Published:Updated:

எடப்பாடி மட்டுமல்ல... ஸ்டாலினும் திருந்தவேண்டும் - இது உள்ளாட்சித் தேர்தல் அத்துமீறல்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்

``அ.தி.மு.க அலுவலகத்தின் ஒரு மூலையிலேயே தேர்தல் ஆணையத்தை நடத்தலாம்” என ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய தி.மு.க ஆட்சியில் 2006-ல் எப்படித் தேர்தல் நடந்தது என்பதை உயர் நீதிமன்றமே சொல்லியிருக்கிறது.

``அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில், தன் அலுவலகத்தையும் நடத்திக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு தேர்தல் ஆணையம் தரம் தாழ்ந்திருக்கிறது.''

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட மாநிலத் தேர்தல் ஆணையைத்தைதான் இப்படி காட்டமாக விமர்சித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் சொல்வது உண்மைதான். ஆனால், அதைச் சொல்ல ஸ்டாலினுக்கோ தி.மு.க-வுக்கோ தகுதி இருக்கிறதா? அதற்கு சாட்சியாக இருக்கிறது இந்தப் புகைப்படம்!

2006 சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்
2006 சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்
Photo: vikatan

``எடப்பாடிக்கு `குற்றேவல் புரியும் எடுபிடி' ஆணையமாக, மற்றொரு பழனிசாமி தலைமையில் இயங்கும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பச்சோந்தியாக மாறி, எந்த சட்ட விதிமுறைகளையும் கடைபிடிக்காமல், ஊரக உள்ளாட்சிக்கு மட்டுமே தேர்தல் நடத்துகிறது'' என அறிக்கையில் கண்டித்திருக்கிறார், ஸ்டாலின்.

உங்கள் ஆட்சியில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடந்ததா எனக் கொஞ்சம் திரும்பிப்பாருங்கள் ஸ்டாலின். 2006 உள்ளாட்சித் தேர்தலை கருணாநிதி அரசு நடத்தியபோது நடந்த வன்முறையின் சாட்சிதான் இந்த போட்டோ. பீகார் ஸ்டைலில் வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டு, ஓட்டுப்பெட்டிகள் தூக்கிச் செல்லப்பட்டன. வாக்குச்சீட்டுகள் எல்லாம் ரோட்டில் கிழித்து வீசப்பட்டன.

ஸ்டாலின்
ஸ்டாலின்
`உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகியது ஏன்?' - விளக்கம் சொல்லும் ஸ்டாலின்

2006 சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. அடுத்த 5-வது மாதத்தில், அதாவது 2006 அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது தி.மு.க அரசு. அப்போது என்ன நடந்தது?

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மக்களவை, மாநிலங்களவை, சட்டசபை ஆகியவற்றுக்கான தேர்தலை நடத்தும் `இந்தியத் தேர்தல் கமிஷனு’க்கும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தும் `மாநில தேர்தல் கமிஷனு'க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து, மூன்றாம் நிலை நகராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், மேயர்கள், தலைவர்கள் என்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

மாநில தேர்தல் ஆணைய அலுவலகம்
மாநில தேர்தல் ஆணைய அலுவலகம்
Photo: Vikatan

இந்தியத் தேர்தல் ஆணையத்தைவிட கடினமான பணியைச் செய்யும் மாநில தேர்தல் ஆணையங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம்கொண்ட அமைப்பு. ஆனால், பெயருக்குத்தான் தன்னாட்சி. உண்மையில் இந்த ஆணையம், ஆளும் கட்சிகளின் பிடிக்குள்தான் இருக்கிறது. 2006 உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, மாநிலத் தேர்தல் ஆணையம் தி.மு.க ஆட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

எந்தத் தேர்தலாக இருந்தாலும், வழக்கமாக வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நாளுக்கு ஒருமாதம் முன்பே தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுவதுதான் வழக்கம். ஆனால், 2006-ல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளுக்கு முதல் நாள், அதாவது 2006 செப்டம்பர் 19-ம் தேதிதான் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கால அவகாசமே கொடுக்கக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்திருந்தார்கள். தேர்தல் ஆணையத்தை இப்படிச் செய்யத் தூண்டியதே தி.மு.க அரசுதான். அதே வழியில்தான் அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியும் பயணித்தது.

வாக்குப் பதிவு இயந்திரம்
வாக்குப் பதிவு இயந்திரம்
Photo: Vikatan

உள்ளாட்சிப் பதவி இடங்களுக்கான காலம் முடிந்து, 2016 அக்டோபரில் தேர்தல் நடத்தப்படும் சூழலில், உடல்நலக்குறைவால் செப்டம்பர் 21-ம் தேதி ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆனார். இரண்டு நாள் கழித்து, அதாவது செப்டம்பர் 25-ம் தேதி, `உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17,19 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்' என்கிற அறிவிப்பு வெளியானது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கும் என அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம். அதாவது, எதிர்க்கட்சியான தி.மு.க-வுக்கு கால அவகாசம்கூட அளிக்காமல் ஆளும் கட்சிக்கு ஏவல் பணி செய்தது தேர்தல் ஆணையம். 2006-ல் தி.மு.க ஆட்சி செய்ததை அப்படியே அ.தி.மு.க-வும் பின்பற்றியது.

17 பேரின் உயிரைப் பறித்த ஒற்றைச் சுவர்... மேட்டுப்பாளையம் நடூரில் நடந்தது என்ன? முழு விவரம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே வேட்பாளர் பட்டியலை அப்போலோவில் இருந்து வெளியிட்டார் ஜெயலலிதா. அனுதாப அலையில் ஜெயிக்க வேண்டும் என்கிற அ.தி.மு.க-வின் விருப்பத்தை நிறைவேற்றியது தேர்தல் ஆணையம். `தேர்தல் அறிவிப்பு முறையாகச் செய்யப்படவில்லை. போதிய கால அவகாசம் அளிக்கவில்லை' எனச் சொல்லி அந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்தது, சென்னை உயர் நீதிமன்றம். இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலும் கிட்டத்தட்ட அதே நிலைதான்.

மாநில தேர்தல் ஆணைய அலுவலகம்
மாநில தேர்தல் ஆணைய அலுவலகம்
`டிச.27-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா?' - செக் வைக்கும் இடஒதுக்கீடு வழக்கு

தேர்தல் தேதி அறிவிப்புக்கும் வேட்புமனு தாக்கலுக்கும் இடையே 3 நாள்கள்தான் இடைவெளி விடப்பட்டிருக்கிறது. அதற்குள் எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும். ஆனால் இந்தத் தேதி, ஆளும் கட்சிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே தெரியும். தேர்தலில் சமநிலை என்கிற விதி சம்மட்டியால் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. இது, இரண்டு திராவிடக் கட்சிகளுக்குமே பொருந்தும்.

2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பு, அண்ணா, பெரியார் பிறந்த தினங்களில் இலவச கலர் டி.வி, இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தை கருணாநிதி தொடங்கிவைத்தார். ஒரு மாதத்துக்கு முன்பே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன்பிறகு அரசின் நலத் திட்டங்களைத் தொடங்க முடியாது. அதனால்தான் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் வரை காத்திருந்துவிட்டு, தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். இதே பாணியைத்தான் இன்றைக்கு எடப்பாடி ஆட்சியும் பின்பற்றுகிறது.

பொங்கல் பரிசு
பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் எடப்பாடி. பொங்கலுக்கு பத்து நாள்கள் முன்புதான், பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கம். ஆனால், பொங்கலுக்கு 45 நாள்களுக்கு முன்பே இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்வதற்கு வசதியாகத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடுவதற்கு நான்கு நாள்கள் முன்பு பொங்கல் பரிசைக் கொடுத்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு செலவுசெய்யும். ஆனால், அ.தி.மு.க ஜெயிக்கவும் அரசின் பணம்தான் செலவழிக்க வேண்டுமா?

2006-ல் தி.மு.க ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு பரிசீலனையின்போது, பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் மனுக்கள் பொய்யான காரணங்களைச் சொல்லி நிராகரிக்கப்பட்டன. பெண்கள் மற்றும் பொது வார்டுகள் மாற்றப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிந்து மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் தேர்தல்கள் நடத்த, இடையில் 10 நாள்கள் இடைவெளி விடப்பட்டன. இவை எல்லாமே தி.மு.க ஆட்சி துணையுடன் தேர்தல் ஆணையம் நடத்தியதுதான். அப்போது மாநில தேர்தல் ஆணையராக இருந்த சந்திரசேகர், தி.மு.க ஆட்சிக்குத் தலையாட்டிபொம்மையாக இருந்தார். அவரை மாற்றச்சொல்லி எதிர்க்கட்சிகள் குரல்கொடுத்தன.

சந்திரசேகரன்
சந்திரசேகரன்

சந்திரசேகரை மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார்கள். சந்திரசேகர், அதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியில், தமிழ் வளர்ச்சித்துறை ஆணையராக இருந்தவர். பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனின் தூரத்து உறவினர் என்பதால், அவரை மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையராகக் கொண்டுவந்தார்கள். அவருக்கு மாநில தேர்தல் ஆணையராக மறு நியமனமும் வழங்கி அழகு பார்த்தது தி.மு.க ஆட்சி.

2006 அக்டோபர் 13-ம் தேதி, சென்னை மாநகராட்சித் தேர்தல் நடைபெற்றபோது, பெருமளவில் வன்முறை வெடித்தது. கள்ள ஓட்டுகள் சரமாரியாகப் போடப்பட்டன. வேட்பாளர்கள், வாக்களிக்க வந்தவர்கள் எல்லாம் விரட்டியடிக்கப்பட்டனர். வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு, தங்களுக்கு வேண்டிய வேட்பாளர்களுக்கு விருப்பம்போல வாக்களித்து பெட்டிக்குள் போடப்பட்டன. சென்னை மாநகராட்சித் தேர்தலை ரத்துசெய்து விட்டு, 155 வார்டுகளுக்கும் மறு தேர்தல் நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன அ.தி.மு.க, ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க, பி.ஜே.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Photo: Vikatan

நீதிபதிகள் முகோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வுதான் வழக்கை விசாரித்தது. 2007 ஜனவரி 12-ம் தேதி, இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். நீதிபதி முகோபாத்யாயா, `தேர்தலை முழுவதுமாக ரத்துசெய்ய இயலாது' எனச் சொன்னார். நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, `99 வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்' என்றார்.

நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா வழங்கிய தீர்ப்பில், ``தேர்தல் தொடர்பான புகார்கள் வந்தபோது, தேர்தல் ஆணையம் தனது சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. தன்னிடம் வந்த புகார்களை அலட்சியமாக, உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி விட்டதாகச் சொன்னார் தேர்தல்ஆணையர். அப்படி அனுப்பிய புகார்கள்மீது அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதைக்கூட தேர்தல் ஆணையர் தெரிந்துகொள்ளவில்லை. மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறார் தேர்தல் ஆணையர்.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

ஜனநாயக மரபுகளைக் காக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் இல்லை. தனது கடமையை ஏதோ ஒரு காரணத்துக்காக செய்யத் தவறிவிட்டார். அசாதாரணமான நிகழ்வுகளுக்கு அசாதாரணமான தீர்வுதான் சரியானது. அந்த அடிப்படையில், மொத்தம் உள்ள 155 வார்டுகளில், 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டாம் என்றால், நீதிமன்றத்தின் பொறுப்பை தட்டிக்கழிப்பதாக ஆகிவிடும். 99 வார்டுகளுக்கு நடத்தப்பட்ட தேர்தல் ரத்துசெய்யப்பட்டு, மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்'' என அதிரடியாகத் தீர்ப்பு சொன்னார்.

இந்த 99 வார்டுகளில், 54 வார்டுகளில் தி.மு.க-வும், 13 வார்டுகளில் பா.ம.க-வும் 25 வார்டுகளில் காங்கிரஸும் வெற்றிபெற்றிருந்தன. மொத்தமாக 92 வார்டுகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியிருந்தது.

இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரித்தார். அதற்குள் 98 வார்டுகளில் வென்ற தி.மு.க கூட்டணி கவுன்சிலர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த வார்டுகளுக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பி.கே.மிஸ்ரா, மூன்றாவது நீதிபதியாக இந்த வழக்கை விசாரித்து, 2007 பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு எழுதினார். `மறு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதால் அதுகுறித்து பரிசீலிக்கத் தேவையில்லை' எனத் தீர்ப்பில் சொல்லிய நீதிபதி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவைப் போலவே, தேர்தல் ஆணையரைக் கடுமையாகச் சாடினார்.

`முறைகேடுகள் நடந்ததாக வாக்குச்சாவடி அதிகாரிகளிடமிருந்து புகார்கள் வரவில்லை என்பதற்காகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. முறைகேடுகள், வன்முறைகள் பற்றி வேட்பாளர்களும் பூத் ஏஜென்ட்டுகளும் பொதுமக்களும் புகார் அளித்திருக்கிறார்கள். மீடியாவிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையை ஆற்றத் தவறிவிட்டது. சுனாமியைப் போல வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. தேர்தலில் வன்முறை நடந்தது என்பதைச் சொல்ல, சொர்க்கத்தில் இருந்து யாரும் குதித்து வரத் தேவையில்லை. வாக்குப்பதிவு தினத்தில் சென்னையையே நரகமாக மாற்றிவிட்டார்கள். இதையெல்லாம் பார்த்து தேர்தல் ஆணையம் கொதித்து எழுந்திருக்க வேண்டும். ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தைப் போல தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார்கள் வந்தபிறகும் கூட ஸ்பிங்ஸ் சிலை போல அமைதியாக இருந்திருக்கிறார் தேர்தல் ஆணையர்'' எனத் தீர்ப்பில் சொல்லியிருந்தார் நீதிபதி பி.கே.மிஸ்ரா.

மா.சுப்ரமணியன்
மா.சுப்ரமணியன்

இந்தத் தீர்ப்புக்கு அடுத்த நாள்தான் மறுதேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையராகச் சந்திரசேகரன் இருக்கும் வரை தேர்தலில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்து தேர்தலைப் புறக்கணித்தது அ.தி.மு.க.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கருத்துச் சொல்லியிருக்கும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன், ````அ.தி.மு.க-வும் தேர்தல் ஆணையமும் கூட்டுவைத்திருக்கிறார்கள்'' என்கிறார். 2006 தேர்தலில் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா மறு தேர்தல் நடத்த உத்தரவிட்ட 99 வார்டுகளில் மா.சுப்ரமணியன் வெற்றிபெற்ற வார்டும் அடங்கும். மேயர் பதவியைப் பிடிப்பதற்காக அன்று அவர் போட்டியிட்ட வார்டிலும் வன்முறை ஏற்பட்டது. அந்த மா.சுப்ரமணியன்தான் இன்றைக்குப் போதனைசெய்கிறார்.

`5,000 பக்கங்கள்; அடுத்த வாரம் ஆக்‌ஷன்!'- தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பார்த்தவர்கள் விவரம்

அடுத்து வந்த 2011 உள்ளாட்சித் தேர்தலின்போது, அ.தி.மு.க தான் ஆட்சியில் இருந்தது. அப்போது இருந்த மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யரும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகவே செயல்பட்டார் எனப் புகார் எழுந்தது.

ஜெயலலிதாவுடன் அய்யர்
ஜெயலலிதாவுடன் அய்யர்

``அ.தி.மு.க அலுவலகத்தின் ஒரு மூலையிலேயே தேர்தல் ஆணையத்தை நடத்தலாம்” என ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய தி.மு.க ஆட்சியில் 2006-ல் எப்படித் தேர்தல் நடந்தது என்பதை உயர் நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. `அறிவாலயத்தின் ஒரு மூலையிலேயே தேர்தல் ஆணையத்தை நடத்தலாம்' என அன்றைக்கு சொல்லும் அளவுக்குதானே நீங்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினீர்கள். தன் முதுகைப் பார்த்துவிட்டுதானே அடுத்தவரின் முகத்தைப் பற்றிப் பேச வேண்டும். அன்றைக்கு வன்முறையை நடத்திவிட்டு, இன்றைக்கு உபசேதம் சொல்வதற்கு ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா?

`தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் பச்சோந்தியாக மாறிவிட்டது' என்கிறார் ஸ்டாலின். தி.மு.க அட்சியில் மட்டும் அது நடுநிலையாக நடந்துகொண்டதா? இன்றைக்குத் தேர்தல் ஆணையர் பழனிசாமி என்றால்,அன்றைக்கு சந்திரசேகர். பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இன்றைக்கு முதுகெலும்பு இல்லாத தேர்தல் ஆணையம் அன்றைக்கு மட்டும் நிமிர்ந்தா உட்கார்ந்திருந்தது?

ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை
ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை

"உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எல்லாம் சந்தித்தார்கள். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தின் சரமாரியான குட்டுகளையும் கண்டனங்களையும் வாங்கியும், முதலமைச்சரும் திருந்தவில்லை; தேர்தல் ஆணையரும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவில்லை'' என அறிக்கையில் சாடியிருக்கிறார் ஸ்டாலின். இன்றைக்கு எடப்பாடி ஆட்சியைக் குட்டிய நீதிமன்றங்கள்தான் அன்றைக்கு தி.மு.க ஆட்சியையும் குட்டியது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே திராவிடக் கட்சிகள். ஸ்டாலின் எடப்பாடியைச் சொல்வதும் எடப்பாடி ஸ்டாலினை விமர்சிப்பதற்கும் எந்த அருகதையும் இல்லை.

ஆளுங்கட்சியின் ஏவல், அதிகார துஷ்பிரயோகம், ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதித்தல், பொங்கலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே 1000 ரூபாய் விநியோகம், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, மறைமுகத் தேர்தல் பற்றியெல்லாம் வகுப்பு எடுத்திருக்கும் ஸ்டாலின் தலைமையேற்றிருக்கும் தி.மு.க ஆட்சியில், இவையெல்லாம் பின்பற்றப்பட்டதா? விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட உரிமை இருக்கிறதா?

ஸ்டாலினும் எடப்பாடியும் வாக்களித்த போது...
ஸ்டாலினும் எடப்பாடியும் வாக்களித்த போது...

எடப்பாடி மட்டுமல்ல... ஸ்டாலினும் திருந்த வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு