Published:Updated:

எழுவர் விடுதலை முதல் நீட் வரை - அ.தி.மு.க-வுக்குத் தக்காளிச் சட்னி... தி.மு.க-வுக்கு ரத்தமா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

பி.டி.ஆரின் வார்த்தைகள் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதையே பொட்டில் அறைந்தாற்போல உணர்த்துகின்றன.

‘உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளிச் சட்னியா’ என்கிற வடிவேலுவின் பிரசித்திபெற்ற காமெடியைப் பார்த்திருப்போம். அது போன்ற ஒரு காட்சிதான் தற்போது தமிழக அரசியலில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ‘ஸ்டாலின்தான் வர்றாரு, விடியல் தரப் போறாரு’ என்கிற பாடலைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பி, மக்களின் ஆதரவோடு ஆ ட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க அரசு, கடந்த அ.தி.மு.க அரசில் குறைசொன்ன பலவற்றையும் தானும் செயல்படுத்திக்கொண்டிருப்பது கடுமையான விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் 5 ரூபாயையும், டீசல் விலையில் 4 ரூபாயையும் குறைப்போம் என்று தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. இதைச் சுட்டிக்காட்டி சமீபத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஆவேசமடைந்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “வாக்குறுதி கொடுத்தோம். அதை நிறைவேற்ற தேதி சொன்னோமா?” எனப் பொறுப்பில்லாமல் பதிலளித்தார். பி.டி.ஆரின் வார்த்தைகள் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதையே பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்துகின்றன. இது போன்ற மேலும் சில விஷயங்களைப் பார்ப்போம்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

எழுவர் விடுதலையில் பழைய பல்லவி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில், சட்டப் பிரிவு 161-ன்படி மாநில அரசுக்குதான் உரிய அதிகாரம் இருக்கிறது. நீதிமன்றம் வழிகாட்டியபடிதான் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதில், ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழக அரசே விடுதலை செய்யலாம் எனக் கடந்த ஆட்சியில் போர்க்குரல் எழுப்பிவந்த தி.மு.க., தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியதோடு கடமையை முடித்துக்கொண்டது. கடந்த ஆட்சியில், எழுவர் விடுதலை தொடர்பான மனுவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பியபோது, ‘அது மாநில அரசின் உரிமை மீறல், அரசியலமைப்புக்கு எதிரான செயல்பாடு’ எனக் கொந்தளித்த தி.மு.க-வினர், தற்போது இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் விவகாரம் ஜனாதிபதிக்குத்தான் இருக்கிறது என ஆளுநர் செய்த செயலுக்கு, வலுசேர்க்கும் விதமாகத்தான் நடந்துகொள்கின்றனர். அ.தி.மு.க அரசும் இதைத்தான் செய்தது.

சொல்லப்போனால், ஜெயலலிதாவே செய்யத் துணியாத விஷயத்தைச் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அமைச்சரவையைக் கூட்டி, ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினார். ஆனால், ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து எழுவரையும் விடுதலை செய்ய அவர் முன்வரவில்லை. அதற்கு மத்திய பா.ஜ.க-வின் தயவில் அ.தி.மு.க அரசு இருந்ததே காரணம். இதை அடிமை அ.தி.மு.க அரசு என வெளிப்படையாக தி.மு.க-வினரும் அப்போது கண்டித்தனர். ஆனால், தற்போது தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சிக்கு வந்திருக்கிறது. மத்திய பா.ஜ.க-வின் தயவும் தேவையில்லை. சொல்லப்போனால் அரசியல் களத்தில் பா.ஜ.க-வுக்கு சிம்மசொப்பனமாகத் தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் தி.மு.க., ஏழு பேரையும் விடுதலை செய்ய சட்டரீதியாகவும் சிக்கல் எதுவும் இல்லை என முன்னாள் நீதியரசர்கள் வழிகாட்டியும், இன்னும் கடிதம் எழுதும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறது.

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

டாஸ்மாக் விவகாரத்தில் தள்ளாட்டம்!

அடுத்தது டாஸ்மாக். கொரோனா முதல் அலையின்போது, நாற்பது நாள்கள் அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகளை மீண்டும் திறக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தபோது, தி.மு.க மிகக் கடுமையாக எதிர்த்தது. ‘குடிகெடுக்கும் பழனிசாமி அரசு’ எனக் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மட்டுமல்ல, மது ஆலைகளையும் மூட உத்தரவிடுவோம்’ என்றெல்லாம் தி.மு.க-வினர் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், நாளொன்றுக்கு பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாகிவந்த நேரத்தில், மதுக்கடைகளைத் திறந்தது தி.மு.க அரசு. ஊரடங்கால் பெருவாரியான மக்கள் வேலையில்லாமல் பொருளாதாரரீதியாகக் கடுமையாகச் சிரமப்பட்டுவந்த வேளையில், மதுக்கடைகளைத் திறப்பது அவசியம்தானா எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இதற்கு விளக்கமாக, ‘கள்ளச்சாராயம் பெருகிவிடக் கூடாது, மதுக்கடைகளை அடைத்துவிட்டால் பொருளாதாரத்துக்கு என்ன செய்வது?’ எனக் காலம் காலமாக அரைத்த மாவையே அரைத்து விளக்கமளிக்கிறது தி.மு.க தரப்பு. பொருளாதாரத்துக்கு மாற்று வழிகளை மகளிர் அமைப்புகள் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் வேளையில், அதையெல்லாம் கணக்கில்கொள்ளாமல், மற்ற தளர்வுகளைப்போல்தான் டாஸ்மாக் மதுக்கடை திறப்பும் என முதல்வர் அளிக்கும் விளக்கம் தமிழகப் பெண்கள் மத்தியில் முகச்சுளிப்பையே உண்டாக்கியிருக்கிறது. 4,000 ரூபாயை நிவாரண நிதியாகக் கொடுப்பதுபோலக் கொடுத்துவிட்டு, மதுக்கடைகள் மூலம் மீண்டும் அரசே எடுத்துக்கொள்வது எந்தவிதத்தில் நியாயம் எனப் பெண்கள் கேள்வி எழுப்புவதில் நியாயம் இல்லாமல் இல்லை. அதுமட்டுமல்லாமல், மதுக்கடை திறப்பை எதிர்த்துப் போராடும் சமூக ஆர்வலர்களை வீட்டுச் சிறையில்வைக்கும் வேலையையும் தி.மு.க அரசு செய்யத் தொடங்கியிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடந்த மே 10-ம் தேதி முதல் ஜூன் 13-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கும் மேலாக மதுக்கடைகள் மூடித்தான் கிடந்தன. மது கிடைக்காமல் உடல்ரீதியான பாதிப்படைந்து யாரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல, கள்ளச்சாராயம் பரவலானால் அதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆளும் அரசாங்கத்திடம்தான் உள்ளது. அதைக் காரணமாகச் சொல்லி, மதுக்கடைகளைத் திறப்பதை எப்படி ஏற்பது? ‘தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் நாங்கள் மதுக்கடைகளைத் திறக்காமல்தானே இருக்கிறோம்’ என ஆளும் தரப்பினர் ‘பொறுப்பாக’ பதில் தருகிறார்கள். ஆனால், மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும் 27 மாவட்டங்களை நோக்கி, பிற மாவட்ட மக்கள் செல்வதையும், அதனால் அங்கும் தொற்றுப் பரவும் அபாயம் இருப்பதையும் கடந்த சில நாள்களாகப் பார்க்க முடிகிறது.

கொரோனா மரணங்களில் குளறுபடி!

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ‘'கொரோனா மரணங்கள் குறித்து நாங்கள் ஆய்வுசெய்வோம்’’ என்றார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதத்துக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கை எதிலும் இறங்கியதாகத் தெரியவில்லை. சென்னை உயர் நீதிமன்றமும், ``கொரோனா காலத்தில் மரணமடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் `இறப்புச் சான்றிதழ்களை’ நிபுணர் குழுவைக்கொண்டு தமிழ்நாடு அரசு ஆய்வுசெய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

கிராமங்களில் நிகழும் கொரோனா மரணங்கள் கணக்கிலேயே வருவதில்லை. காரணம், மாநகரங்கள், நகரங்களில் உள்ளதைப்போல பரிசோதனை செய்யும் வசதிகள் கிராமங்களில் போதிய அளவில் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. அதனால், பலர் காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, வீட்டிலேயே சுயமருத்துவம் எடுத்துக்கொண்டு, நிலைமை முற்றிப் போனபிறகுதான் மருத்துவமனைகளுக்கே வருகிறார்கள். அதனால், பலர் மரணமடைந்தும் போகிறார்கள்.

கொரோனா மரணங்கள்
கொரோனா மரணங்கள்
Representational Image

கிராமங்களில் மட்டுமல்ல, சென்னை, திருச்சி, வேலூர், கரூர், திருப்பூர், மதுரை உள்ளிட்ட ஆறு மாநகரங்களில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து அறப்போர் இயக்கம் நடத்திய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன. மதுரை இராசாசி அரசுப் பொது மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை, திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட ஆறு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், கடந்த 2019 ஏப்ரலில் அரசு வெளியிட்ட மரணங்களின் எண்ணிக்கையைவிட, 2021-ல் நிகழந்த மரணங்களின் எண்ணிக்கை 892 அதிகம். ஆனால், கொரோனாவால் மரணமடைந்திருப்பதாக அரசு வெளியிட்ட எண்ணிக்கை வெறும் 66 மட்டுமே. அதேபோல. 2019 மே மாதம், நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கையைவிட, 2021-ல் நிகழந்த மரணங்களின் எண்ணிக்கை 6,370 அதிகம். ஆனால், கொரோனாவால் மரணமடைந்திருப்பதாக அரசு வெளியிட்ட எண்ணிக்கை வெறும் 797 மட்டுமே.

