Published:Updated:

#WelcomeModi-யா... #GoBackModi-யா... என்ன செய்யப்போகிறார்கள் தமிழ் ட்விட்டர்கள்?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

கடந்த 2018ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதன்முதலாகப் பதிவிடப்பட்ட #GoBackModi ஹேஷ்டாக், 10 நாள்களுக்கு முன்பு, மோடி சென்னை வந்த போது மீண்டும் ட்ரெண்ட் ஆனது. சீன அதிபரை மோடி சந்திப்பது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும்போது, இம்முறை பிரதமர் மோடிக்கு வரவேற்பு இருக்குமா?

1950ம் ஆண்டு தமிழ்நாட்டின் அரசியல் களம் மத்திய அரசின் இந்தித் திணிப்புக் கொள்கை மீது கடுமையாக எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்தது. அந்த ஆண்டின் ஏப்ரல் 6 அன்று, அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தமிழ்நாடு வந்தார்; ஜூலை 16 அன்று, அன்றைய பிரதமர் நேரு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இருவருமே, கறுப்புக் கொடிகளையும், 'வெளியேறு!' என்ற முழக்கத்தையும் எதிர்கொண்டனர்.

1953 -ம் ஆண்டு, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களை 'நான்சென்ஸ்' என்றார் நேரு. தமிழகம் வந்த நேருவுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்கள் தி.மு.க -வினரால் முன்னெடுக்கப்பட்டன. 1977-ம் ஆண்டு, எமர்ஜென்சி காலத்தைக் கண்டித்து, மதுரை வந்த இந்திரா காந்தி தி.மு.க-வினரின் எதிர்ப்புகளைச் சந்தித்தார். கறுப்புக் கொடி காட்டப்பட்டதோடு, 'இந்திரா காந்தி வெளியேற வேண்டும்!' என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்
இந்தி எதிர்ப்புப் போராட்டம்

தமிழர்களின் உணர்ச்சிகளின் மீது மத்திய அரசு கை வைப்பதாக, தமிழக மக்கள், தமிழ்நாட்டுக் கட்சிகள் உணரும் போதெல்லாம், அந்நேரத்தில் தமிழகம் வரும் மத்திய அரசுப் பிரதிநிதிகள் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகின்றனர். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

2018-ம் ஆண்டு, ஏப்ரல் 12 அன்று, காஞ்சிபுரம் மாவட்டம் திருவடந்தையில் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காக, தமிழ்நாடு வந்தார் பிரதமர் மோடி. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்னை உச்சகட்டத்தில் இருந்த நேரம் அது. விமான நிலையத்தில் மோடி வந்து இறங்கும் போதே, அ.தி.மு.க., பி.ஜே.பி ஆகிய கட்சிகளைத் தவிர மற்ற பிரதான கட்சிகள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தன. ட்விட்டரில், #GoBackModi என்ற ஹேஷ்டாக் முதன்முதலில் ட்ரெண்ட் ஆனது.

 #GoBackModi
#GoBackModi

முதலில் சென்னை அளவில், பிறகு இந்திய அளவில் என ட்ரெண்ட் ஆன அந்த ஹாஷ்டாக், உலகளவில் 'டாப் ட்ரெண்டிங்' பட்டியலில் இடம்பெற்றது. ஏறத்தாழ 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்களுடன் உலகளவில் முதல் இடத்தைப் பெற்றது #GoBackModi ஹேஷ்டாக். ஒவ்வொரு ட்வீட்டிலும், காவிரி நதிநீர்ப் பங்கீடு மட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டு, நீட் விவகாரம், விவசாயிகள் பிரச்னை, ஒக்கி புயல் எனப் பல வாழ்வாதாரப் பிரச்னைகள் முன்நின்றன. பி.ஜே.பி.யினர் இதை தி.மு.க.வின் தொழில்நுட்ப அணி ட்ரெண்ட் செய்வதாகக் கூறினாலும், ட்விட்டரில் எந்தக் கட்சியையும் சாராத சாமான்யர்களே பெரும்பாலும் ட்ரெண்ட் செய்துகொண்டிருந்தனர்.

2019ம் ஆண்டு, ஜனவரி மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டும் விழாவுக்கு வந்தார் பிரதமர் மோடி. அதன்பிறகு, பிப்ரவரி 10 அன்று திருப்பூரில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவும், பல்வேறு நலத் திட்டங்களை வழங்கவும் தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. மீண்டும் மார்ச் 1 அன்று கன்னியாகுமரிக்கும், மார்ச் 6 அன்று சென்னை வண்டலூருக்கும் பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி.

Twitter trends
Twitter trends

இந்தப் பயணங்கள் ஒவ்வொன்றிலும், பிரதமர் மோடியை எதிர்த்து #GoBackModi ஹேஷ்டாக் தமிழகத்திலிருந்து, உலகளவிலும், தேசிய அளவிலும் ட்ரெண்ட் ஆனது. ஒவ்வொரு முறையும் பி.ஜே.பி.யின் தொழில்நுட்ப அணி, #TNWelcomesModi என்று பதில் ட்வீட்களைப் பதிந்தது. எனினும், பி.ஜே.பி.யினரின் ஹேஷ்டாக், #GoBackModi ஹேஷ்டாக்கை முந்தவில்லை.

2019 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று, மோடி தமிழகம் வந்த போது, விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அப்போது #WelcomeBackAbhinandhan என்பதையும், மோடிக்கு எதிரான ஹேஷ்டாக்கையும் ஒரே நேரத்தில் ட்ரெண்ட் செய்தது தமிழ் ட்வீட் உலகம்.

இரண்டாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மோடி முதல்முறையாக கடந்த செப்டம்பர் 30 அன்று சென்னை ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள வந்தார். இந்தி மொழி பற்றி அமித் ஷா பேசிய கருத்துகள் தமிழகத்தில் எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த அந்த வேளையில், மீண்டும் #GoBackModi ட்ரெண்ட் ஆனது. உலகளவில் டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது அந்த ஹேஷ்டாக்.

Twitter trends
Twitter trends

இந்தியா - சீனா இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மாமல்லபுரத்திற்கு வரலாற்று ரீதியாக சிறப்பான இடம் உண்டு. இதைக் கணக்கில் கொண்டு, இரு நாட்டுத் தலைவர்களும் சந்திக்கும் இடமாக மாமல்லபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பை, உலகமே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இப்படியான சூழலில், பிரதமர் மோடி தமிழகம் வரப்போவதைத் தமிழ் ட்வீட்டுலகம் வரவேற்குமா, அல்லது வழக்கம்போல் இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, வேலையின்மை, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை முன்வைத்து மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்குமா என்பது நாளை தெரியும்.

அடுத்த கட்டுரைக்கு