Election bannerElection banner
Published:Updated:

பெண்களை மையப்படுத்தும் தேர்தல் வாக்குறுதிகள்! - என்ன நினைக்கின்றனர் பெண் வாக்காளர்கள்?

பெண் வாக்காளர்களின் கருத்து
பெண் வாக்காளர்களின் கருத்து

`எங்களுக்கான பாதுகாப்பைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆட்சியாளர்கள் அதற்கு வேண்டியதைச் செய்தாலே போதும்’ - தேர்தல் அறிக்கை குறித்து பெண் வாக்காளர்களின் கருத்து.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, பல கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த முறை மகளிர்நலனுக்காக நிறைய செயல்திட்டங்கள் வகுத்திருக்கிறார்கள். மகளிர் ஊக்கத்தொகை 1,500 ரூபாய், இலவச வாஷிங் மெஷின், திருமண உதவித்தொகை அதிகரிப்பு, ஒரு வருடப் பேறுகால விடுப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு பயணச் சலுகை, அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு எனப் பட்டியல் நீள்கிறது.

பெண்கள் நலனுக்காக இத்திட்டங்கள் கொண்டுவரப்படவிருப்பதாகக் கட்சிகள் கூறினாலும், தேர்தல் ஆதாயத்துக்காகவும், பெண்கள் வாக்குவங்கியைக் கைப்பற்றுவதற்காகவும்தான் இந்தத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன என வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பெண் வாக்காளர்கள் தேர்தல் அறிக்கையை எவ்வாறு பார்க்கிறார்கள்... அவர்கள் என்னென்ன திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்காக அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினோம்.

யோக பிரியா
யோக பிரியா
யோக பிரியா - உடற்கல்வி ஆசிரியர், கோயம்புத்தூர்.

``பெண்களுக்கான உதவித்தொகையைத் தருவதன் மூலம் பெண்களின் இன்னல்கள் தீர்ந்துவிடப்போவதில்லை. ஏனென்றால், இன்று வரையிலும் அன்றாட உணவுக்கே வழியில்லாத குடும்பங்களிலும், குடும்பத் தலைவர்களின் மதுப் பழக்கத்தால் குடும்பம் சீரழிந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, இவர்கள் தருகிற 1,000, 1,500 என்பது மீண்டும் வந்த வழியாக மதுபான கடைக்குச் சென்றுவிடும். சிலிண்டர் விலை தாறுமாறாக விலையேற்றத்தைக் கண்டுவிட்டது. பெண்களின் மனம் கவரும் வகையில் வருடத்துக்கு 6 சிலிண்டர் இலவசம் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இலவசம் என்று தருவதைவிட விலையைக் குறைத்துக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்களுக்கான பாதுகாப்பைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆட்சியாளர்கள் அதற்கு வேண்டியதைச் செய்தாலே போதும்.”

தமிழரசி ராஜா - பட்டதாரி, உடுமலைப்பேட்டை
தமிழரசி ராஜா
தமிழரசி ராஜா

பெண்களுக்கான வாக்குறுதிகள் என்று கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஏன் வாக்குறுதிகளை வைத்து மட்டும்தான் இவர்களால் ஓட்டு வாங்க முடியுமா? ஒரு பெண்தான் குடும்பத்தின் தலைவியாக இருக்கிறார், ஆகையால் அவரை மையப்படுத்தி வாக்குறுதிகளை அளித்து ஓட்டுகளைக் கவரலாம் என்ற நோக்கத்தில்தான் தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்கின்றனர். குறிப்பிட்டுச் சொல்லப்போனால், பெண்களுக்கு ஸ்கூட்டர், கிரைண்டர், மிக்ஸி தற்போது புதிதாக வாஷிங் மெஷின் தருவதாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு இது எதுவுமே தேவையில்லை. எங்களுக்குத் தேவை என்பது தற்காப்பு! இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை என்பது அதிகரித்துக்கொண்டே போகிறது இவ்வாறான குற்றங்களிலிருந்து பெண்களைக் காத்திட முழுமையான ஒரு சட்டம் மட்டுமே எங்களுக்கு வேண்டும். பெண்களின் நலன் காக்கும் சட்டங்களைத் திட்டமாகக் கொண்டுவருவதை நான் வரவேற்கிறேன். இலவசத்தைக் கொடுத்து பெண்களைக் கவர்ந்துவிடலாம் என்று எண்ணுவது மிகவும் தவறு.”

ரம்லா ஃபாத்திமா - பட்டதாரி, கன்னியாகுமரி.

