Published:Updated:

`மணிகண்டனின் பதவி பறிப்புக்கு நானும் ஒரு காரணம்!'- கருணாஸ்

இரா.மோகன்
உ.பாண்டி

கேபிள் டி.வி தலைவர் பதவி, அனுபவம் வாய்ந்தவர் என்பதால் உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கொடுக்கப்பட்டது. அதை விமர்சனம் செய்ததால் மணிகண்டன் பதவி இழந்துள்ளார்.

கருணாஸ் எம்.எல்.ஏ
கருணாஸ் எம்.எல்.ஏ
மணிகண்டன் விக்கெட்: எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல்களின் தொடக்கப்புள்ளியா?

``மணிகண்டனுக்கு அமைச்சர் பதவி பறிபோக நானும் ஒரு காரணமாக இருக்கலாம்'' என நடிகரும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கூறினார்.

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். மாவட்ட ஆட்சியரை சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ``மாநிலம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணியை மேற்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், எவ்வித குறுக்கீடுகள் இல்லாமல் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் இப்பணிகளை மேற்கொள்ளவும், அதைக் கண்காணிக்க தனியாக அதிகாரி ஒருவரையும் முதல்வர் நியமித்துள்ளார்.

கலெக்டர் வீரராகவ ராவுடன் கருணாஸ்
கலெக்டர் வீரராகவ ராவுடன் கருணாஸ்

இந்த நிலையில், எனது தொகுதியில் இதுபோன்று 22 இடங்களில் குடிமராமத்துப் பணி நடக்க உள்ளது. இந்தப் பணிகளில் கட்சி நிர்வாகிகள் சிலரும், அரசியல்வாதிகளும் குறுக்கீடு செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விவாதித்துள்ளேன். முதல்வரின் கனவுத் திட்டமான குடிமராமத்து திட்டப் பணிகளில் குறுக்கீடு செய்வோர் குறித்து முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று கடும் நடவடிக்கை எடுப்பேன். வரும் 30-ம் தேதிக்குப் பின் மாவட்ட ஆட்சியருடன் நேரில் சென்று இப்பணிகளை பார்வையிட உள்ளேன். மேலும், எனது தொகுதியில் வழங்கப்படாமல் உள்ள லேப்டாப் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

இது தொடர்பான பணிகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், எனது தொகுதிக்கு என கூடுதல் சிறப்பு நிதி வழங்கவும் கேட்டு முதல்வரை சந்தித்தேன். அமைச்சர் பதவி கேட்பதற்காக முதல்வரை சந்திக்கவில்லை. ஜெயலலிதா இருக்கும்போது எனக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறினார்கள். பின்னர் அது எனக்குக் கிடைக்கவில்லை. யார் கஷ்டப்படும் போதும் அவர்களது கஷ்டத்தை நினைத்து சந்தோஷப்படும் பழக்கம் எனக்கு இல்லை.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

பதவியைப் பெறுபவர்கள் பணிவுடன் இருக்க வேண்டும். அந்தப் பதவியைக்கொண்டு அடிமட்ட ஏழை மக்களுக்கு ஏதாவது செய்து கொடுக்க முயன்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். மாறாக இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரை பதவியிலிருந்து நீக்கியபோது மக்கள், அதிகாரிகள், சொந்த கட்சிக்காரர்கள் என அனைவரும் சந்தோஷம் அடைந்துள்ளனர். இது எனக்கு வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது. தனக்குக் கிடைத்த பதவியைக் கொண்டு 10 பேருக்கு நல்லது நடந்திருந்தால் இவருக்கும் நல்லது நடந்திருக்கும். வம்சம் விளங்கும். அப்படி இல்லாவிட்டால் இப்படித்தான் ஆகும்.

இதுவரை எனக்கு இருந்த பிரச்னைகள் முடிந்துவிட்டன. எனவே, ஒத்துக்கொண்ட படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு எனது தொகுதியிலேயே தங்கி தொகுதி மக்களுக்கான பணிகளை செய்ய உள்ளேன். தொகுதியில் சொந்த வீடு கட்டி தங்கியிருந்து மக்கள் பணியாற்ற நினைத்தேன். அது முடியாமல் போனது. இனி இருக்கும் 2 ஆண்டுகளில் முழுமையாக இங்கேயே தங்கி செயல்படுவேன். அமைச்சர் மணிகண்டன் எனக்கு ஏற்படுத்திய இடையூறுகள் குறித்து நேரடியாக வெளிப்படையாக முதல்வரிடம் புகார் செய்தேன். ஆனால், அவரை அமைச்சர் பதவியிலிந்து நீக்கணும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

கருணாஸ் எம்.எல்.ஏ
கருணாஸ் எம்.எல்.ஏ

அவரது கட்சிக்குள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து மணிகண்டன் குற்றச்சாட்டினார். கட்சியின் நலன் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்டுப்பட்டார். தற்போது கேபிள் டி.வி தலைவர் பதவி அனுபவம் வாய்ந்த உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கொடுக்கப்பட்டது. அதை விமர்சனம் செய்ததால் மணிகண்டன் பதவி இழந்துள்ளார். அதற்காக காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக நான்தான் காரணம் என சொல்லிக்கொள்ளும் ஆள் நான் இல்லை. மணிகண்டனின் பதவி பறிப்புக்கு நானும் ஒரு காரணம் என்றுதான் சொல்கிறேன்'' என்றார்.