Election bannerElection banner
Published:Updated:

கு.க.செல்வத்துக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்பாளரானது எப்படி?!

குஷ்பு
குஷ்பு

`குஷ்பு-வுக்கு பா.ஜ.க-வில் சீட் உண்டா... இல்லையா?' என்ற விவாதம் அரசியல் களத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது நேற்று (மார்ச் 14) வெளியான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல்... குஷ்பு-வுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதன் பின்னணி என்ன?

நடிகை குஷ்பு பா.ஜ.க-வில் இணைவதற்கு முன்பாக தி.மு.க., காங்கிரஸ் என இரண்டு கட்சிகளில் பயணித்திருக்கிறார். இந்த இரண்டு கட்சிகளுமே குஷ்புவுக்குத் தேர்தலில் சீட் வழங்கவில்லை. இந்தநிலையில், `பா.ஜ.க-வில் குஷ்புவுக்கு சேப்பாக்கம் தொகுதியை ஒதுக்கப்போகிறார்கள்' என்கிற பேச்சுகள் அடிபடத் தொடங்கின. ஆனால், பா.ம.க-வுக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, `குஷ்புவை பா.ஜ.க-வும் கைவிட்டுவிட்டதே?' என்பது போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின.

சேப்பாக்கத்தில் குஷ்பு
சேப்பாக்கத்தில் குஷ்பு
twitter/@khushsundar

இந்தச் சூழலில் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ``சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இறங்கி வேலை பார்த்தேன். இந்தத் தொகுதி மக்கள் எனக்கு அளித்த அன்பும் வரவேற்பும் உண்மையானது, தூய்மையானது. எந்த ஒரு கட்சியும் அடிமட்டத்திலிருந்து பணியாற்றும் வாய்ப்பை எனக்குக் கொடுத்ததில்லை. கட்சிக்காக நான் மேலும் உழைக்கக் காத்திருக்கிறேன். சேப்பாக்கத்தின் தேர்தல் பொறுப்பாளராக என்னைக் கட்சி மேலிடம் நியமித்திருந்தது. நான்தான் இந்தத் தொகுதியின் வேட்பாளர் என்று எப்போதாவது சொல்லியிருந்தேனா” என்று பதிவிட்டிருந்தார்.

ஆயிரம் விளக்கில் குஷ்பு; கமலை எதிர்த்து வானதி; அரவக்குறிச்சியில் அண்ணாமலை - பாஜக வேட்பாளர் பட்டியல்

இதைத் தொடர்ந்து இன்னொரு ட்வீட்டில், மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, எல்.முருகன், சி.டி.ரவி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளை டேக் செய்து நன்றி தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டின் இறுதியில் கும்பிடுவது போன்றிருக்கும் நான்கு எமோஜிக்களை இணைத்திருந்தார் குஷ்பு.

குஷ்புவின் இந்த ட்வீட்டுக்கு பலவித கமென்ட்டுகள் வந்திருந்தன. அவற்றில், `சீட் கிடைக்கவில்லை என்ற குஷ்புவின் ஆதங்கம்தான் இந்த ட்வீட்டில் தெரிகிறது', `உங்களது மனக்குமுறலை இந்த ட்வீட் காட்டுகிறது', `நன்றி சொல்லி நாலு கும்பிடு போட்டாங்க... இனிமே என்ன... அடுத்த கட்சிக்கு போகப்போறேன்னு மறைமுகமா சொல்றாங்க' என்றெல்லாம் நெட்டிசன்ஸ் கமென்ட்டுகளைப் பதிவிட்டிருந்தனர். `குஷ்பு, உண்மையிலேயே சீட் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில்தான் இது போன்று ட்வீட் செய்திருந்தார்' என்று பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது.

குஷ்புவுக்கு சீட் கிடைத்தது குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``சென்னைக்குள் இரண்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று அ.தி.மு.க தரப்பிலிருந்து சொல்லிவிட்டனர். அமித் ஷா வழியாகப் பேசி துறைமுகம் தொகுதியைப் பெற்றுவிட்டார் வினோஜ்.பி.செல்வம். தி.மு.க-விலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தபோதே ஆயிரம் விளக்கு தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் சேர்ந்தார் கு.க.செல்வம். அதனால் அவருக்கு அந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இதனால் குஷ்புவுக்கு சீட் வழங்க முடியாது என்ற நிலையே முதலிலிருந்தது. அதன் பிறகு டெல்லியில் தனக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி சில தலைவர்கள் மூலம் ஜெ.பி.நட்டாவை அணுகி ஆயிரம் விளக்கு தொகுதியை பெற்றிருக்கிறார் குஷ்பு'' என்றனர்.

மேலும், ``காங்கிரஸிலிருந்தபோதே மயிலாப்பூர் தொகுதியைக் கேட்டேன். அவர்களும் எனக்கு சீட் ஒதுக்கவில்லை. இப்போது நீங்களும் சீட் ஒதுக்கவில்லையென்றால், நான் பொது வாழ்வில் இருப்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்'' என குஷ்பு டெல்லி தலைவர்களிடம் புலம்பியதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன.

கு.க.செல்வம்
கு.க.செல்வம்
Photo: Srinivasulu / Vikatan

``ஆயிரம் விளக்கு தொகுதியை தனக்குத்தான் ஒதுக்க வேண்டும் என முன்பே கோரியிருந்த கு.க.செல்வத்திடம், மத்திய அரசின் கீழ் இயங்கும் நெய்வேலி அனல் மின் நிலையம், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நவரத்னா நிறுவனங்களுள், ஏதாவது ஒன்றில் முக்கியப் பொறுப்பு வழங்குவதாகக் கூறி கட்சி மேலிடம் சமாதானப்படுத்தியிருக்கிறது. அதன் பிறகுதான் குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது'' என்று பா.ஜ.க நிர்வாகிகள் நம்மிடம் தகவல் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு