Published:Updated:

ஆப்பிள் தேசத்தில் முன்னேறும் காங்கிரஸ்... இமாச்சல் முன்னணி நிலவரமும், பின்னணிக் காரணங்களும்!

இமாச்சல் | தேர்தல் முடிவுகள்

இமாச்சலப்பிரதேசத்தில் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பெரிய தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும்கூட, அங்கு பா.ஜ.க பின்னடைவைச் சந்திப்பதற்கு, அங்கு அரசுக்கு எதிராக நிலவிய மனநிலை ஒரு முக்கியக் காரணம்.

Published:Updated:

ஆப்பிள் தேசத்தில் முன்னேறும் காங்கிரஸ்... இமாச்சல் முன்னணி நிலவரமும், பின்னணிக் காரணங்களும்!

இமாச்சலப்பிரதேசத்தில் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பெரிய தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும்கூட, அங்கு பா.ஜ.க பின்னடைவைச் சந்திப்பதற்கு, அங்கு அரசுக்கு எதிராக நிலவிய மனநிலை ஒரு முக்கியக் காரணம்.

இமாச்சல் | தேர்தல் முடிவுகள்

குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் தற்போதைய சூழலில், இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. மொத்தம் 68 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் 35 இடங்களைப் பிடித்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற நிலையில், தற்போது 37 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையே தொடர்ந்தால், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்.

இமாசலப்பிரதேசத்தில் மோடி பிரசாரம்
இமாசலப்பிரதேசத்தில் மோடி பிரசாரம்

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்றைக்கு வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், அங்கு கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸும் பா.ஜ.க-வும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. மொத்தம் 68 தொகுதிகளைக்கொண்ட அந்த மாநிலத்தில், 2017-ல் 44 இடங்களைப் பிடித்து ஜெய்ராம் தாகூர் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது.

பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்குச் சொந்த மாநிலம் என்பதால், இமாச்சலப்பிரதேசத் தேர்தலில் அவர் சிறப்பு கவனம் செலுத்திவந்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் என பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி அங்கு சென்றுவந்தனர். வந்தே பாரத் ரயிலைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அங்கு, எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டது.

மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா
மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா

இப்படியாக, பா.ஜ.க தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் முன்னணித் தலைவரான ராகுல் காந்தி கவனம் செலுத்திவந்தார். ராகுல் காந்தி களத்தில் இறங்காதது, காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி அங்கு தீவிரமாகப் பிரசாரம் செய்தார். பல்வேறு வாக்குறுதிகளை அவர் வாரிவழங்கினார். அது வாக்காளர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.

அதேநேரத்தில், கோஷ்டிப்பூசல் பிரச்னைகளால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வடைந்திருந்தனர். முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் அளவுக்கு பிரபலமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு இல்லை. ஆறு முறை முதல்வராக இருந்த வீர்பத்திர சிங், 2021-ம் ஆண்டு காலமாகிவிட்டதால், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள் யாரும் காங்கிரஸில் இல்லாதது பெரும் குறையாகப் பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில்தான், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அங்கு புதிதாகக் களமிறங்கியது. அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இமாச்சலப் பிரதேசத்தில் தீவிர பிரசாரம் செய்தனர். மோடியும் அமித் ஷாவும் நேரடியாகக் களமிறங்கினாலும்கூட, அங்கு ஆட்சிக்கு எதிரான மனநிலை இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. பா.ஜ.க-வுக்குள் நிலவிய கோஷ்டிப்பூசல், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற கணிப்பும் இருந்தது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

மேலும், அரசு ஊழியர் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவு விவகாரம் பா.ஜ.க அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. `ஆப்பிள் தேசம்’ என்று அழைக்கும் அளவுக்கு ஆப்பிள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இமாச்சலப்பிரதேசத்தில், ஆப்பிள் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆப்பிள் பார்சல் செய்யும் அட்டைப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி விதிப்பு, ஆப்பிள் உற்பத்திச் செலவு உயர்வு போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான ஆப்பிள் உற்பத்தியாளர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். சுற்றுலா மாநிலமான இமாச்சல், கொரோனா காலகட்டத்தில், பெரும் பாதிப்பைச் சந்தித்தது. சுற்றுலாவை நம்பியிருக்கும் மக்களுக்கு பாஜக அரசு போதிய உதவிகளைச் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு இருக்கிறது.

வரக்கூடிய நாடளுமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமென்றால், குஜராத்திலும் இமாச்சலப்பிரதேசத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைவர்கள் கவனமாக இருந்தனர். ஆனால், இமாச்சலப்பிரதேசத்தில் பா.ஜ.க மேற்கொண்ட கடைசி நேர முயற்சிகள் பலனளிக்கவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.