Published:Updated:

''கோயில் பணத்தில் காலேஜ் கட்டலாமா?'' - ஹெச்.ராஜா அடுத்த அதிரடி

ஹெச்.ராஜா
News
ஹெச்.ராஜா

``பள்ளி திறந்த புதிதில், குழந்தைகளிடமும் கொரோனா தொற்று பரவியதைப் பார்த்துவிட்டோம். எனவே, பொறுமையாக யோசித்துதான் இதில் முடிவெடுக்கவேண்டும். ஆனால், கோயில் அப்படியல்ல...'' என்கிறார் ஹெச்.ராஜா.

`வாரம் முழுவதும் கோயில்கள் திறக்கப்படவேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தியிருந்த நிலையில், தமிழக அரசும் 'அனைத்து நாள்களிலும் கோயில் திறப்பு' அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது!

அரசின் இந்த அறிவிப்புக்குத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவிக்க, கட்சியின் சீனியர்கள் சிலரோ, `இது பா.ஜ.க போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. ஏன் நாம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்?' என்று எதிர்க்கேள்வி எழுப்பிவருகின்றனர். அமைச்சர் சேகர்பாபுவோ, `கோயில்கள் திறப்பு எந்தக் கட்சிக்கும் கிடைத்த வெற்றி அல்ல' என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், `முற்போக்குத் திசையில் பயணித்துவரும் தமிழ்நாட்டிலும்கூட, மதத்தை முன்னிறுத்துகிற அரசியல் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதாக'க் குமுறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கோயில் திறப்பு விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரான ஹெச்.ராஜாவிடம் பேசினேன்...

கோயில் திறக்கக்கோரி போராட்டம்
கோயில் திறக்கக்கோரி போராட்டம்

`` கொரோனா குறைந்தாலும் இன்னும் 3 மாதங்கள் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கிறது மத்திய பா.ஜ.க அரசு. ஆனால், தமிழக பா.ஜ.க-வோ தடையின்றி கோயிலைத் திறக்கவேண்டும் என்கிறீர்களே?''

`` எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சொன்னால், குழந்தைகள் பூங்காவைத் தமிழக அரசு திறந்து விட்டிருப்பதேன்? கொரோனா 3-வது அலை குழந்தைகளைத்தான் அதிகம் பாதிக்கும் என்கிறார்கள். கோயிலுக்குச் செல்பவர்களில் பெருவாரியானவர்கள் வயதான மக்கள்தான். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், 18 வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசியே செலுத்தப்படவில்லை. பாதுகாப்பு உணர்வும் குழந்தைகளுக்குக் கிடையாது. பின்னர் எந்த நம்பிக்கையில் சிறுவர் பூங்காவையெல்லாம் தமிழ்நாடு அரசு திறந்துவிட்டிருக்கிறது?

தமிழ்நாட்டில் மசூதிகளில் வெள்ளிக்கிழமை நமாஸ் நடக்கிறது, ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்குப் போகிறார்கள். ஆனால், இந்து கோயில்களை மட்டும் திறக்கமாட்டோம் என்று தமிழக அரசு சொன்னால், அது மத ரீதியிலான பாரபட்சம்தானே. மத்திய அரசின் வழிகாட்டுதலில், இந்து கோயில்களை மட்டும் திறக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்களா என்ன?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``தடை செய்யப்பட்ட நாளில், எந்த ஊரில் மசூதி, தேவாலயம் திறந்திருந்தது என்றும் சொல்லிவிடுங்களேன்...?''

(சிரிக்கிறார்) ``எங்கேயெல்லாம் சர்ச், மசூதி திறந்திருக்கிறது என்று போட்டோ எடுத்துக்கொண்டு வரவேண்டுமா? கடந்த ஜூலை 24-ம் தேதி திருப்பூர் போன்ற இடங்களில் சாலையிலேயே முஸ்லிம்கள் நமாஸ் செய்தனர்; பக்ரீத் கொண்டாடினார்கள். அண்மையில் தூத்துக்குடியில்கூட பனிமயமாதா கோவில் தேரோட்டம் நடந்தது. இதேபோன்று கட்டுப்பாட்டுடன் இந்து கோயில்களையும் திறந்துவிடச் சொல்லலாம்தானே. அதை விட்டுவிட்டு கோயில் பணத்தை எடுத்து காலேஜ் கட்டிக்கொண்டிருக்கிறதே இந்த அரசு? அது எப்படி செய்ய முடியும்?''

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

`` கோயில் பணத்தில் கல்லூரி கட்டி, மாணவர்களைப் படிக்கவைப்பதென்பது நல்லதுதானே?''

``அரசாங்கம் மதச் சார்பற்றது. ஆனால், இந்து அறநிலையத்துறை என்பது மதம் சார்ந்தது. எனவே, இந்து அறநிலையத்துறை சார்பில், கட்டப்படும் பள்ளி, கல்லூரிகளில் இந்து மதம் சம்பந்தப்பட்ட ஒரு பாடம் கட்டாயமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறது சட்டம். அதை தி.மு.க அரசு செய்யுமா? தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகுதான், பழனி முருகன் கோயில் பணத்தில் கட்டிய கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியரை நியமித்திருக்கிறார்கள். இது மோசடி அல்லவா!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` பா.ஜ.க ஆட்சி செய்கிற உ.பி-யிலேயே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை இருந்ததுதானே?''

`` கட்டுப்பாடு இருந்ததுதான். அதற்காக அங்கே விநாயகர் சிலையை போலீஸார் உடைத்தார்களா... இல்லையே! ஆனால், கரூரில் விநாயகர் சிலையை போலீஸார் உடைத்தார்களே! மகாராஷ்டிரா, புதுச்சேரி மாநிலங்களில் விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதியே கொடுக்கப்பட்டிருந்ததுதானே! ஆக, இந்து மதத்துக்கு எதிராக தி.மு.க அரசு இயங்குகிறது.''

அண்ணாமலை
அண்ணாமலை

`` வாரம் முழுவதும் கோயிலைத் திறக்கக் கோரி போராட்டம் நடத்துகிற தமிழக பா.ஜ.க., பள்ளிக்கூடங்களை வாரம் முழுக்க திறக்கச்சொல்லி போராட்டம் நடத்தவில்லையே ஏன்?''

`` இல்லையில்லை... பள்ளிக்கூடங்களை இப்போதே அப்படித் திறந்துவிட முடியாது. ஏனெனில், இந்த முறை பள்ளி திறந்த புதிதில், குழந்தைகளிடமும் கொரோனா தொற்று பரவியதை பார்த்துவிட்டோம். எனவே, பொறுமையாக யோசித்துதான் இதில் முடிவெடுக்கவேண்டும். ஆனால், கோயில் அப்படியல்ல. அங்கே பெரியவர்கள்தான் வருகிறார்கள். அவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறபோது, தொற்று பரவ வாய்ப்பில்லை!''

`` எல்லா விஷயங்களையும் மத ரீதியிலான பிரச்னையாகவே தமிழக பா.ஜ.க அணுகிவருகிறதே?''

`` தமிழக அரசாங்கம் மத ரீதியாக செயல்படுவதால் நாங்களும் அப்படியே செயல்பட வேண்டியிருக்கிறது. சர்ச் காசை நான் எண்ணமாட்டேன், மசூதியைப் பற்றி கண்டுகொள்ள மாட்டேன்; ஆனால், இந்து கோயில் தங்கத்தை மட்டும் எடுத்துக்கொள்வேன் என்று சொன்னால், அது மத ரீதியாக இருக்கிறதா, இல்லையா?

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை

சென்னை குயின்ஸ்லேன்ட் இடம் கோயில் நிலத்தில் இருக்கிறது என்று இத்தனை நாள்களாக நான் கத்திக்கொண்டேயிருந்தேன். யாரும் என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது நீதிமன்றத் தீர்ப்பே வந்துவிட்டது.

இது போன்று ஒவ்வொரு விஷயத்துக்காகவும் தமிழ்நாடு முழுக்க இருக்கிற 38 ஆயிரத்து 661 கோயில்கள் முன்பாகவும் ஹெச்.ராஜா இதேமாதிரியான போராட்டத்தை நடத்துவான்!''

`` கருணாநிதியைவிடவும் மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என அண்மையில் பேசியிருக்கிறீர்களே... ஏன்?''

`` மு.க.ஸ்டாலின், எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறார். அறிவார்ந்தவர்கள் நிறைந்த விஞ்ஞானிகள் சபையில் போய், `இது உங்கள் அரசாங்கம்' என்று மு.க.ஸ்டாலின் பேசியிருந்தால் நானும் அதை வரவேற்றிருப்பேன். ஆனால், குறிப்பிட்ட மதம் சார்ந்த கூட்டத்தில் போய் நின்று `இது உங்கள் அரசாங்கம்' என்று சொல்கிறார். சில நாட்களுக்கு முன்புதான், `தி.மு.க ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை' என்று ஒருவர் பேசியிருந்தார். எல்லாவற்றையும் தொடர்புபடுத்திப் பாருங்கள் புரியும். அதனால்தான் `மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர்' என்று நான் சொன்னேன்!''

மு.க.ஸ்டாலின் - கருணாநிதி
மு.க.ஸ்டாலின் - கருணாநிதி

`` உ.பி விவசாயிகள் படுகொலையை பா.ஜ.க-வைச் சேர்ந்த வீரேந்தர் சிங், வருண் காந்தி, நடிகை குஷ்பூவும்கூட கண்டித்திருக்கின்றார்களே?''

`` கட்சியில் குறிப்பிட்ட பொறுப்புகளில் இருப்பவர்கள் ஒரு தகவலை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாமல் கருத்து சொல்லக்கூடாது. அதனால்தான் நான்கூட இந்த சம்பவம் குறித்து ஆரம்பத்தில் கருத்து சொல்லவில்லை. உ.பி அரசு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிச்சயம் தண்டிக்கப்படுவர். ஆனால், எதிர்க்கட்சிகள்தான் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு பதவிப் பசிக்காக அவதூறு கிளப்பிவருகின்றனர்.''