Published:Updated:

``மருத்துவர் ராமதாஸிடம் அரசியல் படித்த மாணவன் நான்!'' - நெகிழும் வேல்முருகன்

தி.வேல்முருகன்

''தமிழ்நாட்டில், சுங்கச்சாவடி என்று சொன்னாலே, வேல்முருகன்தான். நாங்கள்தான் அதற்கான பிராண்ட்! தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கைகளை, நாற்பது ஆண்டுக்கால பா.ம.க-வும் பின்பற்றுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான்!'' என்கிறார் வேல்முருகன்.

``மருத்துவர் ராமதாஸிடம் அரசியல் படித்த மாணவன் நான்!'' - நெகிழும் வேல்முருகன்

''தமிழ்நாட்டில், சுங்கச்சாவடி என்று சொன்னாலே, வேல்முருகன்தான். நாங்கள்தான் அதற்கான பிராண்ட்! தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கைகளை, நாற்பது ஆண்டுக்கால பா.ம.க-வும் பின்பற்றுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான்!'' என்கிறார் வேல்முருகன்.

Published:Updated:
தி.வேல்முருகன்

'வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்தாகியிருப்பதை வரவேற்றும், எதிர்த்தும் தமிழக அரசியல் அரங்கில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், 'உள் இட ஒதுக்கீடு ரத்து சமூகநீதிக்கு எதிரானது' என்று கருத்து தெரிவித்துவரும் 'தமிழக வாழ்வுரிமை கட்சி'த் தலைவர் தி.வேல்முருகனை நேரில் சந்தித்துப் பேசினேன்...

''உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது சமூகநீதிக்கு எதிரானது என எப்படிச் சொல்கிறீர்கள்?''

''வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான நீண்ட நெடிய போராட்டத்தின் பலனாக 1989-ல் '108 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளடக்கி 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில், வன்னியரைத் தவிர, பிற சாதியினர் குறைந்த எண்ணிக்கைகொண்டவர்கள் என்பதால், வன்னியர்கள் பெருமளவில் பயனடைந்துவந்தனர். ஆனால், அதன் பிறகு பெரும்பான்மை எண்ணிக்கையைக்கொண்ட எட்டு சாதியினரையும் இந்தப் பட்டியலுக்குள்ளே கொண்டுவந்துவிட்ட பிறகு, எண்ணிக்கைக்கு ஏற்ற உரிமையைப் பெற முடியாமல் வன்னியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

எனவேதான் வன்னியருக்கென்று உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே எழுந்தது. 'வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்' என்றுதான் கடந்தகாலத்தில் சட்டநாதன் குழு மற்றும் அம்பாசங்கர் குழுக்களும் பரிந்துரைத்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், வன்னியருக்கான உள் இட ஒதுக்கீட்டையே உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பது சமூக அநீதிதானே!''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யப்பட்டிருப்பதன் பின்னணியில் உள்ள அரசியல் நிலவரம் என்ன?''

''சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அந்தவகையில் வன்னியர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்பதெல்லாம் எங்களது நீண்ட நாள் கோரிக்கை. இது குறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் பன்னெடுங்காலமாக நடந்துவந்தன. ஒரு கட்டத்தில், 'வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு' அரசு அட்வகேட் ஜெனரலை நேரில் அழைத்து எச்சரிக்கவே செய்தது உயர் நீதிமன்றம். இதையடுத்து பல்வேறு வன்னிய அமைப்புகளுடன் ஆலோசனை செய்து இட ஒதுக்கீட்டு சட்டத்தை இயற்ற முன்வந்தது அன்றைய அ.தி.மு.க அரசு.

ஆனால், தேர்தலை மனதில்கொண்டு அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கோலமாக 10.5% உள் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை அரைகுறையாக நிறைவேற்றியது. அதனால்தான் 'சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிற வரையில், இடைக்கால நிவாரணமாக 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும்' என்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், வன்னிய மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக, 'இது நிரந்தரமான சட்டம்தான்' எனச் சொல்லி மக்களை ஏமாற்றியது பா.ம.க.

தி.மு.க தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்ததும், அரசாணை வெளியிடக் கோரி நான் உட்பட சமுதாயத் தலைவர்கள் அனைவரும் அழுத்தம் கொடுத்தோம். ஆனால், இப்போது 10.5% இட ஒதுக்கீட்டையே ரத்து செய்திருப்பதாக தீர்ப்பு வெளிவந்துவிட்டது.''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, சரியான தரவுகளோடு மேல்முறையீடு செய்திருந்தால் உள் இட ஒதுக்கீடு ரத்தாகியிருக்காதுதானே?''

''அ.தி.மு.க அரசால் இயற்றப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டத்தை, அரசாணையாக வெளியிட்டு அமல்படுத்தியது தி.மு.க அரசுதான். இப்போது, சட்டம் ரத்தானதாக தீர்ப்பு வந்ததும், 'மு.க.ஸ்டாலின், ஏன் தெளிவான புள்ளிவிவரங்கள் கொடுக்கவில்லை, திறமையான வழக்கறிஞர்களை நியமித்து வாதாடவில்லை' என்றெல்லாம் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள். இரட்டை நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும்.

உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தேவையான தரவுகளை தமிழக அரசு கொடுத்துள்ளது. ஆனால், கடந்தகால அ.தி.மு.க அரசு இயற்றிய சட்டத்தில்தான், 'சட்டம் இயற்றப்படுவதற்கான நோக்க விளக்கக் காரணம்' சரிவரக் குறிப்பிடப்படவில்லை. இதைக் காரணம் சொல்லித்தான், சட்டத்தை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்!''

