Published:Updated:

`நான் இந்திரா காந்தியின் பேத்தி!’ -உ.பி அரசுக்கு எதிராகக் கொதித்த பிரியங்கா

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

தற்போது உண்மைகளை வெளிக்கொண்டுவருவதால், உத்தரப்பிரதேச அரசு பல்வேறு வழிகளில் தன்னை மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார், பிரியங்கா காந்தி.

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சியின் துருப்புச்சீட்டாக இருக்கிறார், பிரியங்கா காந்தி. அம்மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகிறார்.

பிரியங்கா காந்தி | யோகி ஆதித்யநாத்
பிரியங்கா காந்தி | யோகி ஆதித்யநாத்

பிரியங்கா vs பா.ஜ.க!

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த காலகட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் சொந்த மாநிலத்துக்கு அழைத்துவருவது தொடர்பாக பிரியங்காவுக்கும் மாநில அரசுக்கும் பெரும் யுத்தமே நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் ஆயிரம் பேருந்துகளைத் தருவதாகச் சொன்ன பிரியங்காவிடம் அதன் விவரங்களை மாநில அரசு கேட்டது. விவரங்களைப் பெற்ற மாநில அரசோ, காங்கிரஸ் அளித்த பல பேருந்துகளின் விவரங்கள், இருசக்கர மற்றும் ஆட்டோக்களுக்கு உடையவை என ஆதாரங்களோடு வெளியிட்டது. இந்தப் பிரச்னை, காங்கிரஸ்- பா.ஜ.க என்றில்லாமல் பிரியங்கா, பா.ஜ.க என்று பேசப்பட்டது.

`பேருந்துகள் என்ற பெயரில் டூவீலர் பதிவு எண்கள்!' - உ.பி-யில் மீண்டும் வெடித்த காங்கிரஸ்-பா.ஜ.க மோதல்

இந்த நிலையில், தற்போது தான் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதால், உத்தரப்பிரதேச அரசு பல்வேறு வழிகளில் தன்னை மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி.

கடந்த ஞாயிறு அன்று, உத்தரப்பிரதேச மாநிலத்தில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் கருவுற்று இருந்ததாக வெளியான தகவலை வைத்து, மாநில அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

இதையடுத்து, கான்பூர் காப்பகம் குறித்த தவறான கருத்துக்கு மூன்று நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்யுமாறு உத்தரப்பிரதேச குழந்தைகள் உரிமைகள் குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், இன்று இதுதொடர்பாகப் பேசிய பிரியங்கா காந்தி, ``மக்களின் பணியாளராக எனது கடமை உத்தரப்பிரதேச மக்களுக்கானது. அவர்களுக்கு உண்மையைக் கொண்டுசெல்வதே எனது கடமை. உ.பி அரசு, தனது பல்வேறு துறைகள் மூலம் என்னை அச்சுறுத்துவதன் வழியாக அவர்களின் நேரத்தைத்தான் வீணடிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். நான், என்னால் முடிந்தவரை உண்மைகளை வெளிக்கொண்டுவந்தே தீருவேன். நான் இந்திரா காந்தியின் பேத்தி. சில எதிர்க்கட்சி தலைவர்களைப் போன்று நான் ஒன்றும் பா.ஜ.க-வின் அறிவிக்கப்படாத செய்தித்தொடர்பாளர் கிடையாது” என்றார் காட்டமாக.

57 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்... 7 பேர் கர்ப்பம் - உ.பி குழந்தைகள் நலக் காப்பகத்தில் நிகழ்ந்த அவலம்!

முன்னதாக, ஆக்ரா மாவட்ட நிர்வாகமும் பிரியங்கா காந்தியின் `ஆக்ராவில் கொரோனாவால் நிகழ்ந்த மரணங்கள்’ குறித்த கருத்தை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு