Published:Updated:

பெரும் பின்னடைவில் காங்கிரஸ் கட்சி... இனியாவது விழித்துக்கொள்ளுமா?

Congress party President Sonia Gandhi
Congress party President Sonia Gandhi ( AP / Manish Swarup )

காங்கிரஸ் கட்சியை நம்புவதைக் காட்டிலும், பிராந்திய கட்சிகளை நம்பலாம் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

இந்தியாவிலேயே, அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 1989-ம் ஆண்டுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. காங்கிரஸ் கட்சி. அங்கே அரியணை ஏறி கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் ஆகி விட்டன. பீகாரில் 1990-ம் ஆண்டுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகவில்லை. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில், எமர்ஜென்சிக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி காணாமலேயே போய்விட்டது. சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்தபோது, தமிழ்நாட்டில் கடைசி காங்கிரஸ் முதல்வர் இருந்தார். 1967-ம் ஆண்டு, சென்னை மாகாண முதல்வராக பக்தவச்சலம் பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள்தான் தமிழகத்தில் ஆட்சி புரிந்து வருகின்றன. இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியாவில் 28 மாநிலங்களில் 18 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம்
உத்தரப் பிரதேச மாநிலம்

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய சரிவை கண்டுள்ளது. 1980-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 380 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியால் 2017- ம் ஆண்டு 7 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஒடிசாவில் 20 ஆண்டுகளும் குஜராத்தில் 24 ஆண்டுகளும் காத்திருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு உருவாகவே இல்லை. 1966-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா முழுவதும் 49.2 சதவிகித எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இப்போது, பாதியாகக் குறைந்து 21 சதவிகித எம்.எல்.ஏ-க்களே உள்ளனர். டெல்லியில் தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது 5 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளே உள்ளன. அப்படியென்றால், காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த ஓட்டுகள் என்னவாயிற்று? ஏன்... முஸ்லிம் மக்களிடம் மிதமான அணுகுமுறை கொண்ட காங்கிரஸ் கட்சியை அந்த மக்களும் நிராகரித்துள்ளனர் என்பது டெல்லி தேர்தல் முடிவுகள் வழியாகத் தெரிய வந்துள்ளது.

டெல்லி தேர்தலில் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் வாக்குகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு விழுந்துள்ளன. டெல்லியைப் பொறுத்தவரை, சட்டமன்றத்துக்கு அதிகாரம் குறைவு என்றாலும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற வசதிகளைச் செய்து கொடுக்கும் பொறுப்பு மாநில அரசிடம்தான் உள்ளது. இந்த விஷயத்தில்தான் ஸ்கோர் செய்து மீண்டும் கெஜ்ரிவால் அங்கே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியை அகில இந்திய அளவில் வளர்க்க வேண்டுமென்று கெஜ்ரிவால் கருதினாலும், அதற்கு வாய்ப்பு மிக குறைவு என்பதை அறிந்துகொண்ட பிறகு, அவர் தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டார். முழுவதுமாக டெல்லி மக்களின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இதன் காரணமாகவே, பாரதிய ஜனதா கட்சியை ஆம் ஆத்மியால் மண்ணை கவ்வ வைக்க முடிந்தது. காங்கிரஸ் கட்சியைத் துடைத்து எறியவும் முடிந்தது. பொதுவாக, பட்டியலின மக்கள் ஆதரவு, சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவு போன்ற விஷயங்களைக் காங்கிரஸ் கட்சி தன் கையில் எடுத்து அரசியல் செய்து வந்தது. இப்போது, மாநிலக் கட்சிகளும் இத்தகையை விஷயத்தைக் கையில் எடுத்துவிட்டன. விளைவாக காங்கிரஸ் கட்சியை நம்புவதைக் காட்டிலும், பிராந்திய கட்சிகளை நம்பலாம் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக மாநில கட்சிகள் வளர்ச்சியடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி

காங்கிரஸ் கட்சி போலவே ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும் டெல்லியில் செல்வாக்கு இருந்தது. பாரதிய ஜனதா கட்சிக்கு அங்கு 42 சதவிகித வாக்கு வங்கியும் இருந்தது. ஆனாலும், பதவிக்கு வந்த பிறகு, குறுநில மன்னர்கள்போல எம்.எல்.ஏ-க்கள் முதல் அமைச்சர்கள் வரை நடந்துகொள்வது, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்துகொள்ளாத தன்மை, ஆணவப் போக்கு காரணமாக டெல்லியில் தேசிய கட்சிகள் இரண்டுமே மக்களின் ஆதரவை இழந்து நிற்கின்றன என்பதே உண்மை. காங்கிரஸ் கட்சித் தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ``சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, பிராந்தியக் கட்சிகள் வலுவான இடத்தைப் பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, வெளிப்படையாக, இந்த பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணமுடியவில்லை” என்கிறார்.

இந்தியாவை பொறுத்தவரை, தற்போது பாரதிய ஜனதா கட்சிதான் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகள் சேர்ந்தாலுமே, பாரதிய ஜனதா கட்சியை ஒன்றும் செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திறமையும் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ராகுல் அல்லது சோனியாவின் தலைமையை மம்தா உள்ளிட்ட பிற தலைவர்கள் ஏற்றுக்கொள்ளும் மன நிலையிலும் இல்லை. தமிழ்நாட்டில் வெற்றிடம் இருக்கிறதோ இல்லையோ, காங்கிரஸ் கட்சியில் நிச்சயம் வெற்றிடம் இருப்பதாகவே தெரிகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

டெல்லியில் இத்தனை வன்முறைச் சம்பவங்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தன் கருத்துகளை பதிவிடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றனர். நாட்டில் இரண்டாவது பெரிய தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இதைத்தாண்டி வேறு எதுவும் செய்யும் திறமை இல்லையா என்கிற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுகிறது.