`` இந்த மாதிரி தேர்தல் அறிவிப்புகள் ஒரு மாதிரி பரபரப்பையும் பேச்சையும் உண்டாக்கும். அதனால கட்சிகளுக்கு விளம்பரம் கிடைக்கும். இவங்க கொடுக்கிற இலவசத்துக்காகல்லாம் ஓட்டு போடுவாங்கன்னு சொல்லிட முடியாது. இப்போதைக்கு இலவசங்கள் தவிர்த்து, விலைவாசி குறைக்கிறது, வேலை வாய்ப்பை அதிகப்படுத்துறது, கல்வியைச் சமநிலைக்கு உயர்த்துவது இதெல்லாம் வேணும்னா நிச்சயம் ஹெல்ப் பண்ணணும். முன்னாடி மாதிரி யாரும் படிப்பறிவில்லாமல் இல்லை. எல்லாருமே பக்குவமா சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்க.”

அதிமுக-வின் வாஷிங் மெஷின் வாக்குறுதி வாக்காளர்களைக் கவருமா?#TNElection2021
காயத்ரி - தனியார் நிறுவன ஊழியர், சென்னை.

`` குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தொறும் ஊதியம் தருவது குறித்த செய்தி பெரிதாக அனைவர் மத்தியிலும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளிலுள்ள இட ஒதுக்கீட்டைச் சரிவர அவர்களுக்குக் கிடைக்கச் செய்வது, உண்மையில் பெண்கள் வளர்ச்சிக்கான திட்டமாக அமைய முடியும். சிலர், `வேலைக்குப் போகும் சூழல் அனைத்துப் பெண்களுக்கும் இன்னும் கிடைக்கவில்லையே... அத்தகைய பெண்களுக்கு இது உதவுமே’ என்கின்றனர். ஆனால், சற்று சிந்தித்துப் பார்த்தால் வேலைக்குப் போகும் சூழல்கூட இன்னும் பெறாமல் அடிமைப்பிடியில் இருக்கும் பெண்களின் நிலை எப்படி இருக்கும்... இந்த உதவித் தொகை உண்மையில் அவர்களுக்குப் போய்ச் சேருமா என்றால் நிச்சயம் இல்லை. அது அவர்களின் கணவனிடமே செல்லும். அப்படியிருக்க இந்தத் திட்டம் என்பது ஆண்களுக்குப் பயன் தருமே தவிர பெண்களுக்கு இதனால் ஒரு நன்மையையும் கிடைக்கப்போவதில்லை.”

பாரதி - கல்லூரி மாணவி, மதுரை.

``இந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் வரவேற்கத்தக்க நல்ல திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. என்னைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருள்கள் அனைவரிடமும் இருப்பது நல்லதுதான். ஆனால் வாக்குச் சேகரிக்க இம்மாதிரியான சலுகைகள் தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 மற்றும் ரூ.1,500 நல்ல விஷயம்தான். இது தனியார்த்துறையில் மாதம் 30,000 சம்பளம் வாங்கும் குடும்ப தலைவிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அவர்களும், அன்றாடத் தேவைகளுக்கு வேலைக்குச் செல்லும் குடும்பத் தலைவிகளும் ஒன்றா? இதற்காக ஒதுக்கிய தொகையில் வறுமையில் வாழும் பெண்களுக்குச் சிறுதொழில் அமைத்துக் கொடுத்து, ‌அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாமே! பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டு தரப்படும் அனைத்தும் இலவசமாக அல்லாமல் மூலதனமாக இருந்தால் சிறப்பு.”

`அரசியல் மாற்றம் வேண்டுமா... எந்த மாதிரியான மாற்றங்கள் வேண்டும்?’ - இளைஞர்களின் பார்வை
மரகதம் - கல்லூரி மாணவி, திருச்செந்தூர்

``பெண்கள் வாக்குகளைக் கவர்வதற்காக, கவர்ச்சிகரமான திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர். மாதம் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை, இலவச வாஷிங் மெஷின் போன்ற திட்டங்கள் அத்தியாவசியமற்றவை. இதன் மூலம் படிக்காத, ஏழை எளிய பெண்களை ஏமாற்றுகிறார்கள். படித்த இளைஞர்கள் இலவசத் திட்டங்களை விரும்புவதில்லை. முன்பெல்லாம் பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை. இப்போது, பெண் வாக்காளர்கள்தான் அதிகம். பெண்கள், தேர்தல் அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இலவசமாக 1,500 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக, பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கலாம். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தலாம்.”

ஆண்ட்ரூ ரம்யா தர்ஷினி - கல்லூரி மாணவி, திருநெல்வேலி.

பெண்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்ட 1,000 - 1,500 ரூபாய் ஊக்கத்தொகை நிச்சயமாக வழங்கப்பட வாய்ப்பில்லை. அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப் பணம் இல்லாத காரணத்தால்தான், ஒவ்வோர் ஆண்டும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள். தமிழகத்தின் கடன் சுமை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒருவேளை இந்தத் திட்டத்தை அமல்படுத்தினாலும், தொடர்ந்து செயல்படுத்த வாய்ப்பில்லை. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தச் சிறு, குறு தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அதிகப்படுத்தலாம். இது போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.”

ஷீலா
ஷீலா
ஷீலா - திறன் மேம்பாட்டு பயிற்றுநர், திருச்சி.

`` தேர்தல் வந்துவிட்டாலே பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுவது கட்சிகளின் தேர்தல் அறிக்கைதான். தேர்தல் அறிக்கை பெரும்பாலும் இலவசங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதாக இருக்கின்றன. இலவசங்கள் நம்மை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்ற தெளிவு நம்மிடையே இருந்தால் மட்டுமே ஒரு தரமான ஆட்சியை அமைக்க முடியும். அரசு இலவசங்களை அள்ளிக்கொடுத்து அவர்களை எதிர்த்துப் பேச விடாமல் செய்வதோடு, நம் உழைக்கும் எண்ணத்தையும் படிப்படியாகக் குறைப்பதையும் மறைமுகமாகக் காண முடியும்.

நாம் தேர்தல் அறிக்கைகளை முதலில் அலசி ஆராய வேண்டும். மக்களின் ஆசைகளைத் தூண்டி அவர்களின் அறியாமையில் வாழ்வதே இன்றைய அரசியல் களம். ஒரு குடும்பம் வாழ இலவசம் வேண்டாம்; வேலைவாய்ப்பு போதும் என்ற விழிப்புணர்வு நம்மிடையே வர வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால் இங்கே அனைத்தும் மாறி இலவசங்களைக் கொண்டாடும் அளவுக்கு மக்கள் மாற்றப்பட்டுவிட்டனர். இனிவரும் தலைமுறையினராவது அறிக்கைகளை மட்டும் பாராமல் அடிப்படை உரிமைகளையும் ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் நாம் யாருக்கு வாக்களிப்பது என்பதே. தெளிவான வாக்கு நமக்குச் செழிப்பான வாழ்வை அளிக்கும். இலவசம் என்னும் மாயையைவிட்டு மக்கள் வெளிவர வேண்டும்.”

அம்ரிதா - கல்லூரி மாணவி, மதுரை.

இலவச வாஷிங் மெஷின், ஆறு இலவச சிலிண்டர்கள் போன்றவை அனைத்துப் பெண்களுக்கும் உதவாது. பேறுகால விடுமுறை நீட்டிப்பு தேவையான ஒன்று. நகரப் பேருந்துகளில் பாதி விலையில் டிக்கெட், அரசு வேலைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, மகப்பேறு உதவித்தொகை அதிகரிப்பு போன்ற அறிவிப்புகள் வரவேற்கக்கூடியவை. சைபர் பாதுகாப்பு அதிகரிப்பது மிக அவசியமானது. பணியிடங்களில் பெண்களுக்கு உயர் பதவிகள் மறுக்கப்படும் பிரச்னைக்குத் தீர்வுகாணும் நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை அளித்தால் நன்றாக இருந்திருக்கும்.”

`தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாயை’ - இளைஞர்களின் அரசியல் பார்வை
நர்மதா - தனியார் நிறுவன ஊழியர், தூத்துக்குடி.

``கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. அப்போதே, இந்தத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றியிருக்கலாமே... பெண்களுக்கு அரசு வேலையில் 40% இட ஒதுக்கீடு, திருமண உதவித்தொகை அதிகரிப்பு என தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்கள். 'வாஷிங் மெஷின்' கொடுத்தால் பெண்கள் வாக்குகளை வாங்கிவிடலாம் என அ.தி.மு.க - வினர் நினைக்கின்றனர். பெண்கள் இனியும் இலவசத்தை நம்பி ஏமாற மாட்டார்கள். பெண்களுடைய வளர்ச்சி, பாதுகாப்புக்கு யார் முக்கியத்துவம் அளிக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.”

2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளைப் பொறுத்தவரை, பெண்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் கலந்திருப்பதை அவர்களிடம் பேசியதிலிருந்து உணர முடிந்தது. பெண்கள் நலன் மீது அரசியல் கட்சிகளுக்கு அக்கறை இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால், தேர்தல் நேரங்களில் மட்டும் அந்த அக்கறை கொஞ்சம் கூடுதலாக இருப்பதைப் பெண்கள் விரும்புவதில்லை என்று அரசியல் செய்வோர் புரிந்துகொள்ள வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு