கர்நாடகாவில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனாலும் அதன் பிறகு முதல்வர் சித்தராமையாவா அல்லது டி.கே.சிவக்குமாரா என்பதில் காங்கிரஸ் மேலிடத்தில் இழுபறி ஏற்பட்டது. அதன்பின்னர் சித்தராமையாவே முதல்வராக நியமிக்க ஒப்புக்கொண்ட சிவக்குமார், தான் மட்டுமே துணை முதல்வராக இருக்கவேண்டும் என்றும், மாநில காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும் என்றும் கட்சி மேலிடத்தில் கண்டிஷன் போட்டார்.

ஒருவழியாக காங்கிரஸ் மேலிடமும் அதற்கு ஒப்புக்கொண்டது. அதன்படி கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் நேற்று பதவியேற்றனர். இந்த நிலையில், தேர்தலில் 135 இடங்களை வென்றதில் தனக்கு மகிழ்ச்சியில்லை என்று கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக பெங்களூருவில் மறைந்த முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சிவக்குமார், ``சட்டமன்றத் தேர்தலில் நாம் 135 இடங்களை வென்றதில் நான் மகிழ்ச்சியாக இல்லை. நம்முடைய கவனமானது சரியான இடத்தை நோக்கி இருக்கவேண்டும். அதுதான் வரக்கூடிய அடுத்தடுத்த தேர்தல்கள். இனி ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். இது ஆரம்பம் மட்டும்தான். ஒரேயொரு வெற்றியில் சோம்பேறியாகிவிடாதீர்கள்.

மேலும், எக்காரணம் கொண்டும் என் வீட்டிலோ, சித்தராமையாவின் வீட்டிலோ நிர்வாகிகள் யாரும் கூட வேண்டாம். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வலுவான நிர்வாகத்தை வழங்க வேண்டும். எந்த தலைவருக்கு என்ன நேர்ந்தாலும். கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கட்சிக்காக உழைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும்" என்று கூறினார்.