ் பாடுகிறார்கள். தீர்ப்பைக் கொடுத்தது உச்சநீதிமன்றம்தான் என்றாலும், மோடியே இந்தத் தீர்ப்பை வழங்கியதாக நினைக்கிறார்கள். தீர்ப்புக்குப் பின் இந்தியாவில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதி நிலவுவதைக் குறிப்பிட்டு ‘இதுதான் மோடி மேஜிக்’ என்கிறார்கள்.

அயோத்தி நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யா பா.ஜ.க-வைச் சேர்ந்தவர். இதுவரை 18 முறை யோகி ஆதித்யநாத் அயோத்திக்கு வந்து கட்டமைப்புகள், பக்தர்களுக்கான வசதிகள் குறித்துப் பேசிக்கொண்டே இருப்பதாகப் புகழ்கிறார். “ராமர் கோயில் அமைந்தால் உலகத்திலேயே சிறந்த சுற்றுலாத்தலமாக இது மாறும். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இப்போதிலிருந்தே செய்வோம். விடுதிகளை அதிகப்படுத்துவது, சாலை விரிவாக்கம், அயோத்தியிலேயே விமான நிலையம், ரயில்களை அதிகப்படுத்துவது என்று யோகி எல்லாவற்றுக்கும் திட்டம் வைத்தி ருக்கிறார்” என்கிறார் ரிஷிகேஷ்.

ராம ஜென்மபூமி ந்யாஸ்
ராம ஜென்மபூமி ந்யாஸ்

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கருக்குள் ராமரை வழிபட கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் தீர்ப்பின் காரணமாக வழக்கத்தைவிட கூட்டம் கம்மிதான் என்கிறார்கள். வழக்கமான பாதைகள் எல்லாம் அடைக்கப்பட்டு விட்டன. அனுமன் மந்திருக்குச் செல்ல ஒரு வழியிலும், ராமர் கோயிலுக்கு ஒருவழியிலும் பக்தர்களை அனுமதிக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பே சோதனை ஆரம்பித்துவிடுகிறது. செல்போன், கடிகாரம், பேனா உட்பட எதையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதி யில்லை. உள்ளே செல்லும் வழியில் உத்தரப்பிரதேசக் காவல்துறையுடன், மத்திய ரிசர்வ் போலீஸும் காவலுக்கு நிற்கிறது. கோயில் நெருங்க நெருங்க, மத்திய ரிசர்வ் படையினர் மட்டுமே இருக்கிறார்கள். ஆறுகட்டச் சோதனை நடைபெறுகிறது.

இந்தியாவில் பல உயிர்ப்பலிகளுக்கும், அரசியல் மாற்றத்துக்குமான புள்ளியாக இருக்கும் அந்த இடம், ஷாமியானா போல பந்தல் போடப்பட்டு நம் ஊர் புற்றுக்கோயில் சைஸில் இருக்கிறது. ஐம்பது அடி தூரத்திலிருந்து தரிசிக்கலாம். அங்கிருப்பது ராமர் சிலை என்கிறார்கள். மேலே கிருஷ்ணன் புகைப்படம் தெளிவாகத் தெரிகிறது. ஆரத்தியோ, அர்ச்சனையோ எதுவும் இல்லை. ஒருவர் உண்டியல் அருகே அமர்ந்திருக்க, இன்னொருவர் வெள்ளைச் சர்க்கரை உருண்டைகளை பிரசாதமாகக் கொடுக்கிறார். இவர்கள் இருவர் தவிர, காவலர்கள்தான் ‘ஜல்தி ஜல்தி’ என்று விரட்டுகிறார்கள்.

தயாராகும் சிற்பங்கள்
தயாராகும் சிற்பங்கள்

கோயிலுக்கு ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ராம ஜென்மபூமி ந்யாஸ். 1992 டிசம்பர் 6 மசூதி இடிப்புக்குப் பிறகு, இரண்டு மாதங்களிலேயே 1993 ஜனவரி 25-ம் தேதி ராம ஜென்ம ந்யாஸ் அறக்கட்டளையை விஸ்வ இந்து பரிஷத் நிறுவியது. 2010-ல் அலகாபாத் நீதிமன்றம் நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம், ராம ஜென்ம ந்யாஸ் மூன்றுக்கும் நிலத்தைப் பிரித்துக்கொடுக்கத் தீர்ப்பளித்தது. மூன்று அமைப்புகளும் இதை ஏற்றுக்கொள்ளாமல் மேல்முறையீடு செய்ததில்தான், உச்சநீதிமன்றம் ராமர் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கித் தீர்ப்பளித்தது.

ராம ஜென்மபூமி ந்யாஸ் இருக்கும் இடத்தின் பெயரே ‘கரசேவக் புரம்’ என்பதுதான். இந்த இடத்திற்கும், அதன் அருகேயுள்ள ராம்ஷிவ புரம் என்ற இடத்திற்கும் உலகமெங்கிலிருந்தும் கற்கள் வருகின்றன. ராமர் கோயிலின் மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 26 வருடங்களாக அந்தக் கற்களைக் கோயில் மாடலுக்கு ஏற்ப செதுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தக் கற்களை வைத்துதான் கோயில் கட்டப்போகிறார்கள் என்பதால் பக்தர்கள் இந்த இடத்திற்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

இக்பால் அன்சாரி
இக்பால் அன்சாரி

சற்றுத் தள்ளி ராம் ஷிவ புரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ராமாயணச் சிற்பங்கள் தயாராகிக்கொண்டி ருந்தன. அங்கிருக்கும் ரஞ்சித் மண்டல் எனும் சிற்பக்கலைஞர், தீர்ப்பைத் தொடர்ந்து வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் உத்தரவிட்டதாகச் சொன்னார்.

கடையோ, ஊர்ப் பெயர்ப் பலகையோ எல்லாவற்றிலும் இந்தியின் ஆதிக்கம். ஆங்கிலம் கூட இல்லை. ஆனால் கிலோமீட்டர் காட்டும் நெடுஞ்சாலை போர்டுகளில் பிரதமர் மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகியும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவும் சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கிறார்கள். நவம்பர் 12 செவ்வாயன்று சரயு நதியில் ‘சரயு ஸ்நான்’ எனப்படும் விழாவுக்காக உத்தரப்்பிரதேசம் முழுவதிலு மிருந்தும் வந்த ஐந்து லட்சம் மக்கள் அயோத்தியில் குவிந்திருந்தனர். காவலர்கள், மத்திய ரிசர்வ் படையினருக்கு இணையாக இந்து சாதுக்களும் கம்பீர நடைபோடுகிறார்கள்.

அயோத்யா தீர்ப்புக்குப்பிறகு...

சரயு நதியில் குளித்துவிட்டு, பாபு பஜாரிலிருந்து மக்கள் ராமர் சிலைகளையும் அனுமன் சிலைகளையும் காளிதேவி சிலைகளையும் வாங்கிச் செல்கின்றனர். தெய்வச்சிலைகளுக்கு மத்தியில் மௌனச்சாட்சியாய் நின்றுகொண்டிருக்கிறது ஒரு மாமனிதரின் சிலையும். அரசியல் சட்டத்துக்கு எழுத்துவடிவம் தந்த டாக்டர் அம்பேத்கரின் சிலை அது. அவர் நினைவுநாளும் டிசம்பர் 6 தான் என்பது நினைவுக்கு வந்தது.