Published:Updated:

ஜோதிமணி vs கரு. நாகராஜன்: எங்கே வேர்விட்டது அரசியல் அநாகரிகம்? - சிறப்புக் கட்டுரை

அரசியல் அநாகரிகம்
News
அரசியல் அநாகரிகம்

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை பி.ஜே.பி-யைச் சேர்ந்த கரு.நாகராஜன் தரக்குறைவாகப் பேசிய விவகாரம் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. நாவடக்கம், நாகரிகம் பற்றியெல்லாம் அரசியல் ஆத்திசூடி நடத்தப்படுகிறது. இந்த அநாகரிகம் எங்கே வேர்விட்டது? அலசுகிறது கட்டுரை.

மயிலை மாங்கொல்லையிலும் சைதாப்பேட்டை தேரடியிலும் தங்கசாலை மணிக்கூண்டிலும் இரவு 10 மணிக்கு மேல் அரசியல்வாதிகள் பேசிய நாராச மொழிகள், புனிதமான சட்டமன்றத்துக்குள்ளும் நுழைந்தன. இப்போது அவை பரிணாமம் பெற்று, தொலைக்காட்சி விவாதங்களில் வந்து நிற்கிறது. வீட்டு வரவேற்பறைகள் முகம் சுளிக்கின்றன.

`வாயிலே அழுக்கென்று நீரெடுத்துக் கொப்பளித்தேன். கொப்பளிக்கக் கொப்பளிக்க வாயும் ஓயாமல் அழுக்கும் போகாமல் உற்றுப் பார்க்கிறேன், நீரே அழுக்கு!' என்றார் எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜு.

அரசியல்வாதிகளை எத்தனை முறை கொட்டினாலும் திட்டினாலும் அவர்களின் வாயில் இருக்கும் அழுக்கு போகாது. உடலே அழுக்காய் இருக்கும் சில அரசியல்வாதிகளிடம் நாகரிகத்தை எதிர்பார்ப்பது வீண். சமூகத்தில் படிந்துகிடக்கும் அழுக்குகளையும் அநாகரிகங்களையும் அகற்றுவதற்காகவே உருவான அரசியலே இன்று அழுக்கேறிக்கிடக்கிறது.

அரசியல் நாகரிகம்
அரசியல் நாகரிகம்
மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தத்தான், பிரதமரை மக்கள் கல்லால் அடிப்பார்கள் என்று சொன்னேன். ஆனால், நான் அப்படிச் சொல்லி, இரண்டு மூன்று பேர் பேசிய பிறகுதான் அவர் என்னை அப்படிப் பேசினார். பிரதமரைச் சொன்னதற்கான எதிர்வினை என்றால் அப்போதே வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு தொலைபேசி அழைப்பு வந்த பிறகுதான் அப்படிப் பேசினார் என்று சொல்கிறார்கள். யார் அழைத்தது... என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. பா.ஜ.க -வினர் இதைத் திட்டமிட்டுச் செய்துவருகிறார்கள். இதற்காகவே, ஆபாச ஆர்மி என்று ஒரு அணியை வைத்திருக்கிறார்கள். பிரதமரும் அவர்களை ஊக்குவிக்கிறார்.
ஜோதிமணி எம்.பி, காங்கிரஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒன்றை மற்றொன்று எதிர்ப்பதுதான் இன்றைக்கு அரசியல் என ஆகிவிட்ட பிறகு, நாகரிகத்தின் நாற்றங்கால்களைத் தேடத்தான் வேண்டியிருக்கும். நாலாந்தரப் பேச்சாளர்கள், எல்லா கட்சிகளிலும் கடைபரப்பியிருக்கிறார்கள். கூட்டம் சேர்க்கவும் எதிரியை வார்த்தையால் வஞ்சிக்கவும் உருவாக்கப்பட்ட `நாலந்தர அணி' அது. அந்த இடத்திற்கு இப்போது முதல்தர பேச்சாளர்கள் வந்து நின்றுகொண்டிருக்கிறார்கள். எதிரெதிர் அரசியல் செய்யக்கூடியவர்கள். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மோதிக்கொள்கிறவர்கள், பொதுவெளியிலும் வீட்டு விஷேசங்களிலும் கட்டியணைத்துக்கொள்ளும் அரசியல் நாகரிகம் வட மாநிலங்களில் உண்டு. அது, தமிழகத்திலும் தழைத்தோங்க வேண்டும் என்கிற குரல்கள் காலம் காலமாக கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. வடமாநில அரசியல் நாகரிகம் இங்கு வாய்க்கவே இல்லை. தொலைக்காட்சி விவாதங்களிலே இப்படி கேவலமாகப் பேசுகிறவர்களைப் பார்க்கும்போது, தமிழகத்தில் அப்படியான சூழல் வருவதற்கான வாய்ப்புகளே தெரியவில்லை.

சீமான், அருணன் விவாதத்தில்
சீமான், அருணன் விவாதத்தில்
பெண்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது, எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. ஆனால், ஒரு அரசியல் கட்சி அதை ஆயுதமாகக் கையில் எடுப்பதும், அதற்காகப் பொருள் செலவு செய்வதும், அதைப் பிரதமரே ஊக்குவிப்பதும் இங்குதான் நடக்கிறது. இதுகுறித்து, சுவாதி சதுர்வேதி எனும் ஊடகவியலாளர் I am troll எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். இதுகுறித்து இந்திய ஊடகங்கள் மட்டுமல்ல, சர்வதேச ஊடகங்களும் பிரதமரைக் கண்டித்திருக்கின்றன. நரேந்திர மோடிக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க-வில் இப்படி ஒரு போக்கு கிடையாது. இவர் வந்தபிறகுதான் இப்படி நடக்கிறது. ஆனால், சமூகத்தில் இது போன்ற கருத்துகளுக்கு ஆதரவில்லை. பா.ஜ.க-வின் பெயர்தான் கெடும். பா.ஜ.க-வினரின் இதுபோன்ற சிந்தனைப் போக்கை நினைத்து நான் அனுதாபப்படுகிறேன், கோபப்படவில்லை.
ஜோதிமணி எம்.பி, காங்கிரஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த பேராசிரியர் அருணனும் சில காலம் முன்பு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் மோதிக் கொண்டார்கள். ``கம்யூனிஸ்ட் கட்சியைவிட ஒரு வாக்கு குறைவாக எங்கள் கட்சி எடுத்தால், உங்கள் கட்சியில் சேர்ந்து விடுகிறேன்'' என அருணனுக்கு சவால் விட்டார் சீமான். ``நேற்று வரை பெரியாரைப் போற்றிவிட்டு இப்போது அவரை வசைபாடுகிறீர்கள். உங்களிடம் என்ன கொள்கை இருக்கிறது'' என சீமானைக் கேட்டார் அருணன். விவாதம் முற்றி, `ஏய் என்னய்யா லூசு மாதிரி பேசுற' என திடீரென ஆவேசமாகக் கத்தினார் `செந்தமிழன்' சீமான். பதிலுக்கு `நீதான்டா லூசு, யாரைப் பார்த்து லூசுங்கிற' என அருணன் எகிறினார். இவர்கள் தெருமுனைக் கூட்டங்களில் பேசும் A 1 அரசியல்வாதிகள் அல்ல. அரசியலையும் அதன் பாய்ச்சலையும் நாகரிகத்தையும் கற்றுத் தேர்ந்தவர்கள். கட்சியை வழி நடத்தக்கூடியவர்களிடமே நாகரிகம் இல்லாமல் போனதற்கு யாரை குற்றம் சாட்ட முடியும்? இப்படிப் பேசினால்தான் அரசியல் செய்ய முடியும் என்கிற நிலைக்கு சீமான் வந்துவிட்டால், கரு. நாகராஜன் எல்லாம் எம்மாத்திரம்!

நேரு
நேரு
தரம் தாழ்ந்து தனி மனித தாக்குதல்களை யார் தொடுத்தாலும் அது தவறுதான். அரசியலில் ஒரு பெண் பல சவால்களைத் தாண்டிதான் ஒரு இடத்துக்கு வரமுடியும் என்பதையும் நான் நன்கு அறிவேன். அதேவேளை, இணையத்தில் எங்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி மற்றவர்களைத் தரம் தாழ்த்தி விமர்சிப்பவர்களுக்கு எல்லாம், எங்கள் கட்சி பொறுப்பாகாது. பா.ஜ.க திட்டமிட்டு இதைச் செய்கிறது எனும் சகோதரி ஜோதிமணியின் கருத்துகள், எங்கள் மனதை எப்படிப் புண்படுத்தும் என்பதையும் அவர் புரிந்துகொண்டு பேசினால் நல்லது. வாஜ்பாய் காலத்தில் சமூக ஊடகங்கள் இவ்வளவு வளர்ச்சி இல்லை. இப்போது வளர்ச்சி அடைந்திருக்கிறது.
வானதி சீனிவாசன், (பா.ஜ.க)

`ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும்!' என்பது இவர்களுக்குத் தெரியும். அதனால், `இவர்கள் தன்னிலை மறந்து பேசுகிறார்கள்' எனக் கடந்து போய்விட முடியாது. தன்னுடைய மோசமான பேச்சு, எதிர்வினையை உண்டாக்கும்; பார்வையாளர்களை முகம்சுளிக்கவைக்கும்; வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தும் என நன்கு தெரிந்தவர்கள்தான், வசவு வார்த்தைகளைப் பொதுவெளியில் எந்தத் தயக்கமும் இல்லாமல் பந்திவைக்கிறார்கள்.

`சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பேசும் பகுதிகளை சென்னை மாகாணத்தோடு இணைக்க வேண்டும்' எனப் போராடியவர்களை `நான்சென்ஸ்' எனச் சொன்னார் பிரதமர் நேரு. உடனே கொதித்துப் போன தி.மு.க, நேருவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தியது. `நான்சென்ஸ்' வார்த்தைக்கே ரயிலை மறித்தவர்கள் கட்சியில்தான், தீப்பொறி ஆறுமுகமும் வெற்றிகொண்டானும் வளர்த்தெடுக்கப்பட்டார்கள், போற்றப்பட்டார்கள்.

வெற்றி கொண்டான்
வெற்றி கொண்டான்
சகோதரி ஜோதிமணிக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், பெண்களைத் தரக்குறைவாகப் பேசி அரசியல் செய்யும் கட்சி பா.ஜ.க அல்ல. பெண்களை உயர்வாக மதிக்கக்கூடிய கட்சி எங்களின் கட்சி. இந்த நாட்டின் கலாசாரத்தை சொல்லிக்கொடுத்து எங்கள் கட்சி உறுப்பினர்களை வளர்த்துவருகிறோம். எங்கள் கட்சியின் முன்னாள் தலைவர், நிதி அமைச்சர்கூட இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால், இதை ஒரு கட்சி சார்ந்த விஷயமாக மாற்றாமல், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்பதே என் விருப்பம்.
வானதி சீனிவாசன், (பா.ஜ.க)

சிறப்புப் பேச்சாளர் பேசிய பிறகு நன்றியுரையோடு நிறைவு பெறுவதுதான் பொதுக் கூட்டங்களின் இலக்கணம். ஸ்டாலினும் பேராசிரியர் அன்பழகனும் பேசிவிட்டு போனபிறகு வேறு யாரும் பேச முடியாது. ஸ்டாலின் பேசிவிட்டுப் போன பிறகு வெற்றி கொண்டான் பேசிய கூட்டங்கள் ஏராளம். கூட்டத்தைத் திரட்ட நாராசத்தை விதைத்தது திராவிட கட்சிகள்தான்.

``குழாயடியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள். பெண்களும், சின்னப் பசங்களும் வீட்டுக்குப் போய்விடுங்கள்'' என `அடல்ஸ் ஒன்லி அலெர்ட்' கொடுத்துவிட்டுத்தான் பேச்சையே ஆரம்பிப்பார் வெற்றி கொண்டான்.

ஜெயலலிதாவும் சசிகலாவும் மகாமகத்தில் குளித்ததைக்கூட கேவலமான மொழியில் உச்சரித்தவர்கள் வெற்றிகொண்டான் போன்றவர்கள். ``அந்தக் காலத்தில் பெண்கள் பெரிய கொண்டை வைத்து, அந்த கொண்டையைச் சுற்றி பூ வைத்திருப்பார்கள். புருஷன்காரன் மனைவியிடம் கேட்பான், `ஏன்டி கொண்டைக்கு உள்ளே பூ வைக்றே... வெளியே தெரியும்படி வைக்க வேண்டியதுதானே'. உடனே மனைவி சொல்வாள். `நான் பூ வைக்கிறது கொண்டவன் பார்க்கத்தான்; கண்டவன் பார்க்க அல்ல' அப்படிச் சொன்ன பெண்கள் வாழும் நாட்டில்...'' என வெற்றி கொண்டான் பேச ஆரம்பித்து, அதன்பின் சொன்ன வார்த்தைகளை எல்லாம் அம்பலத்துக்குக் கொண்டு வர முடியாது.

வெற்றிகொண்டான்
வெற்றிகொண்டான்
பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற மரபு தற்போது அடியோடு சரிந்துவிட்டது. `இடக்கர் அடக்கல் என்பதுதான் நம் பாரம்பர்யம். அதாவது, பொதுவெளியில் நாகரிகமற்ற முறையில் இடர் தரும் சொற்களைப் பேசக்கூடாது என்பதுதான் அது. ஆனால், சமூக வலைதளங்கள் பெருகிய பிறகு இதைத்தான் பேசவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. மனத்தில் இருக்கின்ற ஆசா பசங்கள், ஆபாசங்கள் அனைத்தையும் கொட்டிவிடுகிறார்கள். நான் எழுதாத விஷயங்களை நான் எழுதியதாக என் பெயர், புகைப்படத்தைப் போட்டு பகிர்ந்துவருகிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் நம் சமூகத்தின் முகமே மாறிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் இது போன்ற பொதுவெளியில் பெண்களை தரக்குறைவாகப் பேசுவதென்பது. இது சாதி, மதம், அரசியல் கட்சி கடந்து நடந்துகொண்டிருக்கிறது. ஜோதிமணிக்கு எதிரான இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே. அதேவேளை, கவர்னராகிப் போகும் முன்வரை தமிழிசை சௌந்தர்ராஜன் இங்கே பட்ட துயரம் அனைவரும் அறிந்ததே. இன்று ஜோதிமணி வெர்சஸ் கரு.நாகராஜன். நாளை வேறு இரு நபர்கள் அவ்வளவுதான். பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது மிகவும் அதிகரித்திருக்கிறது.
கவிஞர் தாமரை

வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், போத்தனூர் மணிமாறன், கூத்தரசன், நன்னிலம் நடராசன், திருப்பூர் விசாலாட்சி, வண்ணை ஸ்டெல்லா, புதுக்கோட்டை விஜயா எனப் பெரிய படை பரிவாரமே வளர்க்கப்பட்டது.

அ.தி.மு.க.வும் ஒன்றும் பரிசுத்தமான கட்சியல்ல. தி.மு.க-வில் தீப்பொறியை லாயிட்ஸ் ரோட்டுக்கு அழைத்துவந்து, அறிவாலயத்தைத் தெறிக்கவிட்டார்கள். வசவு வார்த்தைகளிலிருந்து உடல்மொழிக்கு அரசியல் அநாகரிகத்தைக் கடத்தியது அ.தி.மு.க-தான். ஜெயலலிதாவை எதிர்த்ததற்காக சுப்பிரமணியன் சுவாமிக்கு அசிங்கமான அர்ச்சனைகள் மட்டுமா விழுந்தன? மகளிரணியை வைத்து ஆபாச தரிசனத்தை அல்லவா அரங்கேற்றினார்கள்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ஜெயலலிதாவை மோடி சந்தித்தபோது, ``பி.ஜே.பி-யும் அ.தி.மு.க -வும் கள்ள உறவு வைத்திருக்கிறது'' என மோசமான கருத்தைப் பதிவு செய்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அதற்கு அவர் பாணியிலேயே பதிலடி கொடுத்த அ.தி.மு.க, பெட்ரோல் குண்டு வீசி தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்கவைத்தது. ``கிழிஞ்ச ஜிப்பா... தகர டப்பாவுடன் திருட்டு ரயிலேறி வந்தவர்தான் கருணாநிதி'' எனத் தலைவியைக் குளிரவைக்க வளர்மதி பேசிய பேச்சு சட்டசபை அவை நடவடிக்கைக் குறிப்பிலேயே பதிவாகியிருக்கிறது. அதே வளர்மதி ஜானகி அணியில் இருந்தபோது, ஜெயலலிதாவைப் பேசாத பேச்சுகளா? ``சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்த ஜெயலலிதா உத்தமியா?'' எனக் கேட்டவை வளர்மதியின் உதடுகள்.

ஜெயலலிதா, சென்னா ரெட்டி
ஜெயலலிதா, சென்னா ரெட்டி

பேச்சாளர்களும் பிரபலங்களும் மட்டுமல்ல... தலைமையே பேசிய வரலாறுகளும் உண்டு. ``தவறாக நடக்க முயன்றார்'' என கவர்னர் சென்னா ரெட்டிக்கு எதிராகவே வாள் சுழற்றினார் ஜெயலலிதா. ஆனால், கடைசி வரையில் அதை நிரூபிக்கவே இல்லை. இதை வெளியில் பேசியிருந்தால் வழக்கு பாய்ந்திருக்கும் என்பதாலேயே சட்டசபைக்குள் ஜெயலலிதா பேசினார். இப்படி தனிமனிதத் தாக்குதல்கள் நிறுத்தப்படவே இல்லை. விஜயகாந்த்தை குடிகாரன் என்றார் ஜெயலலிதா, ``பக்கத்திலிருந்து ஊத்திக் கொடுத்தாரா?'' எனப் பதிலடிகொடுத்தார் விஜயகாந்த். 2011 தேர்தலில் விஜயகாந்த் தயவு வேண்டும் என்பதால் அவருடன் கூட்டணி அமைத்தார். ஜெயித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவராக வந்து அமர்ந்த விஜயகாந்த்தை அவதூறாகப் பேச ஆரம்பித்தார்.

விஜயகாந்த் ஜெயலலிதா
விஜயகாந்த் ஜெயலலிதா

``கொரோனாவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம்'' என்று தினமும் பிரஸ்மீட்டில் சொல்லிக்கொண்டிருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருணாநிதியைத் `தள்ளு வண்டி’ என்றும், விஜயகாந்த்தை `தண்ணியிலேயே இருப்பவர்’ என்றும் சட்டசபையிலேயே மோசமாக விமர்சித்தார். விஜயகாந்த்தை குடி நோயாளியாகவோ கருணாநிதியை வயது முதிர்ந்தவராகவோ விஜயபாஸ்கர் பார்க்கவில்லை. எம்.பி.பி.எஸ் படித்த விஜயபாஸ்கருக்கே புத்தி இப்படிப் போவதற்குக் காரணம் என்ன? பதவி வெறி. அது, கற்ற கல்வியையும் மீறி முதுமையைக் கேலி செய்யச் சொல்கிறது. தான் கேவலப்பட்டாலும் மற்றவர்கள் தன்னை கேலியாக விமர்சித்தாலும் பரவாயில்லை மற்றவர்களை புண்படுத்தி தலைவியைக் குளிரவைத்து, `மாண்புமிகு' ஆக முயல்கிறவர்களுக்கு அரசியல் நாகரிகம் பற்றி பாடம் நடத்துவது எல்லாம் பிணத்திடம் பேசுவதற்குச் சமம். மாண்புகள் அத்தனையும் தலைவர்கள் மீறினார்கள். அவர் பாதையில் அவரது கட்சியினரும் பயணித்தார்கள்.

`நாக்கை அறுத்துவிடுவேன்' என ஒரு மந்திரியே சொல்லும் அளவுக்கு அரசியல் வளர்ந்து நிற்கிறது. பெரியார் சிலை உடைப்பு, கனிமொழி பற்றிய சர்ச்சைக் கருத்து என ஹெச்.ராஜா பேசியவை கொஞ்சம் நஞ்சமா?

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டித்ததால் நீதிபதி குன்ஹாவை அ.தி.மு.க-வினர் எப்படியெல்லாம் திட்டித் தீர்த்தார்கள். விலங்குகளோடு ஒப்பிட்டு மோசமான படங்களைப் பேனர்களாக வைத்தார்கள்.

வைகோ
வைகோ
பொதுமேடையில், பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஒரு முறைஇருக்கிறது. அதில் இருந்து ஒருவர் நழுவும்போது, அவர்களுக்கு மேலுள்ளவர்கள் அவர்களைக் கண்டிக்க வேண்டும். குழந்தைகள் பேசினால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தொண்டர்கள் பேசினால் கட்சித் தலைவர்கள் அவர்களைத் திருத்த வேண்டும். ஒரு இயக்கத்தையோ நிறுவனத்தையோ வழிநடத்தும் தலைவர்கள் தரமானவர்களாக இருந்தால், அவர்களுக்குக் கீழ் இருப்பவர்களும் சரியாக இருப்பார்கள். இதுபோன்ற செயல்களுக்கு சமூகத்தில் உள்ள அனைத்து தலைமையும் அரசும் பொறுப்பேற்க வேண்டும். எதிர்கால சமூகத்தை நாகரிகமான, கண்ணியமான சமூகமாக உருவாக்க வேண்டும்.
கவிஞர் தாமரை

`சிறந்த நாடாளுமன்றவாதி' என அழைக்கப்பட்ட வைகோவின் நாவும் நர்த்தனம் ஆடின. 2016 சட்டசபைத் தேர்தலில் கருணாநிதி பற்றி வைகோ சொன்ன ஆதித் தொழில் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியதால் மன்னிப்பு கேட்டார்.

கருத்தால் பதில் சொல்ல தன்னிடம் வார்த்தைகள் இல்லையென்றால், தனிமனிதத் தாக்குதலைத் தொடுப்பது தமிழக அரசியலில் தொடர்கதைதான். பெண், திருமணமாகாதவர், மகப்பேறு வாய்க்கப் பெறாதவர் என்பதைவைத்தே அற்பமாகக் கேலி செய்கிறார்கள். குழந்தை இல்லாததை வைத்து அண்ணாவுக்கு எதிராக சுவரொட்டிகள் வைக்கப்பட்டன. திருமணம் செய்யாத காமராஜருக்கு நடத்தப்பட்ட அர்ச்சனைகள் அதிகம். தனிமனிதத் தாக்குதல்கள் தலைகுனியவைத்தன. அது, கருணாநிதி ஜெயலலிதா வரையில் தொடர்ந்தன.

`தத்துவ ஞானிகளே தலைமையேற்று ஆள வேண்டும்!' என்கிறார் பிளேட்டோ. அந்த `வையகத் தலைமை' இன்றைக்கு யாருக்கு இருக்கிறது. `மக்களை ஆள்பவன் முதலில் தன் மனத்தை ஆள வேண்டும். புலனடக்கம் பழக வேண்டும்' என்கிறது அர்த்தசாஸ்திரம்

யாகாவாராயினும் நா காக்க!