ஒரு காலத்தில் சர்ச்சைப் பேச்சுகளால் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை ‘லைம்லைட்டில்’ வைத்திருந்த அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ‘தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக’ அறிவித்திருக்கிறார். காரணம் என்னவென்று அறிய, அவரது இல்லத்துக்கே சென்று அவரைச் சந்தித்துப் பேசினேன்...
``கட்சிக்காக உழைத்ததற்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்ற விரக்தியில்தான், தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறீர்களா?’’
``விரக்தியெல்லாம் ஒன்றுமில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வதற்கு, அண்ணாமலையோடு வேறு மூத்த தலைவர்கள் யாரும் இல்லை. அதனால், ஒரு சேவகனாகக் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்கான வேலை செய்யவே இந்த அறிவிப்பு.”
“கவர்னராவதற்காகத்தான், தேர்தல் அரசியலிலிருந்து விலகிவிட்டீர்கள் என்று சொல்கிறார்களே?”
“ஆளாளுக்கு ஒன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். என்னுடைய நிலைப்பாட்டுக்கு நான் சொன்னதுதான் காரணம்.”
``தமிழக பா.ஜ.க-வில் ஆரிய, திராவிட போட்டி நடப்பதாகவும், அதில் திராவிடரான அண்ணாமலை வெற்றி பெற்றுவிட்டார் என்கிறார்களே?”
"ஆரிய படையெடுப்பு பற்றிய கட்டுக்கதைக்கு சரியான இடம் குப்பைத்தொட்டி' என்று டாக்டர் அம்பேத்கர் சொன்ன கருத்தையே இவர்களுக்கு பதிலாக சொல்கிறேன்.”

``தி.மு.க-வினர்மீது ஆதாரபூர்வமாக ஊழல் பட்டியல் இருந்தால், அதை நீதிமன்றத்துக்குத்தானே எடுத்துச் சென்றிருக்க வேண்டும்?”
“முதலில் மக்களிடம் சொல்லிவிட்டு அடுத்து நீதிமன்றத்துக்கு செல்வோம்.”

``இவர்கள் பற்றி ஓரிரு வார்த்தைகளில்...”
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின்
``அவரின் செயல்பாடுகள் பற்றி சொல்வதற்கான காலம் இன்னும் வரவில்லை.”
முதல்வர் ஸ்டாலின்
``அவர் கையில் ஆட்சியில்லை.”
நிதியமைச்சர் பி.டி.ஆர்
``என் தாய்த் தமிழை ரொம்ப கஷ்டப்படுத்துகிறார்.”

அண்ணாமலை
``துடிப்பாகச் செயல்படுகிறார்.”
எடப்பாடி பழனிசாமி
``எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர். அவர் பொதுச்செயலாளராக வந்தது சந்தோஷம்தான்...”

ஓ.பன்னீர்செல்வம்
``மூன்று முறை முதல்வராக இருந்தவர். நிதி அமைச்சராகப் பல ஆண்டுகள் இருந்தவர். நிர்வாகத் திறமை அவருக்கும் இருக்கிறது.”