Published:Updated:

``இந்தியா எங்களைக் கடலில் தள்ள முடியாது"- ஈழத்தமிழர் சண் மாஸ்டர் #CAA

சண் மாஸ்டர்
சண் மாஸ்டர்

குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதைப் பற்றி, இலங்கைத் தமிழரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான சண் மாஸ்டரிடம் பேசினோம்.

இந்திய அரசு குடியுரிமை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நள்ளிரவிலே அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் இருந்துவருகின்றன. இதில், இலங்கைத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.

இதைப் பற்றி, இலங்கைத் தமிழரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான சண் மாஸ்டரிடம் பேசினோம்.

``இந்திய அரசு தற்போது நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தில், இலங்கைத் தமிழர்கள் விலக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``இது, மிகவும் வேதனைக்குரிய விஷயம். இலங்கைத் தீவில் சிங்கள பௌத்தப் பேரினவாதத்தால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட தமிழர்கள்தான் அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளார்கள். பாதுகாப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான், இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். இன்று 35 வருடங்களுக்கு மேலாக இந்த மண்ணில் அகதிகள் என்கிற அவல வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, குடியுரிமையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தோம். இந்த வேளையில், இந்திய அரசு கொண்டுவந்துள்ள ஒரு சட்டம் எங்களைப் புறக்கணித்திருப்பது வேதனையாக உள்ளது. குடியுரிமை பெறக் காத்திருப்பவர்களுக்கான விதிகளைத் தளர்த்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு இவ்வளவு காலம் பாதுகாப்பு அளித்த நீங்கள், இனி சகல உரிமைகளோடு வாழ வழிசெய்ய வேண்டும்."

சண் மாஸ்டர்
சண் மாஸ்டர்

``இலங்கைத் தமிழர்கள் அகதிகளா? சட்டவிரோதமாகக் குடியேறியவர்களா?"

``ஒரு தேசத்தில் வாழ பாதுகாப்பற்ற சூழலில், ஒருவன் வெளியேறினாலே அவன் அகதிதான். அகதிகளுக்கு சரியான பாதை, பாதுகாப்பு என்பது கிடையாது. இலங்கையில் தமிழர்கள் இன ஒடுக்குமுறையை எதிர்கொண்டபோது கிடைத்த வழிகளிலெல்லாம் சிதறி, பல தேசங்களுக்கும் ஓடினார்கள். அப்படித்தான் நிற்கதியற்று இந்தியாவுக்கும் வந்தார்கள். அவர்கள் அகதிகள்தான். அவர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்கிற நோக்கில் சிலர் பார்ப்பது வேதனையான விஷயம். 1983-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கையில் தமிழ் மக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள் என நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். அந்த உரையிலும், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் வானொலியில் ஆற்றிய உரையிலும் நம்பிக்கை வைத்துத்தான் `கறுப்பு ஜூலை' கலவரத்துக்குப் பிறகு இலங்கை மக்கள் இந்தியாவுக்கு வந்தனர். 90-களில் நடந்த ராணுவ முற்றுகையின்போது, இந்திய ராணுவம் விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கியது. தமிழர்கள் பாதுகாப்புக்கு ஆயுதப் பயிற்சி ஆளித்தது. இனப்படுகொலை என அங்கீகரித்து, ராணுவப் பாதுகாப்பு வழங்கி, தமிழர் நலனில் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா காட்டிய அக்கறையால்தான் இலங்கைத் தமிழர்கள் நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு வந்தார்கள். 35 வருடமாக எந்த நம்பிக்கையுடன் இந்தியாவில் இருந்தார்களோ, அதே நம்பிக்கையில்தான் தற்போதும் குடியுரிமை கேட்டு நிற்கிறார்கள்."

`இங்குதான் பிறந்தேன்; இலங்கை கலாசாரம் தெரியாது!'-குடியுரிமைச் சட்டத்தால் கலங்கும் சேலம் முகாம் அகதி

``தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை என்னவாக உள்ளது?"

``நாங்கள் 2009-க்குப் பிறகு இங்கு வந்தவர்கள். ஆனால், 80-களிலிருந்தே இங்கு வந்த மூன்று லட்சம் மக்களில், ஒரு லட்சம் மக்கள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக, ஒரு தலைமுறை முழுவதுமாக இந்த மண்ணில் வாழ்ந்துவருகிறார்கள். இந்தச் சூழலில், அவர்கள் இலங்கைக்கு திரும்பச் செல்வதற்கு ஒரு அச்சம் இருக்கிறது. அதற்கு 2009-க்குப் பிறகான சூழல்கள்தான் காரணம். ஐ.நாவே சுட்டிக்காட்டிய பிறகும்கூட இலங்கையில் ஆள்கடத்தல் தொடர்கிறது.

இத்தகைய நிலையில், அங்கு பாதுகாப்பு இல்லாத சூழலில், இந்த மக்கள் அங்கு திரும்புவது எவ்வாறு சாத்தியப்படும். 2015-ல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, இலங்கைத் தமிழர்கள் திரும்ப வருமாறு அரசு அழைப்பு விடுத்தது. இந்திய அரசும் அதற்கு உடன்பாடு தெரிவித்தது. ஆனால், மக்கள் திரும்பிச் செல்ல அச்சம் கொள்கின்றனர். கடலில் செத்தால்கூட போதும். ஆனால் இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் என இங்கு வந்தவர்கள் தமிழர்கள். அவர்களால் அவ்வளவு எளிதாக திரும்பிவிட முடியுமா எனத் தெரியவில்லை.

சண் மாஸ்டர்
சண் மாஸ்டர்

``குடியுரிமை சட்டத்திருத்தத்தைப் பற்றி இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அமைதி காப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளதே?"

``தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் முழுநேர வேலையைச் செய்துகொண்டு இருக்கிறது. இதில், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், இலங்கை அரசும் - இந்திய அரசும் இணைந்து இரட்டைக் குடியுரிமை போன்றதொரு ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்மொழிந்திருக்கிறார். நாங்கள் கேட்பது, திரும்பச் செல்ல வேண்டும் என்பவர்கள் செல்லட்டும். இந்தியாவைத் தங்கள் வீடாகக் கருதி இங்கே இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இங்கேயே குடியுரிமை கொடுங்கள் என்றுதான். அதுதான் மக்களின் குரலாகவும் இருக்கிறது."

`எங்கள் மக்களைத் திரும்பப் பெறுகிறோம்; ஆனால்..!' - குடியுரிமை விவகாரத்தில் வங்கதேசம் அறிவிப்பு

``இலங்கையில், கோத்தபய ராஜபக்சே வெற்றிக்குப் பிறகு நிலைமை என்னவாக இருக்கிறது?"

``இறுதிப் போரில் தமிழர்களைக் கொன்றுகுவித்த தரப்புதான் இன்று இலங்கையில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அதனால் இயல்பாகவே தமிழர்கள் மத்தியில் ஒரு அச்சம் நிலவுகிறது. சமீபத்தில், சர்வதேச மனித உரிமை தினத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பேரணி நடத்தியுள்ளன. தற்போதும் அதே அச்சம் நிலவுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இயக்குநர் களஞ்சியம் தாக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தீவில் பதற்றமான சூழல்தான் நிலவுகிறது. இந்தியா எங்களைக் கடலில் தள்ளமுடியாது. இந்திய அரசுக்கு, தமிழர் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான கடமை இருக்கிறது. அதை அவர்கள் உறுதிசெய்வார்கள் என நம்புகிறோம்."

சண் மாஸ்டர்
சண் மாஸ்டர்

``இலங்கைத் தமிழர்களை விலக்கிவைத்துள்ள சட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவளித்து வாக்களித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார். மத்திய அரசுக்கும் பலமுறை இது தொடர்பாக எழுதியிருந்தார். அவரின் வழியில் ஆட்சியைத் தொடர்வதாகச் சொல்கிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சி, தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை வைக்க வேண்டும். இலங்கை மக்கள் வேதனையுடன் இருக்கிறார்கள். அகதியின் வலி அதை உணர்ந்தால்தான் புரியும். அனைத்துக் கட்சிகளும் இணைந்து, அதை வலியுறுத்த வேண்டும்."

அடுத்த கட்டுரைக்கு