அதாவது, ஆய்வு செய்யப்பட்ட ஆறு மருத்துவமனைகளில் ஏப்ரல், மே மாதங்களில் சராசரியாக 2,000 மரணங்கள்தான் நடக்கும். ஆனால், தற்போது,7,262-ஆக அது அதிகரித்திருக்கிறது. ஆனால், அரசு சார்பில், 863 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆறு மருத்துவமனைகளிலேயே இந்தநிலை என்றால், தமிழகம் முழுவதுமுள்ள 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் நிலை என்ன?’ என்கிற அதிர்ச்சிகரமான கேள்வியை அறப்போர் இயக்கம் எழுப்பியிருக்கிறது.

‘’கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும், அதற்கான உண்மையான காரணங்களுடன் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் யார் என்பதற்கான அளவீடு திருத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதேபோல் புதிய அளவீட்டின்படி கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும்’’ என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இந்த கொரோனா மரணங்கள் குறித்தான குளறுபடியை அரசு கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

அடங்கிய ஆவேசம் நீளும் நீட் விவகாரம்!

தேர்தல் பிரசாரத்தின்போது, வீதிக்கு வீதி ’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்துசெய்வோம்’ என உத்தரவாதம் தந்தது தி.மு.க. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் அது இடம்பெற்றிருந்தது. ஆனால் தற்போது, நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வு உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்றுச் சேர்க்கை முறை மற்றும் சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருக்கிறார்.

நீட் தேர்வால் கடந்த சில ஆண்டுகளில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியாதா... அப்படித் தெரியாது என்றால் நீட் தேர்வு ரத்துசெய்யப்பட வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்தியதும், `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்துசெய்வோம்’ என வீராவேசம் காட்டியதும் வெறும் அரசியலுக்குத்தானா என்கிற கேள்வியும் எழுகிறது. கடந்த அ.தி.மு.க அரசும் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என நீதிமன்றம் சென்றது. பிரதமருக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். ஆனால், ‘துணிச்சலான நடவடிக்கைகளில் அ.தி.மு.க அரசு இறங்கவில்லை... அடிமை அரசு’ என அ.தி.மு.க அரசாங்கத்தை தி.மு.க-வினர் குறை சொன்னார்கள்.

இந்திய ஒன்றிய அரசு விவகாரம்: `சிறுபிள்ளைத்தனம்' vs `இந்தியா ஒரு நாடு. தேசமல்ல' | பாஜக vs திமுக

இந்த விமர்சனங்களிலிருந்து தப்பிப்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து ஓரளவுக்கு டேமேஜைச் சரிக்கட்டினார் எடப்பாடி பழனிசாமி. அதே ரூட்டில், தற்போது அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. எடப்பாடி அரசு 7.5 சதவிகிதத்தை கேடயமாகப் பயன்படுத்தியதைப்போல, தற்போது ஸ்டாலினின் அரசு 2.5 சதவிகிதத்தைக் கேடயமாகப் பயன்படுத்தப் பார்க்கிறது. ‘நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என ஆவேசமாகக் களம் இறங்கிய தி.மு.க-வினர், தற்போது ஆட்சிக்கு வந்ததும், `இந்த ஆண்டாவது தடை வாங்குவோம்’ எனக் கீழிறிங்கி வந்திருக்கின்றனர்.

கொரோனா முதல் அலையின்போது மின்கட்டண வசூலை எதிர்த்து போராட்டம் நடத்திய தி.மு.க., ‘ஆறு மாதங்களுக்காவது மின் கட்டணச் சலுகைகளை வழங்கிட வேண்டும்’ என்றார்கள். இப்போதோ தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், மின் கட்டணம் செலுத்த சில நாள்கள் மட்டுமே கால அவகாசம் கொடுத்துவிட்டு, இனி கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை எனக் கறார் காட்டுகிறார்கள்.

நீட் தேர்வு மையம்
நீட் தேர்வு மையம்
File Photo

அ.தி.மு.க ஆட்சிக்கும் தி.மு.க ஆட்சிக்கும் கட்சிப் பெயரில் இருக்கும் அண்ணாவைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை என்பதைத்தான் மேற்கண்ட விஷயங்கள் தெளிவுபடுத்துகின்றன. தமிழ்நாடு, ஒன்றிய அரசு என சொல்லாடல்களில் காட்டும் வீரத்தைக் கொஞ்சம் செயலிலும் காட்டினால், உண்மையாகவே மாநில சுயாட்சியைக் கட்டிக் காக்கும் இயக்கமாக தி.மு.க-வை மக்கள் ஏற்பார்கள்!

அடுத்த கட்டுரைக்கு