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி குறித்து பாரதிய ஜனதா கட்சியினரிடத்தில் கருத்து கேட்டால், ``காங்கிரஸ் கட்சியே தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டுள்ளது'' என்கிறார் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன். மேலும் அவர் கூறுகையில், ``ஒரே தலைமையை நம்பி அதன் வழியில் கட்சியை நடத்துகிறார்கள். `மறுபடியும் மீண்டும் வருவார் ராகுல்' என்று சொல்கிறார்களே தவிர, `காங்கிரஸ் கட்சிக்குள் அடுத்த ஒரு தலைவரை அடையாளம் காட்டுகிறோம்' என்று சொல்ல திராணியில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நடந்த ஊழல்களை இப்போதும் மக்கள் மறந்துவிடவில்லை. கடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி சீட்டுகளின் எண்ணிக்கையில் தோற்றாலும்கூட , வாக்கு சதவிகிதம் அதிகமாகிக் கொண்டுதான் வந்துள்ளன. தென்னிந்தியாவை பொறுத்தவரை கர்நாடகா, கேரளா, தெலங்கானாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்கு சதவிகிதம் தொடர்ந்து அதிகாரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும்தான் தேசிய கட்சியான பா.ஜ.க ஆளும் கட்சியாகவோ எதிர்க்கட்சியாகவோ இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை அமைப்பதற்காக அனைத்து வழிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

தேர்தல் நேரத்தில் ரஃபேல் ரஃபேல் என்று கூவினார்கள். இப்போது கூட சி.ஏ.ஏ பற்றி தவறான பிம்பத்தை மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி கொண்டு செல்கிறது. இந்த அரசின் நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைப் பார்த்து பயந்து காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் இத்தகைய தவறுகளைச் செய்கின்றன. இந்திய மக்கள் இதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதனால்தான் காங்கிரஸ் கட்சி தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் கட்சி என்கிறேன். அடுத்த தேர்தலில் மட்டுமல்ல 2034-ம் ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சிதான் இந்தியாவை ஆளும். இந்தியாவில் காங்கிரஸ் vs மற்ற கட்சிகள் என்கிற நிலை மாறி பாரதிய ஜனதா vs மற்றவர்கள் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 14 ஆண்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிதான்'' என்று அடித்துச் சொல்கிறார்.

காங்கிரஸ் கட்சி எந்த இடத்தில் தேங்கி நிற்கிறது; நிவர்த்தி செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து அந்தக் கட்சியின் மாநில ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணாவிடம் பேசியபோது, ``இந்தக் குடியுரிமை சட்டத் திருத்தம், நாடு முழுவதும் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து இந்தியர்களுமே இது குறித்து கவலையடைந்துள்ளனர். பொருளதார தேக்க நிலை, அதனால் ஏற்பட்ட வளர்ச்சியின்மை, வேலையில்லா திண்டாட்டம் , குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் காரணமாக மூடி மறைக்கப்பட்டுள்ளன. மதரீதியாக மக்களை அணி திரட்டுகிற மோடி, அமித் ஷாவை மக்கள் ஆட்சியிலிருந்து அகற்றுவார்கள். காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் ராகுல் காந்தி தலைவராக நிச்சயம் மீண்டும் பொறுப்புக்கு வருவார். காங்கிரஸ் கட்சியை வல்லமைமிக்க இயக்கமாக மாற்றுவார். அவருக்கு ஏற்பட்டுள்ள தயக்கத்தை நீக்கி, நரேந்திர மோடியை எதிர்கொள்ள உரிய தயாரிப்புடன் மீண்டும் வருவார்.

கோபண்ணா
கோபண்ணா
``காங்கிரஸ் கட்சியை இனிமேல் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்!’’ - வருந்தும் பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரஸ் கட்சியைக் காக்க வேண்டிய பொறுப்பு அவருக்குள்ளது. அந்தக் கடமையை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். டெல்லி கலவர சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் காங்கிரஸ் கட்சி சிறப்பாகச் செயல்படவில்லை என்று சொல்ல முடியாது. திங்களன்றுகூட நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் உத்வேகத்துடன் செயல்படும். கடந்த முறை பணமதிப்பிழப்பு நீக்கம், ஜி.எஸ்.டி பாதிப்பு போன்ற பிரச்னைகளை புல்வாமா, பாலோகோட் போன்ற விவகாரங்களில் திசை திருப்பி மோடி வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், தொடர்ந்து மதரீதியாக மக்களை அணி திரட்டி வெற்றி பெற்று விட முடியாது. மக்கள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. இது பாரதிய ஜனதா கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கியதற்கான அடையாளம். நாட்டின் பொருளதார வளர்ச்சி 4.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கொரோனா தாக்குதல் காரணமாக இன்னும் வளர்ச்சி விகிதம் குறையும் என்று சொல்கிறார்கள். ரயில்வே போலீஸில் 12,000 பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதை வேலையில்லா திண்டாட்டத்திற்கு உதாரணமாகச் சொல்லலாம். மத அரசியலைக் கையில் எடுத்து நாட்டை சீரழிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்'' என்கிறார்.

எதிர்க்கட்சிகள் வலுவாக இருப்பது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு மிக அவசியமான ஒன்று. காங்கிரஸ் மக்களோடு இன்னும் நெருங்கி மீண்டு வர என்ன முயற்சிகள் செய்யவிருக்கிறது என்பதுதான் நம் முன் இருக்கும் கேள்வி!

அடுத்த கட்டுரைக்கு