Published:Updated:

எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான ஊழல் புகார்களை ஆன்லைன் மூலம் அனுப்புவது எப்படி..? | Lokpal

லோக்பால் ஆன்லைன் புகார்
News
லோக்பால் ஆன்லைன் புகார்

பிரதமர், எம்.பி, எம்.எல்.ஏ முதல் அரசு ஊழியர்கள் வரை அவர்களின் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த புகார்களை வழங்க லோக்பால் அமைப்பு புதிய இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறது.

கடந்த 1968-ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசு, லோக்பால் மசோதாவைத் தாக்கல் செய்தது. ஆனால், அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. அதன்பின், மொரார்ஜி தேசாய், ராஜீவ்காந்தி தொடங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சி வரை பலமுறை லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டன. இருந்தபோதிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. கடைசியாக, இந்த மசோதாவானது 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பும் உருவாக்கப்படவேண்டும்.

பினாகி சந்திரகோஷ்
பினாகி சந்திரகோஷ்

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி, லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் அமைப்பின் பிற உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த அமைப்பில் நீதித்துறையைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும், நீதித்துறை அல்லாத நான்கு உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள். பிரதமர் முதல் அரசுக்குத் தொடர்புடைய ஆணையம் மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்கள் வரை லோக்பால் அமைப்பு மூலமாக ஊழல் தொடர்பான புகார்களை விசாரிக்கப்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த அமைப்பில் ஊழல் தொடர்பான புகார்களை யார் வேண்டுமென்றாலும் அளிக்கலாம். புகார் வழங்கப்பட்டதும் அந்த புகார் சம்பந்தமாகப் புகார் வழங்கியவரிடம் விளக்கம் கேட்கப்படும். அந்த புகாரை ஆய்வு செய்தபின்னரே முதற்கட்ட விசாரணை நடத்தப்படும். அதோடு, அரசு அதிகாரிகளின் மீது புகார் இருந்தால் அது குறித்த தகவல் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும். முதற்கட்ட விசாரணையானது 60 நாள்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும். விசாரணை முடிந்ததும், சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவரின் உயர் அதிகாரியிடம் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்.

மக்களவை
மக்களவை

எடுத்துக்காட்டாக, ஒரு மத்திய அமைச்சரின் மீது புகார் என்றால் அதுகுறித்து பிரதமரிடம் விளக்கம் கேட்கப்படும். ஒரு துறை சார்ந்த அரசு அதிகாரியின் மீது புகார் என்றால் அந்த துறையின் அமைச்சரிடம் விளக்கம் கேட்கவேண்டும். அதுவே பிரதமரின் மீது ஊழல் புகார் என்றால் அதுகுறித்து மக்களவையில் விளக்கம் கேட்டாக வேண்டும். அதற்குப் பின்னர், மூன்று லோக்பால் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு அந்த அறிக்கையை ஆராயும். அந்த புகார் வழங்கிய நபரிடம் கருத்துக் கேட்டு முழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இவை அனைத்தும் புகார் வழங்கிய 90 நாள்களுக்குள் முடிவடைய வேண்டும். முழு விசாரணை முடிந்த பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த குற்றப்பத்திரிகையை, லோக்பால் அமர்வு ஆய்வு செய்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்காக பதிவு செய்யவோ அல்லது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவோ உத்தரவிடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போதைய நிலையில், லோக்பாலில் ஊழல் குறித்து புகார் வழங்கவேண்டும் என்றால் நேரடியாகவோ, தபால் வழியாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ மட்டுமே புகார் வழங்கமுடியும். லோக்பால் அமைப்புக்குக் கடந்த 2019-20-ம் ஆண்டில் 1,427 புகார்கள் வந்திருந்தன. இந்த புகார்களின் எண்ணிக்கை 2020-21-ம் ஆண்டு வெறும் 110 என்ற அளவுக்குக் குறைந்திருந்தது. இந்த அளவுக்கு எண்ணிக்கை குறைந்ததற்குப் பொதுமக்களிடத்தில் இந்த அமைப்புக்கு எப்படி புகார் வழங்கவேண்டும் என்பது குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம் என்று கூறப்பட்டது.

லோக்பால்
லோக்பால்

புகார் வழங்குவதை எளிமைப்படுத்த சமீபத்தில் lokpalonline.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. ``அரசு ஊழியர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான புகார் மீது லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா 2013 சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆன்லைன் புகார் வசதி மூலம் பெறப்படும் மனுக்கள் மீது விரைவான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். நடவடிக்கை அனைத்தும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது உறுதிசெய்யப்படும்" என்று லோக்பால் அமைப்பின் தலைவர் பினாகி சந்திரகோஷ் கூறியிருக்கிறார்.

புகார் தெரிவிப்பது எப்படி!

lokpalonline.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று, நமக்கென்று ஒரு பயனாளர் கணக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதில், புகார் வழங்கும் பக்கத்துக்குள் சென்று, அந்த முதற்பக்கத்தில் கேட்கப்படும் நமது விவரங்களைப் பூர்த்தி செய்யவேண்டும். அடுத்த பக்கத்தில் நாம் யார் குறித்து ஊழல் அல்லது முறைகேடு புகார் வழங்கவேண்டுமோ அந்த நபரின் பதவி மற்றும் விவரங்கள் அதோடு ஊழல் புகார் தொடர்பான விவரங்களையும், ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவேண்டும். அனைத்து விவரங்களையும் பூர்த்திசெய்துவிட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது என்பதற்கு மெசேஜ் மற்றும் இ-மெயில் மூலமாகத் தகவல்கள் வரும். புகாரின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நாம் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

நாம் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் ஒவ்வொரு கட்டம் குறித்த தகவலும் புகார் வழங்கியவருக்குத் தொடர்ந்து மெசேஜ் மற்றும் இ-மெயில் மூலமாக வரும். அதோடு, இறுதித் தீர்ப்பு நகலும் அனுப்பிவைக்கப்படும். தற்போது லோக்பால் அமைப்பில் ஊழல் தொடர்பான புகார்களை இணையத்தில் வழங்கலாம் என்பதன் மூலம் பொதுமக்கள் எங்கிருந்தாலும் மிக எளிமையாகப் புகார் வழங்க வாய்ப்பிருக்கிறது. மேலும், ஒவ்வொரு புகார்களும் உரிய ஒரு கால அளவுக்குள் விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதினால் கால தாமதம் எதுவுமின்றி விசாரணை விரைவாக நடத்தி முடிக்கப்படும். தமிழக லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் பதவி வகித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.