Published:Updated:

``அமித் ஷா அரசியல் படித்த பள்ளியில் ஆசிரியர் சரத்பவார்!'' - பி.ஜே.பி போட்ட தப்புக் கணக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் படங்கள்
தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் படங்கள் ( Photo: AP )

அதீத அதிகாரமே இப்போது பி.ஜே.பி-க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கைகொடுத்த தோழன் சிவசேனாவையே தனது அதிகாரத்தைக் காட்டி அச்சுறுத்தப்பார்த்தது பி.ஜே.பி.

``மகாராஷ்டிராவில் பி.ஜே.பி-க்கு ஏற்பட்ட சரிவு, இனி இந்தியா முழுவதும் பி.ஜே.பி-க்கு நெருக்கடியாக அமைந்துவிடலாம்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ``இவர்களை எதிர்ப்பது எளிது” என்கிற மனோதிடத்தைப் பிற மாநிலத்தில் உள்ள கட்சிகளிடமும் இப்போது ஏற்பட்டுள்ளது என்பதை பி.ஜே.பி தரப்பே ஒப்புக்கொள்கிறது.

பா.ஜ.க - சிவசேனா
பா.ஜ.க - சிவசேனா

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பி.ஜே.பி ஆட்சியில் இருந்தபோது, பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்க பல மாநிலக் கட்சிகள் யோசித்துக்கொண்டிருந்தன. மற்றொருபுறம் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் என்று பிராந்திய கட்சித் தலைவர்கள் பி.ஜே.பி-க்கு எதிரான அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றிபெறுவது கடினம் என்கிற பேச்சு நாடு முழுவதும் எழுந்தது. கூட்டணிக்கே யாரும் வர யோசித்த நேரத்தில், தனது முப்பது ஆண்டுகால தோழமைக்குத் தோள்கொடுத்தது சிவசேனா. பி.ஜே.பி -க்கு கூட்டணி கரத்தை முதலில் நீட்டியது சிவசேனா. அந்தக் கூட்டணி உடன்பாட்டை இறுதிசெய்ய மும்பைக்கே பறந்துவந்தார், பி.ஜே.பி-யின் தலைவரான அமித் ஷா. அந்தச் சூழ்நிலையில் எந்தக் கோரிக்கை சிவசேனா தரப்பில் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் பி.ஜே.பி இருந்து. ஆனால், பெரிதாக எந்த டிமாண்டையும் சிவசேனா வைக்காமல், கூட்டணி தர்மத்தை முதன்மையாக ஏற்றது.

`அதெல்லாம் ஒன்னும் ஆகாது!’ - சிவசுப்ரமணியத்தின் அலட்சிய பதிலால் பறிபோன 17 உயிர்கள் #Mettupalayam

மூன்று மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி அசுர பலத்தோடு ஆட்சியைப் பிடித்தது. அதற்குப் பிறகு, பி.ஜே.பி-யின் நடவடிக்கைகளில் உக்கிரம் தென்பட ஆரம்பித்தது. ஒரே நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முத்தலாக் முதல் 370 பிரிவு சட்டப்பிரிவு நீக்கம் வரை அதிரடி காட்டியது பி.ஜே.பி. எதிர்க்கட்சிகளின் குரல்கள் பி.ஜே.பி-யினர் ஆரவாரத்திற்கு இடையே எடுபடாமல்போனது. இந்த அதீத அதிகாரமே, இப்போது பி.ஜே.பி-க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் கைகொடுத்த தோழன் சிவசேனாவையே தனது அதிகாரத்தைக் காட்டி அச்சுறுத்தப்பார்த்தது. மகாராஷ்டிராவில் ஒரு முறையாவது எங்களது நபர் முதல்வராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்த சிவசேனாவிற்கு, அந்த வாய்ப்பைக் கொடுக்க மறுத்தது. பி.ஜே.பி-யைக் கண்டாலே அச்சப்படும் நிலை இருந்த நேரத்தில், அந்தக் கட்சிக்கு எதிராகவே காய் நகர்த்தத் துணிந்தார் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே. அதற்குக் காரணம், பி.ஜே.பி-யைவிட தன் கட்சிக்குள் கட்டுப்பாடு உண்டு என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.

அமித்ஷா
அமித்ஷா

`பி.ஜே.பி எட்டடி பாய்ந்தால், நாங்கள் பதினாறடி பாய்வோம்' என்று சொல்லிய சிவசேனா, எந்தக் கூட்டணிக்கு எதிராகத் தேர்தல் களத்தில் போட்டியிட்டதோ, அதே காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் கரம் கோக்கத் தயாரானது. இதுதான் அமித் ஷா-வை ஆத்திரப்படவைத்தது. உறுப்பினர்களே இல்லாத வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தோம், குறைந்த உறுப்பினரை வைத்து கோவாவில் வலைவிரித்தோம், இப்போது தனிப்பெரும் கட்சியாக இருந்துகொண்டு மகாராஷ்டிராவை ஆட்சிசெய்ய முடியாத நிலை.

அதீத நம்பிக்கையில் அடுத்தடுத்து காய்களை நகர்த்தினார்கள். பி.ஜே.பியின் வழக்கமான பாலிசியான கட்சியை உடைக்கும் பாலிசியில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வலைவிரித்தார்கள். ஒரே இரவில் ஆளுநர் ஆட்சி அகற்றப்பட்டு, அமித் ஷா-வின் ஆசியுடன் ஆட்சிக்கு வந்தார் பட்னாவிஸ். ஆனால், இதில்தான் அமித் ஷா சறுக்கினார். அஜித் பவார் பின்னால் யாரும் வரமாட்டார்கள் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டார். அதேபோல் சரத்பவார் என்கிற அரசியல் ஆளுமையின் அறிவை, பி.ஜே.பி -யின் அதிகார மோகத்தினால் மறந்துவிட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் விளைவு, பி.ஜே.பி ஆட்சி இனி மகாராஷ்டிராவில் மலரக்கூடாது என்று முடிவுசெய்து, பொருந்தாக் கூட்டணியான மூன்று கட்சி கூட்டணியை முடிவுசெய்தார். பி.ஜே.பி-யின் அதிகாரமும் அமித் ஷா-வின் சாணக்கியத்தனமும் அடுத்த 48 மணிநேரத்தில் தோல்வியைச் சந்தித்து. இதுவரை பி.ஜே.பி-க்கு எதிராகச் செயல்பட்டால் சிக்கலாகிவிடும் என்று அஞ்சி வந்த கட்சிகளுக்கும் இப்போது அச்சத்தைப் போக்கும் மருந்தாகிவிட்டது, மகாராஷ்டிராவில் நடந்த விவகாரம். இதன் உடனடி விளைவு மேற்கு வங்காளத்தில் தெரிந்தது. மூன்று தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அந்த இரண்டு தொகுதியுமே பி.ஜே.பி வசம் இருந்த தொகுதிகள். அதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனுடைய கருத்துக்கணிப்புகள் பி.ஜே.பி-க்கு ஷாக் கொடுத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக பி.ஜே.பி வெற்றி பெற்றாலும், ஆட்சியைப் பிடிக்குமா என்பது சந்தேகம்” என்று ரிப்போர்ட் சென்றுள்ளது.

சரத்பவார்
சரத்பவார்

கர்நாடகாவில் இனி எதுவும் நடக்காது என்று நினைத்த நேரத்தில், 15 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் சிக்கல் எழுந்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, ``தேவைப்பட்டால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்கத் தயங்க மாட்டோம்” என்று அதிரடிகாட்டியுள்ளார். அமைதியாக இருந்தவர்கள் எல்லாம் ஆர்ப்பரிக்க ஆரம்பித்திருப்பதைக் கண்டு பி.ஜே.பி-யும் இப்போது அப்செட்டில் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றால், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஐந்து தொகுதிகளை வென்றாகவேண்டிய நெருக்கடி பி.ஜே.பி-க்கு உள்ளது. ஆனால், பி.ஜே.பி-க்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் கரம் கோப்பதால் அச்சத்தில் இருக்கிறது பி.ஜே.பி.

தமிழத்தில் அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத தலைமையாக இருந்தது பி.ஜே.பி. ஆனால், தமிழக பி.ஜே.பி தலைவர்கள் இப்போது தி.மு.க-வை ஆதரித்து பொது மேடையில் பேசும் நிகழ்வுகளும் அரங்கேறிவருகின்றன. மறுபுறம், அ.தி.மு.க உள்ளாட்சித் தேர்தலில் பி்.ஜே.பி-யை உதறிவிட முடிவு செய்துவிட்டது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவே எங்களது லட்சியம் என்று சொல்லி அதை கிட்டத்தட்ட முடிக்கும் அளவுக்கு வந்தது பி.ஜே.பி. ஆனால், மகாராஷ்டிரா விவகாரத்தில் அந்தக் கட்சி எடுத்த தவறான சில நடவடிக்கைகள், இனி பி.ஜே.பி இல்லாத இந்தியாவை உருவாக்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துவிட்டது. குறிப்பாக, பி.ஜே.பி நேரடியாக ஆளும் மாநிலங்கள் மிகக்குறைவு. கூட்டணி தயவில்தான் பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.

உத்தவ் தாக்ரே- ஸ்டாலின்
உத்தவ் தாக்ரே- ஸ்டாலின்

இனி ஒவ்வொருவருமே சிவசேனாவைப் போல் முரண்டு பிடித்தால் என்ன செய்வது என்கிற சிந்தனை இப்போது பி.ஜே.பி -க்கு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள், டெல்லி பி.ஜே.பி தரப்பினர். அமித் ஷா அரசியல் படித்த பள்ளியில் ஆசிரியர் எங்கள் சரத் பவார்” என்று மறுபுறம் கொண்டாடுகிறார்கள் தேசியவாத காங்கிரஸார்.

சாணக்கியத்தனத்தில் ஏன் சரிவு என்பதை ஆராயவேண்டியுள்ளது பி.ஜே.பி தலைமைக்கு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு