Published:Updated:

டெல்லி போலீஸார் `கிரண்பேடி போன்ற அதிகாரி தேவை’ என ஏன் சொன்னார்கள்?

தலைநகர் டெல்லியில், காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் நடைபெற்ற மோதலும் அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய போராட்டமும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை நினைவூட்டுவதாக இருக்கின்றன.

Tis Hazari Court
Tis Hazari Court ( AP )

டெல்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே, கடந்த 2-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அதில், சில வழக்கறிஞர்களும் போலீஸாரும் காயமடைந்தனர்.

காவலர்களைத் தாக்கி, காவல்துறையினரின் வாகனங்களுக்கு வழக்கறிஞர்கள் தீவைத்ததாகவும், வழக்கறிஞர்களை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டத்தில் வழக்கறிஞர்களின் கால்களில் குண்டுகள் பாய்ந்ததாகவும் இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அந்தச் சம்பவம் காவல்துறையிலும் நீதித்துறையிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கிரண்பேடி பதாகை
கிரண்பேடி பதாகை

அந்தச் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லியில் சாகேத் நீதிமன்றத்துக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த போலீஸார் ஒருவரை, வழக்கறிஞர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கும் வீடியோ வெளியானது. அதைக் கண்டு போலீஸார் கொந்தளித்தனர். தங்களுக்கு நீதி வேண்டும், பாதுகாப்பு வேண்டும் என்று கோரி டெல்லி காவல்துறை தலைவர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான போலீஸாரும் அவர்களின் குடும்பத்தினரும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவ.5, செவ்வாயன்று காலையில் தொடங்கிய அந்த ஆவேசப் போராட்டம், 11 மணி நேரம் நீடித்தது.

காவலர்களைத் தாக்கிய வழக்கறிஞர்களின் உரிமங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும், போலீஸாருக்கு எதிரான வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள், போராடிய போலீஸாரின் தரப்பில் முன்வைக்கப்பட்டன. ‘காவல்துறையினர் அமைதிகாக்க வேண்டும், பணிக்குத் திரும்ப வேண்டும்’ என்று டெல்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஆணையரின் வேண்டுகோளைப் புறக்கணித்து, போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். மேலும், தங்கள் உணர்வுகளை ஊடகங்களிடம் பகிரங்கமாக வெளிப்படுத்தவும் செய்தனர்.

சீருடை அணிந்த போலீஸ் பேட்டி
சீருடை அணிந்த போலீஸ் பேட்டி

காவல்துறையினர், தங்கள் பிரச்னைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராடுவதும், ஊடகங்களுக்கு பகிரங்கமாகப் பேட்டி கொடுப்பதும் அரிதிலும் அரிதாக நடைபெறக்கூடியவை. காவல்துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளைப் புறக்கணித்து, பல மணி நேரம் போராட்டத்தைத் தொடர்ந்த போலீஸார், `டெல்லி போலீஸாருக்கு ஆதரவாகச் செயல்பட்ட கிரண்பேடி போன்ற காவல்துறை அதிகாரி தேவை’ என்று கோஷங்களை எழுப்பினர்.

முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான கிரண்பேடி, 1988-ம் ஆண்டு டெல்லியில் போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக இருந்தார். அப்போது, திருட்டு வழக்கு என்று சொல்லப்பட்ட ஒரு வழக்கில் வழக்கறிஞர் ராஜேஷ் அக்னிஹோத்ரி என்பவரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் அந்த வழக்கறிஞர் ஆஜர்படுத்தப்பட்டார்.

காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்
காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்

அப்போது, அவருக்கு கைவிலங்கு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு கொந்தளித்த வழக்கறிஞர்கள், கைவிலங்கிடுவது சட்டவிரோதமான செயல் என்று ஆட்சேபித்தனர். அந்த வழக்கறிஞரை நீதிபதி விடுவித்துவிட்டார். மேலும், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 1988-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி அது நடந்தது.

காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, ஜனவரி 18-ம் தேதி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். ஜனவரி 20-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கிரண் பேடி, காவல்துறையினரின் நடவடிக்கையை நியாயப்படுத்தியதுடன், `ஒரு திருடரை’ நீதிபதி விடுதலை செய்துவிட்டார் என விமர்சனம் செய்தார். மறுநாள், கிரண் பேடியிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவற்காக தீஸ் ஹஸாரி நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள் சென்றனர். அப்போது, அவர்கள்மீது போலீஸார் தடியடி நடத்தினர். அதில், வழக்கறிஞர்கள் பலர் காயமடைந்தனர். கிரண்பேடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

கிரண்பேடி
கிரண்பேடி
சாதாரண பார்க்கிங் பஞ்சாயத்து! - டெல்லி நீதிமன்றத்தை அதிரவைத்த கலவரம்

அதேபோன்றதொரு சூழல் இன்றைக்கு எழுந்துள்ளது. காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அன்றைக்கு வழக்கறிஞர்கள் போராடினார்கள். வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இன்றைக்கு போலீஸார் போராடுகிறார்கள்.

அப்போது, காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கு தொடர்பாக வந்த பொதுமக்கள் என எவரும் தப்பவில்லை. போலீஸாரின் தாக்குதலில் 200 வழக்கறிஞர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் 126 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பிலோ, வழக்கறிஞர்கள் கற்களை வீசியதில் ஏராளமான போலீஸார் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சம்பவங்களை நினைவூட்டுவதாக இருக்கிறது, டெல்லியில் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்.

தமிழகத்தை பின் தொடர்கிறதா புதுச்சேரி காவல்துறை?- போலீஸை தாக்கிய ரவுடிகளுக்கு மாவுக்கட்டு!

காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான மோதல் உணர்வு என்பது நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. அந்த நெருப்பை அணைப்பதற்கான வழிமுறைகளைக் காண வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.