Published:Updated:

``இளம் தலைவர் வந்தால் மகிழ்ச்சி; நான் என்னைப் பற்றி பேசவில்லை!” - காங்கிரஸ் தலைமை குறித்து சசிதரூர்

‘எனக்குக் காங்கிரஸ் தலைவராக விருப்பம் இல்லை. அது என்னுடைய லட்சியமும் இல்லை’ எனக் காங்கிரஸின் சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.

சசிதரூர்
சசிதரூர் ( Twitter/@ShashiTharoor )

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ராகுல் காந்தி, தன் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவுக்குப் பிறகு, காங்கிரஸ் வரலாற்றில் சந்திக்காத விமர்சனங்களைத் தற்போது சந்தித்து வருகிறது. இதன் விளைவாகக் கர்நாடகாவில் நடந்து வந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்ததாகக் கருத்துகள் உலா வருகின்றன.

சசி தரூர்
சசி தரூர்
Twitter/@ShashiTharoor

காங்கிரஸ் தலைவர்களில் தேசிய அளவில் பிரபலமானவர்களின் சசிதரூரும் ஒருவர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இவர், `எங்களை வழிநடத்த எந்தத் தலைமையும் இல்லை. காங்கிரஸின் தலைவர் பதவிக்குத் தேர்தல் வைத்து, ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ எனத் தலைமைக்கு கோரிக்கை வைத்து ஏசியாநெட் (Asianet ) ஊடகத்திடம் பேசியுள்ளார்.

“காங்கிரஸின் தலைவர் பதவிக்கு எந்த ஒரு தலைவர் பெயரும் இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை என்பதை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது. முதலில் ராகுல் காந்தி, தான் எடுத்த முடிவை மாற்றி மீண்டும் தலைவராக வேண்டும். அதுதான் தற்போது எங்கள் அனைவருக்கும் தேவையானது. ஆனால், அவரின் மனதை மாற்றுவது அல்லது வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் கட்சித் தலைமை அதிக காலதாமதம் செய்கிறது. இதனால்தான் கர்நாடகாவிலும் கோவாவிலும் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலர் கட்சி தாவினர்.

காங்கிரஸுக்கு, வலிமையான மற்றும் உறுதியான ஒரு தலைவரை உடனடியாகத் தேர்ந்தெடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்
சசிதரூர்

அவர்கள் கட்சி தாவும்போது அதன் மீது முடிவெடுக்கவும் பிரச்னைகளைச் சரி செய்யவும் காங்கிரஸ் தற்போது தலைமை இல்லாமல் உள்ளது. தலைமை இல்லாததை இன்னும் எத்தனை நாள்கள் பொறுத்துக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இதைப் பயன்படுத்தி பா.ஜ.க-வினர் மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்கள். நாம் அப்படி ஒரு நிலைக்காகக் காத்திருக்காமல் உடனடியாக ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்” எனக் கூறிய சசிதரூர் தொடர்ந்து,

``தற்போதுள்ள சூழலில் இளைஞர் தலைமைதான் காங்கிரஸுக்குத் தேவையாக உள்ளது. அதனால் சிறியவர், பெரியவர் என வயது வித்தியாசம் பார்க்காமல் திறமை உள்ள அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். ஆர்வம் உள்ள அனைவரையும் தேர்ந்தெடுத்து அவர்களைத் தேர்தல்களில் நிற்க வைக்க வேண்டும் அப்படி வெற்றி பெறுபவர்களையே காங்கிரஸின் தலைமையாக அறிவிக்க வேண்டும். நான் இதை ராகுல் காந்திக்கும் அவரது குடும்பத்துக்கு எதிராகப் பேசவில்லை. பிரியங்கா காந்தியும் இந்தத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் அனைவருக்கும் மகிழ்ச்சி.

ராகுல் காந்தி -சசி தரூர்
ராகுல் காந்தி -சசி தரூர்
Twitter/@ShashiTharoor

இளம் தலைவர் காங்கிரஸின் தலைமையாக வந்தால் சிறப்பாக இருக்கும் என நான் நம்புகிறேன். அதனால் 40, 50 வயதுடையவர்கள் பலர் 10, 20 வருடங்களாகக் காங்கிரஸின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். நான் என்னைப் பற்றிப் பேசவில்லை. என்னால் எது முடியும், என் வரையறை என்ன போன்ற அனைத்தும் எனக்குத் தெரியும். என்னைவிட 20 வயது சிறியவர்கள் அல்லது என்னைவிட அதிக அனுபவம் உள்ளவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

` ஸ்டாலின் தவறவிட்ட வாய்ப்பு இது!' - சிலைத் திறப்பு விழாவில் புறக்கணிக்கப்படும் காங்கிரஸ்?