கருணாஸ்
கருணாஸ்

''வன்னியருக்கு மட்டுமே 10.5% என்றால், மீதமுள்ள 115 சாதியினரும் 9.5% இட ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்று கருணாஸ் கேட்கிறாரே?''

''சமூகநீதியை முழுமையாக அறிந்த தலைவர்கள், ஒரு சமூகத்துக்கு சமூகநீதி கிடைப்பதைத் தடுக்கவோ அல்லது அதற்குத் தடை வாங்கவோ முன்வர மாட்டார்கள். மாறாக, அதையே முன்மாதிரியாக வைத்து, 'எங்கள் சமூகத்துக்கும் உரிய நீதி வேண்டும்' என்றுதான் போராடுவார்கள்; நீதிமன்றம் போய் உரிமையைக் கேட்டு வாங்குவார்கள். அதுதான் நியாயம்.

ஆனால், 'அந்தச் சாதிக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததே தப்பு' என்று சொல்வதும், 'கிடைத்த உரிமை பறிபோய்விட்டதே' என்று இழவு வீடுபோல் துன்பம் அனுபவித்துவரும் வேளையில், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் தமிழர் மரபு அல்ல.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''தென் மாவட்டக் கல்லூரிகளில், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்ப மாணவர்கள் கிடைக்காமல் காலியாகக் கிடப்பதாகவும் சொல்லப்படுகிறதே?''

''10.5% இட ஒதுக்கீட்டில் நிரப்புவதற்குத் தேவையான வன்னியர்கள் இல்லாத இடங்களில், அடுத்த நிலையில் உள்ள சீர் மரபினர், புதிரை வண்ணார், நாவிதர் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிடும்.''

அன்புமணி
அன்புமணி

''என்.எல்.சி-யில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு, சுங்கச்சாவடியை எதிர்த்து அறிக்கை... என பா.ம.க-வும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறதே?''

''கடந்தகாலங்களில், நெய்வேலி போராட்டங்களை முன்னெடுத்து மண்ணின் மைந்தர்களுக்கான மாற்று இடம் - இழப்பீட்டுத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என உத்தரவாதங்களையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றிக் கொடுத்தது நாங்கள்தான். அதேபோல், தமிழ்நாட்டில், சுங்கச்சாவடி என்று சொன்னாலே, வேல்முருகன்தான். நாங்கள்தான் அதற்கான பிராண்ட்!

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழக மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்காகவும் போராடிவரும் த.வா.க-வின் கொள்கைகளை, நாற்பது ஆண்டுக்கால பா.ம.க-வும் பின்பற்றுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான்! மருத்துவர் ராமதாஸிடம் அரசியல் படித்த மாணவன் நான். இன்றைக்கு இந்த மாணவன் கையிலெடுக்கிற அரசியலை, மருத்துவர் ராமதாஸ் அங்கீகரிப்பதும், வலியுறுத்துவதும் எனக்குப் பெருமைதான்!''

'' 'வன்னிய மக்களுக்கு உரிய உள் இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் நான் ஓய மாட்டேன்' என்கிறாரே மருத்துவர் ராமதாஸ்?''

''இட ஒதுக்கீட்டுக்கான பா.ம.க-வின் கோரிக்கை என்பது 1989-லேயே முடிந்துவிட்டது. அதன் பிறகு, மத்தியில் 2%, மாநிலத்தில் 20% என்ற வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு குறித்தோ அல்லது 10.5% உள் இட ஒதுக்கீடு குறித்தோ பா.ம.க எந்தவோர் இடத்திலாவது பேசியிருக்கிறதா? 1989-ம் ஆண்டுக்குப் பிறகு 2019 வரை வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்தவோர் இடத்திலும் வாயே திறக்கவில்லை பா.ம.க.

சி.என்.ராமமூர்த்தி, வேல்முருகன் மற்றும் பல்வேறு வன்னிய அமைப்பினரான நாங்கள்தான் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து வலியுறுத்திவந்தோம். சட்டநாதன் குழு மற்றும் அம்பாசங்கர் குழுக்களும் இதைத்தான் பரிந்துரைத்துள்ளன. 'வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு குறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கடந்தகால அ.தி.மு.க அரசை நீதிமன்றமும் கண்டித்தது.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

இதன் பின்னர், அ.தி.மு.க அரசோடு இணைந்து இது விஷயமாக ஆக்கபூர்வ முன்னெடுப்புகளை செய்துவந்தது நாங்கள்தான். எனவே, வன்னியர்களின் கவனம் எங்கள் மீதும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதும் திரும்பியது. இதனால், 'நாங்கள் வன்னியர்கள்; நாங்கள் வாழ்வோம்.... ஆள்வோம்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த பா.ம.க-வின் இருப்பிடத்துக்கே ஆபத்து வந்துவிட்டது.

இந்த விஷயங்களையெல்லாம் தாமதமாக உணர்ந்துகொண்ட பா.ம.க., கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் 'வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு கொடுத்தால் நாங்கள் அ.தி.மு.க-வோடு கூட்டணியில் தொடர்கிறோம்' என்பதுபோல் வேண்டுமென்றே ஒரு நிபந்தனையை விதித்தது. இதையடுத்தே அவசரம் அவசரமாக ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. ஆக, 'உள் இட ஒதுக்கீட்டு கிடைப்பதற்குக் காரணமே பா.ம.க-தான்' என்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிவிட்டது பா.ம.க! ஆனால், உண்மையில், வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் ஆர்வம் காட்டிவருவது எங்கள் கட்சியும், வன்னியர் அமைப்புகளும்தான். எனவே, 10.5% உள் இட ஒதுக்கீடு குறித்து பா.ம.க உரிமை கொண்டாடக் கூடாது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism