Published:Updated:

பா.ஜ.க-வின் அதிகாரப் பசி… காங்கிரஸ் சீனியர்களின் பதவி ருசி! #RajasthanPolitics

Sachin Pilot ( Photo: Twitter / SachinPilot )

சச்சின் பைலட்டின் எதிர்ப்பு அரசியலில் ராஜஸ்தானின் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுவருகிறது. பா.ஜ.க-வின் கைப்பாவையாக சச்சின் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டும் காங்கிரஸ், ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து அமைப்புகளையும் கலைத்துவிட்டது.

பா.ஜ.க-வின் அதிகாரப் பசி… காங்கிரஸ் சீனியர்களின் பதவி ருசி! #RajasthanPolitics

சச்சின் பைலட்டின் எதிர்ப்பு அரசியலில் ராஜஸ்தானின் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுவருகிறது. பா.ஜ.க-வின் கைப்பாவையாக சச்சின் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டும் காங்கிரஸ், ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்து அமைப்புகளையும் கலைத்துவிட்டது.

Published:Updated:
Sachin Pilot ( Photo: Twitter / SachinPilot )

மத்தியிலும் மாநிலங்கள் பலவற்றிலும் அதிகார நாற்காலிகளில் அமர்ந்திருந்தபோதிலும், அதிகாரப் பசி அடங்காமல் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அலைந்துகொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. ஏற்கெனவே, பல அதிகாரப் பதவிகளை அனுபவித்துவிட்டபோதிலும், இன்னும் அதிகார ருசியுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள். அதிகாரம் ஒன்றே தங்களின் குறிக்கோள், லட்சியம் எல்லாம் என்று நினைக்கும் இவர்களால்தான், இந்தியாவின் ஜனநாயகம் கேலிக்குள்ளாகும் அவலம் அதிகரித்துக்கொண்டுவருகிறது.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
Photo: Twitter / SachinPilot

கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயகம் கேலிக்கு உள்ளாக்கப்பட்டுவருகிறது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிகமான இடங்களைப் பிடித்து காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆட்சியதிகாரத்தை பா.ஜ.க பறிகொடுத்தது. இளம் தலைவரான சச்சின் பைலட் முதல்வராகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. ஆனால், இந்திரா காந்தி காலத்து அரசியல்வாதியான அசோக் கெலாட், முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றத் துடித்தார். பலமுறை மக்களவை உறுப்பினர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர் என நீண்டகாலமாகப் பல முக்கிய பதவிகளை ருசித்த அசோக் கெலாட், தனக்கு இருந்த மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி, முதல்வர் நாற்காலியைப் பிடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதல்வர் பதவி கிடைக்காத காரணத்தால், இளம் தலைவரான சச்சின் பைலட் கடும் அதிருப்தியில் இருந்தார். அவரை சமாதானப்படுத்தும் வகையில், துணை முதல்வர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. அவர் திருப்தியடையவில்லை. அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பூசல் ஏற்பட்டு, இருவருக்குமான அதிகாரப் போட்டி நீருபூத்த நெருப்பாக இருந்துவந்தது. இப்போது அது பெரிதாக வெடித்துக்கிளம்பியுள்ளது.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்
Photo: Twitter / SachinPilot

அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவிட்டார் சச்சின் பைலட். சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். சச்சின் பைலட்டை பா.ஜ.க இயக்குவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. கர்நாடகாவிலும் மத்தியப் பிரதேசத்திலும் குறுக்கு வழியில் ஆட்சியைக் கவிழ்த்ததைப்போல, ராஜஸ்தானிலும் தமது அரசைக் கவிழ்ப்பதற்கு பா.ஜ.க சதி செய்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். பா.ஜ.க-வினர் குதிரைபேரம் நடத்திவருவதாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறினால் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் ரூ.25 கோடி தருவதாக பா.ஜ.க பேரம் பேசியிருப்பதாகவும் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்கவில்லை. அதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் முதல்வர் பதவியிலிருந்தும் பைலட்டை நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பைலட்டுக்கு ஆதரவாக இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், சச்சின் பைலட் மற்றும் பிற 18 எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு நாள்களுக்கு அவர்கள் பதிலளிக்காவிட்டால், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியிலிருந்து அவர்கள் விலகுவதாகக் கருதப்படும் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளரான அவினாஷ் பாண்டே கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானில் தனது அனைத்து மட்டங்களிலான கமிட்டிகளைக் கலைத்துள்ளது.

Ashok gehlot with Govind Singh Dotasara
Ashok gehlot with Govind Singh Dotasara
Photo: Twitter / ashokgehlot51

இந்தத் தருணத்துக்காக இத்தனை நாள் காத்துக்கொண்டிருந்த பா.ஜ.க-வினர், எங்கள் கட்சியில் வந்து சேருங்கள் என்று சச்சினுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சச்சின் பைலட் பா.ஜ.க-வின் கைப்பாவையாகச் செயல்பட்டுவருகிறார் என்ற காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது போலத்தான் தெரிகிறது. ஆனாலும், பா.ஜ.க-வில் தாம் சேரப்போவதில்லை என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-வில் சேரப்போவதில்லை என்று முடிவுசெய்துவிட்டால், ஹரியானா பா.ஜ.க அரசின் பிடியிலிருந்து வெளியேறி, அவர்களுடனான அனைத்துவிதமான பேச்சுவார்த்தைகளிலிருந்தும் விடுவித்துக்கொண்டு தாய்வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜிவாலா வேண்டுகோள் விடுத்துள்ளார். சச்சின் பைலட் தன் தவறுகளை உணர வேண்டும். அவருக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சச்சின் பைலட் இளம் வயதுக்காரர் தானே… முதல்வர் பதவிக்கு ஏன் அவர் இவ்வளவு அவசரப்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். அசோக் கெலாட்டுக்கு வயதாகிவிட்டது. இந்த முறையுடன் அவரது அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வரப்போகிறது. அடுத்த தேர்தலில் சச்சின் பைலட்தான் ராஜஸ்தானின் தளபதி. சிறிய வயதிலேயே எம்.பி, மத்திய அமைச்சர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர், துணை முதல்வர் என பல முக்கியப் பதவிகளை சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸ் கொடுத்துள்ளது. இளம் வயதான அவர், கொஞ்சம் பொறுமையுடன் இருந்திருக்கலாமே என்ற மூத்த தலைவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால், இன்றைய அரசியல் சூழலை மூத்த தலைவர்கள் ஏன் புரிந்துகொள்ளவில்லை. வயதான பிறகும் ஏன் இன்னும் பதவிக்காக அலைகிறார்கள் என்ற கேள்வியும் நியாயமானதுதான். மூத்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் தங்களின் ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்று கொடுத்த நெருக்கடியால்தான் தலைவர் பதவியையே ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அந்த விஷயத்தை வெளிப்படையாக அவர் போட்டும் உடைத்தார். 40 ஆண்டுக்காலம்… 50 ஆண்டுக்காலம் அதிகார ருசியை அனுபவித்த காங்கிரஸின் மூத்த தலைவர்கள், நாட்டின் இன்றைய அரசியல் சூழலைப் பற்றியோ, காங்கிரஸ் கட்சிக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகளைப் பற்றியோ கவலைப்படாமல், இன்னும் பழைய மனநிலையிலேயே இருப்பது அவர்களுக்கு அழகல்ல. கட்சி எப்படிப் போனால் நமக்கென்ன என்ற சுயநல சுயம்புகளாக மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஜோதிராதித்யா சிந்தியா
ஜோதிராதித்யா சிந்தியா

மத்தியப் பிரதேசத்திலும் இதுதானே நடந்தது. மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றவுடன், இளம் தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா முதல்வராக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், மூத்த தலைவரான கமல்நாத்துக்கு முதல்வர் வாய்ப்பு தரப்பட்டது. அதனால் ஏற்பட்ட அதிருப்தியில் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வுக்குத் தாவிட்டார் ஜோதிராதித்யா. காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த ஓர் இளம் தலைவரை காங்கிரஸ் பறிகொடுத்தது.

அது மட்டுமல்ல, மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலா இப்போது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது? மக்கள் வாக்களித்ததற்கும் தற்போது நடைபெறும் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? மக்களைக் கேவலப்படுத்த இதைவிட வேறு ஒன்று இருக்க முடியுமா? ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் தலைவர்கள் குதிரைபேரத்தின் மூலம் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளை அபகரிப்பது எவ்வளவு கேடுகெட்ட செயல். ஜனநாயகம் என்ற வார்த்தையைச் சொல்வதற்குக்கூட அவர்களுக்குத் தகுதி இல்லை.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு காரணமாக வேலையிழந்த கோடிக்கணக்கான புலம்பெயர்த் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் சொந்த ஊர்களுக்கு 500 கி.மீ, 800 கி.மீ நடந்தே சொந்த ஊர்களுக்குச் சென்றது எவ்வளவு பெரிய கொடுமை. நடந்துசென்ற தொழிலாளர்கள் ஏராளமானோர் நெடுஞ்சாலைகளிலும் ரயில் தண்டவாளங்களிலும் மரணமடைந்தது எவ்வளவு பெரிய துயரம். சீன எல்லையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியிருக்கிறார்கள். நாட்டிலுள்ள இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில் எதிர்க்கட்சி ஆளக்கூடிய மாநில அரசைக் கவிழ்க்க நினைப்பது நியாயமான செயலா?

நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குப் போய்விட்டது; கோடிக்கணக்கான மக்கள் அடுத்த வேலை கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள்; கொரோனாவுக்கு முடிவில்லாமல் மாநிலங்கள் தவித்துக்கொண்டிருக்கின்றன. இவைகளை சரிசெய்வது குறித்த சிந்தனைகளோ செயல்திட்டங்களோ இன்றி, குற்ற உணர்வில்லாமல் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர்களின் செயலுக்கு என்ன பெயர் வைக்கலாம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism