Published:Updated:

`மோடி அரசின் நாடகத்தில் பங்கேற்க விருப்பமில்லை!’ - காஷ்மீர் பயணத்தை மறுத்த ஐரோப்பிய எம்.பி

மோடி அரசை விளம்பரப்படுத்த தான் இந்தியாவுக்கு வர முடியாது என ஐரோப்பிய எம்.பி ஒருவர் கூறியுள்ளார்

ஐரோப்பிய எம்.பி-க்கள்
ஐரோப்பிய எம்.பி-க்கள் ( Twitter )

ஜம்மு - காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டம் 370, 35-A ஆகிய பிரிவுகளைக் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலமானது காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பால் அங்கு எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக் கூடாது என்பதற்காக சில நாள்களுக்கு முன்னதாகவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜம்மு- காஷ்மீர்
ஜம்மு- காஷ்மீர்
AP

மேலும் இணையம், செல்போன் போன்ற அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஜம்மு- காஷ்மீர் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளதாகவும் அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. ஆனால், மத்திய அரசு இந்தக் கருத்தை முழுமையாக மறுத்து வந்தது.

ஜம்முவில் எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்றால் அங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், இதற்கு அனுமதியை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. தடையை மீறி அங்கு சென்ற ராகுல் காந்தியும் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் சென்று ஆளுநர், அதிகாரிகள் மற்றும் மக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி அங்குள்ள நிலவரத்தைக் கண்டறிய ஐரோப்பிய எம்.பி-க்கள் குழுவினர் விரும்பினர். அவர்களின் காஷ்மீர் வருகைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையானது.

ஐரோப்பிய எம்.பி-க்கள்
ஐரோப்பிய எம்.பி-க்கள்
ANI

`இந்திய எம்.பி-க்கள், தலைவர்களை காஷ்மீருக்குள் செல்ல அனுமதிக்காத மத்திய அரசு, எப்படி வேறு நாட்டு எம்.பி-க்களை அனுமதிக்கலாம்' எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் 23 எம்.பி-க்கள் ஸ்ரீநகருக்கு வந்து இறங்கினர். அங்கு இருக்கும் ராணுவ அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து அவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மக்களைச் சந்தித்தனர்.

இரும்புத்திரை காஷ்மீர்! - “மயானம்போல மாறிப்போச்சு சாப், எங்க மண்ணு!”

இதற்கிடையில், ஐரோப்பிய எம்.பி-க்களில் ஒருவரான கிறிஸ் டேவிஸ் என்பவர் ஜம்மு - காஷ்மீர் பயணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் கிறிஸ். தான் காஷ்மீர் செல்ல மறுப்பு தெரிவித்தது பற்றிப் பேசியுள்ள அவர், ``ஜம்மு -காஷ்மீர் செல்வதற்காகக் கடந்த அக்டோபர் 7-ம் தேதி எனக்கு அழைப்பு வந்தது. மூன்று நாள்களுக்குப் பிறகு, அந்த அழைப்பை நான் மறுத்துவிட்டேன். மோடி அரசை விளம்பரப்படுத்தும் நாடகத்தில் பங்கேற்க நான் தயாராக இல்லை.

கிறிஸ் டேவிஸ்
கிறிஸ் டேவிஸ்
Twitter/@ChrisDaviesLD

காஷ்மீரில் ஜனநாயகக் கொள்கைகள் தகர்ந்து வருகின்றன என்பது மிகத் தெளிவாக உள்ளது. அங்கு சென்று, `எல்லாம் நன்றாகவே உள்ளது' எனக் கூறி பாசாங்கு செய்ய எனக்கு விருப்பமில்லை. காஷ்மீரை உலகம் கவனிக்கத் தொடங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஐரோப்பாவில் உள்ள பெண்களின் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை அமைப்புதான் எம்.பி-க்களின் காஷ்மீர் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் மெயில் மூலம் டேவிஸுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த மெயிலுக்குப் பதில் அளித்தவர், `நான் காஷ்மீர் வந்தால் தனியாகச் சுதந்திரமாகப் பாதுகாப்புகள் எதுவும் இல்லாமல் மக்களிடம் பேச வேண்டும்’ எனப் பதில் அளித்துள்ளார்.

News Credits : Hindustan Times