Published:Updated:

`நான் வருத்தப்படுவதுபோல் தெரிகிறதா?!’ -செய்தியாளர் சந்திப்பில் கலகலத்த அஜித் பவார்

`சபாநாயகரை தேர்வு செய்த பின்னரே அனைத்தும் முடிவு செய்யப்படும்' என அஜித் பவார் கூறியுள்ளார்.

அஜித் பவார்
அஜித் பவார்

மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார். மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். தாக்கரே குடும்பத்திலிருந்து ஒருவர் முதலமைச்சர் ஆவதும் இதுவே முதல்முறை. தாக்கரே குடும்பத்திலிருந்து தேர்தலில் போட்டியிட்ட முதல் நபர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே தான். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார்.

பா.ஜ.க - சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட உரசல் காரணமாகக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே முதல்வராகத் தேர்வாகியுள்ளார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அமைச்சரவையில் சிவசேனா கட்சிக்கு 16 அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 15 அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 13 இடங்கள் ஆகியவை வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. அஜித் பவாருக்கு அந்தப் பதவி வழங்கப்படும் என்ற தகவலும் வலம் வருகிறது.

அஜித் பவார் ஆதரவில்தான் சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க-வின் பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வரானார். இது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. வழக்கு நீதிமன்றம் சென்றது. பெரும்பான்மையை நிரூபிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அஜித் பவார், பட்னாவிஸ் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரைச் சந்தித்து அஜித் பவார் மன்னிப்புக் கோரினார். இதையடுத்து மீண்டும் அவர் கட்சியில் இணைந்தார்.

`முதல்வர்... துணை முதல்வர்.. அமைச்சர்..!’- சுமுகமாக முடிந்த சிவசேனா- என்.சி.பி-காங்கிரஸ் ஒப்பந்தம்?

இந்நிலையில், இன்று தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கவுள்ளது. மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் இன்று மாலை புதிய அரசு பதவி ஏற்புவிழா நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்றைய பதவியேற்பு விழாவில் அஜித் பவார் பதவியேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்கவுள்ளனர்.

அஜித் பவார்
அஜித் பவார்

இதுதொடர்பாகப் பேசிய அஜித் பவார், ``இன்று மாலை நடக்கும் பதவியேற்வு விழாவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் மட்டும் பதவியேற்கவுள்ளனர்" என்றவரிடம், துணை முதல்வர் பதவி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்தவர், `` சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து சபாநாயகரைத் தேர்வு செய்த பின்னரே அனைத்தும் முடிவு செய்யப்படும். இதுகுறித்து இப்போது பேசுவதற்கு ஒன்றுமில்லை. துணை முதல்வர் பதவி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். நான் வருத்தப்படுவது போல் தெரிகிறதா?" எனச் சிரித்துக்கொண்டே சென்றார்.

சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே இன்று முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில், அஜித் பவாரின் செயலை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் சொல்லுங்கள் மக்களே...!