Published:Updated:

24 நாள் சேலஞ்ச்! - புறப்படும் புதுமுகங்கள்...

புறப்படும் புதுமுகங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
புறப்படும் புதுமுகங்கள்...

இதுவரை நடந்த தேர்தல்களிலெல்லாம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணியை முடிவுசெய்து, தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டுத்தான் பிரசாரத்துக்கே கிளம்புவார்கள்.

24 நாள் சேலஞ்ச்! - புறப்படும் புதுமுகங்கள்...

இதுவரை நடந்த தேர்தல்களிலெல்லாம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணியை முடிவுசெய்து, தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டுத்தான் பிரசாரத்துக்கே கிளம்புவார்கள்.

Published:Updated:
புறப்படும் புதுமுகங்கள்...
பிரீமியம் ஸ்டோரி
புறப்படும் புதுமுகங்கள்...

‘வாக்காளப் பெருமக்களே’, ‘போடுங்கம்மா ஓட்டு...’ ‘பனமரத்துல வெளவாலா... அண்ணனுக்கே சவாலா!’ போன்ற கோஷங்களை இந்தமுறை கேட்க முடியவில்லை. வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய மார்ச் 12-ம் தேதி முதல் பிரசாரத்துக்கு இறுதி நாளான ஏப்ரல் 4-ம் தேதி வரை 24 நாள்களே உள்ள நிலையில், வாக்காளர்களின் மனதில் புதிய வேட்பாளர்கள் இடம்பிடிப்பதே குதிரைக்கொம்பாக மாறியிருக்கிறது. இந்தக் கடினமான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் களத்துக்கு வந்திருக்கும் புதிய வேட்பாளர்கள்?

அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘இதுவரை நடந்த தேர்தல்களிலெல்லாம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னரே கூட்டணியை முடிவுசெய்து, தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டுத்தான் பிரசாரத்துக்கே கிளம்புவார்கள். ஆனால், இந்தமுறை எல்லாம் தலைகீழ்! கூட்டணித் தொகுதிப் பங்கீடு முழுமையாக முடியும் முன்பாகவே, கட்சித் தலைவர்கள் மட்டும் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். இதில் பாவப்பட்ட நபர்கள், புதிய வேட்பாளர்கள்தான்!

சரவணன் வைரமுத்து,  சீனிவாஸ் திவாரி,  ரவீந்திரன் துரைசாமி
சரவணன் வைரமுத்து, சீனிவாஸ் திவாரி, ரவீந்திரன் துரைசாமி

முந்தைய சட்டமன்றத் தேர்தல் வரைகூட தேர்தல் என்றாலே திருவிழாபோலத்தான் இருக்கும். ஒரு தொகுதியில் யார் வேட்பாளர் என்பது அந்தத் தொகுதி மக்களுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடும். தேர்தலுக்குப் பல நாள்களுக்குப் முன்பே பிட் நோட்டீஸ், சைக்கிள் பிரசாரம், திண்ணைப் பிரசாரம், சுவர் விளம்பரங்கள் எழுதுவது, வீடு வீடாகச் சென்று ஓட்டுச் சேகரிப்பது எனத் தெருவுக்குத் தெரு தேர்தல் களம் பரபரக்கும். தற்போது போஸ்ட்-கொரோனா, கொரோனா இரண்டாம் அலை போன்ற பிரச்னைகளால், பிரசாரங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், பெரிய கட்சி மற்றும் சிறிய கட்சிகளின் புதிய வேட்பாளர்கள், சிறு கட்சிகளை நடத்தும் வேட்பாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த 24 நாள்கள் போதவே போதாது. தொகுதி முழுக்க வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது பெரும் சிரமம். ‘வெறும் ஐந்து பேர் மட்டுமே வீடு வீடாகப் பிரசாரம் செய்ய வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதால், கும்பலைக் கூட்டிக்கொண்டு தெருத் தெருவாக நடந்தபடியோ, வாகனங்களில் அணிவரிசையாக சென்றபடியோ பிரசாரம் செய்ய முடியாது. புதுமுகங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு டிஜிட்டல் பிரசாரம்தான். ஊடகங்களில் புதியவர்கள் குறித்துச் செய்தி ஏதேனும் வந்தால்தான் உண்டு. இப்படிக் கண்மூடித் திறப்பதற்குள் நாள்கள் ஓடிவிடும்’’ என்றார்கள்.

‘‘இருக்கும் குறைவான நாள்களில் புதிய வேட்பாளர்களுக்குத் தொகுதியைப் பற்றிய முழுமையான தகவல் திரட்டுவதற்கு நேரம் போதாது. ‘எங்கு பிரசாரத்தைத் தொடங்கி எங்கு முடிப்பது, தொகுதிக்குள் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன, முந்தைய எம்.எல்.ஏ சொன்னதும் செய்யத் தவறியதும் என்னென்ன?’ என எது குறித்தும் முழுமையான டேட்டாவை அவ்வளவு சீக்கிரம் திரட்ட முடியாது. இந்த இடத்தில்தான் பொலிட்டிகல் அனலிஸ்ட் எனப்படும் அரசியல் வியூக அமைப்பாளர்களின் தேவை எழுகிறது’’ என்ற கருத்தும் அரசியல் பார்வையாளர் களால் முன்வைக்கப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர், சுனில், ஜான் ஆரோக்கியசாமி போன்றோர் கட்சிகளுக்காக மட்டுமே வியூகம் அமைக்கிறார்கள். இந்தநிலையில்தான் தனிப்பட்ட முறையில் வேட்பாளர் களுக்காக மட்டுமே வியூகம் அமைத்துக் கொடுக்கும் அனலிஸ்ட்களின் எண்ணிக் கையும் தமிழகத்தில் கூடிவிட்டது. சாம், சுரேஷ், சரவணன், சீனிவாஸ் திவாரி உள்ளிட்டோர் களத்தில் இருக்கிறார்கள். குறைந்த காலமே இருக்கும் அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு வேட்பாளர்களுக்காக அவர்கள் பரபரக்கிறார்கள்.

‘ரீஃபாம் இந்தியா’ சி.இ.ஓ சரவணன் வைரமுத்து நம்மிடம், “பெரும்பாலும் வெளிநாட்டினரும் வடமாநிலத்தவர்களும் இருக்கும் வியூக அமைப்புத்துறையில், தமிழகத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம். புது வேட்பாளர்களுக்குக் குறைந்த நாள்களே இருப்பதால், பூத்வாரியாக மைக்ரோ ஸ்ட்ராட்டஜியை மேற்கொள்வோம். அதாவது, ஒரு பூத்துக்கு 23 பேரை நியமிப்போம். அதில் ஒருவர் இன்சார்ஜ், இருவர் பூத்தில் இருப்பார்கள். மீதமுள்ள 20 பேருக்கும் வாக்காளர்கள் குறித்த டேட்டாக்களைக் கொடுப்போம். பூத்தில் ஆயிரம் வீடுகள் இருக்கு மென்றால், அந்த 20 பேரும் அதை முழுமையாக கவர் செய்வார்கள். இவற்றுடன், சமூக ஊடகங்களும் வேட்பாளர்களுக்குக் கைகொடுக்கும். ஏனெனில், கிராமங்களில்கூட 40 சதவிகித பேரிடம் ஆண்ட்ராய்டு மொபைல் உள்ளது. இந்த இரண்டு வழிகள்தான் புதுமுகங்களுக்கான வாய்ப்புகள்’’ என்றார்.

24 நாள் சேலஞ்ச்! - புறப்படும் புதுமுகங்கள்...

‘பிட்டாக்’ சீனிவாஸ் திவாரியிடம் பேசியபோது, ‘‘இந்தக் காலகட்டத்தில் 60 சதவிகிதம் டிஜிட்டல் வழியிலும், 40 சதவிகிதம் களத்தின் வழியிலும் வேட்பாளர்களை புரொமோட் செய்து வருகிறோம். தொகுதிக்குத் தொகுதி பிரச்னைகள் மாறும் என்பதால், அந்தந்தத் தொகுதி குறித்த முழுமையான டேட்டாவைக் கொடுத்தாக வேண்டும். இளம் வாக்காளர்களைக் கவரும் விதமாக தொகுதிக்குத் தேவையான தொலைநோக்குத் திட்டங்களையும் கொடுத்தாக வேண்டும். குறுகிய காலத்தில் இவற்றைச் செய்து முடிப்பது தான் எங்களுக்கான சவால்’’ என்றார்.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியோ, ‘‘தேர்தலுக்குக் குறைவான நாள்களே உள்ளதில் ப்ளஸும் உள்ளது; மைனஸும் உள்ளது. புதிய வேட்பாளர்களுக்கு நேரம் போதாது என்பது மைனஸ். ஒவ்வொரு நாளும் மிகுதியான பணத்தை விழுங்கக்கூடியது தேர்தல். குறைந்த நாள்களே இருப்பதால், வேட்பாளர் களின் செலவும் பாதியாகக் குறையும் என்பது ப்ளஸ்” என்றார்.

எவ்வளவுதான் கடுமையாகக் களப்பணி செய்தாலும், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் தோற்றதும் உண்டு. புதுமுகங்கள் வெற்றிபெற்ற வரலாறும் உண்டு. இந்தமுறை புதுமுக வேட்பாளர்கள் வெல்வார்களா... மண்ணைக் கவ்வுவார்களா? வாக்காளர்களின் விரல்களே இதற்கான விடையைச் சொல்லும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism