Published:Updated:

மது இப்படித்தான் தயாரிக்க வேண்டும்... ஆனால், இந்தியாவில் நடப்பதோ மனிதக் கொலைகள் - மயக்கம் என்ன? - 3

மயக்கம் என்ன? - 3
மயக்கம் என்ன? - 3

மதுவை இப்படித்தான் தயாரிக்க வேண்டும்; இந்தந்த வஸ்துகள், இந்தந்த விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட நாள்களுக்கு கொள்கலன்களில் அடைத்து வைத்து இருக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், மதுபான ஆலைகளிலிருந்து 40 சதவிகிதம் சாதாரண வகை மதுவையும், 40 சதவிகிதம் நடுத்தர வகை மதுவையும், 20 சதவிகிதம் எலைட் எனப்படும் உயர் ரக மதுவையும் கொள்முதல் செய்கிறது. இது டாஸ்மாக்கின் உயர்மட்ட குழு எடுத்திருக்கும் கொள்கை முடிவு. இவை தவிர, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மது ரகங்கள் தனி. அவற்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

Tasmac Rates
Tasmac Rates
Vikatan

அதிர்ச்சியாக இருக்கிறதா?

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் சுமார் 80 சதவிகிதம் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக எந்த ஓர் உற்பத்தித் தளத்திலும் விலையும் தரமுமே அதன் சந்தையை நிர்ணயம் செய்யும். கூடவே தொழில் போட்டிகள். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை மதுச்சந்தை என்பது அரசு தரப்பு மட்டுமே. டாஸ்மாக் என்கிற ஒற்றைச் சாளரம் வழியாக மட்டுமே வாடிக்கையாளர்கள் மதுவை வாங்க முடியும். அதுவும் வாடிக்கையாளர்கள் கேட்கிற தரமோ பிராண்டோ கிடைக்காது. டாஸ்மாக் என்ன தருகிறதோ அதைத்தான் வாங்கிக் குடிக்க முடியும். அது விஷமாக இருந்தாலும்கூட! கடந்த அத்தியாயத்தில் பார்த்தபடி மதுபான ஆலைகளுக்கும் ஆளும் அரசுக்கும் இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங் அப்படி. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது இப்போதும் அப்படியே பொருந்துகிறது...

உலகளாவிய மதுத்தரம் என்று ஒன்று உண்டு. அதை நாம் பக்கத்தில்கூட நெருங்க முடியாது. தமிழகக் `குடிமகன்கள்’ அதை நினைத்து ஏக்கப் பெருமூச்சு மட்டும் விட்டுக்கொள்ளலாம். அது கிடக்கட்டும், இந்திய மதுத்தரம் (Indian standard alcohol specifications) என்று ஒன்று உண்டு. மதுவை இப்படித்தான் தயாரிக்க வேண்டும்; இந்தந்த வஸ்துகள், இந்தந்த விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட நாள்களுக்கு கொள்கலன்களில் அடைத்து வைத்து இருக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உண்டு. இப்படி மதுவுக்கு மட்டும் அல்ல... மது அடைக்கப்படும் பாட்டில்களின் தடிமன், பாட்டில் மூடியின் தடிமன், மூடியின் உட்புறம் இருக்கும் கார்க்கின் தடிமன் இவை எல்லாவற்றையுமே ஐ.எஸ்.ஓ அமைப்பு (ஐ.எஸ் - 4450/2005) கர்ம சிரத்தையாக நிர்ணயித்துள்ளது. மது அடைக்கப்படும் பாட்டில்கள் எடை தாங்கும் பரிசோதனை, வெப்பக் கதிர்வீச்சு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று எல்லாம் சொல்கின்றன அந்த விதிமுறைகள்.

 Beer
Beer

அதன்படி இந்தியாவில் மதுவை எப்படித் தயாரிக்க வேண்டும் என்று தெரியுமா?

பொதுவாக...

தண்ணீர், ஸ்பிரிட் வடிகட்டப்பட்ட மொலாஸிஸ் எசன்ஸ் = மது.

இதில் `பிரீமியம்’, `மீடியம்’, `லோ’ என்று மூன்று தரங்கள் உண்டு. பிரீமியம், மீடியம் தர மது பானங்களில் நியூட்ரல் ஸ்பிரிட் (Neutral spirit) கலப்பார்கள். அதாவது, நன்றாக வடிகட்டிய, குறைந்த காட்டம் கொண்ட ஸ்பிரிட். பிரீமியம் ரகத்தில் மரத்திலான கொள்கலன்களில் அடைத்து, நொதிக்க வைக்கப்பட்ட பழரசத்தைக் கூடுதலாகச் சேர்ப்பார்கள். `லோ’ ரக மதுவில் ரெக்டிஃபெய்டு ஸ்பிரிட் (Rectified spirit) கலப்பார்கள். அவ்வளவாக வடிகட்டாத ஸ்பிரிட் இது.

இவற்றை எல்லாம் கலந்துகட்டி ஒவ்வொரு வகை மதுவுக்கு ஏற்ப, குறிப்பிட்ட நாள்கள் கொள்கலன்களில் இருப்பு வைக்க வேண்டும். பின்பு, அதில் ஒரு பாட்டில் (குவாட்டர், ஆஃப், ஃபுல் என எந்த அளவு என்றாலும் சரி) சாம்பிள் எடுத்துப் பரிசோதனை செய்தால், அதில் 42.86 - 43.86 சதவிகிதத்துக்குள் ஆல்கஹால் இருக்க வேண்டும். இந்த அளவுக்குக் கூடவும் கூடாது; குறையவும் கூடாது. இதுதான் விற்பனைக்கு உகந்த மது. அரசாங்கத்தின் பார்வையில் குடிக்க உகந்த மது! மதுவும் ஓர் உணவுப் பொருளே. அது வயிற்றுக்கு உகந்ததாக... குறைந்தபட்சம் உடனடி ஆபத்து இல்லாததாக இருக்க வேண்டும். உண்மையில் மது என்பது பாலிலிருந்து தயிர் போல, ஈஸ்ட்லிருந்து ப்ரெட் போல, மாவு புளிப்பதுபோல இயற்கையான உணவு பொருள்களிலிருந்து நொதிக்க வைக்கப்பட வேண்டும். ஆனால், இங்கே என்ன நடக்கிறது. ஸ்பிரிட்டை கொதிக்க வைத்து பிராந்தி, விஸ்கி, ரம் ஓட்கா என்று அதற்கேற்ப பவுடரை கலந்து உடனடியாகக் கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அதைக் குடித்துவிட்டு, வயிறும் மனமும் வெந்து தங்களது ஆயுள்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறார்கள் குடிநோயாளிகள். இதே ரீதியில் சென்றால், தமிழகத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் மனித ஆற்றல் என்பது இன்னும் ஐந்து ஆண்டுகளில் இருக்கவே இருக்காது.

Liquor
Liquor

ஓரளவு நல்ல ஹோட்டலிலேயே இட்லி, தோசையை மிருதுவாக்க வயிற்றுக்கு ஒவ்வாத சோடா உப்பு கலக்கிறார்கள். அப்படி என்றால், புறநகர்ப் பகுதிகளில் கோட்டைபோல் மதில் சுவர்களை எழுப்பிக்கொண்டு, ஏகப்பட்ட செக்யூரிட்டிகளின் பாதுகாப்புடன், வெளி ஆட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல், `நானே ராஜா நானே மந்திரி’ ரேஞ்சுக்கு மதுபானங்களைத் தயாரிக்கும் மதுபான நிறுவனங்கள் எப்படி எல்லாம் தில்லுமுல்லு செய்ய முடியும்? இதைப் படித்து, மதுவை ரட்சிக்கும் எந்த ஒரு ரட்சகரும் கடுப்பாக வேண்டாம். `அரசுத் தடயவியல் ஆய்வுக்கூடத்தில் சான்றிதழ் பெற்ற பின்புதானே விற்பனைக்கு அனுப்புகிறோம்’ என்று கொதிப்படைய வேண்டாம். அவர்களது மனசாட்சிக்குத் தெரியும்... என்ன எல்லாம் செய்கிறார்கள் என்று! சர்க்கரை ஆலைகளில் இருந்து வாங்கும் ஒவ்வொரு லிட்டர் ஸ்பிரிட்டையும் மது ஆலைகள் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுத்தயாரிப்புக்கு மட்டும்தான் பயன்படுத்துகின்றனவா, வேறு வணிக நோக்கத்தில் வெளியே கைமாற்றப்படவே இல்லையா, அனுமதிக்கப்பட்ட, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காத எசன்ஸை மட்டும்தான் உபயோகப்படுத்துகின்றனவா, ஐ.எஸ்.ஓ நிறுவனம் வகுத்துள்ள அத்தனை விதிமுறைகளையும் ஒன்று விடாமல் பின்பற்றுகின்றனவா?

ஆம், என்று சொல்பவர்கள் தங்கள் ஆலையில் நடக்கும் மதுத்தயாரிப்பை எப்போதுமே வீடியோ காட்சிக்கு உட்படுத்துவார்களா. பரிசோதனைக்கு சாம்பிள் அனுப்பும்போது அந்த வீடியோ காட்சிகளையும் தடயவியல் சோதனைக்கூடத்துக்கு அனுப்புவார்களா. விதிமுறைகளின்படி புதிய பாட்டில்களில்தான் மது அடைக்கப்பட வேண்டும். அதனால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது பாட்டில்களை விற்கும்போது புதிய பாட்டில்களுக்கான விலையைச் சேர்த்துதானே குறிப்பிடுகிறார்கள்? அப்படி இருக்கும்போது பாட்டில் ரீ-சைக்கிளிங் என்பது எப்படி வந்தது? ஆள்வோருக்கும் தெரியும்; அதிகாரிகளுக்கும் தெரியும்... மது நிறுவனங்களுக்கும் தெரியும்... இதை எல்லாம் எந்தக் குடிமகனும் கேட்க மாட்டான். அதுதான் குடிப்பவனை மது முட்டாள் ஆக்கி விடுகிறதே? பாட்டிலில் எவ்வளவு மட்டமான மதுவை அடைத்துக் கொடுத்தாலும் மூக்கைப் பிடித்துக்கொண்டு குடித்து விடுவான் என்று இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. இப்படி விதிமுறைகளை மீறுவது சமூக விரோதச் செயல் இல்லையா?

Liquor
Liquor

சமூக விரோதச் செயல் என்றவுடன்தான் டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதக் குணாதிசயம் உண்டு. அதாவது, பரமசிவன்... பயந்த ஆளு. ராஜா... கோபக்காரன். சரவணன்... பரம சாது. கோவிந்தன் ரொம்ப உணர்ச்சிவசப்படுவான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இந்தக் குணாதிசயம், தனக்கோ, சமூகத்துக்கோ ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால், அதுதான் ஆளுமைக் கோளாறு. சிலருக்கு இயல்பாகவே மனதின் அடி ஆழத்தில் விதிமீறல் மீது ஒருவித ஈர்ப்பு இருக்கும். பொதுவாகவே, மது உள்ளே சென்றால் கட்டுப்பாடற்ற, சுதந்திரமான நிலைக்கு மனிதனை அது கொண்டுசெல்லும். இந்த `விதிமீறல் ஆட்கள்’ தொடர்ந்து மது அருந்தும்போது, அவர்களுக்கு ஏற்படும் மனநோய்தான் சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Anti - social personality disorder). மிக, மிக ஆபத்தானவர்கள் இவர்கள். யாருடைய உணர்வுகளையும் கொஞ்சம்கூட மதிக்க மாட்டார்கள். சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. யாரையும் பொருட்படுத்தாமல் கன்னாபின்னாவென்று தவறுகளைச் செய்வார்கள். எந்தக் குற்றத்தையும் செய்துவிட்டு, கூலாக ஃபீல் செய்வார்கள். நம் ஊரில் இருக்கும் பல அடாவடி தாதா அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தும். கொலைக் குற்றத்துக்காக இவர்களைக் கைதுசெய்து வண்டியில் ஏற்றும்போதும் சிரித்துக்கொண்டே, கைகளை ஆட்டி போஸ் கொடுப்பார்கள். இவர்களை எல்லாம் நீங்கள் நாளிதழ்களில் நிறைய பார்க்க முடியும்.

சிறைகளில் மூன்று `டூக்கள்’ பிரபலம். பேச்சு வழக்கில்... சேடு, மேடு, பேடு! அதாவது... Sad, Mad, Bad. சிறையில் இருப்பவர்களை இப்படி மூன்று பிரிவுகளாகப் பிரித்துச் சொல்வார்கள் சிறை அதிகாரிகள். இதில் மூன்றாம் வகையினர்தான் மேற்கண்ட ஆட்கள். மனிதர்கள் எல்லோருக்கு ஒருவித உந்துதன்மை (Impulsivity) இருக்கும். அதாவது, ரோட்டில் அழகாக ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். `பொண்ணு செம க்யூட்பா...’ என்று நினைத்துக்கொண்டே அவளைக் கடந்து சென்றால், அது நார்மல்.

`அன்பேசிவம்' கமல்ஹாசனா, `அமைதிப்படை ' சத்யராஜா... எல்லாம் `டாஸ்மாக்' செயல் - மயக்கம் என்ன? - 2

அதுவே, அழகான பெண்ணைப் பார்த்த உடனே, கையைப் பிடித்து இழுத்தால் அது, சமூக விரோத ஆளுமைக் கோளாறு. இன்று சிறையிலும் வெளியிலும் நீக்கமற நிறைந்து இருக்கும் கொடிய சமூக விரோதிகள், காசுக்காகக் கொலை செய்யும் கூலிப்படையினர், அடாவடி அரசியல்வாதிகள், ஆன்மிக ஆராய்ச்சிப் போர்வையில் உலா வரும் போலி சாமியார்கள்... இவர்கள் எல்லாம் சமூக விரோத ஆளுமைக் கோளாறு நோயாளிகளே; இவர்களின் 90 பேருக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

TASMAC
TASMAC
`அன்பேசிவம்' கமல்ஹாசனா, `அமைதிப்படை ' சத்யராஜா... எல்லாம் `டாஸ்மாக்' செயல் - மயக்கம் என்ன? - 2

பொதுவாக விதி என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் உண்டுதானே... உலகிலேயே ஏராளமானவர்களைக் கொலை செய்து மிகக்கொடியவராகப் பெயர் எடுத்த ஹிட்லர், தனது 30 வயதுக்குப் பின்பு சாகும் வரை மதுவையே தொடாதவர். அதற்கு முன்பும்கூட ஓரிரு முறை மட்டுமே அவர் மது அருந்தி இருக்கிறாராம். இன்னொரு தகவல், ஒருமுறை கசாப்புக் கடைக்குச் சென்ற ஹிட்லர், அங்கு மாட்டை அறுப்பதைப் பார்த்து மனம் கலங்கி, அதன் பின்பு அசைவத்தையே ஒதுக்கிவிட்டார். ஆனால், அவரும் சமூக விரோத ஆளுமைக் கோளாறு நோய்கொண்டவர் என்பது எவ்வளவு முரண்பாடான உண்மை பாருங்கள்!

(தெளிவோம்)
அடுத்த கட்டுரைக்கு