Published:Updated:

மீளும் வாழ்வாதாரம், மீண்டும் கொரோனா - எப்படி எதிர்கொள்ளப்போகிறது தமிழக அரசு?

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் நாளொன்றுக்கு இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 3.7 லட்சத்தையும் தாண்டிச் சென்றது. நோய் பாதிப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப்போட்டது. மக்கள் கொரோனா பேரிடரில் ஒரு பக்கம் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், இன்னொரு பக்கம் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்து தவிக்கும் நிலை உருவானது. முதல் அலையில் ஒரு மாநிலம்விட்டு, தங்களின் சொந்த மாநிலங்களுக்கு மக்கள் நடந்தே சென்ற காட்சிகளையெல்லாம் நாம் பார்த்தோம்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கொரோனா பேரிடர் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கும் கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தன. இந்தக் காரணங்களால், நாட்டில் பல்வேறு தொழில்கள் அப்படியே முடங்கின. உள்ளூர் தொழிலாளர்கள் முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டனர். முதல் அலை முடிந்து அனைத்தும் சரியாகி மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பும் நிலையில், இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. இரண்டாம் அலையின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் பெருமளவு அதிகரித்துக் காணப்பட்டன. மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 36,000 வரை சென்ற கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாகப் படிப்படியாகக் குறைந்துவந்தது. தொற்று எண்ணிக்கை குறைவதை அடுத்து தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகளையும் அரசு வழங்கியது. ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்ட சில தினங்களில் தமிழகம் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பியது. தளர்வுகள் வழங்கப்பட்டதும் அந்தப் பகுதிகளில் சற்று தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், தமிழகத்தில் மக்கள் கடைகளுக்கும், பொது இடங்களுக்கும் கூட்டம் கூட்டமாகச் செல்ல ஆரம்பித்தனர். மக்கள் சிலர் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருந்ததையும் நம்மால் காண முடிந்தது. இதன் விளைவாக, தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா தொற்று சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

கட்டுப்பாடுகளுக்கு முன் ரங்கநாதன் தெரு
கட்டுப்பாடுகளுக்கு முன் ரங்கநாதன் தெரு

தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளை வழங்கியிருந்தாலும், தற்போது கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாவட்டங்களின் நோய்த் தொற்றின் தன்மைக்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களுக்குத் தமிழக முதல்வர் அனுமதி வழங்கியிருக்கிறார். இந்த அனுமதியை அடுத்து, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும், நோய்ப் பரவல் தன்மைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்திவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு தற்போது மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், அரசு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருப்பது அவர்களின் வாழ்க்கையை மீண்டும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கியப் பகுதியாக ஒன்பது இடங்களைக் கண்டறிந்து ஒரு வாரத்துக்கு அந்தப் பகுதிகளிலுள்ள கடைகளைத் திறக்க சென்னை மாநகராட்சி தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை ரங்கநாதன் தெருவில் கடைவைத்துள்ள முத்துக்குமார் என்பவரிடம் பேசினோம். ``இந்தப் பகுதியைப் பொறுத்தவரை மாலை நேரங்களிலும், வார இறுதி நாள்களிலும்தான் அதிக வியாபாரமே நடக்கும். இந்த கொரோனா வந்ததிலிருந்தே பாதியளவு வியாபாரம்கூட நடைபெறுவதில்லை. எனக்குப் பரவாயில்லை, சாலையில் கடை வைத்திருக்கிறேன். வாடகை பிரச்னை கிடையாது. வாடகை இடத்தில் கடை வைத்திருப்பவர்கள் வியாபாரமே இல்லாமல் கடைக்கு எப்படி வாடகை கொடுப்பார்கள்? எப்படி வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுப்பார்கள்?" என்றார்.

மெள்ள மெள்ள அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; - மூன்றாவது அலையைத் தடுக்க தமிழக அரசு தயாரா?
கடந்த ஞாயிறு  அன்று ரங்கநாதன் தெரு
கடந்த ஞாயிறு அன்று ரங்கநாதன் தெரு

மேலும், ``எல்லாம் கொஞ்சம் சரியாகி கடையைத் திறந்தோம். மீண்டும் இரண்டாவது அலை என்று கடையை மூடச் சொல்லிவிட்டார்கள். இரண்டாம் அலை ஒரு முடிவுக்கு வந்து கடையை மீண்டும் திறந்தோம். மாநகராட்சி ஊழியர்கள் கண்டிப்பாகக் கடையில் இருக்கும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று சொன்னார்கள். நாங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். இப்போது பத்து நாள்கள் கடையை மூட வேண்டும் என்று சொன்னால், ஓரளவுக்கு வியாபாரம் நடப்பதே சனி, ஞாயிறு மற்றும் மாலை வேளைகளில்தான். அந்த நாள்களிலும் கடையை மூடிவிட்டால் நாங்கள் எப்படித் தொழில் செய்வது? கொரோனாவைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு எங்களின் வாழ்வாதாரமும் முக்கியம்தானே? அன்றைக்கு ஏதாவது வியாபாரம் நடந்தால் மட்டுமே எங்களுக்கு வாழ்க்கை ஓடும். மூன்றாவது அலை வேறு வருகிறது என்று கூறுகிறார்கள். அரசு எங்களின் நிலைமையையும் கருத்தில்கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரமாவது கடையைத் திறக்க அனுமதி வழங்கவேண்டும்" என்றார்.

தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மருத்துவத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``மூன்றாவது அலை ஏற்படாமலிருக்க அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அனைத்து மருத்துவக் கட்டமைப்பும் தயார் நிலையில் உள்ளன. அண்மையில் தமிழக முதல்வர் நோய்ப் பரவலின் தன்மைக்கு ஏற்ப அந்தந்தப் பகுதிகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கினார். தமிழகம் முழுவதும் நோய்ப் பரவலின் தன்மை தொடர்ந்து கண்கணிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அரசு சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது" என்றார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

தொடர்ந்து பேசியவர், ``அரசு தற்போது பல்வேறு தளர்வுகளை வழங்கியிருக்கிறது. இந்தத் தளர்வுகள் அனைத்துமே மக்களின் நன்மைக்காக மட்டுமே. தமிழகத்தில் கொரோனா தொற்று முழுமையாகச் சரியாகிவிடவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். இன்றளவும் பல்வேறு இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியால் இருப்பதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. அந்த இடத்தில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் அது இன்னொருவருக்கு, அவரின் மூலம் மற்றொருவருக்கு என்று பரவிக்கொண்டேதான் இருக்கும். அந்தப் பரவும் சங்கிலியை உடைப்பது மக்கள் கையில் மட்டுமே உள்ளது. அதற்கு மக்கள் அனைவருமே அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு