Published:Updated:

``திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தியெல்லாம் விஞ்ஞானிகளா?” - புதுச்சேரியில் கொதித்த ஹெச்.ராஜா!

``ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக பேசும் திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தியெல்லாம் விஞ்ஞானிகளா” என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா ( விகடன் )

புதுச்சேரி, தவளக்குப்பத்தை அடுத்த புதுக்குப்பம் மீனவக் கிராமத்தில் பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ``அனைத்துக் கட்சிகளுமே வாரிசு அரசியல் செய்கின்றன. இது ஜனநாயகத்துக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடியது. காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தைவிட்டால் யாருமே இல்லையா? தி.மு.க-வில் கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின், அவருக்குப் பின் உதயநிதி என்றாகிவிட்டது.

பா.ஜ.க
பா.ஜ.க
அ.குரூஸ்தனம்

வெளியில் இருந்து யாராவது ஒருவர் அந்தக் கட்சியில் தலைவராக வர முடியுமா ? அது பா.ஜ.க-வில் மட்டுமே சாத்தியம். மக்களிடம் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தீய சக்திகளுக்கு எதிர்காலத்தில் பாடம் புகட்டப்படும். காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகளை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும். 2-ஜியில் வாங்கிய பணத்தை வைத்து தமிழகம், புதுச்சேரி விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வாரா ஸ்டாலின்? தி.மு.க-வில் எப்போதும் ஒருவழிப் பாதைதான்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நீட் தேர்வில் தமிழகத்துக்கென தனியாக விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. நீட் தேர்வை தமிழக மாணவர்கள் ஆர்வமுடன் எழுதுகின்றனர். இதனால் ஏழை எளிய மாணவர்கள் வெறும் 14,000 கட்டணத்தில் மருத்துவம் படிக்க முடிகிறது. நீட் தேர்வுக்கெதிரான போராட்டம் தமிழகத்தில்தான் அதிகளவில் நடக்கிறது. ஏனென்றால் இங்குதான் மருத்துப்படிப்பை வியாபாரமாக செய்கிறார்கள். தி.மு.க-வில் அண்ணாவுக்குப் பின் கருணாநிதி தலைமைப் பொறுப்புக்கு வந்தபிறகு அந்தக் கட்சி ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதனால்தான் தி.மு.க வாரிசு அரசியல் கட்சி என்று கூறுகிறேன். ஆனால், அ.தி.மு.க அப்படி இல்லை.

உதயநிதி
உதயநிதி
விகடன்

அதேபோல பா.ஜ.க-வில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் பேசும் திருமாவளவன், சீமான், வைகோ, திருமுருகன் காந்தி அனைவரும் விஞ்ஞானிகளா ? மக்களை பீதியடையச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் இவர்கள் பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றமே வைகோ ஒரு தேசத் துரோகி என்று முத்திரை குத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னைக்கு தி.மு.க-தான் காரணம்” என்றார்.