Published:Updated:

``திருமாவளவன் தலித்; நான் தலித் இல்லை!'' - ஜான் பாண்டியன் லாஜிக்

ஜான் பாண்டியன்
News
ஜான் பாண்டியன் ( பா.காளிமுத்து )

``தலித் என்ற சொல்லே, `வெறுக்கப்படுகிறவன்' என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது'' என்கிறார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்.

இட ஒதுக்கீடு கேட்டு, நாடெங்கும் சமூக அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழக அரசியலிலோ `எங்களைப் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றி விடுங்கள்' என்ற வித்தியாசக் கோரிக்கையை சமீபகாலமாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஜான் பாண்டியன்
ஜான் பாண்டியன்
பா.காளிமுத்து

இந்தநிலையில், `பட்டியலின வெளியேற்றக் கோரிக்கைக்கு முதல் விதை போட்டது நான்தான்' என்று கூறிவரும் `தமிழக மக்கள் முன்னேற்றக் கழக'த் தலைவர் ஜான் பாண்டியனை நேரில் சந்தித்தேன்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக ஜனார்த்தனன் கமிட்டியை அமைத்த தி.மு.க-வைக்கூட, கடுமையாக விமர்சிக்கிறீர்களே... பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டை நீங்கள் எடுத்ததன் வெளிப்பாடா இது?''

``அப்படிச் சொல்ல முடியாது. தி.மு.க செய்த தவறுகளைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். சாதிப் பிரச்னைகளைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டம் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு பெயரிடப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களை நீக்க அன்றைய முதல்வர் கருணாநிதி முயற்சி செய்தபோது, முதல் ஆளாக கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தவன் நான்.

ஆனால், பட்டியல் இனத்திலுள்ள வேளாண் தொழில் செய்துவரக்கூடிய ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கி, `தேவேந்திர குல வேளாளர்' என்ற ஒரே பெயரில் அரசாணை வெளியிடுவதற்குப் பதிலாக `ஜனார்த்தனன் கமிட்டி'யை அவர் அமைத்தது தேவையே இல்லாதது; முதல்வராக இவரே கையெழுத்திட்டு அறிவித்திருக்கலாம். ஏனெனில், கடந்த காலங்களில் இதேபோல் பல உட்பிரிவுகளை ஒன்றாக்கி `நாடார்', `அருந்ததியர்', `முக்குலத்தோர்', `கொங்கு வேளாளர்' என்று எத்தனையோ அறிவிப்புகளை தமிழக முதல்வர்களே அறிவித்திருக்கிறபோது, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு மட்டும் கமிட்டி, ஆய்வு என்று ஏமாற்றிக்கொண்டிருப்பது ஏன் என்றுதான் கருணாநிதியை எதிர்த்தேன்.''

கருணாநிதி
கருணாநிதி

``சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இத்தனை ஆண்டுக்காலம் குரல் கொடுத்துவந்த ஜான்பாண்டியன், இப்போது திடீரென `நாங்கள் பட்டியல் இனத்தவர்கள் அல்ல' என்று சொல்லிக்கொண்டு பிரிந்துசெல்ல நினைப்பது சுயநலம் அல்லவா?''

``தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான நலச்சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவராக 1974-லிருந்து 1979 வரை இருந்து எல்லோருக்குமாகத்தான் போராடிக்கொண்டிருந்தேன். ஆனால், சென்னையில் இருந்த சில தலைவர்கள் செய்துகொண்டிருந்த உள் அரசியலால்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டேன். அதன் பின்னர்தான் பட்டியல் இனத்துக்குள்ளாகவே இப்படியெல்லாம் தனித்தனி பிரிவினர்களாக ஒருவரையொருவர் பாரபட்சமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயமே எனக்குத் தெரியவந்தது.

அதன் பின்னர்தான் நான், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கான தலைவராகப் பாடுபட ஆரம்பித்தேன். அதேசமயம் பட்டியல் இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நான் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும்கூட அந்த மக்கள் என்னோடு நட்பாகப் பழகுகிறார்களே தவிர, இணக்கமாக இருப்பதற்குத் தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் எங்களுக்குள் மனதளவில் பிரிவினையை உண்டாக்கிவிட்ட தலைவர்கள்தான்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``தலித் என்ற வார்த்தையையே மறுத்துப் பேசுகிற நீங்கள், 2018-ம் ஆண்டு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்த தலித் தலைவர்கள் கூட்டத்தில் இணைந்து போராட்டம் நடத்தினீர்களே...?''

``இப்போதும் நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தானே இருக்கிறோம். அதில்கூட, `தலித்' என்ற வார்த்தைப் பிரயோகத்தை நான் பயன்படுத்தியதே இல்லை. திருமாவளவன் தலித்தாக இருக்கிறார்; சேரியாகவும் இருக்கிறார். ஆனால், ஜான் பாண்டியன் தலித்தாக, சேரியாக எப்போதுமே இருக்க மாட்டான்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தப் பகுதியில் ஓர் இழுக்கு ஏற்பட்டாலும் ஜான் பாண்டியன் முன்வந்து போராடுவான், அவர்களுக்கான உதவிகளைச் செய்துதருவான். அந்தவகையில்தான், 2018-ம் ஆண்டு நடைபெற்ற அந்தப் போராட்டத்திலும் நான் கலந்துகொண்டேன். அதாவது, `ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பாக இருந்துவரக்கூடிய `வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கூடாது' என்று மத்திய அரசை வலியுறுத்தி அந்தப் போராட்டத்தை நடத்தினோம்.''

திருமாவளவன்
திருமாவளவன்

``தலித் என்ற வார்த்தை மீது ஏன் உங்களுக்கு அத்தனை வெறுப்பு?''

``தலித் என்ற வார்த்தையே கிடையாது. அது என்ன, எங்களுக்கு மட்டும் ஆதிதிராவிடர், பறையன், பள்ளன் என்றெல்லாம் அடைமொழிப் பெயர் சூட்டுகிறீர்கள்? நாடார், தேவர், கோனார், பிள்ளை என்று எத்தனையோ சாதிகள் இருக்கின்றனவே... அவர்களுக்கெல்லாம் ஏன் இதுபோன்ற பெயர்கள் வைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே குறிப்பிட்டு இதுபோன்ற பெயர்களை வைப்பது ஏன்? எங்களுக்கு என்ன பெயர் சூட்டுவதென்று நீங்கள் எப்படி முடிவெடுக்க முடியும்? அதை நாங்கள்தானே முடிவு செய்ய வேண்டும்! தலித் என்றால் என்ன அர்த்தம் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்..!''

``ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதன் குறியீடாகத்தானே `தலித்' என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது?''

``அப்படி என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், `வெறுக்கப்பட வேண்டியவர்கள்' என்ற அர்த்தத்தில்தான் `தலித்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்றே நான் சொல்வேன்.''

ஜான் பாண்டியன்
ஜான் பாண்டியன்
பா.காளிமுத்து

``பா.ஜ.க ஆதரவு நிலை எடுத்தபிறகு, `இந்தியா இந்துக்களின் நாடு' என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டீர்களே... இதன் பின்னணிதான் என்ன?''

``இந்தியாவில் வாழ்ந்து வருகிற ஜனத்தொகையின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தை நான் சொல்லிவருகிறேன். அதுவும் இப்போதல்ல... நீண்டகாலமாகவே நான் இதைச் சொல்லிவருகிறேன்.

கிறிஸ்துவம் எப்போது இந்தியாவுக்கு வந்தது, இஸ்லாம் எப்போது இந்தியாவுக்குள் வந்தது... என்பது பற்றியெல்லாம் நாம் நிறைய படித்திருப்போம். கிறிஸ்துவர்கள் இங்கே வந்தபிறகுதான் நமக்கு கல்வி கிடைத்தது, நல்ல கருத்துகள் பலவற்றை எடுத்துச் சொன்னார்கள்; அவற்றையெல்லாம் நான் மறுக்கவே இல்லை. அதேசமயம் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்துவருகிற நாடு இந்தியா. ஆக, பெரும்பான்மை சமூகமாக இருக்கக்கூடிய மக்கள், அவர்களது பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே `இந்தியா இந்துக்களின் நாடு' என்று சொல்கிறேன். பெரும்பான்மையினர் எங்கே இருக்கிறார்களோ அவர்களோடு ஜான் பாண்டியனும் இருப்பான்.''

``இந்து மதம்தான் சாதிய ஏற்றத்தாழ்வுகளின் ஆணி வேராக இருக்கிறது என்கிறார்களே பகுத்தறிவாளர்கள்?''

``சாதியத்தை எந்தக் கடவுளும் உருவாக்கவில்லை. மனிதர்கள்தான் சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கட்டமைத்துவிட்டனர். ஒருவனைப் பார்க்காதே, தொடாதே, நீ உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தது இங்கே இவர்கள் செய்த மிகப்பெரிய அரசியல். இந்தச் சூழ்ச்சியில்தான் நாமும் வீழ்ந்துபோனோமே தவிர, எந்த ஒரு மதமும் மனிதர்களைப் பிரித்துப் பார்க்க நினைக்கவில்லை.

வேளாண் தொழில் செய்துவந்த 80 சதவிகித மக்களை, பிற்படுத்தப்பட்டவன், மிகப் பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் என்றெல்லாம் சாதிய ரீதியாக தனித்தனியே பிரித்ததெல்லாம் இங்கேயுள்ள அரசியல்தான். அவர்களை எல்லாம் ஒரே சாதியாக வைத்திருந்தால், அரசியல் அதிகாரத்துக்கு வந்துவிடுவார்களே என்ற பயத்தில்தான் இப்படிச் செய்துவிட்டார்கள்.''

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

``பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நீங்கள் வரவேற்கிறீர்களா?''

``தவறான தீர்ப்புதான். அதைச் சுட்டிக்காட்டி ஏற்கெனவே நான் ஊடகத்தில் பதிவும் செய்துவிட்டேன். ஆனாலும் 100 வருடங்களாகத் தொடர்ந்துகொண்டிருந்த ஒரு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது.''

‘பட்டியல் இனத்திலிருந்து நீங்கள் வெளியேறத் துடிப்பது ஏன்?’’

‘‘பட்டியல் இனத்திலிருந்து வெளியேறுவதால், இட ஒதுக்கீட்டு உரிமைகளை இழக்க வேண்டியதுவருமே?’’

‘‘கடந்த காலங்களில் ‘பட்டியல் இனத் திலிருந்து வெளியேறும் கோரிக்கையை வைப்பதற்கு டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அதிகாரம் கொடுத்தது யார்...’ என்று விமர்சித்த நீங்களே, இப்போது அதே கோரிக்கையை முன்வைக்கிறீர்களே?’’

இந்தக் கேள்விகளுக்கு நாளை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் மிக விரிவாகப் பதிலளித்திருக்கிறார் ஜான் பாண்டியன்.