Published:Updated:

`காஷ்மீர்' ரகசியம் காத்த மூவரும்... மூன்றை இரண்டாக்கிய இறுதி முடிவும்!

திங்களன்று இந்த மசோதா அவைக்கு வரும் முன்பு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதுவரை காஷ்மீர் விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது அரசு என்று மூத்த கேபின்ட் அமைச்சர்களுக்குக்கூடத் தெரியாது. இந்த மசோதாவில் உள்ள ஷரத்துகளை அதுவரை தெரிந்திருந்தவர்கள் அந்த மூவர் மட்டுமே.

`காஷ்மீர்' ரகசியம் காத்த மூவரும்... மூன்றை இரண்டாக்கிய இறுதி முடிவும்!

திங்களன்று இந்த மசோதா அவைக்கு வரும் முன்பு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதுவரை காஷ்மீர் விவகாரத்தில் என்ன செய்யப் போகிறது அரசு என்று மூத்த கேபின்ட் அமைச்சர்களுக்குக்கூடத் தெரியாது. இந்த மசோதாவில் உள்ள ஷரத்துகளை அதுவரை தெரிந்திருந்தவர்கள் அந்த மூவர் மட்டுமே.

Published:Updated:

`காஷ்மீர்' ஒரே நாளில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் வார்த்தையாக மாறிவிட்டது. கடந்த வாரத்தின் இறுதியிலேயே காஷ்மீர் குறித்த சர்ச்சைகள் டெல்லியில் ஆரம்பமாகிவிட்டன. அப்போதே காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு ஏதோ செய்யப்போகிறது என்று எதிர்க்கட்சிகள் கவனிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அடுத்த சில நாள்களிலேயே இப்படி ஓர் அதிரடியான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீருபூத்த நெருப்பாக இருந்துவந்த காஷ்மீர் விவகாரத்துக்கு இந்த சட்டத்திருத்தம் நிரந்தரத்தீர்வாக அமைந்துவிடுமா என்கிற கேள்வியும் பொதுவெளியில் எழுந்துள்ளது.

மோடி - அமித்ஷா
மோடி - அமித்ஷா

காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமே இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முதலில் குரல் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான். அந்த அமைப்பின் தலைவராக இருந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி 1953-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாகக் கைதுசெய்யப்பட்டார். அடுத்த சில நாள்களில் அவர் காஷ்மீரில் மரணம் அடைந்தார். அப்போதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பும், அன்றைக்கு அரசியல் கட்சியாக இருந்த ஜனசங்கமும் காஷ்மீர் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்தன. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளைக் கடந்தபிறகு அவர்களின் போராட்டத்துக்கு அவர்களே இறுதித்தீர்ப்பையும் எழுதியிருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபற்றி டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசினோம்...

"கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையில் பி.ஜே.பி தேர்தலை எதிர்கொண்டபோதே அவர்களது தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் தன்னாட்சி அதிகாரம் ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பின்னணியாக இருந்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்றும் பேசப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த பலமுறை பி.ஜே.பி முயன்றது. ஆனால், அப்போது காஷ்மீரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு செயல்பாட்டில் இருந்ததால் அந்தத்திட்டத்தை அப்போது அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், கடந்த ஆண்டு காஷ்மீரில் மெகபூபா முக்தி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதற்கு பின்னணியே தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்வதுதான் என்று இப்போது தெரிகிறது. அதற்கு பின் ஆளுநர் ஆட்சியே அங்கு நடைபெற்று வருகிறது. மறுபுறம் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் அசுர பலத்தோடு பி.ஜே.பி ஆட்சியைப்பிடித்தது. இதைவிட நல்ல சந்தர்ப்பம் காஷ்மீர் விஷயத்தில் கிடைக்காது என்ற முடிவுக்கு பி.ஜே.பி வந்தது.

அஜித் தோவல்
அஜித் தோவல்

இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும்போதே என்னென்ன மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று மோடியும், அமித் ஷாவும் பட்டியலிட்டுவிட்டனர். அதில் முக்கியமானது, காஷ்மீர் விவகாரமாகும். முதலில் முத்தலாக் சட்ட மசோதவை நிறைவேற்றிவிட்டு, அதற்கு கிடைக்கும் ஆதரவைப்பொறுத்து காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டுவரலாம் என்று திட்டமிட்டிருந்தனர். அதேநேரத்தில் `காலம் தாழ்த்தாமல் இந்த மசோதாவை நிறைவேற்றுங்கள்’ என்று பிரதமரிடம் அறிவுறுத்தியது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம். அதற்குப் பிறகு கடந்த வாரத்தில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றிய பிறகு, அன்றிரவே பிரதமர் மோடியுடன் அமித் ஷா தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, உடனடியாக பாதுகாப்புத்துறையின் செயலாளர் அஜித் தோவலை அழைத்துள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கெனவே முன் அனுபவம் உள்ள தோவலிடம் நீண்டநேரம் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக முதலில் அங்கு பாதுகாப்பை அதிகரிப்பது என்றும், அங்கிருக்கும் வெளி மாநிலத்தவரை வெளியேற்றுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

அப்போது காஷ்மீர் மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கலாம் என்று மோடி, அமித் ஷா முடிவு செய்துள்ளனர். காஷ்மீர், ஜம்மு, லடாக் என்று மூன்று பகுதிகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு திட்டவரைவுகள் அமித் ஷா அலுவலகத்தில் தயார் செய்யப்பட்டது. முழுவிவரமும் ஆர்.எஸ்.எஸ் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து சில திருத்தங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக "மூன்றாகப் பிரிக்க வேண்டாம். ஜம்முவில் இந்துக்கள் அதிகமாகவும், காஷ்மீரில் முஸ்லிம்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள். இரண்டையும் தனித்தனியாக பிரித்தால் இந்து - முஸ்லிம் பிரச்னை உருவாகிவிடும். நம் நோக்கம் அதுவல்ல. காஷ்மீர் இந்தியாவின் அரசியல் அமைப்புக்குக் கட்டுப்பட்ட பகுதியாக இருப்பது மட்டுமே நம் நோக்கம்” என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது. அதற்குப்பின்பே மூன்றாகப்பிரிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவுக்கு அமித் ஷா வந்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தமைமை அலுவலகம்
ஆர்.எஸ்.எஸ் தமைமை அலுவலகம்

திங்களன்று இந்த மசோதா அவைக்கு வரும் முன்பு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நடைபெறும்வரை காஷ்மீர் விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது அரசு என்று மூத்த கேபினட் அமைச்சர்களுக்குக்கூடத் தெரியாது. இந்த மசோதாவில் உள்ள ஷரத்துகளை அதுவரை தெரிந்திருந்தவர்கள் மோடி, அமித் ஷா, தோவல் ஆகிய மூவர் மட்டுமே. அமைச்சரவைக் கூட்டத்தில் கூட அமித் ஷா விரிவாக இதைப்பற்றி பேசவில்லை. சட்டத்திருத்தம் மட்டுமே கொண்டு வரப்போகிறோம் என்று சொல்லிக் கூட்டத்தை முடித்துவிட்டார்’’ என்றனர்.

மூன்று பேருக்குத் தெரிந்த ரகசியத்தினால்தான் எதிர்க்கட்சிகள் கடைசிவரை என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒரே நாளில் இந்த மசோதாவைக் கொண்டுவந்து ராஜ்யசபாவில் நிறைவேற்றிவிட்டனர். லோக்சபாவில் இன்று இந்த மசோதா நிறைவேற்றப்படவுள்ளது. ஏற்கெனவே லோக்சபாவில் அதீத உறுப்பினர்களின் பலம் பி.ஜே.பிக்கு இருப்பதால் அங்கு இந்த மசோதா நிறைவேறுவதில் எந்தத் தடங்கலும் ஏற்பட வாய்ப்பேயில்லை. புதன் கிழமை அன்று இந்தச் சட்டத்திருத்தம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

அதற்குப் பிறகு இந்தச் சட்டத்திருத்தம் முழுவடிவம் பெற்று அமலுக்கு வந்துவிடும். மசோதா நிறைவேறினாலும் அது செயல்பாட்டுக்கு வரும்போது ஏற்படப்போகும் சிக்கலை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளும் என்கிற கேள்வியும் உள்ளது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அறுபதாண்டு கனவு இப்போது நிறைவேறிவிட்டது என்ற பூரிப்பில் உள்ளது நாக்பூரில் உள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகம்.